ஸ்கந்த மஹாபுராணத்தில் சங்கர சம்ஹிதையில் "ஆம்ரவனேஸ்வர மஹாத்ம்யம்" என்ற அத்தியாயத்தில் திருமாந்துறை ஸ்தலபுராணம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அருள்மிகு வாலாம்பிகை உடனுறை அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் அருள்புரியும் திருமாந்துறை திருத்தலம்.
ஸம்ஸ்கிருதத்தில், ‘ஆம்ரம்’ என்றால் ‘மாமரம்’ என்று பொருள். மாமரங்கள் சூழ்ந்த பகுதியானதால் இங்கு ‘ஆம்ரவனேஸ்வரர்’ என்ற பெயரில் பரமேஸ்வரன் அருள்பாலிக்கிறார். மாந்துறையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீஆம்ரவனேஸ்வர பெருமானை வழிபடுதல் சிறப்பாகும்.
கரையும் துறையும் சேர கர்ம வினைகள் பொடியாகும் என்பது ஆன்றோர் வாக்கு.
திருத்தல பெருமை .....
அடர்ந்த காடாக இருந்த இந்தப் பகுதியில், ஏராளமான மிருகங்கள் வசித்தன. அதில் ஆணும், பெண்ணுமான இரண்டு மான்கள் தங்கள் இரு குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தன. அங்கு வேட்டையாட வந்த வேடன் ஒருவன், ஆண் மானையும், பெண் மானையும் அம்பெய்து கொன்றான். பின்னர் அவற்றைத் தூக்கிக்கொண்டு இல்லம் திரும்பினான். ஆனால் தாய், தந்தையரைக் காணாத குட்டிகள் தவித்துப்போயின. உணவு கிடைக்காமல் பசியால் வாடின. இதைக்கண்ட மிருகண்டு முனிவரின் சீடர்கள், மனம் வெதும்பி இந்தச் சம்பவம் பற்றி முனிவரிடம் கூறினர்.
மிருகண்டு முனிவர், சிவபெருமானையும், பார்வதிதேவியையும் பிரார்த்தனை செய்தார். அவரது குரலைக் கேட்டும், கேட்காததுபோல் இருந்தார் சிவபெருமான். அவரைப் பார்த்த பார்வதிதேவி, ஈசனை நோக்கி, "சுவாமி! நாம் வசிக்கும் இந்த வனத்தில் தாய்-தந்தையரை இழந்து இரண்டு மான் குட்டிகள் துன்பப்படுகின்றன. தாங்கள் அவைகளை காப்பாற்ற வேண்டும்" என்றாள்.
"தேவி! உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் அவர்களின் கர்ம பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். இந்த மான் குட்டிகளும், அதன் தாய், தந்தையரும் முற்பிறவியில் மானிடராய் பிறந்தவர்கள். தங்கள் வீட்டு கன்றுகுட்டியை அவிழ்த்து விட்டு விட்டு, அது பால் குடிக்கும் முன்பாகவே, பசுவின் மடியில் இருந்து பால் முழுவதையும் கறந்துவிடுவார்கள். பசுவிற்கும் சரியான உணவு கொடுப்பதில்லை. மாடு மேய்க்கும் இடையனுக்கும் கூலி கொடுப்பதில்லை. அந்தப் பாவங்களால்தான் இவர்கள் இங்கு மான்களாக பிறந்துள்ளனர். வேடனாக வந்து மான்களை வேட்டையாடியவன், முற்பிறவியில் இவர்களிடம் இடையனாக இருந்தவன். தன்னுடைய கூலியின் நிமித்தம், இரு மான்களையும் வேட்டையாடிச் சென்று உணவாக்கிக் கொண்டான்" என்றார் இறைவன்.
பார்வதிதேவிக்கு இன்னொரு சந்தேகம் எழுந்தது. "சரி.. சுவாமி! இடையன் ஏன் வேடனாகப் பிறந்தான்?" என்று கேட்டாள்.
"இடையன், பசுக்களை மேய்க்கும் போது அவைகளை அடித்து துன்புறுத்தினான். அந்தப் பாவத்தால் வேடனாகப் பிறந்தான்" என்றார் இறைவன்.
"ஆனால் இந்த புனித வனத்தில் பிறப்பவர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டுமே?. இவர்கள் பாவம் அல்லவா செய்திருக்கிறார்கள்?" என்றாள் தேவி.
இறைவன் பதிலளித்தார். "உண்மைதான். எனது சிறந்த பக்தரான உக்ரதபஸ், ஒருமுறை யாத்திரையாக இங்கு வந்து தங்கினார். என்னை பூஜிக்க அவருக்கு மலர்கள் கிடைக்கவில்லை. உடனே போன பிறவியில் சிறுவர்களாக இருந்த இந்த மான் குட்டிகளிடம், பூஜைக்கு மலர் வேண்டும் என்று கேட்டார். அந்த இரண்டு சிறுவர்களும் தூய்மையானவர்களாக மாறி, தொலைவில் இருந்த தோட்டத்தில் இருந்து மலர்களை பறித்து, அதை தாமரை இலையில் வைத்து உக்ரதபஸிடம் கொடுத்தனர். அவருக்கு ஏற்பட்ட மகிழ்வுக்கு அளவே இல்லை. அந்த மலர்களால் என்னை பூஜித்து மகிழ்ந்தார். என்னை பூஜித்த எனது பக்தனுக்கு மலர் கொடுத்ததால், இந்த சிறுவர்களின் பாவங்கள் கரைந்து போய், இந்த புண்ணிய வனத்தில் மான் குட்டிகளாய் பிறந்தனர்" என்றார்.
"பிள்ளைகளைப் பற்றிச் சொன்னீர்கள். அவர்களின் தாய் தந்தையர் பாவிகள் தானே. அவர்கள் எப்படி இந்த புண்ணிய வனத்தில் பிறக்க அருள்புரிந்தீர்கள்?" என்று பார்வதி தனது சந்தேகத்தைக் கேட்டாள்.
"பிள்ளைகள் செய்யும் புண்ணியம், அவர்களைப் பெற்றவர்களுக்கும் நற்பயனைத் தரும். அவர்களது பிள்ளைகள் செய்த புண்ணியத்தால் அவர்களது தாய், தந்தையரும் இங்கு பிறந்தனர்" என்றார் இறைவன்.
சிவபெருமானின் விளக்கத்தால் பார்வதி தேவி தெளிவு பெற்றார். பின்னர் இருவரும் மான் உருவம் கொண்டு, மான் குட்டிகளிடம் சென்றனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்கு பார்வதி தேவி பால் புகட்டினார். தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார்.
சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான் தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. அவரது வேண்டுதலுக்காக சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதிதேவியும் இங்கேயே தங்கினாள்.
மானுக்கு அருள் புரிந்த சிவதலம் என்பதாலும் இத்தலம் "மாந்துறை" என வழங்கப்படுகிறது.
~ ~ ~ ~ ~
திருவண்ணாமலையில் சிவபெருமான் முடியைக் கண்டதாக பொய் கூறிய பிரும்மாவை சிவன் சபித்தார். பின், அவரே இந்தச் சாபம் நீங்கப் பரிகாரமும் சொன்னார். அதன்படி மாமரங்கள் சூழ்ந்த இந்த வனத்தில் தவமிருந்தார் ஸ்ரீபிரம்மா. இங்கு இருக்கும் லிங்கத் திருமேனியை அபிஷேகிக்கவும் நீராடவும் ஸ்ரீகாயத்ரிதேவியை வணங்கித் துதித்தார். அவள் அங்கே தண்ணீர் பெருகச் செய்தாள். அந்தத் தீர்த்தத்தைக் கொண்டு நீராடிவிட்டு, லிங்கத் திருமேனியை அபிஷேகித்து பூஜை செய்து வந்தார் பிரம்மா. இதில் மகிழ்ந்த சிவனார், அங்கே அம்பிகையுடன் காட்சி தந்து, சாப விமோசனம் தந்தருளினார்.
~ ~ ~ ~ ~
மிருகண்டு முனிவர் – மருத்வதி தம்பதியினர் மழலைச்செல்வம் இல்லாமல் மிகவும் வருந்தினர். சிவபெருமானின் பக்தராதலால் ஈசனை நோக்கிக் கடும் தவம் செய்தார் மிருகண்டு மஹரிஷி. ஈசனும் அவர் தவத்தில் மனமகிழ்ந்து அவர் முன் தோன்றி "பதினாறு வயது வரையே வாழக்கூடிய நல்ல மகன் வேண்டுமா? ஆயுள் நூறு கொண்ட கெட்ட பிள்ளை வேண்டுமா?" என்று வினவ, சிறிது காலமே வாழ்வதாக இருந்தாலும் நல்ல பிள்ளையாக வாழ்ந்தால் போதும் என்றார் மகரிஷி. அதற்கிணங்க அவர் வீட்டில் ஒரு சத்புத்திரன் பிறந்தான்!
அவர்தான் ஸ்ரீமார்க்கண்டேயன்.
குழந்தைப் பருவத்திலேயே வேதங்களைத் தாமாய் அறிந்த மார்க்கண்டேயன், பிஞ்சுப் பருவத்திலேயே சிவபூஜையில் இறங்கினான். ஒவ்வொரு வருடம் ஆகும்போதும் அவனது பெற்றோர்கள் முகம் கலங்க, அதைப் பற்றிக் கேட்டுத் தன் ஆயுள் பதினாறு வயது வரையே என்று தெரிந்து கொண்டான். என்ன இருந்தாலும், அந்தப் பரமேசன் தன்னைக் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையுடன் எல்லா சிவஸ்தலங்களுக்கும் போய் சிவனைப் பூஜிக்க ஆரம்பித்தான். அப்படி, அந்த சிவப்பிஞ்சு கால் பதித்த ஸ்தலங்களில் ஒன்றுதான் மாந்துறை.
~ ~ ~ ~ ~
ஆதி காலத்தில் சிற்பக்கலையில் சிறந்து விளங்கிய விஸ்வகர்மாவின் மகளாகப் பிறந்தார் சமுக்யாதேவி. பல்வேறு கலைகளிலும் சிறந்து விளங்கிய சமுக்யாதேவியை சூரிய பகவான், மும்மூர்த்திகள், முப்பெரும் தேவியர், தேவர்கள் என எல்லோரது ஆசியுடனும் வாழ்த்துக்களுடனும் திருமணம் புரிந்து கொண்டார். தம்பதியர் இருவரும் மனமொத்து அன்புடன் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் சமுக்யாதேவிக்கு கதிரவனின் வெப்ப உக்கிரத்தை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. சூரிய பகவானிடம் அவரது வெப்ப மிகுதியை தனித்துக் கொள்ளச் சொன்னாள் சமுக்யாதேவி. அவ்வாறு சூரியனிடம் வேண்டிக்கொண்டும் அவர் தனது வெப்பக் கதிரின் உக்கிரத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் இனி இந்த வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது என்ற நிலையில், தனது தந்தையான விஸ்வகர்மாவிடமே சென்றுவிடலாம் என்று முடிவெடுத்தாள் சமுக்யா. அதனை தன் தகப்பனாரிடம் கூற, அவரோ ஆறுதல் கூறி அவளை கணவனிடமே சேர்ந்து வாழ வலியுறுத்தினார். பொறுக்க முடியாத சமுக்யா கணவனை விட்டு பிரிந்து செல்ல முடிவெடுத்தாள்.
தன்னைப் பிரிய தன் கணவர் ஒப்புக் கொள்ளமாட்டார், மேலும் மனம் வருந்துவார் என்றெண்ணிய சமுக்யா தன்னைப் போலவே துளியும் வித்தியாசம் காணமுடியா வண்ணம் ஒரு உருவத்தை தனது நிழலில் இருந்து உருவாக்கினாள். அந்த உருவத்திற்கு சாயாதேவி எனப் பெயரிட்டு, தனக்கு பதிலாக சூரியனின் மனைவியாக வாழ்ந்து அவருக்கு உதவியாக இருக்கும்படி பணித்தாள். அதன் பின் தன் தகப்பனிடமே வந்து சேர்ந்த சமுக்யா, தந்தை விஸ்வகர்மா எத்தனை சொல்லியும் திரும்பவும் கணவனிடம் செல்லவில்லை.
இவ்வாறு தான் கணவனைப் பிரிந்து வந்து இங்கு வசிப்பதை விரும்பிடாத தன் தந்தையால் மனம் வெதும்பிய சமுக்யா, குதிரை வடிவம் பெற்று இந்த மாந்துறை தலம் வந்து இத்தல இறைவனை வணங்கி, தனது கணவரின் உக்கிரம் குறையவும், சூரியனது உக்கிரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியை தனக்கு அருளுமாரும் வேண்டினாள்.
இதற்கு நடுவே தன்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பது சமுக்யாதேவி இல்லை என்பதை உணர்ந்த சூரிய பகவான், விஸ்வகர்மாவின் மூலம் சமுக்யாதேவியின் பிரிவை அறிந்த கதிரவன், அவரின் முன்பாகவே தனது உக்கிரத்தைக் குறைத்துக் காண்பித்தார். பின்னர், இந்த மாந்துறை திருத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டு சமுக்யா தேவியுடன் சேர்ந்தார். இதன் காரணமாகவே இத்திருத்தலத்தில் நவக்ரஹங்களில் உள்ள சூரியன் சமுக்யாதேவி மற்றும் சாயதேவியுடன் தம்பதி சமேதராய் காட்சி தருகிறார்.
~ ~ ~ ~ ~
குரு சக்திகளையும், சந்திர சக்திகளையும் பெற உதவும் திருத்தலமே திருமாந்துறை திருத்தலமாகும்.
ஒவ்வொரு மூன்றாம் பிறையையும் ஒவ்வொரு திருத்தலத்திலும் தரிசனம் செய்ய வேண்டும் என்ற நியதி இருப்பது போல தம்பதிகள் முதலில் திருமாந்துறை திருத்தலத்தில்தான் மூன்றாம் பிறையை தரிசனம் செய்ய வேண்டும். அவ்வாறு மூன்றாம் பிறையை தரிசனம் செய்யும் வாய்ப்புக் கிட்டாவிட்டாலும் திருமணம் நிகழ்ந்த ஒரு மண்டல காலத்திற்குள் அதாவது 48 நாட்களுக்குள் இத்தல இறைவனையும் அம்பாளையும் தம்பதி சமேதராய்த் தரிசனம் செய்து சுவாமிக்கு தேன் அபிஷேகம் நிறைவேற்றுதல் உத்தம சந்ததிகள் கிடைக்க வழிகோலும்.
எத்தகைய கொடிய காமக் குற்றங்களுக்கும் பிராய சித்த வழிமுறைகளைத் தரக் கூடிய திருத்தலம் பூவுலகில் இது ஒன்றே.
எத்தகைய கொடிய காமக் குற்றங்களுக்கும் பிராயசித்தம் அளிக்கக் கூடியதே திருமாந்துறை சிவத்தலம். ஆனால், குரு மூலமாகவே அததகைய தவறுகளுக்கு பிராயசித்தம் பெற வேண்டும் என்பது இத்தல நியதி. ஒருமுறை மண்டன மிச்ரரின் வாதத்தின் இடையே பரகாய பிரவேசத்தால் இறந்த மன்னன் உடலில் புகுந்து சில அந்தரங்க தாம்பத்ய இரகசியங்களை அறிந்து கொண்டார் ஆதிசங்கரர். உன்னத சந்தியாச நிலையில் அதுவும் ஒரு குறைபாடே என்பதால் அந்த தூசி அளவு தவறுக்கும் பிராயசித்தம் வேண்டி இத்தலத்தை அடைந்து பல பிராயசித்த வழிபாடுகளை மேற்கொணடு இறைவனை வேண்டி களங்கமில்லா சன்னியாசத்தைத் திரும்பப் பெற்றார். ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாளின் சற்குருவான கோவிந்த பகவத்பாதாள் நர்மதா நதி தீரத்தில் கடுமையான தவம் மேற்கொண்டு இருந்ததால் ஸ்ரீஆம்ரவனேஸ்வர ஈசனின் ஆணையால் ஸ்ரீமிருகண்டு முனிவரே மீண்டும் ஆதிசங்கரருக்கு சன்னியாசத்தை அளித்து சன்னியாச தர்மத்தைப் புதுப்பித்தார் என்பது பலரும் அறியாத ஆன்மீக இரகசியமாகும்.
வாலி தன் பத்தினியான தாரா தேவியுடன் இத்தலத்திற்கு வந்திருந்து தேனிலவு தரிசனம் செய்து அங்கதனை உத்தம வாரிசாகப் பெற்றர் என்பது வரலாறு.
மிருகண்டு முனிவரும் தன் பத்தினியுடன் தேனிலவிற்காக ஸ்ரீஆம்ரவனேஸ்வரர் அருள்புரியும் இத்தலத்திற்குத்தான் வருகை புரிந்தார்.
உமா மகேஸ்வரன், மிருகண்டு முனிவர் தம்பதிகள், மீனாட்சி சுந்தரேசனார் போன்றோர் தேனிலவைக் கொண்டாடி நலன்கள் பல பெற்ற திருமாந்துறை திருத்தலம்.
~ ~ ~ ~ ~
அகலிகையை தீண்டியதால் கௌதம முனிவரால் சாபம் பெற்ற இந்திரன் இத்தலத்தில் தவம் செய்து சாபம் நீங்கப் பெற்றான்.
தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டதால் உண்டான தோஷம் நீங்க சூரியனும் சந்திரனும் வழிபட்டு பயன் அடைந்த தலம்.
பலவகை அழுக்குகளும் சேருவதால் மாசுபட்டுப் போகும் தனது மேனியைத் தூய்மைப்படுத்திக் கொள்ள சமுத்திரராஜன் வணங்கிய தலம்.
கஹோல ரிஷியின் மகன் மருதாந்தன் அடைந்த தோஷம் திருமாந்துறை திருத்தலத்தில் நீங்கியதாக ஸ்தலபுராணம் கூறுகிறது. அந்த தோஷத்தால் அவனது கழுத்தில் ஏற்பட்டு இருந்த இரும்பு குண்டுகள் ரத்தினக் கற்களாக மாறின. இதை முனிவர்கள் அவனிடம் கூறி அவன் பாபவிமோசனம் அடைந்து விட்டதை உணர்த்தினர். மருதாந்தனும் ஆம்ரவனேஸ்வரரைத் துதித்து போற்றினான். பின்னர் மாந்துறைக்கு அடுத்துள்ள அகம்ஹர எனப்படும் ஆங்கரை எனும் ஊரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தான். அந்த லிங்கமூர்த்தி மருதாந்த நாதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
சுயம்பு மூர்த்தமாக மாமரத்தடியில் வெளிப்பட்ட மாந்துறையானை 'மருத்துகள்' எனப்படும் தவசீலர்களும் (வேதங்களின்படி பூலோக வாழ்க்கையை முறையாக வாழ்ந்து, அதனால் வானுலக வாழ்க்கையைப் பெற்றவர்கள் மருத்துகள்), கண்வ மகரிஷியும் வணங்கி வழிபட்ட தலம்.
வேதமித்திரன் என்பவரது தந்தையின் அஸ்தி, இத்தலத்தில் தூய ரத்தினமானது.
சுந்தரர் பாடிய தேவாரத்தலங்களுள் 58வது தலம். திருஞானசம்பந்தர் பாடிப் பரவிய தலம். அருணகிரிநாதர் வந்து திருப்புகழ் பாடிய ஆலயம்.
இந்த திருமாந்துறை திருத்தலத்திற்கு ஆம்ரவனம், ப்ரம்மானந்தபுரம், மிருகண்டீஸ்வரபுரம், அஹாபஹாரி என்னும் வேறு பெயர்களும் உண்டு.
~ ~ ~ ~ ~
திருக்கோயில் அமைப்பு:
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து லால்குடி செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது மாந்துறை கிராமம்.
சாலையை ஒட்டி மாஞ்சோலைகளுக்கு இடையே அற்புதமான இயற்கை எழிலின் ரம்யமான சூழலில் ஆலயம் அழகுற அமைந்துள்ளது.
நான்கு திசைகளிலும் மிகப்பெரிய மதில்சுவர்களுடன் அழகிய மூன்று நிலை இராஜகோபுரத்துடன் கிழக்குப் பார்த்தபடி திகழ்கிறது ஆலயம். ஆலயத்தின் பிரதான வாயிலுக்கு எதிரே நந்தி மண்டபம் உள்ளது. உள்ளே ஆஜானுபாகுவான மிகப்பெரிய நந்திபகவான் அமர்ந்திருக்கிறார். நந்தி மண்டபத்துக்கு பின்புறம் பலிபீடம். அருகில் மண்ணுக்குள் புதைந்ததுபோல் இரண்டு நந்தி சிலைகள் உள்ளது. ஈசன் முன் இரண்டு நந்திகள் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
இராஜகோபுரத்தைக் கடந்ததும் அழகிய நீண்ட பிரகாரம். ஆலயம் ஒரு திருச்சுற்றுடன் விளங்குகிறது. கோவில் நுழைவு வாயிலில் மேலே இறைவன் மான்குட்டித் தாயாக வந்த வரலாறு சுதை சிற்பமாகக் காட்சியளிக்கிறது.
ஆலயத்திற்குள் நுழைந்ததும் விசாலமான மகா மண்டபமும், வலதுபுறம் அன்னை வாலாம்பிகையின் சன்னிதியும் உள்ளது.
கர்பகிரஹத்தில் அன்னை நான்கு கரங்களுடன் .. மேலிரு கரங்களில் தாமரை புஷ்பங்களோடும், கீழிரு கரங்கள் அபய-வரதமாகக் கொண்டு .. நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.
கலைநயம்மிக்க தூண்களுடன் இருக்கும் மகா மண்டபத்தின் கிழக்கு திசையில் நால்வர் திருமேனிகள் உள்ளது.
அவர்களுக்கு பின்புறம் இருக்கும் சுவற்றில் அருள்மிகு கருப்பண்ண ஸ்வாமியின் திருவுருவமும், சூர்யபகவானின் திருவுருவமும் சித்திரமாக வரையப்பட்டுள்ளது.
அவர்களுக்கு பின்புறம் இருக்கும் சுவற்றில் அருள்மிகு கருப்பண்ண ஸ்வாமியின் திருவுருவமும், சூர்யபகவானின் திருவுருவமும் சித்திரமாக வரையப்பட்டுள்ளது.
மகாமண்டபத்தை அடுத்துள்ள இறைவன் கருவறையின் முன்பாக நந்தியும், இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் தண்டபாணியும் அருள்பாலிக்கிறார்கள்.
கருவறை நுழைவு வாசலில் சுதை வடிவில் துவாரபாலகர்களின் திருமேனி காணப்படுகிறது.
அர்த்த மண்டபத்தில் கர்பகிரஹத்தில் ஐந்தடி உயரமுள்ள ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் கிழக்கு திசை நோக்கி சுயம்பு மூர்த்தியாக மிககம்பீரமாக எழுந்தருளிக்கிறார்.
அர்த்த மண்டபத்தின் வலதுபுறம் விநாயகர், சந்திரசேகரர், ஆம்ரவனேஸ்வரர், வாலாம்பிகை, நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர், பிரதோஷ நாயகர் ஆகியோரின் உற்சவ திருமேனிகள் இருக்கிறது.
அம்பாள் ஸன்னதியை நோக்கி அமைந்துள்ள வாசலிலிருந்து வெளியே வந்தால் நந்தியெம்பெருமான் அம்பாளை பார்த்து கம்பீரமாக உட்காந்திருக்கார். அம்பாளுக்கு எதிரே நந்திதேவர் இருப்பது இது ஒரு ஆதிகாலத்து ஆலயம் என்று நிரூபணமாகிறது.
அந்த திருச்சுற்றின் தெற்கில் கோவில் அலுவலகமும், மடப்பள்ளியும், கிணறும், மாமரமும் உள்ளது.
தென் மேற்கில் தனிச்சன்னதியில் கிழக்கு நோக்கி பிரமாண்டமான விநாயகர் அருள்பாலிக்கிறார்.
தென் மேற்கில் தனிச்சன்னதியில் கிழக்கு நோக்கி பிரமாண்டமான விநாயகர் அருள்பாலிக்கிறார்.
கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, நர்த்தனவிநாயகர் திருமேனிகள் தெற்கு நோக்கி காட்சி தருகின்றன.
கோஷ்டத்தை ஒட்டி மிகமிக சிறிய சன்னதியில் ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள் தெற்கு நோக்கி அமர்ந்து இருக்கிறார். சுமார் 50 வருஷங்களுக்கு முன்னர்தான் இச்சன்னதி எழுப்பப்பட்டுள்ளது.
கோஷ்டத்தை ஒட்டி மிகமிக சிறிய சன்னதியில் ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள் தெற்கு நோக்கி அமர்ந்து இருக்கிறார். சுமார் 50 வருஷங்களுக்கு முன்னர்தான் இச்சன்னதி எழுப்பப்பட்டுள்ளது.
திருச்சுற்றில் ஸ்வாமி கர்பகிரஹத்திற்கு நேர் பின்புறம் சுமார் 5 அடி உயர கம்பீரமான தோற்றப் பொலிவுடன் மயில் வாகனத்தில் சாய்ந்தபடி வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் தனிச்சன்னதியில் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் கிழக்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.
அருகில் தனி சன்னதிகளில் கிழக்கு நோக்கி கஜலக்ஷ்மியும், பாலதண்டாயுதபாணி ஸ்வாமியும் அருள்பாலிக்கிறார்கள்.
திருச்சுற்றின் வடக்கில் சண்டிகேசுவரர் சன்னிதியும், அம்பாள் கர்பகிரஹத்திற்கு நேர் பின்புறம் ஸ்தலவிருக்ஷமாக வில்வமரமும் இருக்கிறது.
கோஷ்ட மூர்த்தங்களாக மேற்கு நோக்கி மகாவிஷ்ணு, வடக்கு நோக்கி பிரம்மா, துர்க்கைத் திருமேனிகள் காட்சி தருகின்றன.
மூன்றடி உயரமுள்ள அன்னை துர்கை மிக சாந்தமான முகத்துடன் அழகாக நிற்கிறாள்.
மூன்றடி உயரமுள்ள அன்னை துர்கை மிக சாந்தமான முகத்துடன் அழகாக நிற்கிறாள்.
இராஜகோபுரத்தையொட்டி வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இங்கு நடுநாயகமாக ஆதித்தபகவான் தன் இரு தேவிகளுடன் மேற்கு நோக்கி இருக்க, மற்ற அனைத்து கிரகங்களும் அவரை பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வித்தியாசமான தோற்றமாகும். அருகிலேயே சூரியன் தனியாகவும், பைரவப்பெருமானும் இருக்கிறார்கள்.
மிகத்தொன்மையான ஆதிகாலத்து ஆலயத்தை 11ம் நூற்றாண்டில் சோழர்கள் விரிவுபடுத்தியுள்ளார்கள். முற்காலச் சோழர்கள் காலத்தின் கலையம்சத்துடன் திகழ்கிறது ஆலயம். இராஜராஜ சோழர் காலத்து இரண்டு கல்வெட்டுகள் இங்கே காணப்படுகிறது.
2014ம் வருஷம், செப்டம்பர் மாதம், 7ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ஜீர்ணோ தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இனிது நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பஞ்ச சிவ தலங்களுள் இத்திருத்தலமும் ஒன்றாகத் திகழ்கிறது.
அருள்மிகு ஆம்ரவனேஸ்வரரான மாமரநாதர், ஆதிரத்னேஸ்வரர், சுத்தரத்னேஸ்வரர், மிருகண்டீஸ்வரர் என்றெல்லாம் வணங்கப்படுகிறார்.
இறைவியின் மற்றொரு திருநாமம் அழகம்மை என்பதாகும்.
- - - - - - - - - -
பல தலைமுறையினருக்கும் பல தலை முறைகளாக தர்ப்பணம், திவசம் அளிக்காத குறைகளைக் களையக் கூடிய அற்புத பித்ரு முக்தித் தலமே திருமாந்துறை என்பது பலரும் அறியாத ஆன்மீக இரகசியமாகும். அற்புத சந்ததி விருத்தியையும் நோயற்ற நீண்ட வாழ்வையும் அளிக்கக் கூடிய தெய்வமே ஸ்ரீஆம்ரவனேஸ்வரர் ஆவார். அகண்ட நாம சங்கீர்த்தனங்கள், வேத யக்ஞங்கள் இத்தலத்திற்கு உரிய சிறப்பு வழிபாடுகளாகும்.
மான்களாக பிறந்த அசுர தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு செவ்வாய்க்கிழமை சதுர்த்தி தினத்தன்று விமோசனம் தந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்கு இறைவனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்நேரத்தில் இறைவன் ஆம்ரவனேஸ்வரரரை வழிபட்டால் குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மார்க்கண்டேயன் மரண பயம் இன்றி வாழ, தவம் செய்து வரம் பெற்ற தலமாகையால் இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வணங்கினால், மரண பயம் நீங்கும்; நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம் என்பது நம்பிக்கை!
பிரம்மஹத்தி தோஷம் முதலான சகல தோஷங்களையும் நீக்கி அருளும் தலம் எனப்போற்றுகிறது ஸ்தல புராணம்.
சிவனை அழையாமல் தட்சன் நடத்திய யாகத்திற்கு சென்று வந்த சூரியன், தனது பாவம் தீர, வந்து வழிபட்ட திருத்தலம் இந்த மாந்துறை.
மூல நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து ஸ்ரீஆம்ரவனேஸ்வரரையும் ஸ்ரீவாலாம்பிகையையும் தரிசித்துப் பிரார்த்தித்தால், திருமண பாக்கியம் கைகூடும்; வாழ்வில் ஏற்றமும் ஜெயமும் நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள்.
நிலையான மாங்கல்ய சக்திகளையும், ஒழுக்கமுள்ள பிள்ளைகளையும் அளிப்பவளே திருமாந்துறை ஸ்ரீவாலாம்பிகை அம்பாள் ஆவாள். ஆடி மாதம் பூர நட்சத்திரம் அன்று அம்பிகையை அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு சுமங்கலிகளுக்கு மாங்கல்ய தானப் பொருட்களை தானமாக அளித்திட பெண்கள் நலமடைவர். வாலா அரிசி என்ற ஒருவகை அரிசியை வறுத்து அரைத்து அதில் வெல்லம் சேர்த்து உருண்டைகள் செய்து பள்ளிக் குழந்தைகளுக்கு அளித்து வந்தால் குழந்தைகள் குண நலத்துடன் வளர்வர். கணவனுடைய தீய பழக்கங்கள் அகலும்.
ஸ்ரீவாலாம்பிகைக்குப் பால் அபிஷேகம் மிகவும் விசேஷம். அன்னைக்குப் பாலபிஷேகம் செய்து வேண்டினால், மழலைச்செல்வம் உண்டாகும். பாலரிஷ்டதோஷம் நீங்கும். குழந்தைகள் நோயில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்வார்கள் எனப் போற்றுகின்றனர் பெண்கள்.
காவிரித் தாயே தன் கரங்களை வடதிசை நோக்கி விரித்து காயத்ரி நதியாக ஓடி வருகிறாள். காயத்ரி நதிக் கரையில் அமைந்துள்ள புண்ணியத்தலம். கோயிலுக்கு அருகில் உள்ள காயத்ரி நதி தண்ணீரை எடுத்துத் தலையில் தெளித்துக்கொண்டு, சிவனாருக்கு வில்வார்ச்சனை செய்து வழிபட்டால், சகல தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.
பங்குனி மாதத்தில் முதல் 3 நாள்களில் சூரிய ஒளி சுவாமி மீதுபடுகிறது.
தினமும் அபிஷேகம் அலங்காரம் நிவேதியம் தீப ஆராதனை நடக்கிறது. தினமும் காலை 7க்கு உஷத்காலம்/காலசந்தி, காலை 10க்கு உச்சிக்கலாம், சாயங்காலம் 6க்கு சாயரக்ஷை, இரவு 8க்கு இரண்டாம்காலம்/அர்த்தஜாமம் பூஜை நடக்கிறது.
சோமவாரம், சுக்ரவாரம், பிரதோஷம், கிருத்திகை, பௌர்ணமி, அங்கார சதுர்த்தி, ஆடிவெள்ளி, நவராத்திரி, அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், திருவாதிரை, மஹா சிவராத்திரி, ஆதி சங்கராச்சார்யா ஜெயந்தி பண்டிகைகள் விமர்சியாக கொண்டாடப்படுகிறது.
பரம்பரை பரம்பையாக குடும்ப வம்சாவளிகள்தான் இக்கோவிலின் பூஜை புனஸ்காரங்களை செய்து வருகின்றனர். அம்பாள் ஸ்வாமிக்கு மணி குருக்களும் குமார் குருக்களும், கருப்புக்கு இராமதாஸ் பூஜாரியும் ஆஸ்தான நபர்கள். அவர்களுக்கு கோவில் தெற்கு மதில்சுவரையொட்டி வெளிப்புறம் வடக்கு நோக்கி குடியிருப்புகள் உள்ளது.
பரம்பரை பரம்பையாக குடும்ப வம்சாவளிகள்தான் இக்கோவிலின் பூஜை புனஸ்காரங்களை செய்து வருகின்றனர். அம்பாள் ஸ்வாமிக்கு மணி குருக்களும் குமார் குருக்களும், கருப்புக்கு இராமதாஸ் பூஜாரியும் ஆஸ்தான நபர்கள். அவர்களுக்கு கோவில் தெற்கு மதில்சுவரையொட்டி வெளிப்புறம் வடக்கு நோக்கி குடியிருப்புகள் உள்ளது.
- - - - - - - - - -
கோயில் வாசலில் சற்றே தள்ளி காவல் தெய்வமான கருப்பண்ண ஸ்வாமிக்கு தனியே கோயில். மூலவர் என சிலை ஏதும் இல்லாது, ஆலமரத்தின் கீழே ஒரு மிகப்பெரிய கருப்பு வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதற்குதான் பூஜை புனஸ்காரம் செய்யப்படுகிறது. நிறைய சிறப்புகள் வாய்ந்த மிகுந்த சக்தியுடையவர் இந்த ஆலமரக்கருப்பர்.
ஆலமரத்தடி கருப்பருக்கு பின்புறம் இரண்டு மிகமிக சிறிய மேடைகள் இருக்கிறது. அவற்றில் பண்டிதர் ஸ்வாமியும் மதுரைவீரனும் அருள்பாலிக்கிறார்கள்.
ஆலமரத்தடி கருப்பருக்கு முன் பிரும்மாண்டமான இரண்டு குதிரைகள். (ஒன்று வெள்ளை ஒன்று சிவப்பு).
வாழ்க்கையில் கஷ்டநஷ்டங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கருப்பருக்கு வேல் வாங்கி பிரதிஷ்டை செய்வது வழக்கம். ஆலமரக்கருப்பரை சுற்றி நிறைய வேல்கள் குத்தப்பட்டுள்ளன. சிறிய யானை உருவங்களும் நிறைய இருக்கின்றன. அனைத்து வேல்களுக்கு எலுமிச்சம்பழம் குத்தியிருக்கும்.
வாழ்க்கையில் கஷ்டநஷ்டங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கருப்பருக்கு வேல் வாங்கி பிரதிஷ்டை செய்வது வழக்கம். ஆலமரக்கருப்பரை சுற்றி நிறைய வேல்கள் குத்தப்பட்டுள்ளன. சிறிய யானை உருவங்களும் நிறைய இருக்கின்றன. அனைத்து வேல்களுக்கு எலுமிச்சம்பழம் குத்தியிருக்கும்.
கருப்பருக்கு சிவப்பு பட்டுத்துணி முண்டாசு போல் கட்டியிருக்கும். இவருக்கு பொரி, பொட்டுக்கடலை, நாட்டுச்சக்கரை, சர்க்கரைப்பொங்கல், சரக்கு என்ற சாராயம், சுருட்டு முதலியன படையலாக படைக்கப்படுகிறது.
இக்காவல் தெய்வத்தின் காலடி மண் நோய்களைப் போக்கும் சக்தி கொண்டது. இங்கேயுள்ள ஆலமரத்தில் தொட்டில் கட்டி வேண்டினால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்; குழந்தைகளை காத்துக் கருப்பு அண்டாது என்பது ஐதீகம்! இங்கு வழங்கப்படும் ஆலமரத்தடி மண் பிரசாதம் மகிமை மிக்கது.
மாந்துறை கருப்பண்ண சாமி கோவில் அருள் வாக்கு ஒரு காலத்தில் ரொம்ப பிரபலம். இங்கேயுள்ள பூசாரிக்கு அடிக்கடி அருள் வரும். அவ்வாறு வரும்போது உடுக்கு அடித்து மிக உயரமாகத் துள்ளிக் குதிப்பார். சொன்னால் சொன்னபடி துல்லியமாக நடக்கும். இப்போது அந்த சக்திவாய்ந்த பூசாரி இல்லை.
வெள்ளைக்காரர்கள் ஆண்டபோது லால்குடியிலிருந்து திருச்சிக்கு வரும் சிப்பாய்கள் போலீஸார் உள்பட, யாரும் காலில் செருப்பு அல்லது பூட்ஸ் உடன் இந்தக் கோயிலைக் கடக்க மாட்டார்களாம். அவ்வாறு கடந்தால் முதுகில் சாட்டைஅடி விழுமாம். அவ்வளவு சக்தி வாய்ந்த கருப்பர்.
- - - - - - - - - -
நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானே
மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே
மறைக்காட் டானே திருமாந் துறையாய் மாகோ ணத்தானே
இறைக்காட் டாயே எங்கட் குன்னை எம்மான் றம்மானே.
....... சுந்தரர் தேவாரம் – ஊர்த்தொகை
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது
செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ் செருந்திசெண் பகமானைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகின்ற
எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழ லேத்துதல் செய்வோமே.
வேங்கை, ஞாழல், செருந்தி, செண்பக மலர்களையும், ஆனைக் கொம்பையும், சந்தனமரம், மாதவி மலர், சுரபுன்னை மலர், குருந்து மலர் ஆகியவற்றையும் உந்திவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில் உறையும் எம்பிரானின் இமையோர் வணங்கும் திருவடிகளை ஏத்துவோம்.
விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானத்
துளவ மால்மக னைங்கணைக் காமனைச் சுடவிழித் தவனெற்றி
அளக வாணுதல் அரிவைதன் பங்கனை யன்றிமற் றறியோமே.
விள முதலிய பயன்தரும் மரங்களின் பழங்களோடு முத்துக்களையும் அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில், மால் மகனாகிய காமனைக் கனல் விழியால் எரித்து விளங்கும் இறைவனை, அம்பிகைபாகனை அன்றி உலகில் வேறொன்றையும் அறியோம்.
கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங் கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யிற்பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்தேத்துங்
கேடி லாமணி யைத்தொழ லல்லது கெழுமுதல் அறியோமே.
தேன் சொரியும் குன்றிடைத் தோன்றிக் கமுகு முதலிய மரங்களின் இலைகளை வாரிவரும் காவிரி வடகரையில் மாந்துறையில் விளங்கும் கேடிலாமணியைத் தொழுதலையல்லது வேறொருவரைத் தொழுதல் அறியோம்.
இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இளமரு திலவங்கங்
கலவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும் ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை யல்லது வணங்குதல் அறியோமே.
இலவம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறை உறை தலைவனும் கங்கை, பிறை, அரவு முதலியவற்றைத் தலையில் சூடியவனும் ஆகிய வானோர் தலைவனையன்றி வணங்குதலறியோம்.
கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானைப்
பாங்கி னாலிடுந் தூபமுந் தீபமும் பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில் தலைப்படுந் தவத்தோரே.
கோங்கு, செண்பகம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறையில் உறைவானை, தூபம் தீபம் தோத்திரம் நிவேதனம் ஆகியவற்றால் மலர்தூவி வழிபட்டு அவன் திருநாமங்களைச் சொல்லுவார் மேலான தவமுடையோராவர்.
பெருகு சந்தனங் காரகில் பீலியும் பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப் புனிதனெம் பெருமானைப்
பரிவி னாலிருந் திரவியும் மதியமும் பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி வணங்குதல் செய்வோமே.
சந்தனம் அகில் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறைப் புனிதனின் இரவி, மதி, மன்னர்கள், மருத்துக்கள் அன்போடு வழிபடும் திருவடிகளை வணங்குவோம்.
நறவ மல்லிகை முல்லையும் மௌவலும் நாண்மல ரவைவாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை மாந்துறை யிறைஅன்றங்
கறவ னாகிய கூற்றினைச் சாடிய அந்தணன் வரைவில்லால
நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன் நிரைகழல் பணிவோமே.
மல்லிகை முல்லை முதலிய மலர்களை மிகுதியாக வாரி வரும் காவிரி வடகரை மாந்துறை இறைவனும், காலனைக் காய்ந்தவனும், மேருவில்லால் முப்புரம் எரித்தவனும் ஆகிய பெருமானின் திருவடிகளைப் பணிவோம்.
மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானை
நிந்தி யாவெடுத் தார்த்தவல் லரக்கனை நெரித்திடு விரலானைச்
சிந்தி யாமனத் தாரவர் சேர்வது தீநெறி யதுதானே.
மந்திகள் மாங்கனிகளை உண்டு மகிழுமாறு அடர்ந்து வளர்ந்த மாமரங்களை உடைய மாந்துறையில் எழுந்தருளிய இறைவனை, நிந்தித்து அவனை மலையோடு எடுத்து ஆரவாரித்த இராவணனைக் கால்விரலால் நெரித்தவனைச் சிந்தியாதவர் தீநெறி சேர்வர்.
நீல மாமணி நித்திலத் தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி வடகரை மாந்துறை யமர்வானை
மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா மலரடி யிணைநாளுங்
கோல மேத்திநின் றாடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே.
நீல மணிகளையும், முத்துக்களையும், மலர்களையும் அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறையில் திருமாலும் பிரமனும் தேடிக் காணமுடியாதவாறு எழுந்தருளிய இறைவனின் திருவடிகளைப் பாடி வழிபடுங்கள்.
நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர் நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலங்களும் நாணலின் நுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை யொருகாலம்
அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது அதுவவர்க் கிடமாமே.
சமணரும் தேரரும் நிலையற்ற உரையினராவர், நீண்ட மூங்கில், தேன் பொருந்திய வேலமரம், மாங்கனி, வாழைக் கனி, நாணலின் நுரையை அடித்துக் கொண்டு வரும் காவிரியின் வடகரையிலுள்ள திருமாந்துறை இறைவனை எக்காலத்தும் நெஞ்சுருகி வழிபடும் பரமானந்த நிலையே.
வரைவ ளங்கவர் காவிரி வடகரை மாந்துறை யுறைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன் செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம் பந்தனன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே.
மலைவளங்களைக் கொணர்ந்து தரும் காவிரி வடகரையில் மாந்துறையில் உறைபவன் மீது கவுணிய கோத்திரத்தனாய், சிறந்த வேதங்கள் நிறைந்த நாவினனும் சிவனுக்குத் திருத்தொண்டு செய்வதில் வல்லவனுமான காழி ஞானசம்பந்தன் பாடிய அன்புறு பாமாலைகளை ஓதி வழிபடுவோர் அல்லல் பாவம் ஆகியன நீங்கப் பெறுவர்.
அருணகிரிநாதர் அருளிய திருமாந்துறை திருப்புகழ்:
ஆக்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து
ஆஞ்சு தளர் சிந்தை தடுமாறி
ஆர்ந்துள கடன்கள் வாங்குவு மறிந்து
ஆண்டு பல சென்று கிடையோடே
ஊங்கிருமல்வந்து வீங்குடல் நொந்து
ஓய்ந்துனர் வழிந்து உயிர்போமுன்
ஓங்கு மயில் வந்து சேன்பெற விசைந்து
ஊன்றிய பதங்கள் தருவாயே
வேங்கையுமுயர்ந்த தீம்புனமிருந்த
வேந்திழையின் இன்ப மணவாளா
வேண்டுமவர் பூண்ட தாங்கள் பதமிஞ்ச
வேண்டிய பதங்கள் புரிவோனே
மாங்கனியுடைந்து தேங்கவயல் வந்து
மாண்பு நெல் விளைந்த வளநாடா
மாந்தர்தவர் உம்பர்கோன் பரவிநின்ற
மாந்துறை யமர்ந்த பெருமானே!!
நன்றாக இருந்த குடல் வளைவுற்று கூன்விழுந்து, விழவேண்டிய பற்கள் தளர்ச்சி அடைந்து, ஆய்ந்து ஓய்ந்து மனம் தடுமாற்றம் அடைந்து, வரவேண்டிய கடன்களை வாங்கவேண்டிய இடங்களில் வாங்கி, இவ்வாறே பல ஆண்டுகள் செல்ல, படுத்த படுக்கையாகி, மிகுந்த இருமல் நோய் ஏற்பட்டு, வீங்கும் குடலும் நோவுற்று, சோர்வடைந்து, உணர்ச்சியும் அடங்கி, உயிர் போவதற்கு முன்பு, விளங்கி நிற்கும் மயில் மீது நீ வந்து யான் விண்ணுலகை அடைவதற்கு நீ மனம் இணங்கி, நிலைபெற்ற உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. வேங்கை மரங்களும் உயரமான, இனிய தினைப்பயிர்களும் மிகுந்த வயலிலே இருந்த அழகிய தேவி வள்ளியின் இனிய மணவாளனே, வேண்டிக்கொள்ளும் அடியார்கள் கொண்டுள்ள பதவி மேம்பட்டு விளங்க, அவர்கள் விரும்பிய திருவடிகளை அருள் புரிபவனே, மாம்பழம் உடைந்து அதன் சாறு வயலில் நிறைந்து, சிறந்த நெற்பயிர் விளையும் வளமான சோழ நாடனே, மனிதர்களும், தவசிகளும், தேவேந்திரனும் பரவிப் போற்ற நின்ற திருமாந்துறைத் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
அன்புடையீர், அனைவருக்கும் வணக்கம்.
ஆங்கரை கிராமத்தை பூர்விமாக வரித்து வசித்தவர்களின் மரபில் வந்து, தற்போது பெங்களூரை கர்மபூமியாக கொண்டு வசித்துவரும் எனக்கு இந்த மாந்துறையான் தான் குலதெய்வம்.
ஆலமரத்தடி கருப்பர் காலடி மண் எப்போதும் வீட்டு பூஜை அறையில் இருக்கும். இதை நெற்றியில் இட்டுக்கொண்டால் பயமே இருக்காது. எங்கு சென்றாலும், பயணங்களில் இந்த மண்ணில் சிறிதளவு லக்கேஜில் இருக்கும். இந்த மண்ணுடன் பயணம் செல்வதால் நம்மைப் பாதுகாக்க அந்தக் காவல்தெய்வமான கருப்பண்ணஸ்வாமியும் நம்முடன் வருவதாக ஒரு நம்பிக்கை. இந்த மண்ணுக்கு அவ்வளவு மகிமை.
என்னை வாழவைக்கும், என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் வழிநடத்தும் என் குலதெய்வத்தின் - ஸ்ரீ வாலாம்பிகா ஸமேத ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் - திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.
என்னைக் காத்து ரட்சிக்கும் காவல் தெய்வம் 'அருள்மிகு கருப்பண்ண சுவாமி' திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன்.
என் குலதெய்வத்தின் சிறப்பு, காவல் தெய்வத்தின் மகிமை, திருத்தல பெருமை .. இந்த மூன்று பற்றி மிகவிரிவாக ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று ஓர் நீண்டநாள் அவா.
இதற்க்காக பல வலைத்தளம் மேலும் வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல்களையும், என் இல்லம் மற்றும் ஊர் பெரியோர்களால் கண்டுகொண்ட ஆழமான விஷயங்களை, அருளாளர்களின் கூற்றுகளை சொல்லக்கேட்டும், படித்தும் சேகரித்த தகவல்களையும், கோவில் அலுவலகத்தில் இருந்த பழைய கையேட்டு குறிப்புகளிலிருந்த தகவல்களையும், என்னுடைய அனுபவங்களையும், எண்ணங்களையும், நான் அறிந்தவைகளையும் ஒன்றுசேர்த்து உருவகப்படுத்தி ஒழுங்குபடுத்தி என்னுடைய வலைப்பூவில் (KOSHASRINI) ஒரு பதிவாக ஏற்றியுள்ளேன்.
Google Images / இணையதளம் / வலைத்தளத்திலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்ட புகைப்படங்களையும், என்னுடைய பிரத்யோகமான புகைப்படங்களையும் எனக்குத் தெரிந்தவரை சரியான இடத்தில் பிரசரித்துள்ளேன்.
தகவல்களுக்கும் புகைப்படங்களுக்கும் அனனவருக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப்பதிவை படிக்கும் அன்பர்கள் தயவுசெய்து தங்கள் எண்ணங்களையும் அறிவுரைகளையும் கீழ்காணும் "கமெண்ட் காலத்தில்" பதிவிட வேண்டுகிறேன்.
..... அடியார்க்கும் அடியேன் ஸ்ரீநிவாசன்
கார்த்திகை மாதம் அமாவாஸ்யா தினமான இந்நாளில் (18/11/2017) இப்பதிவை பிரசுரப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்நாள் என் வாழ்வில் ஒரு பொன்நாள்.
கார்த்திகை மாதம் அமாவாஸ்யா தினமான இந்நாளில் (18/11/2017) இப்பதிவை பிரசுரப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்நாள் என் வாழ்வில் ஒரு பொன்நாள்.
Excellent presentation. Got to know many things. Thanks for sharing such wonderful information. Of course, we are totally blessed to have this Eashwar as our Kuladeivam...
ReplyDeleteMay our next generation also be blessed by visiting this temple periodically
Thanks for nice words ...
ReplyDeleteஅன்புள்ள ஶ்ரீநிவாஸன்,
ReplyDeleteகுலதெய்வத்துக்கு ஓர் மனமார்ந்த நல்ல சமர்ப்பணம். ஸ்தலபுராண விவரங்கள் நன்கு தொகுக்கப்பட்டுள்ளன. புகைப்படங்கள் ஸ்தலத்தின் அழகை, பெருமையை நன்கு எடுத்துரைக்கின்றன. உன்னதமான முயற்சி. பகவான் தங்களுக்கு சகல ஸௌபாக்யங்களையும் அனுக்ரஹிக்கட்டும்.
இந்தப் பதிவின் நோக்கம் மற்றவர்களையும் இந்த ஸ்தலத்துக்கு சென்று வழிபடச்செய்வதாக இருந்தால், பின்வரும் விவரங்களையும் சேர்க்கலாம்.
1. கோயில் தரிசன, பூஜை நேரங்கள்
2. கோயிலுக்கு செல்லும் வழி விவரங்கள்
3. அர்ச்சகர் இணைப்பு எண்
4. வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு தங்கும், உணவு வசதிகள் (ஓட்டல்...)
Dear Ram,
DeleteVery kind of you for your encouraging words.
As advised by you, will furnish the details,
அன்புள்ள ஶ்ரீநிவாஸன்,
ReplyDeleteகுலதெய்வத்துக்கு நல்லதொரு சமர்ப்பணம். ஸ்தலத்தைப்பற்றி அரிதான செய்திகள், அழகான புகைப்படங்கள், பக்தியூட்டும் பாக்கள். ஓர் பாராட்டத்தக்க உன்னதமான முயற்சி.
அனைத்து செல்வங்களும் பெற்று வாழவாழ திருமாந்துறையான் அருள் புரியட்டும்.
ராமப்ரஸாத்
Dear Ram, Thanks for Nice Words.
ReplyDeleteVery nice description. Felt as if I was there before each sannidhi.
ReplyDeleteGreat Thanks for your encouraging words.
ReplyDeleteGod bless you Srinivasan for your excellent compilation of all the relevant information for all the devotees for whom it is the Kuladeivam.
ReplyDeleteThank You, Sir.
Deleteகோயில் பற்றிய விஸ்தாரமான ஒரு விளக்கம். அருமையாக இருக்கின்றது.
ReplyDeleteஸ்ரீ ராம்.
மிக்க நன்றி அய்யா
DeleteKarupar🙏🙏🙏 Guruve saranam
ReplyDelete