..
ஆதிசங்கரர் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் ...
சங்கரனே ரமண பகவானுள் இருந்து தமிழில் கூறுவதாக அருளியது.
மவுனமாம் உரையாற் காட்டும் மாப்பிரம வத்துவாலன்
சிவ நிலைத்தவர் சற்சீடர் செறி குருவரன் சிற்கையன்
உவகையோர் உருவன் தன்னுள் உவப்பவன் களி முகத்தன்
அவனையாம் தென்பால் மூர்த்தி அப்பனை ஏத்துவோமே
உலகு கண்ணாடி ஊர் நேருறத் தனுள் அஞ்ஞானத்தால்
வெளியினிற் துயிற் கனாப்போல் விளங்கிடக்கண்டு ஞான
நிலையுறு நேரம் தன்னை ஒருவனாய் எவன் நேர் காண்பன்
தலையுறு குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி
வித்துளே முளைபோல் முன்னம் விகற்பமில் இச்சகம் பின்
கற்பித மாயா தேய கால கர்மத்தால் பற்பல
சித்திரம் விரிப்பன் யாவன் சித்தனும் மாயிகன் போல்
சத்தியாற் குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி
எவன் ஒளி உண்மையின்மை இயை பொருள் இலங்கு நேரே
எவன் அது நீ யானாய் என்று இசைத்துணர்த்துவன் சேர்ந்தோரை
எவனை நேர்காணின் மீண்டும் இப் பவக் கடல் வீழ் வில்லை
தவர் உறு குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி
பலதுளைக் குடத்துள் தீபப் பாய் கதிர்போல் யாற் ஞானம்
விழிமுதற் பொறிவாய்ப் பாய்ந்து வெளி சரித்து அறிந்தேன் என்ன
விளங்கிடும் எவனைச் சார்ந்து விளங்கும் இவ் அவனியாவும்
சலமறு குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி
உடல் உ யிர் பொறிகள் புந்தி ஒன்று பாழ் அகமாத் தேர்வர்
மடந்தையர் பாலர் அந்தர் மடையரேய் மூடவாதி
மடமையால் விளையும் அம் மாமயக்கமே மாய்க்கும் ஞானத்
தடையறு குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி
இராகு பற்றி இரவி திங்கள் என உளன் மாயை மூடப்
பரா உளம் ஒடுங்கத் தூங்கிப் பரவிட உணரும் காலம்
புரா உறங்கினன் நான் என்று போதனாம் எவன் புமானாய்ச்
சராசர குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி
குழவி முன் நனவுமுன்னாக் கூறு பல் அவத்தை எல்லாம்
சுழலினும் கலந்திருந்தே சொலிக்கும் உள் அகமா நாளும்
கழல் விழுவோர்க்கு யார் தன்னைக் காட்டுவன் சிற் குறிப்பால்
தழல் விழிக் குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி
உலகை யார் இப்புமான் நோக்குறும் பல நனாக் கனாவிற்
கலங்கியே மாயையாலே காரிய காரணம் பின்
தலைவனும் தாசன் சீடன் குரு மகன் தந்தை யாதி
தலமுறு குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி
மண் புனல் அனல் கால் வானம் மதி கதிரோன் புமானும்
என்றொளிர் சராசரம் சேர் இது எவன் எட்டு மூர்த்தம்
எண்ணுவார்க்கு இறை நிறைந்தோன் எவனின் அன்னியம் சற்று இன்றாம்
தண் அருட் குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி
சருவமும் தானா நன்றாய்ச் சாற்றும் இத் தோத்திரத்தின்
சிரவணம் தன்னால் அர்த்த சிந்தனம் தியானம் கானம்
புரிவதால் எல்லாம் தானாம் பூதி சேர் ஈசன் தன்மை
மருவிடும் மற்றும் எட்டாம் மடிவ்று செல்வம் தானே.
Courtesy: www.fb.com/thirumarai
Saturday, August 10, 2013
ஆதிசங்கரர் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment