என்னுடைய காசி யாத்திரையில் நான் அனுபவித்த சம்பவங்கள்
அக்டோபர் 26 வியாழக்கிழமை அதிகாலை முதல்
நவம்பர் 1 செவ்வாய்க்கிழமை நடுநிசி வரை …
அக்டோபர் 30 திங்கள் …
நேத்திக்கு அலைஞ்சது ஆழ்ந்த தூக்கம் .. ஏழு மணி ஆயிடுத்து
ஏந்துகிறதுக்கு .. ஆஸ்வாஸ்படுத்திண்டு எட்டு மணிக்கு கங்கை
நதியில் ஸ்னாநம் பண்ண போனோம் .. சஹதர்மினியுடன் காசியில்
கங்கா ஸ்னாநம் (துலா ஸ்னாநம்) .. மூன்றாம் தடவை .. ஆஹா
என்ன ஒரு ஆனந்தம் .. இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு ஏழு முக்கு
ஸஹதர்மிணியுடன் மூணு முக்கு .. கங்கா மாதாக்கு ஒரு முக்கு ..
ஸூர்ய பகவானுக்கு அர்க்யம்
காசிக்கு வந்துட்டு காலபைரவரை தரிசிக்கிலைன்னா காசி
விஸ்வநாதரின் வழிபாடு முழுமையடையாது என்று ஸ்கந்த புராண
காசி காண்டம் கூறுகிறது .. so இரிக்க்ஷா பிடிச்சுண்டு கோவிலுக்கு
கிளம்பினோம் .. மணி ஒன்பது ஆயிடுத்து, breakfast time ..
போறவழியில ஒரு டீசென்ட் ரோடுசைடு சேர்பெஞ்ச் போட்டுருக்கிற
கடைக்குள்ள நுழைஞ்சோம் .. மூணு பூரி ரெண்டு ஜிலேபி லபக்
பசுமாடுகள் கட்டியிருந்த ஒரு இடத்துல ரிக்க்ஷாவை நிறுத்திட்டு
ரெண்டு மூணு குறுகிய சந்துகளில்கூட்டிண்டு போனான் .. ஈஸியா
நடக்க முடியல, ஜனங்கள் பசுக்கள் பைக்குகள் .. தாந்த்ரீக
அடிப்படையில் கோவிலின் கட்டுமானம் அமைஞ்சுருக்கு ..
மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட காலபைரவர் முகம் மட்டுமே
பாக்கமுடியறது .. பைரவ வாகனத்தில் (நாயின்) அமர்ந்து
திரிசூலத்தைஏந்தியபடி மண்டைஓடு மாலை மற்றும் மயில்
இறகுகளால் செய்யப்பட்டஆயுதத்துடன் காலபைரவர் சிலை
இருக்கிறது என்று சொல்கிறார்கள் கோயிலின் பின்புற கதவில்,
பைரவரின் மற்றொரு அம்சமான க்ஷேத்ரபால பைரவரின் பிம்பம்.
ஒருவரின் ஆன்மாவை சுத்தப்படுத்தும் சக்தியும், தீய சக்திகளை
அகற்றும் சக்தியும் இக்கோயிலுக்கு உண்டுஎன்று இங்குள்ளவர்கள்
நம்புகிறார்கள் .. “காஷி கா கோட்வால்" என்று (காசியின்
தலைமைபோலீஸ் அதிகாரி) அழைக்கப்படுகிறார் .. பிரபஞ்சம்
முழுவதும் சென்றும் கீழே விழாத பிரம்மாவின் 5வது தலை
காலபைரவர் மோக்ஷபுரி காசியில் பிரவேசித்தவுடன் தரையில்
விழுந்தது என்றும், பின்தொடர்ந்து வந்த பிரம்மஹத்ய தோஷமும்
நின்றுவிட்டது என்றும் காசி காண்டம் சொல்கிறது .. அந்த இடம்
"கபாலமோச்சனா”(‘மண்டை ஓடு விழுந்த இடம்‘) என்று
அழைக்கப்படுகிறது.
கபாலமோச்சனா கால பைரவரை வணங்கும் பக்தர்களின் பாவங்கள்
விடுபடுகின்றன என்றும், யார் முன்னோர்களை வணங்கி
கபாலமோச்சனா புனிததீர்த்தத்தில் நீராடி காலபைரவரை
வழிபடுகிறார்களோ அவர்களின் பிரம்மஹத்ய தோஷமும் விலகுகிறது
என்றும் ஸ்கந்தபுராண காசி காண்டம் விவரிக்கிறது.
சிவபெருமான் காசியை விட்டு வெளியேறும் போது காசி நகரின்
அனைத்து நிர்வாகப் பொறுப்புகளையும் காலபைரவரிடம்
ஒப்படைத்தார். எனவே காசிக்குள் நுழையும் அனைவரும் அவரது
அனுமதியைப் பெறுவது கட்டாயமாகும்.
வாரணாசியில் பதவிக்கு பொறுப்பேற்கும் எந்த அரசு அதிகாரியும்
முதலில் வந்து காலபைரவரிடம் அனுமதி பெற வேண்டும். காசியின்
உண்மையான பாதுகாவலர் காலபைரவர். அவர் அமைதிக்கு
காரணமானவர் என்று நம்பப்படுவதால், வாரணாசியில் உள்ள
அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் கண்காணிப்பாளர்
இருக்கையில் கால பைரவரின் படம் வைக்கப்பட்டுள்ளது.
வாரணாசி நாடாளுமன்ற உறுப்பினராக வேட்புமனு தாக்கல்
செய்வதற்கு முன் இந்தியப் பிரதமர் திரு நரேந்திரமோடி முதலில்
ஸ்ரீ காலபைரவர் கோயிலில் தரிசனம் செய்து அவரிடம் அனுமதி
கோரினார் என்று சொல்கிறார்கள்.
பிரம்மா ஒரு தனி நபரின் வாழ்க்கையை பிறப்பு முதல் இறப்பு வரை
நிர்வகிக்கிறார். ஆனால் காசியில் பிறந்தவர்கள் அல்லது காசியில்
காலபைரவரை தரிசனம் செய்தவர்கள் வாழ்க்கையை காலபைரவர்
நிர்வகிக்கிறார்.
கால பைரவர் கோயில் வருஷம் 365 நாட்களும் திறந்திருக்கும்.
அபிஷேகம் ஆராதனைகள் காலை 4 மணிக்கு மங்கள ஆரத்தியுடன்
ஆரம்பித்து, நள்ளிரவு 12 மணிக்கு சயன ஆரத்தியுடன் முடிகிறது.
( ….. தொடரும் )
No comments:
Post a Comment