Saturday, August 3, 2013

முன்னோர்கள் சொல்

...

அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்.

'வைகறை துயில் எழு’ என்றார்கள் முன்னோர்கள். ஏன்?
அதிகாலையில் சுற்றுப்புற சூழ்நிலை, காற்று முதலானவை எல்லாம் மிகவும் தெளிவாக இருக்கும். காற்று தூய்மையாக இருக்கும். அந்தத் தூய்மையான காற்றைச் சுவாசிப்பதால் ஆரோக்கியம் கூடும். பொழுது விடிந்து போக்குவரத்து மிகுந்து விட்டதென்றால், சூரியனின் வெப்பம் பட்டுப் பல சக்திகள் ஆவியாகப் போய்விடும். போக்குவரத்து வாகனங்களின் நச்சுப்புகை, காற்று மண்டலத்தில் பரவி ஆக்கிரமித்துக் கொள்ளும். அப்புறம் தூய்மையான காற்றுக்கு எங்கே போவது? ஆரோக்கியத்தை நாம் அடைய வேண்டுமென்றால், அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என நம் நலத்திற்காகவே சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.

அப்படி எழுந்திருக்கும்போதும், வலது பக்கமாகத் திரும்பி எழுந்திருக்க வேண்டும்.

இதற்கும் காரணம் உண்டு. நம் உடலில் இரண்டு விதமான காந்த வளையங்கள் இருக்கின்றன. (பள்ளி-கல்லூரிகளில் விஞ்ஞான பரிசோதனை கூடங்களிலோ, மருத்துவ நிலையங்களிலோ உடல் கூறினை விளக்கும் படத்தைப் பார்த்திருப்போம். அதில் இந்த வளையங்களைக் காணலாம்.) ஒன்று, காலில் இருந்து தலைக்கும், தலையிலிருந்து காலுக்கும் வலம் வந்து கொண்டிருக்கும். இரண்டாவது, இடது பக்கம் இருந்து முன் பக்கம் வழியாக, வலது பக்கத்திற்கும் வலது பக்கத்தில் இருந்து பின் பக்கம் வழியாக, இடது பக்கத்திற்கும் வலம் வந்து கொண்டிருக்கும். அந்த வளையங்களின் திசைக்கு ஏற்றபடி உடம்பு அசையும்போது வளையங்களின் சுருள்கள் இறுகும். அதற்கு எதிராக அசையும்போது, காந்த சுருள்கள் தொய்வடைந்து போகும். அதனால் உடம்பின் செயல்திறன் தளர்வடைந்து போகும்.

அடுத்து, படுக்கையில் இருந்து எழுந்து கையால் தரையைத் தொட்டு, ‘‘தாயே, பூமாதேவி, என்னை மன்னித்து, நான் செய்யும் அபராதங்களைப் பொறுத்துக்கொள்’’ என வேண்டி, கையால் தரையைத் தொட வேண்டும்.

இது எதற்காக? இரவு முழுவதும் உடலை நீட்டிப் படுத்திருந்தோம். உடம்பு சம நிலையில் இருந்தது. எழுந்தவுடன் காலால் தரையைத் தொட்டால் சக்தி வீணாகும். ஏனென்றால், படுத்திருந்த போது ரத்த ஓட்டமும் உடம்பின் செயல்பாடுகளும் வேறு. ஆகவே, எழுந்தவுடன் காலால் தரையைத் தொட்டால்... சக்தி பெருமளவில் கீழ்நோக்கிப் பாய்ந்து வீணாகும். கையால் தரையைத் தொட்டு நிமிரும்போது சக்தி மேல் நோக்கிப் பரவிப் பாய்ந்து நலம் தரும். இதை எண்ணியே காலையில் எழுந்ததும் கையால் தரையைத் தொட்டு, பூமாதேவியிடம் அபராத மன்னிப்புக் கேட்க வேண்டும் என வைத்தார்கள்.

முக்கியமான அடுத்தது -குளியல்.

குளியலுக்கென்று பலவிதமான விதிமுறைகள் உள்ளன. காலையில் வீட்டை விட்டு வெளியே போய், ஆறுகளிலோ, குளங்களிலோ அமிழ்ந்து குளிக்க வேண்டும். அப்படி முழுகிக் குளிப்பதன் மூலம் உடம்பில் உள்ள சூடு தணியும். குளிக்கும்போது, இரட்டை ஆடைகளுடன் குளிக்க வேண்டும். ஆடையில்லாமல் குளிக்கவே கூடாது. இரண்டு ஆடைகளுடன் நீராடும்போது (ஆறோ, குளமோ) ஒன்று தண்ணீரோடு போய் விட்டாலும், ஒன்றை வைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டு கரையேறலாம். ஒற்றை ஆடையுடன் இருந்தால், மானம் போய்விடும்.
இன்றைய காலத்தில் பலர், சீறிப்பாயும் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட்டை விட வேக வேகமாகக் குளித்துவிட்டு வந்து விடுவார்கள். குளிக்கப் போவதும் தெரியாது. வருவதும் தெரியாது. இரண்டு குவளை தண்ணீரை எடுத்து அரக்கப் பரக்க உடம்பில் பட்டும் படாததுமாக ஊற்றிக்கொண்டு வந்து விடுவார்கள். இவ்வாறு செய்வதால் உடம்பில் உள்ள சூடு தூண்டப்படுமே தவிர, ஒருக்காலும் சூடு தணியாது. விஞ்ஞானம் கூறும் உண்மை இது. ஆறு, குளங்களில் குளிக்கும்போது செய்ய வேண்டிய முக்கியமாக விஷயத்தை முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, அவ்வாறு குளிக்கும்போது நீருக்கடியிலிருந்து மூன்று கைப்பிடி மண்ணை எடுத்துக் கரையில் போட்டுவிட்டுக் குளிக்கச் சொல்வார்கள். இதனால் அந்த ஆறோ, குளமோ ஆழப்படும். அவற்றின் கரைகளும் பலப்படும். நீர் ஆதாரங்களைப் பராமரித்த முன்னோர்களின் அற்புதமான ஏற்பாடு இது.

தீபங்கள்

தீபங்கள் ஏற்றுவதிலும் பல நுணுக்கங்களை வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். விளக்கேற்றும்போது காலையில் சூரிய உதயத்திற்கு ஒரு நாழிகை முன்னாலும் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு நாழிகை முன்னாலும் விளக்கு ஏற்ற வேண்டும். (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்.) இரவு போய், பகல் வரும்போதும், பகல் போய் இரவு வரும்போதும் சுற்றுப்புற சூழலில் நிகழும் சில மாற்றங்களால், விஷ அம்சங்களால் பாதிப்பு உண்டாகும். இந்தப் பாதிப்புகளைத் தடுக்கும் சக்தி, விளக்கில் இருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களுக்கு உண்டு. இதை முன்னிட்டே அதிகாலையிலும் மாலையிலும் விளக்கு ஏற்றச் சொன்னார்கள் முன்னோர்கள்.

அடுத்தது கோலம் போடுவது.

தர்ம சிந்தனை மிகுந்தவர்கள் நமது முன்னோர்கள். காலையில் எழுந்தவுடன் தர்மத்தில் ஈடுபட வேண்டும். தர்ம சிந்தனையைத் தூண்ட வேண்டும் என்பதற்காகவே, கோலம் போடச் செய்தார்கள். கோலம் போடும்போது அரிசி மாவினால் போட வேண்டும். காரணம்? எறும்பு முதலான சின்னஞ்சிறு ஜீவராசிகள் உண்ண வேண்டும் என்பதற்காகவே. அரிசி மாவினால் போட்ட அந்தக் கோலத்தில் உள்ள சின்னஞ்சிறிய அரிசித் துகள்களை, எறும்புகள் இழுத்துச் சென்று உண்ணும்.

ஆரோக்கியம்

அது இல்லாவிட்டால் என்ன செய்தும் பலன் இல்லை; எது இருந்தாலும் பலன் இல்லை. ‘நோயில்லா உடல் இருந்தால் நூறு வரை காதல் வரும்’ என்பார் கண்ணதாசன்.
பதினாறு பேறுகள் என்று பட்டியல் இட்டு வரிசைப் படுத்திய அபிராமி பட்டர், ‘அகிலமதில் நோயின்மை’ என்று ஆரோக்கியத்திற்குத்தான் முதல் இடம் தருகிறார். அப்படிப்பட்ட ஆரோக்கியத்தை நாம் அடைய வேண்டும் என்பதற்காக, முன்னோர்கள் செய்து வைத்த அற்புதமான செயல் அடுத்து வருகிறது.
வெளியில் போய்விட்டு வீட்டிற்குள் வரும்போது, கால்களை அலம்பிக்கொண்டு வரவேண்டும். இதற்காக, வாசலிலேயே ஒரு வாளியில் தண்ணீர் வைத்திருப்பார்கள். அதில் கால்களை நன்றாக அலம்பிக்கொண்ட பிறகே வீட்டிற்கு உள்ளே வரவேண்டும். ஏனென்றால், நமக்கு வரக்கூடிய நோய்களில் பெரும்பாலானவை கால்களின் மூலம்தான் வருகின்றன.
வெளியே நாம் போய்வரும்போது, ஏராளமான கிருமிகள், கால்களில் ஒட்டிக் கொள்கின்றன. நம் வீதிகளின் தூய்மையைப் பற்றி விவரிக்க வேண்டியது இல்லை. அப்படிக் கால்களில் ஒட்டிக்கொண்ட கிருமிகளுடன் வீட்டிற்குள் போனால் என்ன ஆகும்? அதனால்தான் கால்களைத் தூய்மை செய்து கொண்டு வீட்டிற்குள் நுழையச் சொன்னார்கள்.

வாசற்படியில் மஞ்சள் பூசச் சொன்னார்கள்.

அரைத்த மஞ்சளை (மஞ்சள் தூளை) நீர்விட்டு நன்றாக குழைத்து, வாசற்படியிலும் பக்கவாட்டிலும் ஏறத்தாழ ஒன்றரை அடி உயரத்திற்கும் பூசி வைப்பார்கள். மஞ்சள் தலைசிறந்த கிருமிநாசினி.
மஞ்சள் பூசப்பட்ட வாசல் படிகளின் வழியே நாம் உள்ளே போகும்போது, நம்மை அறியாமல் மிச்சம் மீதி இருக்கும் கிருமிகளும் அழிந்து போய்விடும். இந்த உண்மையை அறியாமல் நாம் வாசல் படியில் மஞ்சள் நிற வண்ணத்தை அடித்து விட்டோம்.
மஞ்சளின் மகத்துவத்தை முழுவதுமாக உணர்ந்த முன்னோர்கள், நமது ஆரோக்கியத்திற்காகவே, வாசல் படியில் மஞ்சள் பூசவேண்டும் என்றார்கள். மஞ்சள் பூசப்பட்ட வாசற்படியைக் கடந்து, ஒவ்வொரு முறை நாம் போகும்போதும், கால்களில் உள்ள கிருமிகள் அழிந்து போகும். வீட்டுக்குள் நுழையுமுன்பாக மட்டுமல்ல,

இரவில் படுக்கப் போகுமுன்னும் கால்களை நன்றாகக் கழுவிக் கொள்ள அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

கால்களில் ஈரம் இல்லாமல் துணியால் ஒற்றிவிட்டு, இறைவனை ஒருசில விநாடிகள் பிரார்த்தித்துவிட்டு, அதன் பிறகே படுக்க வேண்டும். இவ்வாறு செய்தவன் மூலம் பெரும்பாலான நோய்களைத் தவிர்க்கலாம். எப்படி? ஏன்? நம் கைகள் கண்ட இடங்களில் படுவதில்லை. ஆனால் கால்களோ, எல்லா இடங்களிலும் பதிகின்றன. அப்படிப் பதியும்போது கால்களில் உள்ள பத்து நகக் கண்களின் மூலமாகக் கிருமிகள் நம் உடலில் நுழைகின்றன. வீட்டிற்குள்ளும் அங்கு, இங்கு என்று நடந்து அழுக்குகளைச் சேர்த்துக் கொண்டிருப்போம். அவற்றோடு இரவில் படுத்தால், அது நோய்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியதைப் போல ஆகிவிடும். அதைத் தடுக்கவே இரவில் படுக்கும்போது கால்களைத் தூய்மை செய்து கொண்டு, ஈரமில்லாத காலுடன் படுக்கச் சொன்னார்கள்.

...

ஒரு வலைப்பூ http://aanmikam.blogspot.in/ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.
வலைப்பதிவர் Sasithara Sarma (Swiss) தகவல்களுக்கு மிக்க நன்றி.

No comments:

Post a Comment