ஷேத்ர யாத்திரை .. கும்பகோணம் 2024 (8)
2-9-2024 . திங்கள்
பட்டீஸ்வரத்திலிருந்து 14கிமீ தொலைவில் அமைந்துள்ள
திருக்கருகாவூர் கர்பரக்ஷாம்பிகை திருக்கோயில் ..
20 நிமிஷ டிரைவ்
கும்பகோணத்துக்கு தென் மேற்கில் 20 கிமீ தொலைவில்
அமைந்துள்ள சுமார் 2 ஆயிரம்ஆண்டுகள் பழமையான
திருக்கருகாவூர் திருக்கோயிலில் அருள்மிகு அன்னை
கர்பரக்ஷாம்பிகை (கருக்காத்தநாயகி) உடனுறை
அருள்மிகு அய்யன் முல்லைவனநாதர் தரிசனம் ..
மூலவர் சுயம்பு மூர்த்தி; மேற்புறம் பிருதிவிபாகம் புற்று
மண்ணாலாகியது. சுவாமி திருமேனியில்
முல்லைக்கொடி சுற்றிய வடு உள்ளது.
கருவைக் காத்தருளும் கர்பரக்ஷாம்பிகை அகிலாண்ட
கோடி அன்னையாய், அனைத்துயிர்களின்கருவைக்
காத்தருளுபவளாய், கண்கண்ட தெய்வமாய் அருள்
பாலிக்கிறாள். கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள்
திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள்.
கரு+கா+ஊர்.
கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கரு,
கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர்
முன்னொரு காலத்தில் இத்தலம் இருக்குமிடம் முல்லை
வனமாக இருந்தது. அந்த அழகியவனத்தில் கௌதமர்,
கார்க்கேயர் என இரு முனிவர்கள் இறைவனை வேண்டி
தவமிருந்தனர். இந்த இரு இறை அன்பர்களுக்கும்
நித்துருவர்-வேதிகை தம்பதியினர், முல்லை
வனத்திலேயே தங்கி இருந்து சேவை செய்து வாழ்ந்து
வந்தனர். தம்பதியர் இருவரும் இறைப் பணியில்
ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மனதில் பெரிய குறை
ஒன்றிருந்தது. தங்களுக்கு குழந்தைப் பேறு இல்லையே
என்று வருத்தம் இருந்தது. அந்த மனக்குறையை
முனிவர்களிடம் கூறினர். அதற்கு அம்முனிவர்
பெருமான்கள் இந்த முல்லைவனத்தில் எழுந்தருளியுள்ள
இறைவனையும் இறைவியையும் வணங்கிட நீங்கள்
வேண்டி நிற்பது கிடைக்கும் என வாழ்த்தினர். அவ்வாறே
அம்மையப்பனை வணங்கி மக்கட்பேறு கிடைக்கப்
பெற்றனர்.
இவ்வாறு வேதிகை கருவுற்றிருந்த சமயம், கணவர்
இல்லாமல் வேதிகை மட்டும் தனித்திருந்த நேரத்தில்
சுகமானசுமையான கருவை சுமந்திருந்த காரணத்தினால்
சற்றே மயக்கத்தில் கண்ணயர்ந்த சமயத்தில்
ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிட்சை கேட்க, உடல்
சோர்ந்த காரணம் வேதிகையால் முனிவருக்கு எழுந்து
வந்து உணவிட முடியவில்லை. இதனை அறியாமல்
கோபம் கொண்ட முனிவர் சாபமிட, அவள் பெற்ற கரு
கலைந்தது. அம்பாளிடம் சென்று தன் நிலையை எடுத்து
இயம்பினாள் வேதிகை. தன் பக்தையின் நிலை அறிந்து
அன்னை கர்ப்பரட்சகியாக தோன்றி கலைந்த கருவினை
ஒரு குடத்தினுள் வைத்து பாதுகாத்து குழந்தை உருவாகும்
நாள் வரை வைத்து காப்பாற்றி நைந்துருவன் என்ற பெயர்
சூட்டி வேதிகையிடம் தந்தருளினாள் அன்னை.
இவ்வாறு பூவுலகத்தில் முதல் ‘கருமாற்றம்’ செய்து,
இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு வித்திட்டவள்,
திருக்கருகாவூரில் வீற்றிருக்கும் கர்பரக்ஷாம்பிகை
என்னும் கருக்காத்த நாயகி அம்மன்.
கருகாத்த நாயகியின் மகிமையை நேரடியாக அனுபவித்த
வேதிகை, இறைவியிடம் இனி இத்தலத்தில்
கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி, இப்பூவுலகில்
கருத்தரித்தவர்களையும் கருவையும் ஒருசேர காப்பாற்ற
வேண்டும் என பிரார்த்தனை செய்ய அன்னை அவ்வாறே
இத்தலத்தில் வீற்றிருந்து நமக்கெல்லாம் அருளுகின்றாள்
இதன் காரணமாகவே இத்தலம் திருக்கருகாவூர் என்றும்,
இத்தல இறைவி கர்பரக்ஷாம்பிகை என்றும் பெயர்
விளங்கப்பெற்றது. இந்த நேரத்தில் அருட்குழந்தை
நைந்துருவனுக்கு கொடுக்க வேதிகையிடம் தாய்ப்பால்
இல்லாத காரணத்தால், அம்பாள் காமதேனுவை அனுப்பி
பால் கொடுக்கச் செய்தாள். காமதேனு தன்
கால்குளம்பினால் பூமியில் கீறியதன் காரணத்தால்
பால்குளம் தோன்றியது. இந்த புனித குளம் இன்றும்
திருக்கோயிலின் முன்புறம் க்ஷீரகுண்டம் என்ற பெயரில்
இருந்துவருகிறது
கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர்
இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர்.
இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப்பிரசவம்
ஏற்படுவதில்லை. கர்ப்பவேதனையும் மிகுதியாவதில்லை.
கருவுடன் மரணமடைவோரும் இல்லை.
கர்பரக்ஷாம்பிகைக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு,
நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம்செய்து
அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற
நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
இத்தலத்து ஈசனான முல்லைவன நாதர் வினைப்பயனால்
ஏற்படும் வியாதிகளை தீர்ப்பதால்அவருக்கு பவரோக
நிவாரணன் என்றும் ஒரு பெயர் உண்டு.
உள்ளே நுழைந்தால் கருவறையில் இறைவன்
முல்லைவனநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
புற்றுமண்ணால் ஆன சிவலிங்கத் திருமேனி.
சிவலிங்கம் மீது முல்லைக் கொடிகள் படர்ந்திருந்த
வடுக்கள் இப்போதும் காணப்படுகின்றன.
புற்றுமண்ணால் ஆனவர் என்பதால், மூலவருக்கு
அபிஷேகம் செய்யப்படுவதில்லை. வளர்பிறை
பிரதோஷம் அன்று புனுகு சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது.
இத் திருக்கோயிலில் சுவாமி, விநாயகர், நந்தி மூவரும்
சுயம்பு வடிவமாக உள்ளனர்.
சுவாமி சன்னிதிக்கு வலதுபுறம் உளிபடாத சுயம்புவாக,
கற்பக விநாயகர் இருக்கிறார் . இத்தலத்தில் உள்ள நந்தி
உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர்.
கோயிலுடன் தொடர்புடைய நான்கு நீர்நிலைகள் - பிரம்ம
தீர்த்தம், க்ஷீர குண்டம், சத்திய கூபம், விருத்த காவிரி.
பிரம்ம தீர்த்தம் - கோயிலின் வடகிழக்கில் அமைந்துள்ள
இந்த குளத்தில் நடராஜர் கார்த்திகை தீவத்தாரையின்
போது தீர்த்தவாரி கொடுக்கிறார்
ஷீரகுண்டம் - கோயிலுக்கு முன்புறம் அமைந்துள்ள குளம்
காமதேனு தன் கால் குளம்பினால்பூமியில் கீறியதன்
காரணத்தால் தோன்றிய பால்குளம்.
சத்தியகூபம் - சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளுக்கு
இடையில் அமைந்துள்ள ஒரு கிணறு.
விருத்த காவேரி - காவிரியின் கிளை, வெட்டாறு
(முள்ளிவாய் என்றும் அழைக்கப்படுகிறது) - பலகோயில்
நிகழ்வுகளுக்கு கரையே கரையாகும்.
வலைத்தளம்/வலைப்பூ முகநூல் பதிவுகள் படித்து அறிந்த
விஷயங்களை நான்அறிந்தவைகளோடுஅங்கொன்றும்,
இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி
ஏற்றியுள்ளேன். பதிவர்களுக்குமிக்க நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
படங்கள் உதவி: வலைப்பூ பதிவுகள்
No comments:
Post a Comment