Wednesday, November 22, 2017

அமானுஷ்யம்



நம் மனிதசக்திற்கு அப்பாற்பட்ட மேலான சக்திகளும், புரியாத சக்திகளும், கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ சூட்சும சக்திகளும் இவ்வுலகில் இருக்கிறது என்பதை ஆத்மார்த்தமாக நம்புபவன் நான்எல்லாவற்றிற்கும் உயிர்சக்தி உண்டு என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவன் நான்

அது இல்லாத, அது பரவியிருக்காத இடம் எதுவுமே இல்லைஅவற்றால் நமக்கு நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டுஅவரவர் கர்மவினையை பொறுத்தது. மனிதர்களுக்கு மட்டும் அல்ல, உயிருள்ள அத்தனை உடம்புகளுக்கும் இது பொருந்தும்.

எனக்கு நினைவுதெரிந்த நாள் முதல் என் வாழ்க்கையில் இதை அனுபவித்தவன் நான்ஏன், இப்பொழதுகூட நான் வசிக்கும் இடத்தில் ஆத்மார்த்தமாக உணர்ந்துகொண்டு இருக்கிறேன்.

சில அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

1964 என்று நினைக்கிறன். எனது கஸின் ராஜுவும் நானும் உத்தமர்கோவில் ரயில்வேகேட் பஸ்ஸ்டாண்டில் பஸ் ஏறி சத்திரம் பஸ்ஸ்டாண்டிற்கு போய்க்கொண்டு இருந்தோம். கூட்டம் அதிகமானதால் நாங்க இரண்டு பேரும் டிரைவர் சீட்டுக்கு பக்கத்திலே நின்னுண்டு இருக்கோம். டோல்கேட் தாண்டி அய்யம்வாய்க்கால் பிரிட்ஜ்க்கு முன்னாடி காவி வேஷ்டியுடன் தலையிலே சேப்பு துண்டு கட்டிண்டு ஒருத்தர் கையைக்காட்டி பஸ்ஸே நிறுத்தி எங்க ரெண்டுபேரையம் இறக்கச்சொல்லி டிரைவர்கிட்டே சைகை பன்றார். டிரைவர் எங்களை இறக்கிவிட்டார். ராஜுவுக்கு ஒன்னும் புரியலை. ஏன்டா நம்மளை இறக்கிவிட்டார் என்று என்னை கேட்கிறான். நம்ம மருளாளி தான் இறங்க சொன்னார் என்று நான் சொல்ல, நான் யாரையும் பாக்கலை டிரைவர் தான் இறக்கிவிட்டார் என ராஜு சொல்லறான். இல்லை, மருளாளியே நான் பார்த்தேன் என்று நான் சொன்னேன். அவரையே கேட்போம் என்று சொல்லிக்கொண்டு, சுற்றிமுற்றும் பார்க்கிறோம். கண்ணுக்குஎட்டின தூரம்வரை மருளாளியே காணோம். ஆனா நாங்க வந்த பஸ் அய்யம்வாய்க்கால் பிரிட்ஜ்லே மோதி வாய்க்களுக்குள்ளே விழுறதே நாங்க ரெண்டுபேரும் பார்த்தோம். அங்கே ஓடி பார்த்தபோது டிரைவரும் முன்னாடி இருந்தவாளும் நசுங்கிப்போய்ட்டா. வீட்டுக்குப்போய் இதை சொன்னா, பாட்டிக்கும் அத்தைகளுக்கும் ஒரே ஆச்சர்யம். ஏன்னா, மருளாளி இப்ப இல்லையாம். மருளாளி என் அப்பாவோட நண்பர். இதை என்னேன்னு சொல்றது


1978. கண்ணன் நகர் ஜாகை. கிண்டி ஸ்பிக் ஆஃபிஸில் இருந்து இரவு 10 மணிக்கு கிளம்பி, மின்சார ரயில் பிடித்து பழவந்தாங்கல் ஸ்டேஷனிலே இறங்கி நடந்து போயிண்டுஇருக்கேன். லட்சுமி நகர் தாண்டினா ஒரு வீடும் கிடையாது. ரோடு லைட் கிடையாது. பொட்டவெளி. ரெண்டு வருஷமா இப்படித்தான் போறேன். ஒத்தையடி பாதைதான். கிட்டத்தட்ட கண்ணன் நகர் வந்துட்டேன். திடீர்னு பின்னாடி யாரோ கூப்பிடறமாதிரி ஒரு உணர்வு. திரும்பி
பாத்தா ஒரு பெண் நின்றுகொண்டுருக்கிறாள். சைகை காட்டி கீழே ஏதோ விழுந்து கிடப்பதை எடுக்க சொல்கிறாள். அன்று பௌர்ணமிக்கு மறுநாள் என்பதால் நல்ல வெளிச்சம். என் கண்ணுக்கு ஒன்றும் தெரியாதலால் அவளை நோக்கி செல்கிறேன். கண்சிமிட்டும் நேரத்தில் எங்க ரெண்டு பேருக்கும் நடுவே ஒரு வயதான அம்மா நிற்கிறாள். என்னை போகச்சொல்லி கையை ஆட்டுகிறாள். எனக்கு ஒன்றும் புரியாமல் நான் நடக்க ஆரம்பித்தேன். இந்தப்பாதை ஓரிடத்தில் வளைந்து செல்லும். அந்தஇடத்தில் நின்றுகொண்டு இவர்கள் ரெண்டு பேரும் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கிறேன். யாரையுமே காணோம். ஏதோ ப்ரமையோ என்று நினைத்துக்கொண்டு வீட்டுக்கு போய்விட்டேன். மறுநாள் காலை தாயாரிடம் சொன்னபோது, அவள் சிரித்துக்கொண்டே எல்லாம் நல்லதுக்குதான் சொல்லிட்டு இனிமே யாரவது இதுமாதிரி கூப்பிட்டா திரும்பி பாக்காம போயிண்டே இரு என்று அறிவுறுத்தினாள்.


1992. ஸ்பிக் நகர் வாசி. ஆபீஸ் கூட்டாளிகள் பணினிரெண்டு பேர் ஒன்றுசேர்ந்து திருச்செந்தூர் நடைபயணம் செய்ய செந்திலாண்டவனை பிராத்தனை செய்துகொண்டு ஒருநாள் இரவு எட்டு மணிக்கு நடக்க ஆரம்பித்தோம். ஆறுமுகநேரி வரைக்கும் நடைபயணம் சுமுகமாக போய்க்கொண்டு இருந்ததுஅதற்கப்புறம் என் நடையில் தொய்வு ஏற்பட ஆரம்பித்துவிட்டது. வீரபாண்டிபட்ணம் தாண்டி ரயில்வே கேட் கிராஸ் பண்ணி வாகனங்கள் செல்லாத தெருவிளக்குகள் இல்லாத ஒரு பாதை வழியாக நடந்தோம். கும்மிருட்டு. இரண்டு பக்கமும் பனை மரங்கள், காட்டுபுதர்கள். நடைபயணம் மேற்குள்ளும் பக்தர்கள் அனைவரும் இந்த வழியாகத்தான் போகிறார்கள். சுமார் ஒரு மணி அளவில் சாலையோரம் இருந்த ஒரு அம்மன் கோவிலில் நிறைய பக்தர்கள் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருந்தனர். நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னதற்கு என்கூட வந்தவர் "வேண்டாம் நம்ம இருவரைத்தவிர பத்துபேர்களும் திருச்செந்தூர் கெஸ்ட் ஹவுஸ் போய் சேர்ந்துவிட்டார்கள்" என்று சொன்னார். நாங்களும் நடந்து கொண்டிருந்தோம். கோவில் தாண்டி சில அடிகள் நடந்ததும், ஒரு பெண்ணும் ஒரு மூதாட்டியும் நின்று கொண்டுருந்தனர். அந்தப்பெண்ணின் கையை மூதாட்டி பிடித்துக்கொண்டிருந்தாள். மூதாட்டி, "பாருங்கள் யாரும் நடக்கவில்லை. அந்த அம்மன்கோவிலில் தங்கி 3 மணிக்கு அப்புறம் நடங்கள்" என்று சொன்னார். அதற்கு அந்தப்பெண், "இல்லை இல்லை அங்கே ஒரு மண்டபம் இருக்கிறது பாருங்கள். அங்கு போங்கள். நல்ல வசதி" என்று கூறினாள். ஆனால் அந்த மூதாட்டி கோவிலுக்கு போங்கள் என்று சொல்லிவிட்டு அந்தப்பெண்ணை இழுத்துக்கொண்டு போய்விட்டார். நாங்கள் இருவரும் அந்தக்கோவிலில் தங்கி ரெஸ்ட் எடுத்துக்கொண்டு 3.30 மணிக்கு நடக்க ஆரம்பித்து 5 மணிக்கு கோவிலை அடைந்தோம். அந்தப்பெண் யார், அந்த மூதாட்டியும் யார் என்று இன்றுவரை ஒன்னும் புலப்படவில்லை. அந்த மூதாட்டி ஏன் எங்களை கோவிலுக்கு விரட்டினார் என்பது புரியாதபுதிராக இருக்கிறது. காரணகாரியங்கள் இல்லாமல் எந்த நிகழ்வும் நடப்பதில்லை.


2006. அலக்நந்தா பூனா. மூணாவது மாடி இல்லம். எப்போதும் வாசகதவு திறந்துதான் இருக்கும். மேல மொட்டைமாடி. யார் ஏறினாலும் இறங்கினாலும் நன்றாக தெரியும். இரண்டாவது மாடியில் வசிக்கும் மராத்திய அன்பர் ராசனே மிக நெருங்கிய நண்பர். அவர் சொன்னார், சிலசமயம் மெட்ராஸி ஸ்டைலே டிரஸ்பண்ணிண்டு ஒரு சின்னவயசு பெண் படியேறி செல்வதை பார்க்கிறேன். உங்க வீட்டுக்கு வராளா இல்லை மொட்டைமாடிக்கு போறாளா தெரியலை. இறங்கிவரத பாத்ததில்லை. நீ கதவை திறந்துகொண்டு உட்காந்திருக்கியே, நீ பாத்துறிக்கியா என கேட்டார். நான் இல்லை என்று சொன்னேன். ஒருநாள் மத்தியானம் ரெண்டுமணி இருக்கும். பாவாடை தாவணி போட்டுண்டு ஒரு பெண் என் வாசகதவை ஒட்டியுள்ள மாடிப்படி வழியாக மொட்டைமாடிக்கு செல்வதை பார்த்தேன். எழுந்து போவதற்குள் ஏழுஎட்டு படி ஏறிவிட்டாள். நீ யார், ஏன் மேலே போகிறாய் என்று கேட்டதற்கு திரும்பிப்பார்க்காமேலேய நா யாரா இருந்தா உனுக்குஎன்ன பக்கத்து ப்ளாக்லே ஒருத்தன் தூக்குல தொங்கினானே அவன் கீழ்வீட்டு அங்கிள் மேல் கோபமா இருக்கான். நீயும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு. முடிஞ்சா இந்த வீட்டை வித்துட்டு உங்கஊருக்கு போய்டு. இல்லை கொஞ்ச வருஷம் இங்கே இருக்காதேன்னு சொல்லிட்டு அப்படியே மறைஞ்சுட்டா. எனக்கு பயமாய்ப்போய் வீட்டுக்குள்ளேவந்து கதவை சாத்திட்டேன். யார்ட்டையும் சொல்லலே. ரெண்டு மாஸம் கழித்து, ராசேனேட்ட சொன்னேன். "எனக்கு ஒன்றும் புரியவில்லையே, அந்த ஆளுக்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது, அவன் ஆந்திராகாரன், தனியாக இருக்கிறான், குடும்பம் இங்கே இல்லை. ஒண்ணேஒன்னு, அவன் தூக்கில் தொங்கிய பெட்ரூம் ஜன்னலும் என் பெட்ரூம் ஜன்னலும் எதிரெதிரே. அந்தப்பெண் பற்றி விஜாரிக்கிறேன்" என்று சொன்னார். கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆன பிறகு ஒருநாள் சொன்னார், "விஜாரித்ததில் இந்த அபார்ட்மெண்ட் காம்ப்லெஸ் கட்டும்போது ஒரு பெண் கூலியாள் மேலேர்ந்து தவறிவிழுந்து மரணம் அடைந்துவிட்டாள். உடலை பக்கத்தில் எங்கேயோ அடக்கம் செய்துவிட்டார்கள் என்று தெரிகிறது." 2008ல் சென்னை வந்துவிட்டேன். 2014ல் இதை விற்று பெங்களூரில் அபார்ட்மெண்ட் வாங்கிவிட்டேன். இப்பொழது இங்குதான் வசிக்கிறேன். 2015ல் ராசேனே மகள் போன்பண்ணி, திடீரென்று மாரடைப்பால் அப்பா காலமாகிவிட்டார் என்று சொன்னாள். எதையும் எதையும் முடிச்சு போடுவது என்று எனக்கு என்றளவும் புரியவில்லை.


2017. நடந்துகொண்டிருக்கும் வருஷம். இப்பொழது வசிக்கும் பெங்களூரு அபார்ட்மெண்டிலும் ஒரு நிகழ்வு சப்தம் இல்லாமல் நடந்து கொண்டுருக்கிறது. ஒருநாள் இரண்டுநாள் இல்லை, பத்துநாள் ஆராய்ந்தேன். ஒரு மண்ணும் புலப்படமாட்டேங்கறது. இன்றளவும் இது வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவை நடந்துகொண்டுதான் இருக்கிறது. வளர்பிறை சப்தமி நாள் சில ரகசிய சமிக்ஞைகள் அறிய சிறந்த நாள் என்பதை பழங்கால ஓலைச்சுவடிகள் சொல்வதைப் படித்திருக்கிறேன். என் சிறிய அறிவுக்கு ஏதாவது எட்டுகிறதா என்று பார்ப்போம்.


நிறைய மயிர்கூச்செறியும் சம்பவங்களை அனுபவித்துயிருக்கிறேன். எல்லாவற்றையம் எழுத முடியாதுஎழுதவும் கூடாது. அந்த சக்திகளுடன் இருந்து ஒதுங்கி இருப்பதே மிக நல்லது. தெய்வத்தின் கட்டளைப்படிதான் எல்லா சக்திகளும் இயங்குகின்றன

எல்லாம் அவன் செயல். எல்லா சக்திகளும் அவனுள் அடக்கம்.
எல்லாம் சிவசக்தி, எங்கும் சிவசக்தி, எதிலும் சிவசக்தி.

2 comments: