Thursday, November 16, 2017

ஸ்ரீஅமிர்தகடேச நந்தி மூர்த்தி



ஸ்ரீஅமிர்தகடேச நந்தி மூர்த்தி, திருப்பத்தூர்

மதுரை மீனாட்சி கல்யாணத்திற்காக அரசர்கள், மகான்கள், யோகிகள், மனிதர்கள், விலங்குகள் என அனைவருமே தங்கள் பரிசுப் பொருட்களை அனுப்பினார்கள். அது மட்டுமல்லாது பெருமாள் மூர்த்திகளும், சிவ மூர்த்திகளும் பல அற்புத தெய்வீக பரிசுப் பொருட்களை அனுப்பினார்கள் என்பது சித்தர்கள் அறிவிக்கும் சுவையான இரகசியமாகும். 

காஞ்சி வரதராஜப் பெருமாள் மகிழம்பூ மாலைகளையும், அனுவாவி மலை முருகப் பெருமான் செண்பக மலர் மாலைகளையும், திருப்பத்தூர் ஸ்ரீதளிநாதர் கொன்றை மலர் மாலைகளையும் மீனாட்சி கல்யாணத்திற்கு அனுப்பி வைத்தார்களாம். 

அவ்வாறு திருப்பத்தூர் சிவ பெருமானிடமிருந்து பெற்ற சரக் கொன்றை பிரசாத மாலைகளை இத்தல நந்தி மூர்த்தி வெள்ளியங்கிரியிலிருந்து பெற்ற மூங்கில் குடலைகளில் வைத்து தோளில் சுமந்து சென்று சோமசுந்தரப் பெருமானிடம் அளித்தாராம். 

திருப்பத்தூரிலிருந்து மதுரை செல்லும் வரை எங்குமே தரையில் அந்த மலர்க் கூடைகளை வைத்து விடாமல் முழு மனதுடன் பஞ்சாட்சரத்தை ஓதியவாறே சென்ற நந்தீசனின் பக்திப் பெருக்கால் பெரிதும் மகிழ்ந்த சோமசுந்தர ஈசன் ஸ்ரீதளிநாதர் அளித்த சரக் கொன்றை மலர் ஒன்றில் இருந்த தேனை வழித்து நந்தி எம்பெருமான் நாக்கில் தடவி அவரை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தாராம். 

பஞ்சாட்சர சுவை பெரிதா இல்லை எம்பெருமான் அளித்த சிவ பிரசாத கொன்றை தேன் சுவை பெரிதா என்று தெரிந்து கொள்ள முடியாமல், சுவைத்தும் முடியாமல் தத்தளித்துப் போனாராம் திருப்பத்தூர் நந்தீஸ்வர மூர்த்தி. அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இன்றும் தன் நாக்கை நக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் நந்தி மூர்த்தியைத்தான் இங்கு நீங்கள் தரிசிக்கிறீர்கள். 

யாவர்க்கும் தேவர்க்கும் மூவர்க்கும், ஏன் அம்பிகை பிள்ளையாரப்பன், முருகப் பெருமானுக்குக் கூட கிடைக்காத அமிர்தத்தை சோமசுந்தர ஈசன் திருக்கரங்களாலேயே பெற்ற நந்தியின் பெருமையை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா? 
அதனால் திருப்பத்தூர் நந்தி மூர்த்தி ஸ்ரீஅமிர்தகடேச நந்தி மூர்த்தி என்று புகழப்படுகிறார். 

லாரி, சரக்கு வாகனங்கள் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், ஏற்றுமதி இறுக்குமதி துறையில் உள்ளவர்கள் ஸ்ரீஅமிர்தகடேச நந்தியை வழிபட்டு அற்புத பலன்களைப் பெறலாம். சுத்தமான தேன் அபிஷேகம், மஞ்சள் நிற பருத்தி ஆடைகள், மஞ்சள் நிற மலர் மாலைகள் இவருக்குப் ப்ரீதியானவை. 

60, 70, 80 வயது நிறைவை கொண்டாடும் தம்பதிகள் இந்த நந்தி மூர்த்தியை வணங்கி அபிஷேக ஆராதனைகளுடன் வழிபடுதலால் அற்புத பலன் பெறுவார்கள். அகால மரணங்களை, விபத்துக்களை தடுக்கும் ஆபத் பாந்தவ நந்தி மூர்த்தி இவரே !!


திருப்புனவாசல் நந்தீஸ்வர மூர்த்தி. 

இப்பூவுலகில் தோன்றிய முதல் நந்தீஸ்வர மூர்த்தி இவரே. 
சனிக் கிழமைகளில் இவரை வழிபட்டு முந்திரி, மிளகு சேர்ந்த வெண் பொங்கல் தானமாக அளித்தலால் வயதான காலத்தில் ஏற்படும் ஞாபக மறதி போன்ற துன்பங்கள் விலகும்.


~ ~ ~ ~ ~
குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய‌ ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் கூற்றுகள்
~ ~ ~ ~ ~

.....மிக்க நன்றி: "குழலுறவு தியாகி" வலைத்தளம்





1 comment: