Saturday, August 24, 2013

அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்

...

" புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத் "

அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்களைப் பேசும் இந்த சுலோகம் பிரபலமானது.

இந்த சுலோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒருவித மனவலிமை பெருகுவதை உணரமுடியும்.

நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது.

புத்திர் பலம் - அறிவில் வலிமை
யசோ - புகழ்
தைர்யம் - துணிவு
நிர்பயத்வம் - பயமின்மை
அரோகதா - நோயின்மை
அஜாட்யம் - ஊக்கம்
வாக் படுத்வம் - பேச்சு வலிமை
ச - இவையெல்லாம்
ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால்
பவேத் - பிறக்கின்றன.

அறிவுக்கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத்திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன!

...

அனுமாரின் வசியக் கட்டு மந்திரத்தை கூறுகிறேன் கேள்.
யார் அறிவார் இவரின் திருவிளையாட்டை. ஆணவத்தை வென்றவர்கள் மட்டுமே அறிவர். இனிமந்திரத்தைக் கேள்,
“ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா,
லங்காபுரி ராவண சம்ஹாரா, சஞ்சீவி ராயா ஓடிவா, உக்கிரமாக ஓடிவா,
அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்ஷர்களை
பிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்கு
ஓம்ஆம் இளைய ஹனுமந்தா வா வா சுவாஹா"

திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள், பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது
என்கிறார் அகத்தியர்.

...

அனுமாருக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவது ஏன்?

அசோக வனத்தில் அனுமன் சீதையைக் கண்டு இராமரைப் பற்றிய விவரங்களை கூறி இராமரின் கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றார். அன்னையிடம் விடைபெறும் சமயம், அனுமனை ஆசிர்வதிக்க எண்ணிய சீதை தான் அமர்ந்திருந்த வெற்றிலைக் கொடியின் இலைகளை பறித்து அனுமாரின் தலையில் புஸ்பமாய் போட்டு ஆசீர்வதித்து வழி அனுப்பி வைத்தார். இதனால் அன்னையின் நினைவாகவே அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகின்றது என்று கூறப்படுகிறது.

அனுமனின் குரு

அனுமனுக்கு குருவாக இருந்து கல்வி கற்றுக்கொடுத்தவர் சூரிய பகவான். அவருக்கு நன்றி கடன் பட்டிருந்த அனுமன், ""தங்களுக்கு குருதட்சணையாக என்ன தர வேண்டும்? என கேட்டார். சூரியன், தன் மகன் சுக்ரீவனுக்கு மந்திரியாக இருந்து அவனை வழிநடத்திச் செல்லும்படி கூறினார். அதன்படியே ஆஞ்சநேயர் சுக்ரீவனுடன் இருந்து, சூரியனுக்கு தன் நன்றியை செலுத்தினார்.

சிரமம் நீக்கும் சுந்தர காண்டம்

ராமாயணம் நமக்கு அரிய பொக்கிஷங்களான இரண்டு ரத்தினங்களை நமக்கு தந்திருக்கிறது. ஒன்று
பக்தர்களின் ரத்தினமான அனுமன்; மற்றொன்று மந்திரங்களின் ரத்தினமான சுந்தர காண்டம்.
"ராமா' என்ற நாமம் ஒன்றையே சதா ஜெபிக்கும் பக்தர்களில் தலைசிறந்த ரத்தினமாகத் திகழ்பவன் அனுமன். "ராமா' என்னும் இனிய திருநாமத்தைச் சொன்னால் நமக்கு அனுமனின் அருள் கிடைக்கும். மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் கை கண்ட மருந்தாக உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்டப் பாராயணம். ராமனைப் பிரிந்து துன்பத்தில் துவண்ட சீதாதேவியின் துயர் துடைக்க ராமநாமத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் கடலையும் தாண்டியவன் ராமபக்த அனுமன். அனுமன் மற்றும் சுந்தரகாண்டம் ஆகிய ரத்தினங்களின் மதிப்பை அறிந்தவர்கள் அதை நழுவ விட மாட்டார்கள். தினமும் அனுமனை வணங்கி, சுந்தரகாண்டத்தின் ஒரு ஸர்க்கத்தைப் படியுங்கள். வாழ்வில் சிரமம் அணுகாது.

அனுமன் பெயர்க்காரணம்

ஒருமுறை குழந்தை அனுமன் வானில் சூரியன் உதயமாவதைப் பார்த்து அதை பழமென நினைத்து பறிக்கச் சென்றான். அந்நேரத்தில் ராகுவும் அதை பிடிக்க வந்தான். குழந்தையின் வேகம் கண்ட ராகு பயந்து போய் இந்திரனைச் சரணடைந்தான். அவன் அனுமனை அடித்து கீழே தள்ளினான். அந்த அடியில் அனுமனின் தோள்பட்டை எலும்பு முறிந்தது. தோள்பட்டை எலும்பை "ஹனு' என்பர். எனவே அவர் "ஹனுமான்' ஆனார். தமிழில் "அனுமன்' என்கிறோம்.

அனுமனுக்கு என்ன மாலை

ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம்.
அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை அனுமன் எடுத்துரைத்தார்.சந்தோஷமடைந்த சீதை அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த வெற்றிலையைக் கிள்ளி தலையில் தூவி ஆசிர்வதித்தாள். "இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும்' என்றாள். வெற்றிலையை காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் பக்தர்கள் தங்கள் செயல்பாடுகள் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்துகின்றனர். திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது, மணமக்களுக்கும், அவர்களை ஆசிர்வதிக்க வந்தவர்களுக்கும் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காகத் தான்.
எலுமிச்சம்பழம் ராஜாக்களுக்கு மரியாதை நிமித்தமாகவும், சம்ஹார தொழில் செய்யும் காவல் தெய்வங்களுக்கும் மிகவும் பிடித்தமானது. நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமனிடத்தில் ஒருங்கே அமைந்துள்ளதாலும், ஈஸ்வரனின் அம்சம் ஆனதாலும் இவருக்கு எலுமிச்சம் பழ மாலை சாத்துவர். வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப்பெறுவர்.
வடை மாலை அணிவித்து தானம் செய்தால் செல்வவளம் பெருகும், கிரக தோஷம் நீங்கும்.

அனுமனுக்கு ஏன் குரங்கு முகம்

உலக நன்மைக்காக அனைவராலும் கேலி செய்யப்படும் குரங்கின் முக வடிவை விரும்பி ஏற்றுக் கொண்டவர் அனுமன். தன்னிலும் தாழ்ந்தவர்களை ஆதரித்து, பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை இந்த வடிவம் வலியுறுத்துகிறது. அவரிடம் தன்னைப் பற்றிய நினைப்பதென்பது சிறிது கூட இல்லை. உலக ஜீவன்கள் எல்லாரிலும் உயர்ந்தவர், தெய்வமகன், புத்திமான். எந்த இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்க கூடியவர், புண்பட்ட உள்ளங்களுக்கு மருந்து தடவும் மாருதி. நல்லவர்களைக் காப்பாற்றும் சமய சஞ்சீவி.

துவங்குவது ஆனைமுகனிடம் முடிவது அனுமனிடம்!

விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை "ஆத்யந்த பிரபு' என்பர். ஆதி+அந்தம் என்பதையே இவ்வாறு சொல்கிறார்கள். "ஆதி' என்றால் "முதலாவது'. முதல் கடவுள் விநாயகர். "அந்தம்' என்றால் "முடிவு'. விநாயகரை வணங்கி ஒரு செயலைத் துவங்கினால், அனுமன் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பார். ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது ஆத்யந்த பிரபு வடிவம். பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்டுள்ளோர், இந்த இரண்டு பிரம்மச்சாரிகளும் இணைந்த வடிவத்தை தங்கள் இஷ்ட தெய்வமாகக் கொண்டுள்ளனர். அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர்.

ஆஞ்சநேயரை நான்கு வகையாக சிலை வடிப்பதுண்டு

ஆஞ்சநேயரை நான்கு வகையாக சிலை வடிப்பதுண்டு.
இரண்டு கரங்களையும் இணைத்து கூப்பி தலைமேல் வைத்து வணங்கும் நிலையில் உள்ளவர் "பக்த அனுமான்'.
கூப்பிய கையை மார்புக்கு நேராக வைத்திருந்தால், "அபயஹஸ்த அனுமான்'.
ஓரு கையில் கதையும் மற்றொரு கையில் சஞ்சீவி மலையும் கொண்டிருந்தால் "வீர அனுமான்'.
ராமனை தன்தோள் மேல் சுமந்தபடி ஐந்து முகங்கள் கொண்டிருந்தால் "பஞ்சமுக ஆஞ்சநேயர்'.
பத்துகைகளுடன் விளங்கும் ஆஞ்சநேயர் "தசபுஜ ஆஞ்சநேயர்'.

வெண்ணெய் சாத்துவது ஏன்?

ராமசேவைக்காக தன் உடம்பைப் புண்ணாக்கிக் கொண்டவர் அனுமன். போர்க்களத்தில் அவர் பட் காயம் கொஞ்ச நஞ்சமல்ல. அவரைக் கட்டிப் போட்டு தெருத்தெருவாக இழுத்துச் சென்றார்கள். காயத்தின் வேதனை குறைய குளிர்ந்த பொருள் பூசுவது இயல்பு தானே! அதனால் தான், அனுமனுக்கு வெண்ணெய் சாத்தும் வழக்கம் ஏற்பட்டது. உலகியல் ரீதியாக இப்படி ஒரு கருத்து சொல்லப்பட்டாலும்,
ஆன்மிகக் கருத்து வேறு மாதிரியானது. வெண்ணெய் வெண்மை நிறமுடையது. வெள்ளை உள்ளமுள்ள பக்தர்களை அனுமனே தன்னுடன் சேர்த்து அருள் செய்கிறான் என்பதன் அடையாளமாக வெண்ணெய் சாத்தப்படுகிறது.
வெண்ணெய் எவ்வளவு வெயில் அடித்தாலும் உருகுவது இல்லை. எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப்போவதும் இல்லை.

...

॥ श्री राम जय राम जय जय राम ॥
॥ ॐ श्री हनुमते नमः ॥

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.


2 comments: