Saturday, October 28, 2017

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அந்தாதி


கலியுகத்தில் நாமகீர்த்தனம்தான் பக்தியை வளர்க்கும்.  “வாய் திறந்து பாடினால், ஸ்ரீ அகிலாண்டகோடி பிரம்மாண்டநாயகி வாழ வழி காட்டுவாள்” என்பது உறுதி.

எல்லாம் வல்ல சக்தி ஸ்ரீஅங்காள பரமேசுவரியின் திருவருள் யாவரும் பெறும் வண்ணம், என் ஆத்மார்த்த குரு திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய‌ ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் இவ்வந்தாதியினை இயற்றியுள்ளார்.



ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அந்தாதி


ஆனந்த கணபதி காப்பு

முருகனுக்கு மூத்தோனாய் முழுமுதற் சுழியாய் வைத்தென்றும்
பெருகிவளர் சோதியா யெங்கும்பரவி யருளென்னும்
அருகுபுல் சாத்திய ஆனந்த கணபதியருளால் அங்காளம்பிகை அந்தாதி
உருகி யாவருள்ளத்திலுள்ளே ஊடுருவக் கண்டு

நூல்

உதிக்கின்ற திங்கள் உணர்வூட்டும் முகமென் னினைவில்
பதிக்கின்ற நின்பார்வைப் பாலில் பழமும் வீழ்ந்து
மதிக்கின்ற குவளைபோல் பராசக்தியென் பாவம் தீர்த்து
துதிக்கின்ற தூய்மையாக்கும் தூயவளே. 1

தூயவளே துன்பந் தகர்ப்பவளே துணையாயென்றும்
மாயவளே மாணிக்கமே மலைமன்னன் புதல்வியே
தாயவளே தமிழவளே தந்தையாயு மென்றும்
வாய்ப்பவளே வளம்பல வாய்த்திடுவாய். 2

வாய்த்திடுவாய் தாயாயெனக் கென்றும்
சாய்ந்திடுவாய் திருவருளமுதந்தா யெனக்கு
வாய்த்திடுவாய் கருணையுளந்தனைக் கண்ணகத்தே
பாய்த்திடுவாய் நின்திருவுளப் பேரொளியே. 3.

பேரொளியே மாயப்பாசத் தொடரெலாம்
தாரொளியே தகர்த்தங்கு தகுதியுடைய வனாய்ப்
போர்த்தங்கு புண்ணியப் புவியதில் பக்குவமாய்
வார்த்திங்கு விட்டினையே விந்தைமிகு நாயகியே. 4.

நாயகியே நான்முகனும் நாரணரும் நமசிவாயருக்குத்
தாயாகியே யொளிவிடும் தனிப்பெருஞ்சுடரே யெனைச்
சேயாக்கியே சித்தம் தெளிவுறச் செய்து செல்வியே
பேயனை யென்றும் பெருமைபட வைத்திட்டாயிங்கு. 5

இங்குளநாள் மட்டுமல்லா தினியான்
எங்குசெல்கினும் நின்னருளால் நின்புகழ்தான்
தங்குமென்று தாரணியில் பரப்பிடும்போது
அங்கெல்லாம் வந்தென்முன் நிற்கும் முக்கண்ணியே. 6

முக்கண்ணியே முனிவரும் தேவரும் மூவரும்
இக்கன்னியாய்த் தோன்றியிங்கு முத்தொழில் செய்திட்டு
தண்ணிலவாய் தன்பத்தியினைப் பரப்பியே பலரிடம்
விண்ணிலவமுதாய் வேழாம்படியில் வீற்றிருப்பவளே. 7

வீற்றிருப்பவளே யீரேழுலகெங்கும் விந்தையாய்
தோற்றியிருப்புவளே தோற்றத்துள்ளிருந்து துலங்குபவளே
போற்றினா யென்னுள்ளத்திலிருந் துன்னேயே யென்மனம்
மாற்றினா யெங்கும்பரம் பொருளான சுந்தரியே. 8

சுந்தரி சுகந்தருஞ் சுயஞ்சோதி சுயம்பிரகாசினி
அந்தரி யகத்தினுள்ளிருந்து மந்திரம் விளக்குபவளே
தந்திரஞ் செய்பவளே தமிழாயெங்குந் தாவியே
இந்தத் தரணியிலாடிடும் அங்காளம்பிகையே. 9

அங்காளம்பிகையாய் அகமதிலாடு மருட்கடலே
செங்காளம்பிகையாய்ச் செகமதிலாடி யிங்கு
கங்கையம் மனாயானந்தக் கூத்திட்டு மாலுக்குத்
தங்கையம்மனாய்த் தரணியகத்தாடும் தாரணியே. 10

தாரணியே தன்தமிழ்ப் பாசாங்குசச்
சீரணியே சிதம்பரத்தாடும் நாயகனுக்குப்
பேரணியே பெருமாட்டியே பேச்சும்பாட்டு மீயவல்ல
நாராயணி நம்பினவருக்கு நலம்பல ஈந்திடும் நாயகியே. 11

நாயகி நாயேனுனை நம்பவைத்திங் காட்டிடும்
தாயாகித் தன்மனத்தே யெனைவைத்து வித்துவளர்செடி பூவுமாக்கிக்
காயாகிக் கனிந்து கற்பகத் தருவாக்கிநின் சேயாக்கும்
மாயாவிளையாட்டினை விளம்பத்தா னியலுமோ. 12

இயலுமோ உன்பெருமைதனை யியம்ப விமயத்தரசி
கயலுமென் விழிகாட்டி விளக்கியிச் சிறியனுக்குப்
பயிலுவித்தாய் பக்திதனைப் பராசக்தி பாரெங்குமினித்
துயிலுருமோயிவ்வுள மோங்காரத் தெளிவே. 13

தெளிவே தென்னாட்டி னின்னமுதே ஞான
நெளிவே நெல்முத்தே நெல்லையப்பருக் கருட்
பொலிவே ஏகாந்தமே யெண்ணிலடங்காத யென்னம்மே
வலிவே ஈந்திடுவாயிப் பாடலென்று மீரேழுலக முலாவிடவே. 14

உலாவிட உன்னருள் பரப்பிடவே பிறந்திங்கு
குலாவிடவே குழந்தையாய் உன்னருட் புனலில்
கலாபமயிலே மயிலைவாழும் கற்பகாம்பிகையே யருட்
பலாபல னீந்திடுவாய் நின்பாதம் பற்றியே. 15

பற்றினேன் இவ்வாக்கை நினைவுதனை யென்றும்
கற்றிலேன் காலன்பற்றா கல்விதனை ஞான
நெற்றியிலே ஆடுகின்ற அங்காளம்பிகையே
வெற்றியே யாவருக்கு மீந்திட்ட யென்தாயே. 16

தாயே தரம்பெற்ற பத்தருக்கு ளெனையென்றும்
சேயாக்கிவிட்டு யெனைச் சிறப்புறச் செய்தாய்
மாயாப் பிறவியிட்டு மனமகிழ வைத்திங்கு நினை
வாயாரப் புகழவைப்பா யென்றென்று மிவ்வையகத்தே. 17

வையகத்தே வாய்திறந்து பாடவைத்தாயே யெனையுன்
கையகத்தே யென்றும் வைத்தாட வேண்டுகின்றேனென்
மெய்யகத்தே யென்று மேவிவிளையாடு மென்னம்மே
தையல்நாயகியே தரணியில் தான்தோன்றி. 18

தான்தோன்றி தரணியில் தந்திடும்நின் புகழ் முன்பே
வான்தோன்றி வருமுன்னை வந்தம்மா நின்புகழ்பாட
யான்தோன்றி யென்றும் நின்னருள் பரப்பியே நினைவில்
நானெனும்நீ தோன்றியே நின்றாடுவாய் பராசக்தியே. 19

பராசக்தியே மூவர்க்கும் முதலே யென்றும்
மாறாசக்தியே சத்தியஞான பீடமே யென்னுள்
தீராசக்தியே தீவினையகற்றும் தெளிவே
பாராயோ சக்தியே பாரில் யாவரையும் பத்தராக்கி. 20

பத்தராக்கி நின்நாமமே நான்கு வேதமாக்கி யென்றும்
சித்தருக்கு உபதேசித்த சிவசக்திரூபியே யெங்கும்
முத்தருக்கு மூலபீடமே முக்கண்ணியே யென்போன்றோருக்கு ஞானப்
பித்தமே உன்னருள் கூட்டி வந்ததே. 21

சிறந்தவளே சித்தந் தெளிவுறச் செய்பவளே எம்மயமாய்
பிறந்தவளே பிறவிப் பெருங்கடல் நீந்திடவே எம்மோடு
மறந்திடாமல் வந்தெம்மை யாட்கொள்ளுமகா சக்தியே
இறந்திடுதல் வந்தெம்மையாட்கொள்ளு முன்னேநீவரல் வேண்டும். 22

வேண்டுமென நான்கேட்கு முன்னே நீயறிந்து
வேண்டின வெலாந்தந்திடும் அங்காளம்பிகையே நின்னருளால்
தாண்டினேன் தரணிப்பொருளாசையை யென்போல் நின்பத்தருக்கும்
வேண்டியே தந்திட்டால் விந்தை மிகுவாழ்வை விளம்பத்தா னியலுமோ. 23

இயலுமோ உன்னருட் சக்தியைச் செப்புதற்கே யென்றும்
பயிலுகின்றேன் நின்னருளால் நீலியுனைப் பாடவே யிவ்வுடல்
துயிலுருமுன்னே தூக்கியெம்மைக் காத்திடுவாய்
வயலூர்ப் பெருமானை யீன்றெடுத்த வடுவாம்பிகையே. 24

ஈன்றெடுத்த தாயினைக் காட்டினாய் நினைவி லென்றும்
மூன்றெழுத்தோங்காரங் காட்டியே முப்பத்து கோடியினரும்
சான்றதுன் பாதமே சாவாமருந்தளிக்கும் சாந்தியே
போன்றதுன் நாமம்போல் சாந்தமளிக்கு மொருநாம முன்டோ. 25

உண்டோ உனைப்போலுளமுருகி உவந்தளிக்கும் தெய்வமதைக்
கண்டிலனே இப்பாரெங்கும் பரந்துநிற்கும் பராசக்தியே
தொண்டே உனக்கென்றுஞ் செய்திடவே வைத்தாண்டு
கொண்டே யிருப்பா யினியெப் பொழுதுமே. 26

பொழுதென்னு மிரவுபகலா யென்று மேத்தியுன்னைத்
தொழுதென்றுந் துதித்திட்டென் நினைவிலாலம்
விழுதென யென்றும் பற்றியேஆனந்தக் கண்ணீரால்
அழுதழுதுன்னைத் தொழுதிடக் குறையேது அங்காளம்பிகையே. 27

குறையேது குணக்குன்றே குளிர்மலை வாழுமெம்
பிறைசூடிய பெருமானென்று முன்னன்பெனு மருட்
கரையிலமர்ந்தங்கு மோனத்தவம்புரிய வைத்திட்டு
நிறையருளை நிறைந்தருளும் நீர்மல சுந்தரியே. 28

சுந்தரி சூக்குமச் சுடர்சோதியே மாயா
தந்திரி மனமகிழ்சித்திக்கு வித்துநீ சிந்தை தெளிவூட்டும்
மந்திரி மங்களநாயகி மாமறைதேடிடு மென்றும்
வந்தறிவாய் விளங்கவேண்டு மென்னுள்ளே. 29

என்னுற் சொல்லும் செயலும் நீயேயாகி யெனை
உன்னுளுறைகின்ற உயிர்க் கதிரொளியாக்கித்
தன்னுளிருந்து தாருக்களிக்குந் தாரமுதமே யென்
கண்ணுள் நீயிருக்கு மதிசயத்தை யென்னென்பேன். 30

அதிசயமான வடிவில் வந்தாடும் வளர்சோதியே நினையுன்
பதியே பலகாலம் தவமிருந்து பார்த்திட்டா ரெனக்கு
கதியே நினையன்றி வேறுயாருளா ரெப்பிறப்பிலும் வருமென்
விதியை மாற்றிட மனங்கொண்டாடும் மகாசக்தியே. 31

குலங்கொண்ட கையொன்று சுற்றியெனைக் காக்க
ஆலமரன்பனுக் கருட்கூட்டு மங்களாம்பிகையே தமிழுக்கொரு
வேலனை யீந்திட்டவேம்புலி நாயகியே யென்மேல்
காலக் கயிறதுவிழுமுன்னே கண்முன்னே வரல்வேண்டும். 32

கண்ணாவோ நின்கருனைக் கெல்லையொன்றுண்டோ
அண்ணாவோ திருவண்ணாமலைக்கு நீயருள் அண்ணாவோ மாதுள
வண்ணாவோ வாய்திறந்து பாட்டியற்று மிவ்வேழைதனை நீயென்றும்
எண்ணாவோ யிருந்திடலு மியலுமோ விமயத்தரசியே. 33

கனியே கனியின்ரசமே கற்கண்டே மலர்ப்
பனியே பணியும்பத்தருக்குப் பாலமுதே பணியாதவர்க்கு மாயத்
துணியே துணிகிழித்தெறியுந் தூயபொருளே யென்றும்
துணிந்துனைப் பணிந்தபின் பணியேன்நின் பக்தரல்லாதவருக்கே.  34

இல்லாதவரு முன்நாமங் கல்லாதாருண்டோ யிவ்வுலகில்
சொல்லாத நாளுண்டோ நின்தோத்திரமே யிப்புவியில் நின்திருக்கோயில்
செல்லாத நாளென்னநாளோ நானறியேன் நாளெல்லாம்
நில்லாதது சென்றாலும் நீயேயெனக்கு வந்தெதுவும் செய்தல் வேண்டும். 35

அது வேண்டுமென நான்கேட்கு முன்னே வந்து
இது வேண்டுமா யெனக்கேட்கு மங்காளம்பிகையே யென்றும்
எது வெனக்கு நலந்தருமோ அதையேநினைத் தருளல் வேண்டும்
பதுமையாய்த் திருக்கோயிலகத்தே யிருக்கும் பராசக்தியே.  36

அகத்தே யொன்று வைத்தனைத்துயிர் வாழும்
செகத்தே யொன்றுசொல்லி சிறியோர் முன்னேசிரந் தாழ்த்தி
இகத்தே பிறக்கும் பொருள்நாடி யிறவாதென நம்பி
நகத்தே யெடுக்குமழுக்குபோல் யானுள்ளேனே. 37

அழுக்கது அகலவோர் மார்க்கம் கூறென்னன்னையே
முழுக்கது போட்டிடிவ்வுலகவாழ்விற்கு ஞானக்
கூழுக்கழுது வருமென்னைக் கூட்டிக்கொண்டிடு குலதேவி
ஊழுக்கழுதிடாம லென்னுளமதி லாடம்பிகையே. 38

ஆடனைத் தாட்டமும் நீயேயாடு உள்ளக் காமக்
காடழிந்திடவே காளியென்றே யாடென்மனம்
நாடும் நாராயணி நலமிகுவிவ் வேழுலகும்
பாடும்பாடும் பராசக்தியென்றே பாடும். 39

பாடு பலகோடி ஜீவன்களில்பாடு நின்பக்தரோடு
கூடு யென்றுங் கூட்டினுள்ளோடுங் குகைநாயகியே
கேடொன்றுமில்லை நின்நாமங் கேட்டபோதே உன்னருளைத்
தேடு தேடென்றே தேடவைத்தாய் ஞானப் பித்தனாக்கி. 40

பித்தனெனப் பெயர்சூடினான் சுடலை நாயகன் பத்தியால்
கத்தாமலிருப்பேனோ நினைக்காணும் வரைகண்டபின்னென்றும்
சொத்தாய் நீயெனக்கு வேண்டுமென்றே பித்தாயலைகின்றேன்
சித்தாய்ச் சிதம்பரமாய்ச் சின்மயமாய் வீற்றிருப்பவளே. 41

சாதனையென் றொன்றுண்டெனிலது நீயேகுளிர்மலை
நாதனும் நீயிட்டபடி செய்வதே சாதனை யென்றான்திரு
ஆதிமூலனுமாறு முகத்தோனும் மூத்தோனும் நின்நாமமே சாதனை யென்றார்
நாதியுனையன்றி வேறறியாருக்குச் சாதனையும் சாந்தியும் நீயே. 42

இவள் சோதனை செய்யமுனைந்திட்டால் சொல்லத்தானியலுமோ
பவள நிறத்தினள் பாரில்லோர்க்கெல்லாம் பக்திப் பாலூட்டினாள் நின்னருள்
துவளாதென்று மெனையுமனைவரையுங் காக்குமிச்சக்தி
அவள் செய்வதத்தனையுந் திருவிளையாட லென்றியம்புவது நன்றே. 43

இயம்புவதுன் நாமத்தை நின்னடியாரிடையே யென்றும்
சுயம்பு சோதியாய்ச் சுற்றியாவரையுஞ் சுத்திசெய்தெங்கும்
மயங்க வைத்தாய் மகாசக்தியெனும் நாமக்கள்ளையூட்டி யாவரையும்
இயங்க வைத்தாயுன்னருட்சக்தியாலே பலவண்ணமாய். 44

மூவருந்தேட மற்ற முனிவருந்தேட ஆயிரங்கோடி யண்டந்தேட
யாவருந்தேட உடுக்கை சூலமுடனெம்முன் வந்திங்கெமைநீ
பாவலராக்கிப் பாட்டிசைத்துப் பாடியிங்கெமக் கென்றுங்
காவலாகிக் காட்சியாகி நின்றாயே. 45

நின்றா யெம்மனத்து ளென்றுமுனைப் பற்றியெங்கும்
கன்றா யுன்னடிமை கொண்டுநான் பிறமதத்தில்
நன்றாய்ச் சேருவேனோ கனவிலுமில்லையடி தாயே
இன்றா யிக்கணமாயிங் கென்முன் நிற்கவே. 46

என்முன் வாழவழிவகுத்து விட்டாய் வளம்பெரும்
பொன்வாழ்வொன்று காட்டினாய் ஞாலம் புகழ்
உன்வாழ்வொளியென்மீது வீசியே யென்றும்
நின்வாழ்வை யென்வாழ்வாக்கிய நாயகியே. 47

வாழ்வில் தவறேது நின்னருளால் செய்யினும் நாயகியே
தாழ்வுறும் தவறேதும் வேண்டாதடுத்ததை நீதிருத்தி
வீழ்வுறு மெண்ணம் வீணுக்குந்தோன்றல் வேண்டா ஞானக்
கூழுற்றி யெனக்கூட்டும் குலப்பெரும் நாயகியே. 48

குறிப்பறிந் தளிக்குங் கூர்மதியுனக்கன்றி யாருக்குளதோநல்
நெறிப்பண்புதனை யென்றுமென்னுடலுதிரமாக்கி யென்மனப்
பரிதனையடக்கியே யெங்கும் நீயேயாகி யென்னுளடங்கும்
கரியநீலக் காரிகையே கற்பகாம்பிகையே. 49

கரிந்திவ்வுடல் சாம்பலாகிப் பயனற்றுப் போகுமுன் கற்பகத்தருவே யெனை
பரிந்து நீயுமேற்று நின்பாதப் பணிவிடை செய்வித்துனைத்
தெரிந்த பின்னும் சாகும்காரியம் செய்வித்திடாம லென்றும்
சரிந்திவ்வுடல் வீழுமுன்னே சமாதியெனக் கருளே. 50

அகங்காரங்களைந்திட நாமங்கொண்டா யங்காளம்பிகையெனச்
செகத்தேயென்றும் செகதாம்பிகையாய் நின்றவளே யென்றும்
இகபரவாழ்வில் வந்துதவுமினியபெரு நாயகியே உன்கை
நகத்தேயிருந் துதிர்ந்ததுதானே திருமாலுக்குத் தசாவதாரமே. 51

அவதாரம் பலவுருவிலெடுக்கும் நாயகியே யார்
அவதார மெடுத்தாலு முன்னருளால் வந்தவரே முத்தருக்குத்
தவத்தாரமளிக்கும் தமிழ்ப்பூங் பூங்கோதையே யனைத்
தவதாரமு முன்னவதாரமெனத்தெரியும் நாளென்றோ. 52

உன்னருளால் வந்தவரிங்கு பலகோடியே யாவரையும்
தன்னருளால் வந்ததெனக் கூறவைத்தாயே யெங்கும்
இன்னருளத்தனையு மெங்கிருந்தாலுமது
உன்னருளால் வந்ததென இயம்ப வைத்திடாயோ. 53

இவரு யர்ந்தவரென்று பலகூட்டங் கூற
அவரு யர்ந்தவரென்று மற்றேர்கூற அனைவருள்ளும்
எவரு யர்ந்தவரெனக் கேட்கவைத்தனையே யாவரையும்
கவர்ந்திழுக்குங் கருணைதான் உயர்ந்ததெனப் புகட்டிலையோ. 54

புகட்டாத பொருளொன்றுண்டோ யிப்புவிமீதே உன்னருளால்
பகட்டான பொருளுக்கே பலகோடியினரையும் மயங்கவைத்தா யென்றும்
திகட்டாதுன் நாமம்திவ்வியத் திருவே யாவரையு முன்னருள்
நகட்டா திருக்குமோ ஞானவழி நோக்கியே. 55

ஞானவழி நடந்திட நலமிகுநாமம் மேல்
வானவழி பறந்திட சீலமிகுநாம மங்கு
கானவொலி கேட்டிட ஒலிமிகுநாம மவள்பணிக்கு
தானமென யீவதிவ்வுடல் பொருளாவிதானே. 56

உடலதுருவாக்கி யுயிரெனப்புகுந்துள்ளே யுனையடையுமாசைக்
கடலதுவைத்துநீ கப்பலாயாகி கரையதுசேர்க்கவே ஞானத்
திடலதமைத்தாயழியா மெய்ப்பீடத்துள்ளே உனையென்றும் பாடும்
மடலது ஈந்திட்டிட்டாய் மணப் பூங்குயிலே. 57

குயிலே நீகூவியழைத்திடிற் குழந்தை நானாடியழகு
மயிலாய் வந்துநின் பாதம் பற்றியேயென்றும் ஞானப்பாடம்
பயிலவே யிங்குவந்துனை வேண்டவைத்தா யுன்னுடனெனை யழைத்து
கயிலை சென்றங்குவைத்துக் காட்சியாயுன்னோ டாக்கிடுவாய். 58

ஆவிநீதானே என்னுடலென்னும் கட்டைக்குள்ளே
காவியணிந்திட வேண்டுமோ துறவியெனப் பிறரறிய
பாவியெனக்குப் பலநிறஆடைபூட்டினாய் பாசமுடன்நீ
தாவியே நிர்மல ஆடைவேண்டி வந்தெனக் களிக்கவே. 59

ஒன்றுனது நாமமே யென்றுமெனது நாட்டமே
இரண்டுனது அருள்பொருளிவ்வையத்தினையு மளித்தெனக்கு
மூன்றுனது கண்களால் மும்மலம் போக்கியே யுனை
நான்முகனும் நாரணனும் நமசிவாயனும் நலமுறவணங்கக் காண. 60

வணங்கவே வந்துவிட்டேன் வாழ்நாளெல்லாம் பிறர்சொல்லால்
சுணங்கி சோம்பித் திரிதலும்வேண்டா யிவ்வுலகச் சுற்றத்தாரெல்லாம்
பணிந்துனக்குப் பணிசெய்யும் நாள்தனைப்பார்த்தென் பாமாலையை
அணிந்துனக் கென்றும் பார்த்திடுவே னங்காளம்பிகையே. 61

வானமது நீயேயானாய் வளர்சோதி உன்மீதபி
மானமது நீயேயளித்தாய் வளர்மா மதுரைவாழ்
மீனாட்சியானாய் வந்தெனக் கென்றும்திரு
ஞானமது ஈந்தென்னை யுன்னோடு கூட்டினையே. 62

கூட்டியே சென்றென்னை மனங்குளிர வைத்தமுதப்பால்
ஊட்டினையே உளத்தென்று முன்னருட் பெருக்கை
நாட்டினையே நாட்டமுடன் நின்நாமமந்திரத்தை யென்றும்
நோட்டமே யெனக்கு வைத்தாண்டு கொள்ளே. 63

பொருள்தரும் போகந் தரும் மதிமயங்கிப் போகுமுன்னே
அருள்தரு மனைத்துந்தரும் அங்காளம்பிகைதானே
திருவருள்தருந் தினந்தரும் தன்பால் நீங்காநினைவூட்டி யானந்தக்
கருப்பொருளாய் வந்தெனைக் காக்கும் அம்பிகையே. 64

அன்பாலழுதானந்தக் கண்ணீரா லர்ச்சித்தே யென்றும்
உன்பால் தொழுதுன்னைப் பக்தியால் பாட்டிசைத்தே யென்றும்
என்பால் பழுதுபட்டிருக்கும் உளமாசுதனைப் புதுப்பித்
தன்பால்வந்தெனை யணைத்துக் கொள்ளாயோ. 65

அசைவற்ற பொருளும் நீயேயெனங்கமெலாம்
இசையாகி வந்தாடும் வனப்பும் நீயேயெத்
திசையுமுன் நாமம் பரப்பியே உன்னன்புப்
பசையாகி படர்ந்துன்னுடன் வாழவேண்டுமம்மா. 66

குருவாகி யெனக்குநீ வரல்வேண்டு மென்முன்னே
உருவாய் வந்துநின்றருளல் வேண்டுமுன்னொளிக்
கருவாய் வந்திவ்வேழை பிறந்திடல் வேணடுமென்றுந்
திருவாய்வந்து நிற்குந் திருவெல்லை நாயகியே. 67

வல்லவள் நீயே வியத்தகுயிவ்வுலகி லென்றும்
நல்லவள் நீயேநம்பினோருக்கும் நம்பாதோருக்கும்
மெல்ல நினைவூட்டினையே நின்நாமம்
சொல்லசொல்லச் சுவைக்கொரு யெல்லையுண்டோ. 68

சத்தியம்நின் உடலாகும் சாந்தியே நின்கண்ணாகும் நின்நாமம்
நித்தியங் கூறினோருக்கு நீடுபுகழ்நீயே யுனைவணங்க மனதில்
பத்தியமேதும் வேண்டா பாரில்வளர் நாயகியேயென்று மெனக்கு நல்ல
புத்தியைத்தா புனித வீணையேந்திய சக்தியே. 69

வழிபட வைத்தனையே நின்னை யென்றும் பிறர்மீது
பழிபட யெனைநடத்திடல் வேண்டா வீணாய்
அழிபடும் பொருள்மீது பற்றெனக்கு வைத்தெக் காலத்தும்
இழிவுபட வைத்திடாதே இனியபெரு நாயகியே. 70

வாளுடன் வந்தவடிவழகு நாயகியென் வாக்கினில் நின்று
ஆளுடன் வந்தவருக்கெல்லா முன்நாமங் கூறியவர்
கோளது மாற்றியே குறைதீர்த்திடச் செய்து
நாளெல்லாம் நின்நாமங் கூறும்நிலைதனை யீந்திடாயோ 71

சோமன் நின்னருட்கொண்டான் சூக்குமச்சோதியே நின்
நாமமும்பெரிதெனக் கொண்டு நாரணனும் நலம்பெற்றுக்
காமனைத் தகனஞ் செய்து சிவனுமுயர்
வாமன அவதாரத்தான் தங்கையுனை மணந்தான்தானே. 72

சிவனும் சக்தியுஞ் சேர்ந்து வந்ததுன்னருளால்
அவனுமவளு மவதாரம் பெற்றது அங்காளம்பிகையால்
இவனுமிவளுஞ் சேர்ந்துனைப் பாடவைத்தனேயே யென்றும்
அவனுமுன்னைப் பணியாது சென்றதில்லையே செகப்பெருநாயகியே.  73

ஆசைதனை யிரண்டாக்கி யழியாஅழியுமெனக் கூறியுனைப்
பூசனைச் செய்ய வைத்தனையோ அழியாதுணையடைய வென்றுங்
காசைக் கொடுத்து மனமாசை வளர்த்தல் வேண்டா நின்னருளால்
ஈசனென்பது மீசுவரியென்பது முன்நாமமே. 74

கரும்பு வில்லுங்கைக்கொண்டுகாரிகையே என்றுமுனை
விரும்பும் நினைவே நீயளித்திடல் வேண்டுந் துட்டவெண்ணந்
துரும்பளவும் வந்திடல் வேண்டா யென்னுள்ளென்றும் வளர்
அரும்பாகி யனைத்துமாகி அண்டமாகி யென்னன்னை யாகினையே.  75

பூதநாதனுக்குப் புண்ணியப் பொறுப்பளித்தா யிவ்வேழைதனுக்கும்
பூதவுடலகத்தே உன்னினைவுப் பொறுப்பளிப்பா யென்னுள்ளே
நாதவொலி கேட்டுநாளெல்லாம் நின்நினைவு கூட்டவேண்டுந் தமிழ்
வேதவொலி போற்றும் வேதநாயகியே வேதவுமையே. 76

உமையே யாருக்கு மடியேனுன்னருளா லென்றும்
சுமையா யிருந்திடல் வேண்டா யைம்புலனடக்கும்
ஆமையா யிருக்கவைத்தென்னை யுன்னன்புள்ளத் தென்றும்
அமைத்திடுவா யம்பிகை சிலைபோல் அன்பே. 77

அன்பே யெனன்பினிற் புகுந்துமுக்கால முணர்த்தி
இன்பமுமினிமையும் நீயாகி யினிய பத்தருக்குள்
துன்பமேதுமின்றித் துடைத்து நீதூயநிலை யளித்து
அன்பு மறனுமளித்தாளுகின்றனையே. 78

காதலாகிக் கனிந்திவ்வுளங் கதிநீயேயென்று மிவ்வுலகத்தே
சாதலெனும் மாயவாழ்வில் வைத்தென்னை மயக்கிடாதே
பாதயாத்திரியாயென்று முன்கோவிலுக் கெனைவரவழைத்துக்
கீதமா யென்று முலாவிடும் கீதாம்பிகையே. 79

புண்ணியம் யாதுசெய்யவைத்தனை புலம்புகின்றே னுன்னருளால்
பண்ணிய பாவந்துலைத்திடாயோ தூயபெருநாயகியே யென்னுள்
எண்ணியதெலா முன்னருளால் நிறைவேற்றினாய் நீயேயென்றும்
திண்ணிய நெஞ்சந்தந்தென்னைப் புண்ணியஞ் செய்வித்திடாயோ. 80

புண்ணியஞ் செய்துன்னருட் கொண்டு நின்புகழ்பரப்பிக் கடமை
கண்ணியங் கட்டுப்பாடென்பது நின்செயலே யென்வாழ்வில்
நன்னியுன்னை நலமுடன்நாடிவந்தே னுன்னருளால்
மண்ணில் வாழ்நாளெல்லாம் மனமகிழ் நாளாக்குவாய். 81

வந்தேனென் வாழ்நாளெல்லா முனைப்பாடி யென்றும்
தந்தே னெனக்கென் றொன்றுண்டென்றா லத்தனையும்
கந்தவேளே காக்கும்படித் தமிழுக்கீந்த கருணைபோல்
வந்தேன் நாளுமரிய பலசெயலைச் செய்திடும் நாயகியே. 82

மெல்லிய குழல்குரல் கொண்டே கூலியழைத்தேன் குருவாகி
சொல்லிய மந்திரமென்னுள் ஒலிக்கவே யென்றுந்தூய
மல்லிமணம் பரப்பித் தூயதீபமுள்ளே காட்டியென்றும்
அல்லி யங்காளம்பிகையா யாகிவந்தாய் ஞானமுதளிக்கவே. 83

நஞ்சுண்ட ஐயன் நஞ்சுதனைக் கண்டத்திலே நிறுத்தித் தேவருக்கெலாம்
அஞ்சேலெனக் கூறிநின்னன்ப ருய்யும் வண்ணமுயிரூட்டி யனைவருந்
தஞ்சமெனயுனை வைத்துத் தரம்பெருவாழ்வளிக்கும் நின்
மஞ்சளது குங்கும மகிமையை மனமகிழ்ந்து பாடவைத்தனையே. 84

குங்குமந் தந்திடுங் குறைவில்லா வாழ்வுதனை உலகுக்கு
எங்கும் பரப்பியே பாடிட வேண்டும் நின்னருளால்
தங்குமே யென்றும் நினக்குச்செய்யுந்தொண்டே யழியாமல்
இங்கினி வேறோருக்குப் புகழில்லையே உனைப்போலே. 85

திருநீற்றின் மகிமையைத் திருத்தமுடன் கூறயெனக்கியலுமோ
பெருங் காற்றென வந்திடுமெக்குறையும் மடக்கி யொழிக்கும்
வருகாற்றென வந்து வேண்டாதென ஓட்டித் தள்ளி ஞானமூட்டும்
அருட்தென்றலாகி யானந்தக் களிப்பூட்டுந் திருநீறே. 86

பாதமலர் கண்டுநானும் பாசமுடன் பாடியுன்னை தமிழ்
வேதமலர் தூவியே துதித்துன் பாதயிடைப் பத்திச் சர்க்கரை
சாதம்வைத்து சாந்தமெனும் நின்னருட் பழம் படைத்தன்பு
கீதம்பாடியே கீர்த்தனை புரிய வேண்டுமம்மா. 87

தாமரை மலர்ப் பொன்னடிதனைப் பொறுப்புடன் வணங்கி
யாவரையும் யாவையும் செய்யத் தூண்டியென்னை யுன்புனித
பூவறைத்தாள் மீதுபுண்ணியனாய் வைத்தென்றுமுன்
பாவறையும் செயலீந்தனையே ஈகைபெருமாட்டியே. 88

பூவடி பெருமைதனைப் புரிந்துகொள்ளும் நாளென்றோ ஞானக்
காவடிப் பாட்டிசைத்து நின்கணங்களெல்லா மாடக்கண்டு
பால்வடியும் நின்பாசப் புன்னகையுடனிங்கு நீயெழுதும்
நாலடிப் பாடலுக்கு நலமிகு நின்பாதம் பட்டிடவே. 89

பாதநினைவே யெனக்கென்றும் வேண்டும் வேறெது நினைவும்
காததூரம் ஓடிடவேண்டும் நின்நினைவென்றும்
சேதமுறாது செம்மலர்ப் பாதநினைவே வேண்டும்நின்
பாதமேயென் பலபிறவி யழிக்க வந்ததே. 90

பார்வை யொளியால் பகலிரவு செய்துளமாயப்
போர்வை களைந்தெறிய வந்திடாயோ வீணுக்குழைத்தென்
வேர்வை ஒழியப் பாடுகின்றேன் பண்ணிசையே யுன்மீதென்றும்
ஆர்வம் வந்திடப் புனிதப் பார்வை பாய்ச்சுவாயே. 91

நின்புருவமசைந்திடில் நீலகண்டனாடுவா னென்னுள்ளத்தே
அன்புருகொண்ட நாயகியே யாயிரங்கோடி யண்டங்களும்நின்
புன்முறுவலில் வந்ததே புண்ணியமூட்டும் நாயகியேயிங்கு
என்புருவாயிருக்கு மெனையேற்றுக் கொண்டருள்வாயே. 92

புவனங்களாடப் புவியெங்குமாட புலன்களாட யென்
கவனங்களாட வுன்னால் கண்டதத்தனையுமாட யிவனுன்
மவனென்று கொண்டாட மனமகிழ்ந்து நானும் மெத்த
தவமென்ன செய்தேனோ தவமருள் நாயகியே. 93

நுதலதில் அழகொரு பொட்டுங் கண்டேன் ஞானப்
பதிகங் கூறும் மூன்று திருநீற்றுப் பட்டை கண்டேனென்னால்
அதிக மியம்பத்தா னியலுமோ ஞானமுன்மூத்த
துதிக்கை நாதனாற்றான் நவில இயலுமே. 94

வேல்கொண்டளித்தாய் குமரனுக்கே ஞானத்தால்
மேல்கொண்டெழ வைத்தெனக் கமிர்தப் பாலளித்துநின்
கால்தனுக்குத் தொண்டுசெயுங் காலந்தந்துநின்
கோலமெல்லாம் நானாகித் திருநீராயமர் நாளென்றோ. 95

இடுகாட்டிற் சென்றுயெனை யிட்டிடல் வேண்டா ஞானச்
சுடுகாட்டிற் சென்றுசுட்டென்னைப் பசும்பொன்னாக்கு
வடுவாம்பிகையே வந்தென்னை வளர்த்திட்டுன்னருளாற் பாழும்
படுகுழிக்கழுத்தும் நின்பாசமற்றவருடன் சேர்த்திடாதே. 96

அறியாது நின்னருளால் யாதுபிழையும் செய்தல் வேண்டா மதிமயக்கித்
தெரியாமலெதுவுஞ் செய்வித்திடல் வேன்டயென்றும் நல்ல
நெறியது தவறாமல் நலம்பல நின்னன்பருக்கெலாம் செய்தென்
குறியது நின்திருப்பாதமே யென்றிருக்க வைப்பாயே. 97

அனத்து மழிந்தாலும் நின்னருளா லழியாநல
மனைத்து மளித்து நம்பிக்கையு மளித்துநின்புகழ் மாலையால்
வினையத்தனையுந் தீர்த்து வீடுகொடுத்திடுவாய் யாருக்காவது
தினைத்துளி யளவேனும் நின்பத்தருக்குத் தீர்த்தமளித்தே. 98

ஓடுகின்ற நீருமுன் பெயர்கூறியே யோடியெங்கும்
வாடுகின்ற பயிர்வாழவழிசெய்து நீயெமக்குநின்
வீடுபுகழளித்து நினைவத்தனையும் நீயேயாகி நினை
நாடுகின்றவருக்கு நாமமாம் பராசக்தியே. 99

கல்லையு முருக்கு முன்நாமங் கனிந்தழுதிடில்ஞான
எல்லையுந் தாண்டவைக்கும் நின்நினைவா லென்றுமிருப்போர்
புல்லையும் நெல்லாக்கும் புனிதநிலை பெறுவரே யனைவர்
தொல்லையும் போக்குந் தூயநிலை நின்போலாவாரே. 100

கண்கண்டு குருடராய் குணம்பிரண்டலைதல் வேண்டா
மண்கொடுக்குமாசையதை மனதிலும் வேண்டா அழியும்
பொன்பொருள் கொடுக்குமாசையதை யொழித்துநீ யென்றுமுயர்
பண்கொண்டநின் நாமயிசை யென்றுமென் நினைவில் நிற்கவே. 101

நூல்பயன்

அன்புடன் அண்டங்கோடி யனைத்துங் காக்குமங்காளம்பிகையை
இன்பமுடன்பாடி பணிந்தோருக் கெல்லாந் துன்பம்
என்பதில்லையே துயரெல்லாந் தீர்த்துத் தூய்மையாக்கி
இன்பமுண்டினிமை யுண்டென்று ளமாடுமே.


இப்பாடல்கள் அனைத்தும் தேவியின் மூலமந்திர எழுத்துக்களின் பூரண சக்திதனை நூறு பாடல்களாய்ப் பிரித்து, கடைசிப் பாடலில் கருணையைச் சேர்த்து 'க' என்னும் மூலசக்திதனை விளக்கும் பயனாக அம்மன் அருளால் அமைகின்றன.


... மிக்க நன்றி: "குழலுறவு தியாகி" வலைத்தளம் 


“ஓம் காளிகாயை வித்மஹே, மாதாஸ்வரூபாயை தீமஹி!
தன்னோ அங்காளி ப்ரசோதயாத்” 

ஓம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மா, உனக்கு  என் அனந்த கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.  


அனைவரும் தேவியின் திருநாமத்தைப் பரப்ப வேண்டுகிறேன்.
அனைவரும் அருள்மிகு அங்காள பரமேஸ்வரியின் அருளாசியை பரிபூரணமாக பெற்று, திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் வாழ,  ஓம் சக்தி அம்பிகையை  வணங்கி  வேண்டிக்கொள்கிறேன்.

... என்றும் அன்புடன் அடியார்க்கும் அடியேன் ஸ்ரீநிவாசன்



4 comments:

  1. உண்டோ உனைப்போலுளமுருகி உவந்தளிக்கும் தெய்வமதைக்
    கண்டிலனே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா..

      Delete
  2. Sir endha sri angala parameshwari thanthadhi book mathiri kidaikuma sir padalgalum palangalum

    ReplyDelete
    Replies
    1. அய்யா, என்னுடைய ஆத்மார்த்த குரு திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய‌ ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் அருளிய அருள்பொக்கிஷம் இது.

      Delete