ஷேத்ர யாத்திரை .. கும்பகோணம் 2024 (9)
2-9-2024 . திங்கள்
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை தரிசனம் முடித்து
கும்பகோணம் திரும்பி வந்துகொண்டு இருக்கும்போது
வண்டிஓட்டுனர் ஊத்துக்காடு காலிங்கநர்த்தன கிருஷ்ணர்
கோவில் பார்க்கிறீர்களா என்று கேட்டார்.
நான் இப்ப முடியாது, அடுத்தமுறை பார்க்கலாம் என்று
சொல்லிவிட்டேன்.
சிறிது தூரம் சென்றபிறகு சடன் பிரேக் போட்டு வண்டியை
நிறுத்தினார். “ஏன்” என்று பார்த்தால் ஒரு ஆறடி நீள
பாம்பு திடீரென்று ரோடை கிராஸ் பண்ணிவிட்டது.
மனதில் ஒரு மின்னல். ஆஹா கிருஷ்ணர் அழைக்கிறார்.
நின்ற இடத்தில் வலது பக்கம் ரோடில் ஒரு ஆர்ச்.
அருள்மிகு காலிங்க நர்த்தன கிருஷ்ணன் கோவில்
நுழைவுவாயில். உடனே வண்டியை திருப்பியாச்சு.
ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்.
திருக்கருகாவூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில்
அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான
ஊத்துக்காடு காலிங்க நர்த்தன கிருஷ்ணர்
திருக்கோயிலில் மூலவர் அருள்மிகு தாயார் ஸ்ரீதேவி
பூதேவி உடனுறை அருள்மிகு வேதநாராயண பெருமாள்
தரிசனம் .. பசுக்களுடன் உற்சவர் அருள்மிகு தாயார்
ருக்மணி சத்யபாமா உடனுறை அருள்மிகு காளிங்க
நர்த்தனப் பெருமாள் தரிசனம் ..
ஸ்ரீ காளிங்க நர்த்தனப் பெருமாளின் சிலை 2.5 அடி
உயரம் .. ஐந்து வயது சிறுவனாக சித்தரிக்கப்பட்ட பகவான்
கிருஷ்ணர் பாம்பின் தலையில் இடது பாதம், வலது பாதம்
தூக்கியபடி நர்த்தனக் கோலத்தில் உள்ளார் .. தனது இடது
கையால் பாம்பின் வாலைப் பிடித்தபடி வலது கையால்
அபய முத்திரையைக் காட்டுகிறார் .. இவ்விக்ரகம்
பகவானின் இடது பாதத்திற்கும் காளிங்கனின் சிரசுக்கும்
நூல் விட்டு எடுக்கும் அளவுக்கு நுணுக்கமாகச்
செதுக்கப்பட்டுள்ளது . ஒரு கையால், கட்டைவிரல் மட்டுமே
தொட்டு இருக்கும்படியாக காளிங்கனின் வாலை
பிடித்தபடி காட்சி தருகிறார் .. பகவானின் வலது காலில்
காளிங்கனின் வாலில் இருந்து பலத்த அடிபட்டதால்
ஏற்பட்ட தழும்பு காணலாம்.
மகாவிஷ்ணு ஸ்ரீ காளிங்க நர்த்தனப் பெருமாளின்
பஞ்சலோக விக்ரஹமாக தன்னை மாற்றிக்கொண்டார்
என்றும், நாரத முனிவர் ஊத்துக்காடு வேதநாராயணப்
பெருமாள் கோயிலில் ஸ்ரீ காளிங்க நர்த்தனப்
பெருமாளின் பஞ்சலோக விக்ரஹத்தை நிறுவினார்
என்றும் புராணங்கள் கூறுகின்றன.
சின்னஞ்சிறு கோவில் தான். ஆனால் அழகாக
இருக்கிறது. கோபுரம் ஆதிசேஷனுடன்
தொடர்புடையதாக சொல்கிறார்கள்.
இத்தலத்தில் தேவலோகப் பசுவான காமதேனுவின்
குழந்தைகளான நந்தினி, பட்டி என்கிறபசுக்களுக்கு,
ஸ்ரீகிருஷ்ண பகவான் காளிங்க நர்த்தனத்தை மீண்டும்
ஆடிக் காண்பித்தார். இந்தலீலையை ஸ்ரீ நாரத முனிவர்
கண்ணாரக் கண்டுள்ளார். ஸ்ரீநாரதர் பிரார்த்தித்துக்
கொண்டதற்கு இணங்கி, இந்த தலத்தில் ஸ்ரீகிருஷ்ணர்
நமக்கெல்லாம் அருள் பாலித்துக் கொண்டிருப்பதாக
ஐதீகம்.
ரோகினி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் இது
ராகு, கேது, சர்ப்ப தோஷம் நீங்குவதற்கான பரிகார தலம்.
இசைக்கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் தங்கள்
கலைகளில் அபிவிருத்தி பெற்று பிரகாசிக்க இங்கு வந்து
பிரார்த்தனை செய்கிறார்கள்.
கிருஷ்ணரைப் போற்றி பல நூறு பாடல்கள் இயற்றிய
தமிழ்க்கவி ஊத்துக்காடு வேங்கடசுப்பையர். (1700 முதல்
1765) வாழ்ந்த தல்ம் இது. ‘அலைபாயுதே கண்ணா',
'தாயே யசோதா உந்தன் ஆயர்குலத் துதித்த' போன்ற,
அவர் இயற்றிய பாடல்கள் இன்றளவும் மிகவும் பிரசித்தம்
இத்தலத்து கிருஷ்ணனே, வேங்கடகவிக்கு இசையைப்
பயிற்றுவித்ததாகச் சொல்வர். இதற்கு ஆதாரமாக
வேங்கடகவியின், ஆபோகி ராகத்தில் அமைந்த
'குரு பாதாரவிந்தம் கோமளமு' எனும் பாடலைச்
சொல்கிறார்கள். அதில் அவர் சொல்லும் கருத்து:
'நான் எந்த புராணங்களையோ, வரலாறுகளையோ
படித்ததில்லை; படித்ததாக பாசாங்கும் செய்யவும்
இல்லை. எனக்குத் தெரிந்த அனைத்துமே பகவான்
ஸ்ரீகிருஷ்ணன் என்னைக் கடைக்கண்ணால் பார்த்து,
எனக்கு அளித்த பிச்சை' என்கிறார். ஸ்ரீநாரத் முனிவரின்
மறு அவதாரமாக ஸ்ரீவேங்கடகவி கருதப்படுகிறார்.
இவருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது.
வலைத்தளம் வலைப்பூ முகநூல் பதிவுகள் படித்து அறிந்த
விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும்,
இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி
ஏற்றியுள்ளேன். பதிவர்களுக்கு மிக்க நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
படங்கள் உதவி: வலைப்பூ பதிவுகள்
No comments:
Post a Comment