Tuesday, January 7, 2014

நாலாம் பிறை


பொதுவாக, நாலாம் பிறை எனப்படும் சதுர்த்தி தினத்தன்று சந்திரனைப் பார்க்கலாகாது. அவ்வாறு பார்க்க நேர்ந்தால், கீழ்வரும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

"ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத:
 ஸுகுமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:"

இதன் பொருள்:

ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்க வேண்டியதாகிவிட்டது. அதன் பலனாக, சத்ராஜித் எனும் யதுகுலத்தைச் சேர்ந்த குறுநில மன்னனிடம் இருந்த 'சியமந்தக மணி' என்னும் தினந்தோறும் எட்டுப் பாரம் பொன் சுரக்கும் வல்லமை பெற்ற அதிர்ஷ்ட ரத்தினத்தை ஸ்ரீ கிருஷ்ணர் அபகரித்துக் கொண்டதாக அவருக்குப் பெரும் பழி ஏற்பட்டது.

உண்மையில் அந்த ரத்தினத்தை, சத்ராஜித், பிரசேனன் என்னும் பெயருடைய தன் தம்பியிடம் கொடுத்து வைத்திருந்தான். ஒரு நாள் பிரசேனன், காட்டிற்கு வேட்டையாடச் செல்லும் போது, ஒரு சிங்கம் அவனை கொன்று விட்டு அவனிடம் இருந்த மணியைக் கவர்ந்து கொண்டது. அந்த சிங்கத்தைக் கரடி அரசனான ஜாம்பவான், போரிட்டு வென்று சியமந்தக மணியைத் தனதாக்கிக் கொண்டார்.

இந்த ஜாம்பவான், ஸ்ரீ ராம அவதாரத்தின் போது, சீதாபிராட்டியைக் கண்டடைய உதவி செய்தவர். ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்திக்கு அவரது பலம் பற்றி நினைவூட்டியவர் இவரே. இவருக்கு, ஸ்ரீ ராமபிரானை ஆலிங்கனம் செய்ய வேண்டுமென்று ஆசை. ஆனால் தன் உடல் முழுதும் அடர்ந்திருக்கும் ரோமம் அவரைக் புண்ணாக்கக் கூடுமென்று அஞ்சி தன் ஆவலை வெளியிடவில்லை.

தன் தம்பியை, சியமந்தக மணிக்காக ஸ்ரீ கிருஷ்ணரே கொன்றிருக்கக் கூடுமென்ற அபவாதத்தை சத்ராஜித் பரப்பினார். ஸ்ரீ நாரத மஹரிஷி, ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து, சதுர்த்தி தினத்தன்று சந்திரனைப் பார்த்ததால் ஏற்பட்ட விளைவு இது என்பதை விளக்கி, விநாயகரை வழிபட, இந்த அபவாதம் நீங்கும் என்று எடுத்துரைத்தார். அதன் படி ஸ்ரீ கிருஷ்ணரும் விநாயகரை வழிபட்டார்.

பின் அந்த அபவாதத்தை நீக்குவதற்காக, இந்த சியமந்தக மணியைத் தேடி, ஸ்ரீ கிருஷ்ணர் காட்டிற்கு வந்தார். பிரசேனன், சிங்கம் ஆகியோர் இறந்து கிடப்பதை பார்த்துப் பின், கரடியின் காலடித் தடத்தை பின்பற்றி, கானகத்துள் சென்ற போது, ஒரு குகைக்குள் மட்டும் பெரும் ஒளி தென்பட, உள்ளே சென்றார். அது, ஜாம்பவானின் குகை. அவர் மகள் ஜாம்பவதி, தன் தம்பியின் தொட்டிலின் மேல் சியமந்தக மணியைக் கட்டித் தொங்கவிட்டு, தொட்டிலை ஆட்டியபடி மேற்கூறிய ஸ்லோகத்தைப் பாடிக் கொண்டிருந்தாள்.

"சிங்கம் பிரசேனனைக் கொன்று இந்த மணியை அடைந்தது, அந்தச் சிங்கத்தை உன் தந்தை ஜாம்பவான் கொன்று இந்த மணியை உன்னிடம் அளித்தார்' என்பது அவள் பாடிய இந்த ஸ்லோகத்தின் பொருள்.

இதற்குள் ஜாம்பவான், ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து விட்டதால் அவருடன் போருக்குச் சென்றார். இருபத்தேழு நாட்கள் போர் நடந்தது. மல்யுத்தத்தில் வல்ல ஜாம்பவான் ஒவ்வொரு முறையும் ஸ்ரீ கிருஷ்ணரை யுத்தத்துக்காகத் தழுவிய போது இனம் புரியாத மனமகிழ்வை அடைந்தார். அவரை அறியாமல், அவர் ராம நாமத்தை உச்சரிக்க, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் உருவில் காட்சி தந்தார். தன் பக்தனின் ஆவலை இவ்வாறு இருபத்தேழு முறை ஆலிங்கனம் செய்து பூர்த்தி செய்தார் பகவான். பின், ஜாம்பவான் ஜாம்பவதியை, ஸ்ரீ கிருஷ்ணருக்கு மணம் செய்து கொடுத்து, சியமந்தக மணியையும் அளித்தார்.

இந்த மணியை சத்ராஜித்திடம் சேர்ப்பித்துத் தன் அபவாதம் நீங்கப் பெற்றார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. சத்ராஜித் தன் மகளான சத்யபாமாவை தான் செய்த தவறுக்குப் பரிகாரமாக, ஸ்ரீ கிருஷ்ணருக்கு மணம் செய்து கொடுத்தான்.

இந்தப் புராணத்தைப் படிப்பவர்கள் யாவரும் அவர்களுக்கு நேர்ந்த வீண் பழி நீங்கப் பெறுவர்.

... Courtesy: பார்வதி இராமச்சந்திரன், பெங்களூரு

No comments:

Post a Comment