Sunday, August 18, 2013

'தொல்லை நீக்கியார்'

...

விநாயகப் பெருமானின் வழிபாட்டில் சதுர்த்தி என்னும் திதி முக்கியமானது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறைக்கு ஒன்றும் தேய்பிறைக்கு ஒன்றுமாக இரண்டு சதுர்த்திகள் வரும். அவற்றில் மிகவும் முக்கியமானதாக ஆவணி மாதத்தில் வளர்பிறையில் வரும் சதுர்த்தியையே கருதி வருகிறோம். நாம் விநாயகச் சதுர்த்தி என்று விமரிசையாகக் கொண்டாடி வருகின்றோம். அதன் பின் வரும் ஒவ்வொரு வளர்பிறைச் சதுர்த்தியையும் மாதச் சதுர்த்தி என்ற பெயரில் விநாயக வழிபாட்டிற்கு உகந்தவையாகக் கொண்டுள்ளோம்.

இதுமட்டுமன்று ஒவ்வொரு தேய்பிறையிலும் வரும் சதுர்த்திகளும் முக்கியமானவையே. இவற்றை சங்கடஹர சதுர்த்தி என்று அழைப்பார்கள். விநாயக வழிபாட்டில் இவையும் சிறப்பிடம் பெற்றவைதான். இவ்வகைச் சதுர்த்திகளில் தலையாயது மாசி மாதத்தன்று பெளர்ணமி கழித்து வரும் தேய்பிறைச் சதுர்த்திதான். இதனை மஹாசங்கடஹரசதுர்த்தி என்று அழைக்கிறோம்.

மாசி மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தியிலிருந்து மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்திகளின்போது விரதமிருந்து விநாயகரைச் சிறப்பாக வழிபாடு செய்வார்கள்.

விநாயகருக்கு முப்பத்திரண்டு வடிவங்கள் உண்டு. இவற்றை மூர்த்தி பேதங்கள் என்று கூறுவார்கள். அவற்றில் பதினாறு மிகவும் முக்கியமானவை. அவற்றில் ஒன்று சங்கடநாஸன கணபதியாகும்.

ஒவ்வொரு வகையான பலனைப் பெறவேண்டி ஒவ்வொரு வகையான விநாயக வடிவங்களை வணங்குவதுண்டு. கடன் நீங்க ருணமோசன கணபதியையும், பணம் வேண்டி லட்சுமி கணபதியையும் வழிபடுவதுண்டு. அந்தந்த வழிபாட்டிற்கு உரிய தனிப்பட்ட மந்திரங்களும் தோத்திரங்களும் முறைகளும் உண்டு.

சங்கடங்கள், இக்கட்டுகள், நெருக்கடிகள் தீருவதற்கு சங்கடஹர கணபதியை வணங்குகின்றோம். சங்கடஹர கணபதியை வணங்கியவர்களில் செவ்வாய் கிரகம் எனப்படும் அங்காரகன் முக்கியமானவர். அவரை வழிபட்டுப் பல மங்கலங்களுடன் கிரகப் பதவியையும் 'மங்கலன்' என்னும் சிறப்புப் பெயரையும் விநாயகரிடமிருந்து பெற்றார். ஆகையால் சங்கடஹர சதுர்த்திக்கு 'அங்காரகச் சதுர்த்தி' என்றும் பெயர் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருந்து வழிபட்டால் சங்கடங்கள் தீருவதோடு செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் கெடுதல்களும் தோஷங்களும் நீங்கும்.

சந்திரனும் விநாயகரைச் சிறப்பாக வழிபட்டுப் பல சிறப்புகளுடன் விநாயகருடைய திருமுடியில் பிறைச் சந்திரனாகவும் நெற்றியில் முழு நிலவுத் திலகமாகவும் விளங்கும் பேறு பெற்றான். விநாயகருக்கு பாலசந்திரன் என்றும் பெயர் உண்டு. மேலும் சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரனையும் பூஜிக்க வேண்டிய முறையும் உண்டாகியது.

சங்கடஹர சதுர்த்தியன்று விடியுமுன்பே எழுந்து குளித்து விரதம் இருந்து விநாயகரை வழிபட வேண்டும். அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சந்திரனைப் பார்த்துவிட்டு சந்திரனையும் பூஜித்துவிட்டு உணவு உட்கொள்ள வேண்டும்.

விரதம் இருக்க முடியாதவர்கள் விநாயகருக்கு உகந்த 'காரியசித்தி மாலை' என்ற துதியைப் படிக்க வேண்டும். அதனை எட்டு முறை அன்றைய தினம் படிப்பது மேலும் சிறப்பு.

சங்கடநாசன கணபதி ஸ்தோத்திரத்தையும் படிக்கலாம்.

இவை வலுவும் ஆற்றலும் மிக்கவை. இரண்டில் ஒன்றைப் படிக்கலாம்.

முடிந்தவர்கள் இவற்றில் ஒன்றுடன் விநாயகர் கவசத்தையும் படிக்கலாம்.

விநாயகருடைய முப்பத்திரண்டு வகையான மூர்த்தங்களில் சங்கடஹர கணபதியும் ஒன்று.

இளஞ்சூரியனைப் போன்ற நிறத்தோடு நீல நிற ஆடையணிந்து கொண்டு செந்தாமரையில் வீற்றிருப்பார். வலது கரங்களில் அங்குசமும் வரதமும் விளங்கும். இடது மேல் கரத்தில் பாசம் இருக்கும். தொடையின் மீது தன்னுடைய சக்தியை அமர வைத்திருப்பார். செம்மை நிறமுடைய அந்த சக்தி நீல நிற உடையும் ஆபரணங்களும் அணிந்து நீல மலரை ஏந்தியிருப்பார்கள். சங்கடநாஸனார் தமது இடது கீழ்க் கரத்தால் அந்த சக்தியை அணைத்தவாறு பாயசப் பாத்திரத்தைத் தாங்கியிருப்பார்.

'சங்கடஹர கணபதி' என்றும் 'சங்கடநாஸன கணபதி' என்றும் பெயர் பெற்ற இவரைத் தமிழில் நாம் 'தொல்லை நீக்கியார்' என்று அழைக்கிறோம்.


விநாயகரின் தத்துவம் விநாயகர் அட்டகத்தின்மூலம் இங்கு விளக்கப்படுகிறது. "காரியசித்தி மாலை" என்றும் இது அழைக்கப்படுகிறது.

காரியசித்தி மாலை

பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்த மறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன் பால் தக வருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றாம்.

உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ்
உலகிற் பிறங்கும் விவகாரங்கள் உறாத மேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டுங் களை கண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றாம்.

இடர்கள் முழுதும் எவன் அருளால் எரி வீழும் பஞ்சு என மாயும்
தொடரும் உயிர்கள் எவன் அருளால் சுரர் வாழ் பதியும் உறச் செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறு இன்றிக் கருமம் எவனால் முடிவு உறும் அத்
தடவு மருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றாம்.

மூர்த்தி ஆகித் தலம் ஆகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தம் ஆகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

செய்யும் வினையின் முதல் யாவன் செய்யப்படும் அப் பொருள் யாவன்
ஐயம் இன்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய் இல் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்கு பர
நாத முடிவில் வீற்று இருக்கும் நாதன் எவன் எண் குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

மண்ணின் ஓர் ஐங் குணம் ஆகி வதிவான் எவன் நீர் இடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வான் இடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக் கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பாச அறிவில் பசு அறிவில் பற்றற்கு அரிய பரன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும் பயிலப் பணிக்கும் அவன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக் கணபதியத் திகழச் சரணம் அடைகின்றோம்.


நூற்பயன்

இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினம் மும்மைச்
சந்திகளில் தோத்திரம் செயினும் சகல கரும சித்தி பெறும்
சிந்தை மகிழச் சுபம் பெறும் எண் தினம் உச்சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர் எண்கால் படிக்கில் அட்ட சித்தி உறும்.

திங்கள் இரண்டு தினந்தோறும் திகழ ஒருபான் முறை ஓதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத்தொரு முறைமை
பொங்கும் உழுவலால் கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக் கல்வி
துங்க வெறுக்கை முதற் பலவும் தோன்றும் எனச் செப்பினர் மறைந்தார்.

...

சங்கஷ்ட நாஸன ஸ்ரீகணேச ஸ்தோத்ரம்

இந்த ஸ்தோத்ரம் 'நாரத புராணம்' என்னும் உபபுராணத்தில் காணப்படுவது. இந்த ஸ்தோத்திரம் சங்கடங்களை நீக்க வல்லது. சங்கடங்களை நீக்குவதற்கென்று விநாயகமூர்த்தங்களில் ஒரு விசேஷ வழிபட்டு மூர்த்தி இருக்கிறார். 'சங்கடநாஸன கணபதி' என்பது அவருடைய பெயர்.

சங்கடஹரர் என்று சொல்வார்கள். அவருக்கு உரிய விரதம் 'சங்கடஹர சதுர்த்தி'. சங்கடஹர சதுர்த்தியன்று இந்த தோத்திரத்தைப் படித்து வழிபடலாம்.

இதனை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் படித்தால் சங்கடங்களும் விக்கினங்களும் நீங்கி அவரவர் கோரிய பலனைப் பெறலாம் என்று அந்த புராணம் கூறுகிறது. இந்த தோத்திரத்தில் சங்கடநாசனருக்கு உரிய விசேஷமான பன்னிரண்டு நாமங்கள் இருக்கின்றன.

இதைப் படித்தால் இடையூறுகள் தடங்கல்கள் முதலிய பயங்கள் நீங்கும். எல்லாவற்றிலும் வெற்றி கிட்டும். படிப்பவர்களுக்குப் படிப்பும், தனம் வேண்டுபவர்களுக்கு தனமும், மக்கள் செல்வம் வேண்டுபவர்களுக்கு மக்களும், மோட்சம் வேண்டுபவர்களுக்கு உரிய கதியும் கிட்டும்.

தோத்திரத்தின் ஆரம்பத்திலேயே போட்டிருக்கிறது, பார்த்தீர்களா -
"ஆயுர் காமார்த்த ஸித்தயே". அதை மனதில் இருத்திக்கொண்டு ஸ்ரீ சங்கடநாஸன கணபதியிடம் உங்களின் சங்கடத்தைத் தெளிவாக எடுத்துரைத்து அதை நீக்குமாறு சங்கல்ப்பத்தைச் செய்து படியுங்கள்.
கடைசி வரியில் 'நாத்ர ஸம்ஸய' என்று காணப்படுகிறது அல்லவா?
சந்தேகமே படக்கூடாது. முழுநம்பிக்கையோடு வேண்டுதல் செய்து படிக்கவேண்டும்.


நாரத உவாச -

ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீபுத்ரம் விநாயகம்
பக்தாவாஸம் ஸ்மரேந் நித்யம் ஆயு:காமார்த்த ஸித்தயே

தீர்க்காயுள் ரோகமில்லாத வாழ்க்கை, செல்வம், சுகம் இவைகளை விரும்புபவர் கௌரியின் புத்திரனைவேண்டி இந்த ஸ்லோகத்தைச் சொல்லி நமஸ்கரிக்கவேண்டும்.

ப்ரதமம் வக்ரதுண்டம் ச ஏகதந்தம் த்வீதீயகம்
த்ருதீயம் க்ருஷ்ணபிங்காக்ஷம் கஜவக்த்ரம் சதுர்த்தகம்

வளைந்த துதிக்கையை உடையவரே! ஒற்றைத் தந்தம் கொண்டவரே! லேசாகச்சிவந்த விழிகளால் பக்தர்களை அனுக்ரஹிப்பவரே! யானை முகத்தவரே!

லம்போதரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமேவ ச
ஸப்தமம் விக்நராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டமம்

சரிந்த தொந்தி உடையவரே! மதஜாலப் பெருக்கை உடையவரே! விக்னேஸ்வரரே! கருஞ்சிவப்பு நிறமுடையவரே!

நவமம் பாலசந்த்ரம் ச தஸமம் து விநாயகம்
ஏகாதஸம் கணபதிம் ச த்வாதஸம் து கஜாநநம்

நெற்றியில் சந்திரனை உடையவரே! கணங்களின் தலைவரே! விநாயகரே! யானை முகத்தவரே!

த்வாதஸைதாநி நாமாநி த்ரிஸந்த்யம் ய: படேந் நர:
ந ச விக்நபயம் தஸ்ய ஸர்வ ஸித்திகரம் ப்ரபோ

இந்தப் பன்னிரண்டு பெயர்களையும் மூன்று வேளைகளிலும் படிப்பவர்கட்கு இடையூறு நீங்கி எடுத்த காரியம் வெற்றி அடைகிறது.

வித்யார்த்தி லபதே வித்யாம் தநார்த்தீ லபதே தநம்
புத்ரார்த்தி லபதே புத்ராந் மோக்ஷ¡ர்த்தீ லபதே கதிம்

கல்வியை விரும்புபவருக்குக் கல்வியையும், செல்வத்தை வேண்டுவோருக்கு செல்வமும், மக்கட் பேற்றை விரும்புபவர்க்கு குழந்தைச் செல்வத்தையும், மோட்சத்தைக் கோருகிறவருக்கு மோட்சமும் கிடைக்கிறது.

ஜபேத் கணபதிஸ்தோத்ரம் ஷட்பிர் மாஸை; பலம் லபேத்
ஸம்வத்ஸரேண ஸித்திம் ச லபதே நாத்ர ஸம்ஸய:

இந்தக் கணபதி ஸ்தோத்திரத்தை பயபக்தியுடன் விடாமல் ஆறு மாதங்கள் சொல்பவர்க்கு நினைத்த காரியம் ஈடேறும். படிப்பவர்களுக்கு அட்டமா சித்தியும் கைகூடும் என்பதில் சந்தேகமில்லை.

அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யஸ்ச லிகித்வா ய:ஸமர்ப்பயேத்
தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேசஸ்ய ப்ரஸாதத:

எட்டு கணேச பக்தர்களுக்கு இந்த ஸ்லோகத்தை எழுதிக் (கற்றுக் கொடுப்பவருக்கு) எல்லாக் கலைகளும் விநாயகர் அருளால் சுலபமாக வரும் என்று நாரத மகரிஷி ஆசீர்வதித்தார்.

இதி நாரத புராணே ஸங்கஷ்டநாஸன ஸ்ரீ கணேச ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

...

காசிப முனிவர் அருளிய விநாயகர் கவசம் .....

வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க;
வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர தேக மதோற்கடர்தாம் அமர்ந்து காக்க;
விளரற நெற்றியை என்றும்விளங்கிய காசிபர் காக்க;
புருவந்தம்மைத் தளர்வில் மகோதரர் காக்க;
தடவிழிகள் பாலசந்திரனார் காக்க;
கவின்வளரும் அதரம் கசமுகர் காக்க:
தால்அங் கணக்டரீடர் காக்க;
நவில்சி புகம் கிரிசைசுதர் காக்க;
தனி வாக்கை விநாயகர்தாம் காக்க;
அவிர்நகை துன்முகர் காக்க;
அள்எழிற்செஞ்செவி பாசபாணி காக்க;
தவிர்தலுரு திளங்கொடி போல்வளர்மணி நாசியைச் சிந்திதார்த்தர் காக்க;
காமரு பூமுகந்தன்னைக் குணேசர் நனிக்காக்க;
களம் கணேசர் காக்க;
வாமமுறும் இருதோளும் வயங்குகந்த பூர்வசர்தாம் மகிழ்ந்து காக்க;
ஏமமுறு மணிமலை விக்கின விநாசன் காக்க;
இதயந்தன்னைத்தோமகலுங் கணநாதர் காக்க;
அகட்டினைத் துலங்(கு) ஏரம்பர் காக்க;
பக்கம்இரண்டையும் தராதரர் காக்க;
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க;
விளங்கிலிங்கம் வியாள பூடணர்தாம் காக்க;
தக்கருய்யந் தன்னை வக்கிரதுண்டர் காக்க;
கச்சனத்தை அல்லல் உக்க கணபன் காக்க;
ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க;
தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க;
இரு பதம் ஏகதந்தர் காக்க;
வாழ்கரம் கப்பிரப்பிரசாதனர் காக்க;
முன்கையை வணங்குவார்நோய் ஆழ் தரச்செய் ஆசாபூரகக் காக்க;
விரல் பதுமத்தர் காக்க;
கேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்க;
கிழக்கினிற் புத்தீசர் காக்க;
அக்கினியிற் சித்தீசர் காக்க;
உமாபுத்தரிரர்தென் ஆசை காக்க;
மிக்க நிருதியிற் கணேசுரர்காக்க;
விக்கினவர்த் தனர்மேற் கென்னுந் திக்கதனிர் காக்க;
வாயுவிற் கசகன்னர் காக்க;
திகழ்உ தீசி தக்க நிதிபன் காக்க;
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க;
ஏகதந்நர் பகல்முழுதுங் காக்க;
இரவினும் சந்தி இரண்டன் மாட்டும் ஓகையின் விக்கினகிருது காக்க;
இராக்கதர் பூதம் உறுவே தாளம் மோகினிபேய் இவையாதி உயிர்திறத்தால் வருந்துயரும் முடிவில்லாத வேகமுறு பிணிபலவும் விலக்கு புயாசாங்குசர் தாம் விரைந்து காக்க;
மதி, ஞானம், தவம், தானம், மானம் ஒளி, புகழ், குலம், வண்சரீரம் முற்றும் பதிவான தனம், தானியம், கிருகம், மனைவி, மைந்தர்,பயில்நட் பாதிக கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க;
காமர் பவித்திரர் முன்னான விதியாரும் சுற்றமெலாம் மயூரேசர் எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க;
வென்றி சீவிதம் பகபிலர் காக்க;
கரியாதியெலாம் விகடர் காக்க;

என்றிவ்வாறிது தனை முக்காலமும் ஓதிடின்; நும்பால் இடையூறொன்றும் ஒன்றுமுறா; முனிவர்காள்; அறிமின்கள்; யாரொருவர் ஓதினாலும் மன்றஆங்கவர்தேகம் பிணியறவச் சிரதேக மாகி மன்னும்.

பக்தியுடனே இந்தக் கவசத்தைப் பாராயணஞ் செய்பவர்களுக்குப் பிணியும், வறுமையும், பேய் பூதங்களாலுண்டாகின்ற பல துன்பங்களும், கவலைகளும், பாபம் முதலியவைகளும் நீங்கும். பெருஞ்செல்வமும், தீர்க்காயுளும், களத்திர புத்திரமித்ராதிகளும் உண்டாகும். இதைப் படித்தாலும், ஒருவர் சொல்லக் கேட்டாலும், பூசித்தாலும், எப்படிப்பட்ட துன்பமும் நீங்கும்.

...

இதில் காணப்படுபவை யாவும் அடியேனால் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். படித்ததில் பிடித்த ஆன்மீக விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.









No comments:

Post a Comment