Wednesday, August 28, 2013
ஈஸ்வர தியானம்
ஓம் நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்
பவாய குண சம்பவாய சிவ தாண்டவாய நம ஓம்.
சிவாய நம ஓம் சிவாய நம:
சிவாய நம ஓம் நமசிவாய
சிவாய நம ஓம் சிவாய நம:
சிவாய நம ஓம் நமசிவாய
சிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம்
ஹர ஹர ஹர ஹர நமசிவாய – சிவாய நம
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய நமசிவாய – சிவாய நம
ஓம் சிவாய சங்கரா
ஓம் சிவாய நமசிவாய ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
சுந்தரக் கலாதரனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
கங்கையைத் தரித்தவரே ஓம் சிவாய சங்கரா
சசிதர னே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
காசிநாதா விசுவநாதா ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
பார்வதி மணாளனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆடும்பாம்பை அணிந்தவனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆனைமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆறுமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஐயப்பன் ஐயனாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
சிவநாமாவளிகள்
கைலாச வாசா கங்காதரா
ஆனந்தத் தாண்டவ சதாசிவா
ஹிமகிரி வாசா சாம்பசிவா
கணபதி சேவித்ஹே பரமேசா
சரவண சேவித்ஹே பரமே சா
சைலகிரீஸ்வர உமா மஹேசா
நீலலோ சன நடன நடேசா
ஆனந்தத் தாண்டவ சதாசிவ
ஹிமகிரி வாசா சாம்பசிவா
நாதநாம மகிமை
போலோ நாத உமாபதே
சம்போ சங்கர பசுபதே
நந்தி வாகன நாக பூஷண
சந்திரசேகர ஜடாதரா
கங்காதார கௌரி மனோகர
கிரிஜா ரமணா சதாசிவா (போலோ)
கைலாசவாசா கனகசபேசா
கௌரி மனோகர விஸ்வேசா
ஸ்மாசன வாஸா சிதம்பரேசா
நீலகண்ட மஹாதேவா (போலோ)
சூலாதாரா ஜ்யோதிப் பிரகாசா
விபூதி சுந்தர பரமேசா
பம் பம் பம் பம் டமருகநாத
பார்வதி ரமணா சதாசிவா (போலோ)
நமசிவாய மாலை
ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய
ஆதியான அஞ்சிலும் அனா தியான நாலிலும்
சோதி யான மூன்றிலும் சொரூபமற்ற ரெண்டிலும்
நீதி யான தொன்றிலும் நிறைந்து நின்ற வஸ்துவை
ஆதியான தொன்றுமே யற்றதஞ் செழுத்துமே
சக்தி நீ தயவு நீ தயங்கு சங்கினோசை நீ
சித்தி நீ சிவனும் நீ சிவாய மாமெழுத்து நீ
முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ
அத்திபுர மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே
ஆறு நாடு தேடினும் ஆனை சேனைதேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ
ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய் த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல் தர்மம் வந்து நிற்குமே
கண்ணிலே இருப்பவனே கருங்க டல் கடந்துமால்
விண்ணில் இருப்பவனே மேவி யங்கு நிற்பனே
தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன்
என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே
அண்டமேழு முழலவே யனிந்தயோனி யுழலவே
பண்டு மாலயனுடன் பரந்து நின்றுழலவே
எண்டிசை கடந்து நின்றிருண்ட சக்தியுழலவே
அண்டரண்ட மொன்றதாய் ஆதி நடமாடுமே
அகார காரணத்திலே யனேகனேக ரூபமாய்
உகார காரணத்திலே யுருத்தரித்து நின்றனன்
மகார காரணத்திலே மயங்குநின்ற வையகம்
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே
பூவும் நீரும் என்மனம் பொருது கோயில் என்னுளம்
ஆவியோடு லிங்கமா யகண்ட மெங்குமாகிலும்
மேவு கின்ற ஐவரும் விளங்கு தீப தீப மாய்
ஆடு கின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தியில்லையே
ஒன்று மொன்று மொன்றுமே யுலகனைத்து மொன்றுமே
அன்று மின்று மொன்றுமே அனாதியான தொன்றுமே
கன்றல் நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால்
அன்று தெய்வ மும்முள அறிந்ததே சிவாயமே
ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாற தெங்கனே
செய்ய திங்களங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே
ஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோவில்கொண்டபின்
வையகத்தில் மாந்தரோடு வாய் திறப்பதில்லையே
ஆதியுண்டு அந்தமில்லை யன்று நாலு வேதமில்லை
ஜோதியுண்டு சொல்லுமில்லை சொல்லிறந்ததேதுமில்லை
ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்
ஆதியன்று தன்னையும் யாரறிவாரண்ணலே
மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும்
மூன்று மஞ்செழுத்துமாய் முழங்கு மவ்வெழுத்துளே
ஈன்ற தாயும் அப்பரும் இயங்குகின்ற நாதமும்
தோன்று மண்டலத்திலே சொல்ல வெங்குதில்லையே
கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
ஞானமற்ற நெஞ்சகத்தில் வல்லதேது மில்லையே
ஊனமுற்ற ஜோதியோடு உணர்வு சேர்த்தடக்கினால்
தேனதத்தினூரல் போல் தெளிந்ததே சிவாயமே
தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலு மீசனும் சிறந்திருந்த தெம்முளே
விங்களங்கள் பேசுவாய் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் நாமறிந்த நாமமே
தாய் தந்தை குருவும் நீ சகல தேவகணங்கள் நீ
சிந்தை நீ தெளிவும் நீ சித்தி முக்தி தானும் நீ
விந்தும் நீ வினையும் நீ மேலதாய வேதம் நீ
எந்தை நீ இறைவன் நீ என்னையாண்ட ஈசன் நீ
சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சக்தியற்று சம்புவற்று ஜாதி பேதமற்றுநன்
முக்தியற்று மூலமற்று மூல மந்திரங்களும்
வித்தை யித்தை யீன்றவிதத்தில் விளைந்ததே சிவாயமே
நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நின்றதொன்றுதான்
நல்லதென்ற போது நல்லதாகி நின்றபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகுமாதலால்
நல்லதொன்று நாடிநின்று நாமஞ் சொல்லவேண்டுமே
பார்த்து நின்ற தம்பலம் பரமனாடுந் தம்பலம்
கூத்து நின்ற தம்பலம் கோரமான தம்பலம்
வார்த்தையான தம்பலம் வன்னியான தம்பலம்
சீற்றமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே
விண்ணினின்று மின்னெழுந்து மின்னோடுங்குவாறு போல்
எண்ணுள் நின்று எண்ணுமீசன் என்னகத்திருக்கையால்
கண்ணினின்று கண்ணில் தோன்றும் கண்ணறி விலாமையால்
எண்ணுள்நின்ற என்னையும் நானறிந்ததில்லையே
உருக்கலந்த பின்னலோ வுன்னை நானறிந்ததும்
இருக்கிலென் மறக்கிலென் இணைந்திருந்தபோதெல்லாம்
உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே
சிவாய வென்ற வக்ஷரம் சிவனிருக்கு மக்ஷரம்
உபாய மென்று நம்புதற்கு உண்மையான வக்ஷரம்
கபாடமற்ற வாசலைக்கடந்து போன வாயுவை
உபாய மிட்டழைத்துமே சிவாய வஞ்செழுத்துமே
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து தேவராகலாம்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து வானமாவலாம்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொண்டவான் பொருள்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொள்ளுமுண்மையே
திரு அங்க மாலை
தலையே நீ வணங்காய் – தலை
மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேருந் தலைவனைத்
தலையே நீ வணங்காய்.
கண்காள் காண்மின்களோ – கடல்
நஞ்சுண்ட கண்டன் தன்னை
எண்டோள் வீசி நின்றாடும் பிரான்தன்னைக்
கண்காள் காண்மின்களோ.
செவிகாள் கேண்மின்களோ – சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான் திறமெப்போதுஞ்
செவிகாள் கேண்மின்களோ
மூக்கே நீமுரலாய் – முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீ முரலாய்.
வாயே வாழ்த்து கண்டாய் – மத
யானையுரி போர்த்துப்
பேய் வாழ் காட்டகத்தாடும் பிரான்தன்னை
வாயே வாழ்த்துகண்டாய்
நெஞ்சே நீ நினையாய் – நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலைமங்கை மணாளனை
நெஞ்சே நீ நினைவாய்
கைகாள் கூப்பித்தொழீர் – கடி
மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பாம்பரை ஆர்த்த பரமனைக்
கைகாள் கூப்பித் தொழீர்.
ஆக்கையால் பயனென் – அரன்
கோயில் வலம்வந்து
பூக்கை யால் அட்டிப் போற்றியெண்ணாத இவ்
ஆக்கையாற் பயனென்
கால் களாற் பயனென் – கறைக்
கண்டனுறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக்
கால்களாற் பயனென்
உற்றார் ஆருளரோ – உயிர்
கொண்டு போகும்பொழுது
குற்றாலத்துறை கூத்தனல்லால்
நமக்குற்றா ராருளரோ.
இறு மாந்திருப்பன் கொலோ – ஈசன்
பல் கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமானேந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்றங்கு
இறுமாந்திருப்பன் கொலோ.
தேடிக் கண்டுகொண்டேன் – திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை
என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்.
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாயத் திருப்பதிகம்
சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே
இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாம்உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக் கருங்கலம் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறும் நல்கு வான்நலன்
குலமில ராகிலும் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றாலும்
ஓடினேன் ஓடிச் சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறியே சென்றங் கடைந்தவர்க் கெல்லாம்
நன்னெறியாவது நமச்சி வாயவே
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயபத்து
ஏத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
திருச்சிற்றம்பலம்
சிவவாக்கியர் பாடல்
ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய
ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய
சரியை விலக்கல்
1. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்)
2. என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்)
இதுவுமது
3. நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே (ஓம்)
யோக நிலை
4. அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல்
அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே. (ஓம்)
விராட் சொரூபம்
5. இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலமானமழு
எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்
உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே (ஓம்)
தெய்வ சொரூபம்
6. உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல
மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல
அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே (ஓம்)
தேகநிலை
7. மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண் கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே (ஓம்)
அட்சர நிலை
8. ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே (ஓம்)
இதுவுமது
9. நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே (ஓம்)
ஞானநிலை
10. பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை (ஓம்)
ஞானம்
11. அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோ
செம்பொன் னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே (ஓம்)
அட்சர நிலை
12. அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (ஓம்)
பிரணவம்
13. மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற தூணிலும்
நான்றபாம்பின் வாயினும் நவின்றெழுந்த அட்சரம்
ஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதிலையே (ஓம்)
பஞ்சாட்சர மகிமை
14. நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும்
நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை
நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே
நமச்சிவாய உண்மையை நன்குரை செய்நாதனே (ஓம்)
கடவுளின் உண்மை கூறல்
15. இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னலாகுமோ
இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டோரினிப் பிறப்பதிங் கில்லையே (ஓம்)
இராம நாம மகிமை
16. கார கார கார கார காவல் ஊழிக் காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ
ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே (ஓம்)
அத்துவிதம்
17. விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே (ஓம்)
அம்பலம்
18. அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்
உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே (ஓம்)
பஞ்சாட்சரம்
19. உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே
வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே (ஓம்)
பஞ்சாட்சர மகிமை
20. ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்துபின்
ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின்
ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே (ஓம்)
நமசிவாய மந்திரம்
நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம்
நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்
ஐந்தெழுத்து சிவபெருமான் ஆட்சி செய்யும் பீடமாம்
ஆறெழுத்து சரவணனும் காட்சி நல்கும் மாடமாம்
நைந்து வாழும் மக்களுக்கு நோய்நொடியைப் போக்கிட
நன்மருந்தைத் கொடுக்க வந்த நீலகண்டன் மந்திரம் (நம)
வைத்தியராய்ப் பணிபுரிந்து வையகத்தைக் காக்கவே
வைத்தியநாதனாய் வந்துதித்தான் சங்கரன்
வைத்தியமும் பாதகமும் இங்கு வந்து சேராமல்
பனிபோல் விலக வைக்கும் நமசிவாய மந்திரம் (நம)
தந்தை தாயும் தனயனோடு வாழுகின்ற வீடிது
சந்தனமும் பன்னீரும் கமகமக்கும் நாடிது
விந்தையோடு வியாதியெல்லாம் வேகமாக ஓடவே
வெற்றிவேலன் துணை இருக்கும் வீரசேகர் மந்திரம் (நம)
புள்ளிருக்கும் வேளூரெனப் புனிதமிகு பூமியாம்
பூதநாத கணங்களுக்கும் கனிவு காட்டும் சாமியாம்
வள்ளி தெய்வானையோடு வரங்கொடுக்கும் முருகனை
வளர்த்தெடுத்து நமக்களித்த அம்மையப்பன் மந்திரம் (நம)
திருச்சிற்றம்பலம்
...
திருமூலர் அருளியது பத்தாம் திருமுறை
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.
திருச்சிற்றம்பலம்
...
பஞ்ச புராணம்
பேராயிரம் பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்தின் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
– தேவாரம்
பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ
பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவதினியே !
– திருவாசகம்
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழிமிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம்
குளிரஎன் கண் குளிர்ந்தனவே.
- திருவிசைப்பா
பாலுக்குப் பாலகன் வேண்டி
அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள்
செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
– திருப்பல்லாண்டு
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
– பெரியபுராணம்
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க !
மலிவளம் சுரக்க ! மன்னன்
கோன்முறை அரசுசெய்க !
குறைவிலாது உயிர்கள் வாழ்க !
நான்மறை அறங்கள் ஓங்க !
நல்தவம் வேள்வி மல்க !
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலகம் எல்லாம்.
– கச்சியப்பர்
...
இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.
...
சிவ நாமம், சிவ தரிசனம், சிவத் தொண்டு - இம்மூன்றும் ஒரு மனிதனின் வாழ்வில் கிடைத்தற்கரியவை. இவை கிடைத்துவிட்டால் அதுவே கடைசிப் பிறவியாக அமையும். இதுவே முக்தி.
தென்னாடுடைய சிவனே போற்ற, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
சர்வமும் சிவமயம், சகலமும் சிவனருள். நடப்பதெல்லாம் ஈசன் செயல்.
எங்கும் இருக்கும் எதிலும் நிறையும் பரமேஸ்வரன் இதில் இல்லாமல் போவானா?
- என்றும் அன்புடனும். அருளுடனும் அடியார்க்கும் அடியேன் ஸ்ரீநிவாசன்
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
Subscribe to:
Post Comments (Atom)
Very good collection
ReplyDelete