Tuesday, August 13, 2013

திருப்புறம்பியம்

...

ஒரு அதிசய விநாயகர் ஆலயம்


ஞான முதல்வன் கணேசப்பெருமானின் தெய்வீக அலைகள் அற்புதமாக வெளிப்படும் ஆலயங்கள், நம் தமிழ்நாட்டில் நிறைய உள்ளன. அவற்றில் ஒரு சிறப்புமிக்க ஆலயம், திருப்புறம்பியம் விநாயகர் ஆலயம்.

கேது பகவானின் மூலம் நமக்கு இன்னல்கள் ஏற்படாதிருக்க, விநாயகர் வழிபாடு நமக்கு மிகப் பெரிய வரப்ரசாதம். கேது தசை, கேது புக்தி நடப்பவர்கள் வாய்ப்பு கிடைக்கும்போது, பிரசித்திபெற்ற கணேச ஆலயங்களுக்கு சென்று வருவது நன்மை பயக்கும்.

திருவலஞ்சுழி வலம்புரி விநாயகர் அபரிமிதமான அருள் அலைகளை தன்னகத்தே வைத்துக்கொண்டு , நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரும் அருளும் ஆலயம். இந்த ஊருக்கு வெகு அருகிலேயே உள்ளது இந்த திருப்புறம்பியம்.

கும்பகோணத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் கொள்ளிட நதிக்கரையில் இந்த ஸ்தலம் அமைந்துள்ளது. திருப்புறம்பியம் செல்ல கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு.

ஒரு யுகத்திற்கும் இன்னொரு யுகத்திற்கும் இடையே ஏற்பட்டதொரு ஊழிப்பெருவெள்ளம் கட்டுக்கடங்காது போயிற்று. அப்போது வருணன் கடலிலிருந்து கிடைத்த பொருள்களைக் கொண்டு பிள்ளையார் பிடித்து வழிபட்டார். விநாயக வழிபாட்டிற்குப் பின்னர் பிரளயமும் ஒடுங்கியது. "ஓம்" என்னும் பிரணவ மந்திரத்தால் ஏழு கடல்களையும், ஒரு கிணற்றுக்குள் அடக்கினார் என்று புராணம் கூறுகிறது.

ஆகவே பிள்ளையாருக்கு "பிரளயம் காத்த விநாயகர்" என்ற பெயர் ஏற்பட்டது. விநாயகரின் சிலாவுருவத்தில் கடற்சங்கு, நத்தை, கிளிஞ்சல் ஆகியவை தெரியும். சங்கு, சிப்பிகளாலேயே ஆன சிலை என்று கூறுகின்றனர்.

இந்த பிள்ளையாருக்குத் "தேன் குடிக்கும் பிள்ளையார்" என்ற பெயரும் உண்டு. இவருக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அபிஷேகம் நடக்கும். மற்ற நாட்களில் கிடையாது. விநாயகர் சதுர்த்தியன்று தேன் அபிஷேகம் செய்யப்படும். இரவு 8-00 மணிக்கு மேல் தொடங்கி விடிய விடிய தேன் அபிஷேகம் செய்வார்கள். குடம் குடமாக ஊற்றப்படும் அவ்வளவு தேனையும், சிந்தாது சிதறாது பிள்ளையார் சிலை அப்படியே தன்னுள் உறிஞ்சிக்கொள்கிறது.

ஒரு டன் தேன் அவ்வாறு உறிஞ்சப் படுவதாக கணித்திருக்கிறார்கள்.

இந்த விநாயகர் அமர்ந்து இருக்கும் ஆலய
மூலவர் பெயர் : சாட்சி நாதேஸ்வரர் (சிவ பெருமான் )
அம்மன் பெயர் : கரும்பன்ன சொல்லம்மை

ஒரு வணிகப் பெண்ணிற்காக, இவ்வூர் இறைவன் மதுரை சென்று, சாட்சி கூறினமையால், 'சாட்சி நாதர்' எனப் பெற்றார். வன்னி மரம், கிணறு, மடைப்பள்ளி (மதுரையிலுள்ளது.) சனகர் முதலிய நால்வருக்கு இறைவன், இத்தலத்தில் அறத்தை உணர்த்தினார்.

இக் கோவில் பணிமகள் ஒருவரைக் கொன்று, அவ்வம்மையாருடைய அணிகலன்களை திருடிய ஓடம் விடுபவன், தானும் ஆற்றைக் கடப்பதற்குள், ஆற்றில் தவறி விழுந்து இறந்தான். இச்செய்தியைச் சுந்தரர், தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார். இக் கோவில் மதுரை ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டது. சோழர் கால கல்வெட்டுகள் பல இங்கு எடுக்கப்பட்டுள்ளன.

...

ஒரு வலைப்பூ - www.livingextra.com - பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.




No comments:

Post a Comment