Saturday, August 10, 2013

ஐந்தாகிய ஐயன்

...

கண், காது, மூக்கு, வாய், மெய், என்ற ஐந்து பொறிகளால் ஏற்படும் ஆசைகளை வென்றவன் பரம்பொருளான சிவன் என்பார் ஆசான் திருவள்ளுவர். ஐயன் சிவன், “நமசிவய” என்ற திருவைந்தெழுத்தாய் நிற்பவன் என்பார் திருநாவுக்கரசு அடிகள். “ ஒன்றுஅவன் தானே இரண்டுஅவன் இன்னருள், நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் ஐந்து, வென்றனன் …” என்பார் மூவாயிரம் தமிழ் மந்திரங்கள் அருளிய திருமூலர்.

ஐயன் சிவபெருமானை, “ஐந்து வென்றனன்” என்று திருமூலர் குறிப்பிடுவதை அறிஞர் பெருமக்கள், ஒன்றாய் இருக்கின்ற ஐயன் சிவ பெருமான் பொது நிலைக்கு இறங்கி வந்து, சிவலிங்கமான சதாசிவ வடிவில் நின்று, ஐந்தொழில் புரிந்து உலக பொருட்களையும் உலக உயிர்களையும் வெல்வதனைக் குறிப்பிடுவர்.

ஐயன் சிவபெருமான் நான்முகன், திருமால், சிவன், மகேசுவரன், சதாசிவன் என்று ஐந்து திருவடிவங்களை எய்திப் பல உலகங்களையும் அவ்வுலகங்களில் உள்ள உயிர்களையும் இயக்குவதனை ஐந்தொழில் என்கின்றனர். எல்லாப் பொருள்களிலும் பிரிப்பின்றி ஒன்றாய்க் கலந்து இருந்தும் எல்லாப் பொருள்களையும் உள்ளிருந்து செலுத்தும் வகையால் உடனாயும் பொருட்கள் வேறு இறைவன் வேறு எனும் பொருள் தன்மையால் வேறாயும் நின்று எல்லாவற்றையும் இயக்கும் செய்கையே ஐந்தொழில் எனப்படுகிறது. இதனைப் படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் என்பர். இதனை, “அனைத்து உலகும் ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள்தருவாய், போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்” என்று மணிவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுவார்.

திருமூலர் குறிப்பிடும், ”ஐந்து வென்றனன்” என்பது, இறைவனின் ஐந்தொழிலே அவன் உயிர்களுக்குச் செய்யும் அருள் செயல்களாக, உயிர்களின் அறியாமையை வென்று உயிர்களுக்கு நன்மை அளிப்பதாக உள்ளது என்றும் குறிப்பிடுவர். பெருமானின் அன்பான ஐந்து அருள் செயல்களைக் குறிக்கின்ற ஐந்தொழிலின் அழகிய திருவடிவே நடராசர் எனப்படும் ஆடல்வல்லான் திருவடிவு.

உலகில் வாழும் உயிரினங்களின் வகை எண்பத்து நான்கு நூறு ஆயிரம் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடும். உயிர்களோ எண்ணிலி என்றும் குறிப்பிடும். இவை புல், பூடு, புழு, மரம், மிருகம், பறவை, பாம்பு, கல், மனிதர், பேய், கணங்கள், வல் அசுரர், முனிவர், தேவர் என்று பல்வேறு பிறப்புக்களிலே தோன்றித் தத்தம் அறியாமையை நீக்கிக் கொண்டு பெருமானின் திருவடியில் இருக்கின்ற பேரின்பப் பெருவாழ்வினை அடைய இவ்வுலகினுக்கும் பிற உலகினுக்கும் வந்து போய்க் கொண்டிருக்கின்றன என்று மணிவாசகர் குறிப்பிடுவார். உயிர்களைத் தத்தம் போக்கிற்கு விடுவது போன்று விட்டுப் பிடித்துத் தம் திருவருள் ஐந்தொழிலினை நிகழ்த்தி அவற்றை நெறிப்படுத்துவதற்குப் பெருமான் ஆற்றுகின்ற ஐந்து அருள் தொழிலையே ஐந்து வென்றனன் என்று திருமூலர் குறிப்பிடுவதாய்ச் சான்றோர் பெருமக்கள் குறிப்பிடுவர்.

உயிர்கள் தங்களைப் பற்றியுள்ள அறியாமையைப் போக்கிக் கொள்ள, எண்ணற்ற பிறவிகள் பிறந்து, செவ்வியுற்று (பக்குவம்) அன்பின் பிழம்பாய், மனம், வாக்கு, காயத்தினால் தூய்மையடைந்து, பெருமானின் திருவருளையே கண்ணாகக் கொண்டு, தன்னுடைய அதுவதுவாய் அறிகின்ற, சுட்டி அறிகின்ற அறிவாகிய சிற்றறிவு நீங்கிப் பெருமானின் சிவ அறிவு கிடைக்கப்பெற்றுச் சிவமாம் தன்மை அடையும் வரை அவ்வுயிர்களுக்கு வேண்டுவனவற்றைப் பெருமான் ஏற்படுத்தித் தருகின்றான் என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு உயிர்களுக்கு வேண்டுவனவற்றை இவ்வுலகிலும் பிற உலகிலும் ஏற்படுத்தும் செய்கையைப் படைத்தல் என்று குறிப்பிடும் சித்தாந்த சைவம். உயிர்களுக்கு வேண்டிய வாழும் உடம்பு, அவ்வுடம்பில் வாழும் பிறவிக்கு ஏற்ப உடல் உறுப்புக்கள், மனம், சித்தம், அறிவு, மனவெழுச்சி ஆகிய உட்கருவிகள், உயிகள் வாழுதற்கு உரிய உலகு, அவ்வுலகப் பொருட்கள், நீர், நிலம், தீ, காற்று, ஆகாயம், கதி, மதி, மனைவி, மக்கள், உற்றார் உறவினர், நண்பர், இதர மாந்தர், பொருள், நாடு போன்ற யாவற்றையும் இறைவனே அமைத்துக் கொடுக்கின்றான். இவ்வேளையில் பெருமானை நான்முகன் என்று சைவம் குறிப்பிடும் என்கின்றார் திருமூலர்.

உயிர்கள் செவ்வி அடையும் வரையிலும் ஐயன் படைத்த யாவற்றையும் ஐயன் நிலை நிறுத்திக் காப்பதையும் நுகர்ச்சிக்குக் கொண்டுவருவதையும் காத்தல் எனும் அருள் தொழிலாகப் பெருமான் செய்கின்றான் எனவும் அந்நிலையில் பெருமானுக்குத் திருமால் என்பது பெயர் என்றும் திருமூலர் குறிப்பிடுவார்.

மேலும் ஒவ்வொரு பிறவியிலும் நுகர்வதற்கு வேண்டாதனவற்றை நீக்குவதற்கும் உயிர் இளைப்பாறுவதற்கும் இறைவன் அழித்தல் எனும் அருட்தொழிலை செய்கின்றான். இந்நிலையில் அவன் சிவனாக நிற்பான் எனவும் குறிப்பிடுவார்.

உயிர்கள் செவ்வியுறும் வரையிலும் ஐயன் தன்னை மறைத்தும் உலகினைச் சார்ந்தும் உயிர்களை இருக்கச் செய்து, உயிர்கள் செவ்வியுற்ற போது உலகினை மறைத்துத் தன்னைக் காட்டி நிற்றலை மறைத்தல் என்று குறிப்பிடுவார். இந்நிலையில் ஐயனுக்கு மகேசுவரன் என்ற திருப்பெயர் வழங்குவதாயும் குறிப்பிடுவார்.

செவ்வியுற்ற உயிர்களைத் தன் திருவடிக்குச் சேர்ப்பித்துத் தன்னிடம் இருக்கின்ற வரம்பு இல்லாத பேரின்பத்தில் அழுத்துதலை அருளல் அருட்தொழிலாகவும் இந்நிலையில் பெருமானுக்குச் சதாசிவன் எனும் பெயர் விளங்கும் என்றும் குறிப்பிடுவார்.

இதுவே ஐந்தாகிய ஐயன் எனும் நிலை.


Courtesy: http://saivanarpani.org/home/?p=142


No comments:

Post a Comment