Sunday, October 29, 2017

கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு.


முருகப்பெருமான்புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது கந்த  சஷ்டி கவசம்.

பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிப்பூர்வமானது.

ஒருசமயம் அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார்.

அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார்.

திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார்.

முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான்காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக பாடும் திறனையும் அவருக்கு அளித்தார். அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.

"சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவுஞ் செங்கதிர் வேலோன்;" என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார்.

அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார்.  6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது.

"கந்த சஷ்டி கவசம்"  இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து  திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார்.

அழகன் முருகப்பெருமானைஆனந்தக் கூத்தாடி தொழுதார். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள் கொண்டது 'சஷ்டி கவசம்.'

பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒரு முறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவசநூலை முருகன் மீது பாடவேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வாறு அவர் பாடியதுதான் "சண்முக கவசம்."

இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டி கவசம் போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இதேபோல், முருகப்பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து.

ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றை குறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான்.

அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5 அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது.


சஷ்டி கவச பாராயண பலன்கள் ....

ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது, மனம் வாடாது, குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம், நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள், குழந்தை பாக்கியம் கிட்டும். இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது..

கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.

கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.

ஸ்ரீதேவராய சுவாமிகள் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது.

நாம் முருகப்பெருமான் திருவடியை விடாது பிடித்தால் ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.

இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம்.

கந்தன் வரும் அழகே அழகு ...
பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள்.

முருகன் வந்து விட்டான்,
இப்போது என்னைக் காக்க வேண்டும், ப்ன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.

அவர் அழகை வர்ணிக்கும் போது
பரமேச்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திருநீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை.  உடம்பின் பாகங்களை காக்க வேலை அழைக்கிறார்.
வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல், நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல், மார்பிற்கு ரத்தின வடிவேல், இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல், பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல்,  சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல், முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனைய வேல்,
காக்க காக்க கனக வேல் காக்க.
அப்பப்பா எத்தனை விதமான வேல்கள் நம்மைக் காக்கின்றன.

அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது.
பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள்.
பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயல் இழந்து விடும் என்கிறார்.

பின் மிருகங்களைப் பார்ப்போம்.
புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.

நோய்களை எடுத்துக்கொண்டால்,
வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார்.

இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும். நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள். உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.

...  மிக்க நன்றி:  *சித்தர்களின் குரல்* முகநூல் பதிவு



கந்தர் சஷ்டி கவசம் பாடல் ......

காப்பு:
நேரிசை வெண்பா:
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம் நெஞ்சிற்
பதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்து ஒங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசந் தனை.

குறள் வெண்பா:
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி

நூல்:
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவுஞ் செங்கதிர் வேலோன்;
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென்று உவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறுஇடும் வேலவன் நித்தம் வருக
சிரிகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவண பவனார் சடுதியில் வருக
ரவண பவச ரரரர ரரர
ரிவண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரவண வீரா நமோ நம
நிபவ சரவண நிற நிற நிறென
வசர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டு ஆயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க
விரைந்து எனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் செளவும்
உய்யொளி செளவும் உயிரையும் கிலியும்
கிலியுஞ் செளவும் கிளரொளி யையும்
நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் தீயும் தனிஒளி யொவ்வும்
குண்டலி யாம் சிவகுகன் தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறுஇடும் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறுஇரு திண்புயத்து அழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்துஅணி மார்பும்
செப்பழகு உடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற் சீராவும்
இருதொடை அழகும் இணை முழந்தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
எந்தனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதன் என்று
உன் திருவடியை உறுதியென்று எண்ணும்
எந்தலை வைத்து உன் இணையடி காக்க
என்னுயிர்க்கு உயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினை காக்க
விழிசெவி இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்து இருபல்முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க
என்இளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க
சேர் இள முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழூபதி னாறும் பருவேல் காக்க 
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கை இரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நல் துணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்ரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்கத் தடையறத் தாக்க
பார்க்க பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புறக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும் 
கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்
விட்டாங்காரரும் மிகு பல பேய்களும்
தண்டியக்காரரும் சண்டாளர்களும் 
என்பெயர் சொல்லவும் இடி விழுந்துஒடிட
ஆனை அடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகள் உடனே பலகல சத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் 
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தோதாள் எனைக் கண்டால் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டு அலறி மதிகெட்டு ஓடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடல் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்குச் செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணல் எரி
தணல்எரி தணல்எரி தணல்அது ஆக
விடுவிடு வேலை வெருண்டது ஓடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந்து ஓடத்
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்து உயிர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ்சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் 
சூலைசயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் புரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தறணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்
உன்னைத்ட் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே! சையொளி பவனே!
திரிபுர பவனே! திகழ் ஒளி பவனே!
பரிபுர பவனே! பவமொழி பவனே!
அரிதிரு மருகா! அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்!
கந்தா குகனே ! கதிர்வே லவனே !
கார்த்திகை மைந்தா ; கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே ! சங்கரன் புதல்வா !
கதிர்காமத்து உறை கதிர்வேல் முருகா !
பழநிப் பதிவாழ் பால குமரா 
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா !
செந்தின்மாமலையுறும் செங்கல்வராயா ! 
சமரா புரிவாழ் சண்முகத்து அரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க, யான் உனைப்பாட
எனைத்தொடர்ந்து இருக்கும் எந்தை
முருகனைப் படினேன் ஆடினேன்
பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன்
பூதியை நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன் அருள் ஆக
அன்புடன் இரட்சி அன்னமும் சொர்ணமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க, மலைக்குரு வாழ்க !
வாழ்க வாழ்க, மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க,
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்ற வளாமே
பிள்ளையென்று அன்பாய் பிரியம் அளித்து
மைந்தஎன் மீதுன் மனமகிழ்ந்து அருளித்
தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததை
கலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி
நேச முடன் ஒரு நினைவது ஆகிக்
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறு உருக்கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்து நீறுஅணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்னர் எண்பர் சேர்ந்தங்கு அருளுவர்
மாற்றவர் எல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதன் எனவும் நல் எழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத்து அடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும் 
சர்வ சத்குரு சங்காரத்தடி
அற்ந்தென உள்ளம் அஷ்டலட்சுமிகளில்
வீரலட்சுமிக்கு விருந்து உண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்து அமுது அளித்த
குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
என்னைத்தடுத்து ஆட்கொள்ள எந்தனதுள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேன பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இரும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேலா போற்றி
உயர்கிரி கனக சபைக்கு ஓர் அரசே
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்

சரணம் சரணம் சண்முகா சரணம்!

https://youtu.be/bc31a0xd1FU

இன்று கந்த சஷ்டி .. 25/10/2017

Balaji Mandir & Someswar Mandir at Nasik


On advice from the Readers, the Religious Matters will also be in English.
I will continue to describe it in my Mother Tongue, Tamil.

Continuation of our Temple Visits in Nasik ...
நாசிக் நகரில் அனுபவித்த ஆலய தரிசனம் தொடர்கிறது ...

On return from Trimbkeswar Temple, Thambi has suggested to see Balaji Mandir and Sri Someswar Mandir. Since both are on the way to home, we decided to visit.
திரிம்பகேஸ்வர் ஆலய தரிசனத்தை முடித்து இல்லம் திரும்புகையில், தம்பியின் அறிவுரைப்படி, வரும் வழியிலேயுள்ள பாலாஜி மந்திர்க்கும், சோமேஸ்வர் மந்திர்க்கும் செல்லலாம் என்று தீர்மானித்தோம்.


First we had been to Sri Balaji Temple.
What a beautiful Temple, a tranquil place. The Temple Tower is like 'pagoda' - a pyramid like tower and typically having upward-curving roofs over the individual stories - as we see in Mahabalipuram, Tamil Nadu.
முதலில் பாலாஜி மந்திர்.
ஓர் அழகான சாந்தமிக்க அமைதியான ஆலயம். மஹாபலிபுரம் கடற்கரை கோயில் மாதிரி "பகோடா" அமைப்புப்படி அமைந்துள்ள ஆலய கோபுரம்.


In front of the Temple, a tall attractive brass plated Dhwaja Stambha is erected.  Both Usha and Renu stood before it and had their selfie.
ஆலய நுழைவுவாயிலுக்கு முன், பித்தளையால் மூடப்பட்ட உயரமான மனத்தை இழுக்கத்தக்க துவஜ ஸ்தம்பம் நிறுவப்பட்டுள்ளது.  அதற்கு முன்னால் உஷாவும், ரேணுவும் ஒரு 'selfie'.


The huge and eye catching First Hall is with dome shaped canopy. The floor is full of attractive polished granite slabs. A big marble Lord Garuda idol is placed facing the main Diety.
குவிந்த கூரை விதானத்துடன் கண்களை கவரக்கூடிய பெரிய அர்த்த மண்டபம்.  வழவழயென்று பளபளப்புடன் ஜொலிக்கும் பெரிய க்ரானைட் கல்லிலால் ஆன தரை. கர்பகிரஹத்தை நோக்கி மார்பிளாலான பெரிய கருடாழ்வார் சிலை.

Beautifully carved attractive idol of Sri Balaji, a replica of Tirupathi Srinivasa Perumal, is installed in the sanctum sanctorum. There are idols of Goddess MahaLakshmi and Padmavathi. At the entrance of sanctum sanctorum, tall black stone idols of Jaya & Vijaya, the Watch-Gods, are erected.
திருப்பதியில் இருக்கும் திருவேங்கடமுடையான் திருச்சிலை மாதிரி, மிக அழகாக செதுக்கப்பட்ட ஸ்ரீ பாலாஜியின் சிலை கர்பகிரஹத்தில் ஸ்தாபிக்கட்டுள்ளது. மஹாலக்ஷ்மி தாயாரின் சிலையும் பத்மவாதி தாயாரின் சிலையும் வெளிப்பிரகாரத்தில் உள்ளது. கர்பகிரஹத்தின் வாயிலின் இருபக்கமும் ஜெய-விஜய துவாரபாலகர்கள் சிலைகள் உள்ளன.

The soul captivating slogan "Govinda Govinda" is continuously being played. Divine Vibration in the entire Hall. Had a self experience of the Divine Thrill.
ஆழ்மனதை ஆட்டுவிக்கும் "கோவிந்தா கோவிந்தா" நாமம் மெல்லிய சப்தத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மண்டபம் முழுவதும் தெய்வீக அதிர்வு. நான் பிரத்யோகமாக தெய்வீக சுகத்தை உணர்ந்து அனுபவித்தேன்.

A Cow Shed with more than 50 cows. The entire vicinity is very clean and well maintained. A peaceful calm persists.
50க்கும் மேற்பட்ட பசுக்கள் கோசாலையில் பராமரிக்கப்படுகிறது. கோவிலைச்சுற்றி உள்ள இடம் முழுவதும் மிகமிக சுத்தமாகயுள்ளது. ஒருவகை அமைதியான நிசப்தம் நிலவுகிறது.


Mobile clicks of We Four in four postures. And also had fresh hot corns.
நாங்கள் நால்வரும் நாலுவித நிலையில் மொபைல் கிளிக்ஸ். தணல்ல நன்னா வாட்டி மக்காச்சோளம் இரண்டுமூணு உள்ளே தள்ளியாச்சு.


After a 10 minutes drive, we had been to Shree Someshwar Mandir. This Temple is on the banks of the Sacred River Godavari. The Shiv Ling and Nandhi are big.
அடுத்தது சோமேஸ்வர் மந்திர்.  புனித கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள சிவ ஆலயம்.  லிங்கமும் நந்தியும் பெரிதாகயுள்ளது.


The area looks like picnic spot. Lot of trees, stone benches, small eateries. Lot of kids are enjoying the boat ride in the river. Usha's selfie.
ஹாய்யா பொழுதை கழிக்கும் இடமாக தென்படுகிறது. நிறைய மரங்களும், கல் பெஞ்சுகளும், மிகச்சிறிய உணவகங்கள் உள்ளது. நிறைய குழந்தைகள் நதியில் படகு சவாரி செஞ்சென்றுக்கா. உஷா ஒரு செல்பி எடுத்துண்டா.


Back home by 8 in the night. Time to exhibit the culinary skill by Renu.
இரவு எட்டு மணிக்கு இல்லம் வருகை.  ரேணு தன்னுடைய சமையல்கலை கைவண்ணத்தை காட்ட ஆரம்பிச்சுட்டா.

Next Post on visit to the Abode of the Goddess Saptashrungi Nivasini.
அடுத்த பதிவு, சப்தஸ்ருங்கி நிவாஸினி அம்பாள் ஆலயம்.

Narayanbali-Nagbali . நாராயணபலி-நாகபலி . नारायण नागबलि


नारायण नागबलि . நாராயணபலி-நாகபலி . Narayanbali-Nagbali

An ancient scripture 'Dharma Sindhu'  mentions that this particular Narayanbali-Nagbali ritual should be done only at Trimbakeshwar. The references about this age-old tradition are also found in 'Skandh Puran' and 'Padma Puran'.
"தர்ம சிந்து" என்கிற ஓர் ஆதிகாலத்து தர்மசாஸ்திர நூலில், நாராயணபலி-நாகபலி எனும் சமயகருமம் திரிம்பகேஸ்வர்தில்தான் பண்ண வேண்டும் என்று குறிப்படப்பட்டுள்ளது. பழங்காலத்து சமயநூல்களான ஸ்கந்த புராணத்திலும், பத்ம புராணத்திலும் இதுபற்றி குறிப்பீடுகள் இருக்கிறது.

Narayan bali is done to get rid of ancestral curse (Pitru dosh /Pitru Shaap) while Nag bali is done to get rid of sin performed by killing snake, specially Cobra.
பித்ருதோஷ பித்ருசாப நிவர்த்திக்காக நாராயணபலியும், நாகதோஷ நிவர்த்திக்காக நாகபலியும் பண்ண வேண்டும்.

Narayan Bali ritual is done to fulfill the unsatisfied desires of the ancestral souls which are stuck in the world and trouble their progeny. Narayan Bali consists of the same ritual as Hindu funeral. An artificial body mostly made of wheat flour is used. Mantras are used to invoke such souls who are having certain wishes remaining attached. The ritual makes them possess the body and the funeral frees them to other world.
பித்ருலோகம் போகமுடியாமல் சந்ததிகளை துன்புறுத்தும் அகால மரணம், துர்மரணம் அடைந்த பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காகச் செய்யப்படும் வழிபாட்டுச் சடங்கு 'நாராயணபலி'. இறந்தபிறகு செய்யும் பன்னிரெண்டாம்நாள் சபிண்டீகரண முறைப்படி ஒரு மனிதஉருவம் செய்யப்படும். இங்கு அதை கோதுமைமாவில் செய்வார்கள். மந்திரங்கள் மூலம் அந்த ஆத்மாக்களை இந்த மனிதஉருவதில் புகுத்தி ஸ்ராத்த ஸம்ஸகாரங்களை செய்து, அந்த ஆத்மாக்களை பித்ருலோகம் செல்ல வழிவகுப்பார்கள்.

Nagbali ritual is done to get rid of sin of killing nag (Cobra). In this ritual also the funeral is performed on the body of snake made with wheat dough.
நாகபலி சடங்கும், நாராயணபலி மாதிரி மனிதஉருவத்திற்கு பதில் நாகப்பாம்பு உருவம் செய்து ஸம்ஸகாரங்களை செய்வார்கள்.

Narayan Nagbali is performed to get respite from various problems like Bhoot Pishach Badha, unsuccessful in Business, Family health problems, Educational hindrances, Marriage Problems, Accidental Death, Unnecessary expenses, all kinds of Curses.
பூத பிசாச உபத்திரவங்கள், தொழிலில் தோல்வி, பணவிரயம், உடல்உபாதைகள், திருமணம் கல்வி தடங்கல்கள், துர்மரணங்கள், பித்ரு பிரேத நாக சாபங்கள், இவைகளின் நிவர்த்திக்காக செய்யப்படும் சமயகருமம் "நாராயண நாகபலி".

It is a Three Day ritual and to be started on a particular day and time (muhurta). The devotees should take a holy bath in Kushvart Tirth and resolve to give dashdaan (give ten things in charity). After offering prayers at the Trimbakeshwar temple, they go to the dharmashala at the confluence of rivers Godavari and Ahilya for performing Narayan Nagbali.
இது ஓர் மூன்று நாள் காரியம். இதற்கு நாள் நக்ஷ்த்ரம் பார்த்து தேதி குறிப்பிடவேண்டும். குஷ்வர்த் தீர்த்ததில் நீராடி, தசதானம் (சாஸ்த்ரோப்படி 10 தானங்கள்) செய்து, ஆலயம் சென்று திரிம்பகேஸ்வரரிடம் ப்ராதிர்த்துக்கொள்ள வேண்டும்.  கோதாவரி நதியும், அஹில்யா நதியும் சங்கமிக்கும் இடத்திலிருக்கும் தர்மசாலாவில் இந்த 'நாராயண நாகபலி' காரியங்களை செய்யவேண்டும்.
.....
( அகால மரணம் மற்றும் துர்மரணம் அடைந்தவர்களுக்கு பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காகச் செய்யப்படும் நாராயண பலி எனும் பூஜை ராமேஸ்வரம் தலத்தில் 21 பிண்டங்கள் (ஒரு தலைமுறைக்கு ஒன்று வீதம்) வைத்து வழிபாடுவார்கள். 
தெற்கு நோக்கிச் செல்லும் புண்ணிய நதியான காவிரி நதியுடன் மேலும் இரண்டு நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் நீராடி, 77 தலைமுறையினருக்காக 7 பிண்டங்கள் வைத்து  பித்ருக்களுக்கான காரியங்களைச் செய்து ஸ்ரீசங்கமேஸ்வரருக்கு வில்வ மாலை சார்த்தி வழிபாடுவார்கள். )
.....

त्रिपिंडी श्राध्‍द . Tripindi Shradh . த்ரிபிண்டி ஸ்ராத்தம்

Tripindi Shradha is an offering in the memory of the dear departed. If for three consecutive years the offerings are not made to the dear departed then the dead gets vehement, so to calm them these offerings are made.
Shradh must be performed to resolve such calamities. Its assertion is mentioned in "Shradha Chintamani".
நமது பித்ருக்களுக்கு தெடர்ந்து மூன்று வருடகாலங்கள் ஸ்ராத்தம் தர்ப்பணம் செய்யாவிட்டால், அவர்கள் மனம் அவதியுற்று கடும்கோபம் கொள்வார்கள்.  அவர்களை சாந்தப்படுத்தி மனம் சந்தோஷம் அடைய 'த்ரிபிண்டி ஸ்ராத்தம்' திரிம்பகேஸ்வர் க்ஷேத்ரத்தில் பண்ண வேண்டும். "ஸ்ராத்த சிந்தாமணி" என்கிற நூலில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது.
.....

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. 


To read more, please visit "http://www.trimbakeshwar.net/"

Saturday, October 28, 2017

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அந்தாதி


கலியுகத்தில் நாமகீர்த்தனம்தான் பக்தியை வளர்க்கும்.  “வாய் திறந்து பாடினால், ஸ்ரீ அகிலாண்டகோடி பிரம்மாண்டநாயகி வாழ வழி காட்டுவாள்” என்பது உறுதி.

எல்லாம் வல்ல சக்தி ஸ்ரீஅங்காள பரமேசுவரியின் திருவருள் யாவரும் பெறும் வண்ணம், என் ஆத்மார்த்த குரு திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய‌ ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் இவ்வந்தாதியினை இயற்றியுள்ளார்.



ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அந்தாதி


ஆனந்த கணபதி காப்பு

முருகனுக்கு மூத்தோனாய் முழுமுதற் சுழியாய் வைத்தென்றும்
பெருகிவளர் சோதியா யெங்கும்பரவி யருளென்னும்
அருகுபுல் சாத்திய ஆனந்த கணபதியருளால் அங்காளம்பிகை அந்தாதி
உருகி யாவருள்ளத்திலுள்ளே ஊடுருவக் கண்டு

நூல்

உதிக்கின்ற திங்கள் உணர்வூட்டும் முகமென் னினைவில்
பதிக்கின்ற நின்பார்வைப் பாலில் பழமும் வீழ்ந்து
மதிக்கின்ற குவளைபோல் பராசக்தியென் பாவம் தீர்த்து
துதிக்கின்ற தூய்மையாக்கும் தூயவளே. 1

தூயவளே துன்பந் தகர்ப்பவளே துணையாயென்றும்
மாயவளே மாணிக்கமே மலைமன்னன் புதல்வியே
தாயவளே தமிழவளே தந்தையாயு மென்றும்
வாய்ப்பவளே வளம்பல வாய்த்திடுவாய். 2

வாய்த்திடுவாய் தாயாயெனக் கென்றும்
சாய்ந்திடுவாய் திருவருளமுதந்தா யெனக்கு
வாய்த்திடுவாய் கருணையுளந்தனைக் கண்ணகத்தே
பாய்த்திடுவாய் நின்திருவுளப் பேரொளியே. 3.

பேரொளியே மாயப்பாசத் தொடரெலாம்
தாரொளியே தகர்த்தங்கு தகுதியுடைய வனாய்ப்
போர்த்தங்கு புண்ணியப் புவியதில் பக்குவமாய்
வார்த்திங்கு விட்டினையே விந்தைமிகு நாயகியே. 4.

நாயகியே நான்முகனும் நாரணரும் நமசிவாயருக்குத்
தாயாகியே யொளிவிடும் தனிப்பெருஞ்சுடரே யெனைச்
சேயாக்கியே சித்தம் தெளிவுறச் செய்து செல்வியே
பேயனை யென்றும் பெருமைபட வைத்திட்டாயிங்கு. 5

இங்குளநாள் மட்டுமல்லா தினியான்
எங்குசெல்கினும் நின்னருளால் நின்புகழ்தான்
தங்குமென்று தாரணியில் பரப்பிடும்போது
அங்கெல்லாம் வந்தென்முன் நிற்கும் முக்கண்ணியே. 6

முக்கண்ணியே முனிவரும் தேவரும் மூவரும்
இக்கன்னியாய்த் தோன்றியிங்கு முத்தொழில் செய்திட்டு
தண்ணிலவாய் தன்பத்தியினைப் பரப்பியே பலரிடம்
விண்ணிலவமுதாய் வேழாம்படியில் வீற்றிருப்பவளே. 7

வீற்றிருப்பவளே யீரேழுலகெங்கும் விந்தையாய்
தோற்றியிருப்புவளே தோற்றத்துள்ளிருந்து துலங்குபவளே
போற்றினா யென்னுள்ளத்திலிருந் துன்னேயே யென்மனம்
மாற்றினா யெங்கும்பரம் பொருளான சுந்தரியே. 8

சுந்தரி சுகந்தருஞ் சுயஞ்சோதி சுயம்பிரகாசினி
அந்தரி யகத்தினுள்ளிருந்து மந்திரம் விளக்குபவளே
தந்திரஞ் செய்பவளே தமிழாயெங்குந் தாவியே
இந்தத் தரணியிலாடிடும் அங்காளம்பிகையே. 9

அங்காளம்பிகையாய் அகமதிலாடு மருட்கடலே
செங்காளம்பிகையாய்ச் செகமதிலாடி யிங்கு
கங்கையம் மனாயானந்தக் கூத்திட்டு மாலுக்குத்
தங்கையம்மனாய்த் தரணியகத்தாடும் தாரணியே. 10

தாரணியே தன்தமிழ்ப் பாசாங்குசச்
சீரணியே சிதம்பரத்தாடும் நாயகனுக்குப்
பேரணியே பெருமாட்டியே பேச்சும்பாட்டு மீயவல்ல
நாராயணி நம்பினவருக்கு நலம்பல ஈந்திடும் நாயகியே. 11

நாயகி நாயேனுனை நம்பவைத்திங் காட்டிடும்
தாயாகித் தன்மனத்தே யெனைவைத்து வித்துவளர்செடி பூவுமாக்கிக்
காயாகிக் கனிந்து கற்பகத் தருவாக்கிநின் சேயாக்கும்
மாயாவிளையாட்டினை விளம்பத்தா னியலுமோ. 12

இயலுமோ உன்பெருமைதனை யியம்ப விமயத்தரசி
கயலுமென் விழிகாட்டி விளக்கியிச் சிறியனுக்குப்
பயிலுவித்தாய் பக்திதனைப் பராசக்தி பாரெங்குமினித்
துயிலுருமோயிவ்வுள மோங்காரத் தெளிவே. 13

தெளிவே தென்னாட்டி னின்னமுதே ஞான
நெளிவே நெல்முத்தே நெல்லையப்பருக் கருட்
பொலிவே ஏகாந்தமே யெண்ணிலடங்காத யென்னம்மே
வலிவே ஈந்திடுவாயிப் பாடலென்று மீரேழுலக முலாவிடவே. 14

உலாவிட உன்னருள் பரப்பிடவே பிறந்திங்கு
குலாவிடவே குழந்தையாய் உன்னருட் புனலில்
கலாபமயிலே மயிலைவாழும் கற்பகாம்பிகையே யருட்
பலாபல னீந்திடுவாய் நின்பாதம் பற்றியே. 15

பற்றினேன் இவ்வாக்கை நினைவுதனை யென்றும்
கற்றிலேன் காலன்பற்றா கல்விதனை ஞான
நெற்றியிலே ஆடுகின்ற அங்காளம்பிகையே
வெற்றியே யாவருக்கு மீந்திட்ட யென்தாயே. 16

தாயே தரம்பெற்ற பத்தருக்கு ளெனையென்றும்
சேயாக்கிவிட்டு யெனைச் சிறப்புறச் செய்தாய்
மாயாப் பிறவியிட்டு மனமகிழ வைத்திங்கு நினை
வாயாரப் புகழவைப்பா யென்றென்று மிவ்வையகத்தே. 17

வையகத்தே வாய்திறந்து பாடவைத்தாயே யெனையுன்
கையகத்தே யென்றும் வைத்தாட வேண்டுகின்றேனென்
மெய்யகத்தே யென்று மேவிவிளையாடு மென்னம்மே
தையல்நாயகியே தரணியில் தான்தோன்றி. 18

தான்தோன்றி தரணியில் தந்திடும்நின் புகழ் முன்பே
வான்தோன்றி வருமுன்னை வந்தம்மா நின்புகழ்பாட
யான்தோன்றி யென்றும் நின்னருள் பரப்பியே நினைவில்
நானெனும்நீ தோன்றியே நின்றாடுவாய் பராசக்தியே. 19

பராசக்தியே மூவர்க்கும் முதலே யென்றும்
மாறாசக்தியே சத்தியஞான பீடமே யென்னுள்
தீராசக்தியே தீவினையகற்றும் தெளிவே
பாராயோ சக்தியே பாரில் யாவரையும் பத்தராக்கி. 20

பத்தராக்கி நின்நாமமே நான்கு வேதமாக்கி யென்றும்
சித்தருக்கு உபதேசித்த சிவசக்திரூபியே யெங்கும்
முத்தருக்கு மூலபீடமே முக்கண்ணியே யென்போன்றோருக்கு ஞானப்
பித்தமே உன்னருள் கூட்டி வந்ததே. 21

சிறந்தவளே சித்தந் தெளிவுறச் செய்பவளே எம்மயமாய்
பிறந்தவளே பிறவிப் பெருங்கடல் நீந்திடவே எம்மோடு
மறந்திடாமல் வந்தெம்மை யாட்கொள்ளுமகா சக்தியே
இறந்திடுதல் வந்தெம்மையாட்கொள்ளு முன்னேநீவரல் வேண்டும். 22

வேண்டுமென நான்கேட்கு முன்னே நீயறிந்து
வேண்டின வெலாந்தந்திடும் அங்காளம்பிகையே நின்னருளால்
தாண்டினேன் தரணிப்பொருளாசையை யென்போல் நின்பத்தருக்கும்
வேண்டியே தந்திட்டால் விந்தை மிகுவாழ்வை விளம்பத்தா னியலுமோ. 23

இயலுமோ உன்னருட் சக்தியைச் செப்புதற்கே யென்றும்
பயிலுகின்றேன் நின்னருளால் நீலியுனைப் பாடவே யிவ்வுடல்
துயிலுருமுன்னே தூக்கியெம்மைக் காத்திடுவாய்
வயலூர்ப் பெருமானை யீன்றெடுத்த வடுவாம்பிகையே. 24

ஈன்றெடுத்த தாயினைக் காட்டினாய் நினைவி லென்றும்
மூன்றெழுத்தோங்காரங் காட்டியே முப்பத்து கோடியினரும்
சான்றதுன் பாதமே சாவாமருந்தளிக்கும் சாந்தியே
போன்றதுன் நாமம்போல் சாந்தமளிக்கு மொருநாம முன்டோ. 25

உண்டோ உனைப்போலுளமுருகி உவந்தளிக்கும் தெய்வமதைக்
கண்டிலனே இப்பாரெங்கும் பரந்துநிற்கும் பராசக்தியே
தொண்டே உனக்கென்றுஞ் செய்திடவே வைத்தாண்டு
கொண்டே யிருப்பா யினியெப் பொழுதுமே. 26

பொழுதென்னு மிரவுபகலா யென்று மேத்தியுன்னைத்
தொழுதென்றுந் துதித்திட்டென் நினைவிலாலம்
விழுதென யென்றும் பற்றியேஆனந்தக் கண்ணீரால்
அழுதழுதுன்னைத் தொழுதிடக் குறையேது அங்காளம்பிகையே. 27

குறையேது குணக்குன்றே குளிர்மலை வாழுமெம்
பிறைசூடிய பெருமானென்று முன்னன்பெனு மருட்
கரையிலமர்ந்தங்கு மோனத்தவம்புரிய வைத்திட்டு
நிறையருளை நிறைந்தருளும் நீர்மல சுந்தரியே. 28

சுந்தரி சூக்குமச் சுடர்சோதியே மாயா
தந்திரி மனமகிழ்சித்திக்கு வித்துநீ சிந்தை தெளிவூட்டும்
மந்திரி மங்களநாயகி மாமறைதேடிடு மென்றும்
வந்தறிவாய் விளங்கவேண்டு மென்னுள்ளே. 29

என்னுற் சொல்லும் செயலும் நீயேயாகி யெனை
உன்னுளுறைகின்ற உயிர்க் கதிரொளியாக்கித்
தன்னுளிருந்து தாருக்களிக்குந் தாரமுதமே யென்
கண்ணுள் நீயிருக்கு மதிசயத்தை யென்னென்பேன். 30

அதிசயமான வடிவில் வந்தாடும் வளர்சோதியே நினையுன்
பதியே பலகாலம் தவமிருந்து பார்த்திட்டா ரெனக்கு
கதியே நினையன்றி வேறுயாருளா ரெப்பிறப்பிலும் வருமென்
விதியை மாற்றிட மனங்கொண்டாடும் மகாசக்தியே. 31

குலங்கொண்ட கையொன்று சுற்றியெனைக் காக்க
ஆலமரன்பனுக் கருட்கூட்டு மங்களாம்பிகையே தமிழுக்கொரு
வேலனை யீந்திட்டவேம்புலி நாயகியே யென்மேல்
காலக் கயிறதுவிழுமுன்னே கண்முன்னே வரல்வேண்டும். 32

கண்ணாவோ நின்கருனைக் கெல்லையொன்றுண்டோ
அண்ணாவோ திருவண்ணாமலைக்கு நீயருள் அண்ணாவோ மாதுள
வண்ணாவோ வாய்திறந்து பாட்டியற்று மிவ்வேழைதனை நீயென்றும்
எண்ணாவோ யிருந்திடலு மியலுமோ விமயத்தரசியே. 33

கனியே கனியின்ரசமே கற்கண்டே மலர்ப்
பனியே பணியும்பத்தருக்குப் பாலமுதே பணியாதவர்க்கு மாயத்
துணியே துணிகிழித்தெறியுந் தூயபொருளே யென்றும்
துணிந்துனைப் பணிந்தபின் பணியேன்நின் பக்தரல்லாதவருக்கே.  34

இல்லாதவரு முன்நாமங் கல்லாதாருண்டோ யிவ்வுலகில்
சொல்லாத நாளுண்டோ நின்தோத்திரமே யிப்புவியில் நின்திருக்கோயில்
செல்லாத நாளென்னநாளோ நானறியேன் நாளெல்லாம்
நில்லாதது சென்றாலும் நீயேயெனக்கு வந்தெதுவும் செய்தல் வேண்டும். 35

அது வேண்டுமென நான்கேட்கு முன்னே வந்து
இது வேண்டுமா யெனக்கேட்கு மங்காளம்பிகையே யென்றும்
எது வெனக்கு நலந்தருமோ அதையேநினைத் தருளல் வேண்டும்
பதுமையாய்த் திருக்கோயிலகத்தே யிருக்கும் பராசக்தியே.  36

அகத்தே யொன்று வைத்தனைத்துயிர் வாழும்
செகத்தே யொன்றுசொல்லி சிறியோர் முன்னேசிரந் தாழ்த்தி
இகத்தே பிறக்கும் பொருள்நாடி யிறவாதென நம்பி
நகத்தே யெடுக்குமழுக்குபோல் யானுள்ளேனே. 37

அழுக்கது அகலவோர் மார்க்கம் கூறென்னன்னையே
முழுக்கது போட்டிடிவ்வுலகவாழ்விற்கு ஞானக்
கூழுக்கழுது வருமென்னைக் கூட்டிக்கொண்டிடு குலதேவி
ஊழுக்கழுதிடாம லென்னுளமதி லாடம்பிகையே. 38

ஆடனைத் தாட்டமும் நீயேயாடு உள்ளக் காமக்
காடழிந்திடவே காளியென்றே யாடென்மனம்
நாடும் நாராயணி நலமிகுவிவ் வேழுலகும்
பாடும்பாடும் பராசக்தியென்றே பாடும். 39

பாடு பலகோடி ஜீவன்களில்பாடு நின்பக்தரோடு
கூடு யென்றுங் கூட்டினுள்ளோடுங் குகைநாயகியே
கேடொன்றுமில்லை நின்நாமங் கேட்டபோதே உன்னருளைத்
தேடு தேடென்றே தேடவைத்தாய் ஞானப் பித்தனாக்கி. 40

பித்தனெனப் பெயர்சூடினான் சுடலை நாயகன் பத்தியால்
கத்தாமலிருப்பேனோ நினைக்காணும் வரைகண்டபின்னென்றும்
சொத்தாய் நீயெனக்கு வேண்டுமென்றே பித்தாயலைகின்றேன்
சித்தாய்ச் சிதம்பரமாய்ச் சின்மயமாய் வீற்றிருப்பவளே. 41

சாதனையென் றொன்றுண்டெனிலது நீயேகுளிர்மலை
நாதனும் நீயிட்டபடி செய்வதே சாதனை யென்றான்திரு
ஆதிமூலனுமாறு முகத்தோனும் மூத்தோனும் நின்நாமமே சாதனை யென்றார்
நாதியுனையன்றி வேறறியாருக்குச் சாதனையும் சாந்தியும் நீயே. 42

இவள் சோதனை செய்யமுனைந்திட்டால் சொல்லத்தானியலுமோ
பவள நிறத்தினள் பாரில்லோர்க்கெல்லாம் பக்திப் பாலூட்டினாள் நின்னருள்
துவளாதென்று மெனையுமனைவரையுங் காக்குமிச்சக்தி
அவள் செய்வதத்தனையுந் திருவிளையாட லென்றியம்புவது நன்றே. 43

இயம்புவதுன் நாமத்தை நின்னடியாரிடையே யென்றும்
சுயம்பு சோதியாய்ச் சுற்றியாவரையுஞ் சுத்திசெய்தெங்கும்
மயங்க வைத்தாய் மகாசக்தியெனும் நாமக்கள்ளையூட்டி யாவரையும்
இயங்க வைத்தாயுன்னருட்சக்தியாலே பலவண்ணமாய். 44

மூவருந்தேட மற்ற முனிவருந்தேட ஆயிரங்கோடி யண்டந்தேட
யாவருந்தேட உடுக்கை சூலமுடனெம்முன் வந்திங்கெமைநீ
பாவலராக்கிப் பாட்டிசைத்துப் பாடியிங்கெமக் கென்றுங்
காவலாகிக் காட்சியாகி நின்றாயே. 45

நின்றா யெம்மனத்து ளென்றுமுனைப் பற்றியெங்கும்
கன்றா யுன்னடிமை கொண்டுநான் பிறமதத்தில்
நன்றாய்ச் சேருவேனோ கனவிலுமில்லையடி தாயே
இன்றா யிக்கணமாயிங் கென்முன் நிற்கவே. 46

என்முன் வாழவழிவகுத்து விட்டாய் வளம்பெரும்
பொன்வாழ்வொன்று காட்டினாய் ஞாலம் புகழ்
உன்வாழ்வொளியென்மீது வீசியே யென்றும்
நின்வாழ்வை யென்வாழ்வாக்கிய நாயகியே. 47

வாழ்வில் தவறேது நின்னருளால் செய்யினும் நாயகியே
தாழ்வுறும் தவறேதும் வேண்டாதடுத்ததை நீதிருத்தி
வீழ்வுறு மெண்ணம் வீணுக்குந்தோன்றல் வேண்டா ஞானக்
கூழுற்றி யெனக்கூட்டும் குலப்பெரும் நாயகியே. 48

குறிப்பறிந் தளிக்குங் கூர்மதியுனக்கன்றி யாருக்குளதோநல்
நெறிப்பண்புதனை யென்றுமென்னுடலுதிரமாக்கி யென்மனப்
பரிதனையடக்கியே யெங்கும் நீயேயாகி யென்னுளடங்கும்
கரியநீலக் காரிகையே கற்பகாம்பிகையே. 49

கரிந்திவ்வுடல் சாம்பலாகிப் பயனற்றுப் போகுமுன் கற்பகத்தருவே யெனை
பரிந்து நீயுமேற்று நின்பாதப் பணிவிடை செய்வித்துனைத்
தெரிந்த பின்னும் சாகும்காரியம் செய்வித்திடாம லென்றும்
சரிந்திவ்வுடல் வீழுமுன்னே சமாதியெனக் கருளே. 50

அகங்காரங்களைந்திட நாமங்கொண்டா யங்காளம்பிகையெனச்
செகத்தேயென்றும் செகதாம்பிகையாய் நின்றவளே யென்றும்
இகபரவாழ்வில் வந்துதவுமினியபெரு நாயகியே உன்கை
நகத்தேயிருந் துதிர்ந்ததுதானே திருமாலுக்குத் தசாவதாரமே. 51

அவதாரம் பலவுருவிலெடுக்கும் நாயகியே யார்
அவதார மெடுத்தாலு முன்னருளால் வந்தவரே முத்தருக்குத்
தவத்தாரமளிக்கும் தமிழ்ப்பூங் பூங்கோதையே யனைத்
தவதாரமு முன்னவதாரமெனத்தெரியும் நாளென்றோ. 52

உன்னருளால் வந்தவரிங்கு பலகோடியே யாவரையும்
தன்னருளால் வந்ததெனக் கூறவைத்தாயே யெங்கும்
இன்னருளத்தனையு மெங்கிருந்தாலுமது
உன்னருளால் வந்ததென இயம்ப வைத்திடாயோ. 53

இவரு யர்ந்தவரென்று பலகூட்டங் கூற
அவரு யர்ந்தவரென்று மற்றேர்கூற அனைவருள்ளும்
எவரு யர்ந்தவரெனக் கேட்கவைத்தனையே யாவரையும்
கவர்ந்திழுக்குங் கருணைதான் உயர்ந்ததெனப் புகட்டிலையோ. 54

புகட்டாத பொருளொன்றுண்டோ யிப்புவிமீதே உன்னருளால்
பகட்டான பொருளுக்கே பலகோடியினரையும் மயங்கவைத்தா யென்றும்
திகட்டாதுன் நாமம்திவ்வியத் திருவே யாவரையு முன்னருள்
நகட்டா திருக்குமோ ஞானவழி நோக்கியே. 55

ஞானவழி நடந்திட நலமிகுநாமம் மேல்
வானவழி பறந்திட சீலமிகுநாம மங்கு
கானவொலி கேட்டிட ஒலிமிகுநாம மவள்பணிக்கு
தானமென யீவதிவ்வுடல் பொருளாவிதானே. 56

உடலதுருவாக்கி யுயிரெனப்புகுந்துள்ளே யுனையடையுமாசைக்
கடலதுவைத்துநீ கப்பலாயாகி கரையதுசேர்க்கவே ஞானத்
திடலதமைத்தாயழியா மெய்ப்பீடத்துள்ளே உனையென்றும் பாடும்
மடலது ஈந்திட்டிட்டாய் மணப் பூங்குயிலே. 57

குயிலே நீகூவியழைத்திடிற் குழந்தை நானாடியழகு
மயிலாய் வந்துநின் பாதம் பற்றியேயென்றும் ஞானப்பாடம்
பயிலவே யிங்குவந்துனை வேண்டவைத்தா யுன்னுடனெனை யழைத்து
கயிலை சென்றங்குவைத்துக் காட்சியாயுன்னோ டாக்கிடுவாய். 58

ஆவிநீதானே என்னுடலென்னும் கட்டைக்குள்ளே
காவியணிந்திட வேண்டுமோ துறவியெனப் பிறரறிய
பாவியெனக்குப் பலநிறஆடைபூட்டினாய் பாசமுடன்நீ
தாவியே நிர்மல ஆடைவேண்டி வந்தெனக் களிக்கவே. 59

ஒன்றுனது நாமமே யென்றுமெனது நாட்டமே
இரண்டுனது அருள்பொருளிவ்வையத்தினையு மளித்தெனக்கு
மூன்றுனது கண்களால் மும்மலம் போக்கியே யுனை
நான்முகனும் நாரணனும் நமசிவாயனும் நலமுறவணங்கக் காண. 60

வணங்கவே வந்துவிட்டேன் வாழ்நாளெல்லாம் பிறர்சொல்லால்
சுணங்கி சோம்பித் திரிதலும்வேண்டா யிவ்வுலகச் சுற்றத்தாரெல்லாம்
பணிந்துனக்குப் பணிசெய்யும் நாள்தனைப்பார்த்தென் பாமாலையை
அணிந்துனக் கென்றும் பார்த்திடுவே னங்காளம்பிகையே. 61

வானமது நீயேயானாய் வளர்சோதி உன்மீதபி
மானமது நீயேயளித்தாய் வளர்மா மதுரைவாழ்
மீனாட்சியானாய் வந்தெனக் கென்றும்திரு
ஞானமது ஈந்தென்னை யுன்னோடு கூட்டினையே. 62

கூட்டியே சென்றென்னை மனங்குளிர வைத்தமுதப்பால்
ஊட்டினையே உளத்தென்று முன்னருட் பெருக்கை
நாட்டினையே நாட்டமுடன் நின்நாமமந்திரத்தை யென்றும்
நோட்டமே யெனக்கு வைத்தாண்டு கொள்ளே. 63

பொருள்தரும் போகந் தரும் மதிமயங்கிப் போகுமுன்னே
அருள்தரு மனைத்துந்தரும் அங்காளம்பிகைதானே
திருவருள்தருந் தினந்தரும் தன்பால் நீங்காநினைவூட்டி யானந்தக்
கருப்பொருளாய் வந்தெனைக் காக்கும் அம்பிகையே. 64

அன்பாலழுதானந்தக் கண்ணீரா லர்ச்சித்தே யென்றும்
உன்பால் தொழுதுன்னைப் பக்தியால் பாட்டிசைத்தே யென்றும்
என்பால் பழுதுபட்டிருக்கும் உளமாசுதனைப் புதுப்பித்
தன்பால்வந்தெனை யணைத்துக் கொள்ளாயோ. 65

அசைவற்ற பொருளும் நீயேயெனங்கமெலாம்
இசையாகி வந்தாடும் வனப்பும் நீயேயெத்
திசையுமுன் நாமம் பரப்பியே உன்னன்புப்
பசையாகி படர்ந்துன்னுடன் வாழவேண்டுமம்மா. 66

குருவாகி யெனக்குநீ வரல்வேண்டு மென்முன்னே
உருவாய் வந்துநின்றருளல் வேண்டுமுன்னொளிக்
கருவாய் வந்திவ்வேழை பிறந்திடல் வேணடுமென்றுந்
திருவாய்வந்து நிற்குந் திருவெல்லை நாயகியே. 67

வல்லவள் நீயே வியத்தகுயிவ்வுலகி லென்றும்
நல்லவள் நீயேநம்பினோருக்கும் நம்பாதோருக்கும்
மெல்ல நினைவூட்டினையே நின்நாமம்
சொல்லசொல்லச் சுவைக்கொரு யெல்லையுண்டோ. 68

சத்தியம்நின் உடலாகும் சாந்தியே நின்கண்ணாகும் நின்நாமம்
நித்தியங் கூறினோருக்கு நீடுபுகழ்நீயே யுனைவணங்க மனதில்
பத்தியமேதும் வேண்டா பாரில்வளர் நாயகியேயென்று மெனக்கு நல்ல
புத்தியைத்தா புனித வீணையேந்திய சக்தியே. 69

வழிபட வைத்தனையே நின்னை யென்றும் பிறர்மீது
பழிபட யெனைநடத்திடல் வேண்டா வீணாய்
அழிபடும் பொருள்மீது பற்றெனக்கு வைத்தெக் காலத்தும்
இழிவுபட வைத்திடாதே இனியபெரு நாயகியே. 70

வாளுடன் வந்தவடிவழகு நாயகியென் வாக்கினில் நின்று
ஆளுடன் வந்தவருக்கெல்லா முன்நாமங் கூறியவர்
கோளது மாற்றியே குறைதீர்த்திடச் செய்து
நாளெல்லாம் நின்நாமங் கூறும்நிலைதனை யீந்திடாயோ 71

சோமன் நின்னருட்கொண்டான் சூக்குமச்சோதியே நின்
நாமமும்பெரிதெனக் கொண்டு நாரணனும் நலம்பெற்றுக்
காமனைத் தகனஞ் செய்து சிவனுமுயர்
வாமன அவதாரத்தான் தங்கையுனை மணந்தான்தானே. 72

சிவனும் சக்தியுஞ் சேர்ந்து வந்ததுன்னருளால்
அவனுமவளு மவதாரம் பெற்றது அங்காளம்பிகையால்
இவனுமிவளுஞ் சேர்ந்துனைப் பாடவைத்தனேயே யென்றும்
அவனுமுன்னைப் பணியாது சென்றதில்லையே செகப்பெருநாயகியே.  73

ஆசைதனை யிரண்டாக்கி யழியாஅழியுமெனக் கூறியுனைப்
பூசனைச் செய்ய வைத்தனையோ அழியாதுணையடைய வென்றுங்
காசைக் கொடுத்து மனமாசை வளர்த்தல் வேண்டா நின்னருளால்
ஈசனென்பது மீசுவரியென்பது முன்நாமமே. 74

கரும்பு வில்லுங்கைக்கொண்டுகாரிகையே என்றுமுனை
விரும்பும் நினைவே நீயளித்திடல் வேண்டுந் துட்டவெண்ணந்
துரும்பளவும் வந்திடல் வேண்டா யென்னுள்ளென்றும் வளர்
அரும்பாகி யனைத்துமாகி அண்டமாகி யென்னன்னை யாகினையே.  75

பூதநாதனுக்குப் புண்ணியப் பொறுப்பளித்தா யிவ்வேழைதனுக்கும்
பூதவுடலகத்தே உன்னினைவுப் பொறுப்பளிப்பா யென்னுள்ளே
நாதவொலி கேட்டுநாளெல்லாம் நின்நினைவு கூட்டவேண்டுந் தமிழ்
வேதவொலி போற்றும் வேதநாயகியே வேதவுமையே. 76

உமையே யாருக்கு மடியேனுன்னருளா லென்றும்
சுமையா யிருந்திடல் வேண்டா யைம்புலனடக்கும்
ஆமையா யிருக்கவைத்தென்னை யுன்னன்புள்ளத் தென்றும்
அமைத்திடுவா யம்பிகை சிலைபோல் அன்பே. 77

அன்பே யெனன்பினிற் புகுந்துமுக்கால முணர்த்தி
இன்பமுமினிமையும் நீயாகி யினிய பத்தருக்குள்
துன்பமேதுமின்றித் துடைத்து நீதூயநிலை யளித்து
அன்பு மறனுமளித்தாளுகின்றனையே. 78

காதலாகிக் கனிந்திவ்வுளங் கதிநீயேயென்று மிவ்வுலகத்தே
சாதலெனும் மாயவாழ்வில் வைத்தென்னை மயக்கிடாதே
பாதயாத்திரியாயென்று முன்கோவிலுக் கெனைவரவழைத்துக்
கீதமா யென்று முலாவிடும் கீதாம்பிகையே. 79

புண்ணியம் யாதுசெய்யவைத்தனை புலம்புகின்றே னுன்னருளால்
பண்ணிய பாவந்துலைத்திடாயோ தூயபெருநாயகியே யென்னுள்
எண்ணியதெலா முன்னருளால் நிறைவேற்றினாய் நீயேயென்றும்
திண்ணிய நெஞ்சந்தந்தென்னைப் புண்ணியஞ் செய்வித்திடாயோ. 80

புண்ணியஞ் செய்துன்னருட் கொண்டு நின்புகழ்பரப்பிக் கடமை
கண்ணியங் கட்டுப்பாடென்பது நின்செயலே யென்வாழ்வில்
நன்னியுன்னை நலமுடன்நாடிவந்தே னுன்னருளால்
மண்ணில் வாழ்நாளெல்லாம் மனமகிழ் நாளாக்குவாய். 81

வந்தேனென் வாழ்நாளெல்லா முனைப்பாடி யென்றும்
தந்தே னெனக்கென் றொன்றுண்டென்றா லத்தனையும்
கந்தவேளே காக்கும்படித் தமிழுக்கீந்த கருணைபோல்
வந்தேன் நாளுமரிய பலசெயலைச் செய்திடும் நாயகியே. 82

மெல்லிய குழல்குரல் கொண்டே கூலியழைத்தேன் குருவாகி
சொல்லிய மந்திரமென்னுள் ஒலிக்கவே யென்றுந்தூய
மல்லிமணம் பரப்பித் தூயதீபமுள்ளே காட்டியென்றும்
அல்லி யங்காளம்பிகையா யாகிவந்தாய் ஞானமுதளிக்கவே. 83

நஞ்சுண்ட ஐயன் நஞ்சுதனைக் கண்டத்திலே நிறுத்தித் தேவருக்கெலாம்
அஞ்சேலெனக் கூறிநின்னன்ப ருய்யும் வண்ணமுயிரூட்டி யனைவருந்
தஞ்சமெனயுனை வைத்துத் தரம்பெருவாழ்வளிக்கும் நின்
மஞ்சளது குங்கும மகிமையை மனமகிழ்ந்து பாடவைத்தனையே. 84

குங்குமந் தந்திடுங் குறைவில்லா வாழ்வுதனை உலகுக்கு
எங்கும் பரப்பியே பாடிட வேண்டும் நின்னருளால்
தங்குமே யென்றும் நினக்குச்செய்யுந்தொண்டே யழியாமல்
இங்கினி வேறோருக்குப் புகழில்லையே உனைப்போலே. 85

திருநீற்றின் மகிமையைத் திருத்தமுடன் கூறயெனக்கியலுமோ
பெருங் காற்றென வந்திடுமெக்குறையும் மடக்கி யொழிக்கும்
வருகாற்றென வந்து வேண்டாதென ஓட்டித் தள்ளி ஞானமூட்டும்
அருட்தென்றலாகி யானந்தக் களிப்பூட்டுந் திருநீறே. 86

பாதமலர் கண்டுநானும் பாசமுடன் பாடியுன்னை தமிழ்
வேதமலர் தூவியே துதித்துன் பாதயிடைப் பத்திச் சர்க்கரை
சாதம்வைத்து சாந்தமெனும் நின்னருட் பழம் படைத்தன்பு
கீதம்பாடியே கீர்த்தனை புரிய வேண்டுமம்மா. 87

தாமரை மலர்ப் பொன்னடிதனைப் பொறுப்புடன் வணங்கி
யாவரையும் யாவையும் செய்யத் தூண்டியென்னை யுன்புனித
பூவறைத்தாள் மீதுபுண்ணியனாய் வைத்தென்றுமுன்
பாவறையும் செயலீந்தனையே ஈகைபெருமாட்டியே. 88

பூவடி பெருமைதனைப் புரிந்துகொள்ளும் நாளென்றோ ஞானக்
காவடிப் பாட்டிசைத்து நின்கணங்களெல்லா மாடக்கண்டு
பால்வடியும் நின்பாசப் புன்னகையுடனிங்கு நீயெழுதும்
நாலடிப் பாடலுக்கு நலமிகு நின்பாதம் பட்டிடவே. 89

பாதநினைவே யெனக்கென்றும் வேண்டும் வேறெது நினைவும்
காததூரம் ஓடிடவேண்டும் நின்நினைவென்றும்
சேதமுறாது செம்மலர்ப் பாதநினைவே வேண்டும்நின்
பாதமேயென் பலபிறவி யழிக்க வந்ததே. 90

பார்வை யொளியால் பகலிரவு செய்துளமாயப்
போர்வை களைந்தெறிய வந்திடாயோ வீணுக்குழைத்தென்
வேர்வை ஒழியப் பாடுகின்றேன் பண்ணிசையே யுன்மீதென்றும்
ஆர்வம் வந்திடப் புனிதப் பார்வை பாய்ச்சுவாயே. 91

நின்புருவமசைந்திடில் நீலகண்டனாடுவா னென்னுள்ளத்தே
அன்புருகொண்ட நாயகியே யாயிரங்கோடி யண்டங்களும்நின்
புன்முறுவலில் வந்ததே புண்ணியமூட்டும் நாயகியேயிங்கு
என்புருவாயிருக்கு மெனையேற்றுக் கொண்டருள்வாயே. 92

புவனங்களாடப் புவியெங்குமாட புலன்களாட யென்
கவனங்களாட வுன்னால் கண்டதத்தனையுமாட யிவனுன்
மவனென்று கொண்டாட மனமகிழ்ந்து நானும் மெத்த
தவமென்ன செய்தேனோ தவமருள் நாயகியே. 93

நுதலதில் அழகொரு பொட்டுங் கண்டேன் ஞானப்
பதிகங் கூறும் மூன்று திருநீற்றுப் பட்டை கண்டேனென்னால்
அதிக மியம்பத்தா னியலுமோ ஞானமுன்மூத்த
துதிக்கை நாதனாற்றான் நவில இயலுமே. 94

வேல்கொண்டளித்தாய் குமரனுக்கே ஞானத்தால்
மேல்கொண்டெழ வைத்தெனக் கமிர்தப் பாலளித்துநின்
கால்தனுக்குத் தொண்டுசெயுங் காலந்தந்துநின்
கோலமெல்லாம் நானாகித் திருநீராயமர் நாளென்றோ. 95

இடுகாட்டிற் சென்றுயெனை யிட்டிடல் வேண்டா ஞானச்
சுடுகாட்டிற் சென்றுசுட்டென்னைப் பசும்பொன்னாக்கு
வடுவாம்பிகையே வந்தென்னை வளர்த்திட்டுன்னருளாற் பாழும்
படுகுழிக்கழுத்தும் நின்பாசமற்றவருடன் சேர்த்திடாதே. 96

அறியாது நின்னருளால் யாதுபிழையும் செய்தல் வேண்டா மதிமயக்கித்
தெரியாமலெதுவுஞ் செய்வித்திடல் வேன்டயென்றும் நல்ல
நெறியது தவறாமல் நலம்பல நின்னன்பருக்கெலாம் செய்தென்
குறியது நின்திருப்பாதமே யென்றிருக்க வைப்பாயே. 97

அனத்து மழிந்தாலும் நின்னருளா லழியாநல
மனைத்து மளித்து நம்பிக்கையு மளித்துநின்புகழ் மாலையால்
வினையத்தனையுந் தீர்த்து வீடுகொடுத்திடுவாய் யாருக்காவது
தினைத்துளி யளவேனும் நின்பத்தருக்குத் தீர்த்தமளித்தே. 98

ஓடுகின்ற நீருமுன் பெயர்கூறியே யோடியெங்கும்
வாடுகின்ற பயிர்வாழவழிசெய்து நீயெமக்குநின்
வீடுபுகழளித்து நினைவத்தனையும் நீயேயாகி நினை
நாடுகின்றவருக்கு நாமமாம் பராசக்தியே. 99

கல்லையு முருக்கு முன்நாமங் கனிந்தழுதிடில்ஞான
எல்லையுந் தாண்டவைக்கும் நின்நினைவா லென்றுமிருப்போர்
புல்லையும் நெல்லாக்கும் புனிதநிலை பெறுவரே யனைவர்
தொல்லையும் போக்குந் தூயநிலை நின்போலாவாரே. 100

கண்கண்டு குருடராய் குணம்பிரண்டலைதல் வேண்டா
மண்கொடுக்குமாசையதை மனதிலும் வேண்டா அழியும்
பொன்பொருள் கொடுக்குமாசையதை யொழித்துநீ யென்றுமுயர்
பண்கொண்டநின் நாமயிசை யென்றுமென் நினைவில் நிற்கவே. 101

நூல்பயன்

அன்புடன் அண்டங்கோடி யனைத்துங் காக்குமங்காளம்பிகையை
இன்பமுடன்பாடி பணிந்தோருக் கெல்லாந் துன்பம்
என்பதில்லையே துயரெல்லாந் தீர்த்துத் தூய்மையாக்கி
இன்பமுண்டினிமை யுண்டென்று ளமாடுமே.


இப்பாடல்கள் அனைத்தும் தேவியின் மூலமந்திர எழுத்துக்களின் பூரண சக்திதனை நூறு பாடல்களாய்ப் பிரித்து, கடைசிப் பாடலில் கருணையைச் சேர்த்து 'க' என்னும் மூலசக்திதனை விளக்கும் பயனாக அம்மன் அருளால் அமைகின்றன.


... மிக்க நன்றி: "குழலுறவு தியாகி" வலைத்தளம் 


“ஓம் காளிகாயை வித்மஹே, மாதாஸ்வரூபாயை தீமஹி!
தன்னோ அங்காளி ப்ரசோதயாத்” 

ஓம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மா, உனக்கு  என் அனந்த கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.  


அனைவரும் தேவியின் திருநாமத்தைப் பரப்ப வேண்டுகிறேன்.
அனைவரும் அருள்மிகு அங்காள பரமேஸ்வரியின் அருளாசியை பரிபூரணமாக பெற்று, திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் வாழ,  ஓம் சக்தி அம்பிகையை  வணங்கி  வேண்டிக்கொள்கிறேன்.

... என்றும் அன்புடன் அடியார்க்கும் அடியேன் ஸ்ரீநிவாசன்