Sunday, January 12, 2014

கணபதி மூர்த்திகளின் உருவங்களும், எண்களும்

 
கணபதி மூர்த்திகளின் உருவங்களும், எண்களும்
சித்தர்கள் விளக்கிய முறை

இவ்வுலகில் நாம் காணும் அனைத்தும் பிரணவத்திலிருந்துதான் தோன்றியுள்ளது. இவ்வாறு பிரணவ ஒலியிலிருந்து தோன்றிய உலகைக் காண்பதற்கு மனித உடலிலுள்ள மூலாதாரக் கனலே வழி வகுக்கிறது.
இதனால்தான் 'மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை' எழுப்பும் கலையை ஔவை மூதாட்டியும் விளக்கி உள்ளார்.

மூலாதாரத்தில் எழும் ஒலியும், ஒளியும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தன்மையை உடையதாக இருந்தாலும் ஒருவர் பிறந்த தேதிக்கும் அவருடைய மூலாதாரத்தில் எழும் ஆதாரக் கனலுக்கும் தொடர்பு இருப்பதால் தங்கள் பிறந்த தேதிக்கு உரித்தான கணபதி மூர்த்தியை உபாசித்து வருவதால் எளிதில் இந்த மூலாதாரக் கனலின் தன்மையைப் புரிந்து ஆன்மீகப் பாதையில் விரைவாக முன்னேற முடியும்.

கணபதி மூர்த்திகளின் உருவங்களுக்கும் எண்களுக்கும் உள்ள தொடர்பை சித்தர்கள் விளக்கிய முறையில் வழிபடுவோர் எளிதில் எண் சக்திகளைப் பெற்றுப் பயனடைய முடியும். ஒரு எண்ணிற்கும் அதற்குரித்தான கணபதி மூர்த்திக்கும் உள்ள இணைப்பை இங்கு அளிக்கிறோம்.

ஒன்றாம் எண் கணபதி

கணபதி மூர்த்தியின் வாகனமான மூஷிகம் என்னும் மூஞ்சூறு கணபதியின் திருவடிகளைத் தரிசித்த வண்ணம் அதன் தலை குனிந்து பணிந்து நிற்கும். இத்தகைய கணபதி மூர்த்தி எண் ஒன்றுக்கு உரித்தானவர். இவரின் திருஉருவத்தை கோயில்களில் அல்லது ஓவியங்களில், வண்ணப் படங்களில் தரிசித்து குறைந்தது 10 நீர்க் கொழுக்கட்டைகளை தானமாக அளித்து வந்தால் எண் ஒன்றின் சக்திகளை விரைவாகப் பெறலாம்.

பணிவுடன் வணங்கி நிற்கும் இந்த வாகன மூர்த்தியின் வரலாறு அறிவதற்கு மிகவும் அற்புதமானது. நவகிரக மூர்த்திகளில் ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வர பகவானைப் போல தெய்வ அவதார மூர்த்திகளின் வாகனங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற மூர்த்திகளும் உண்டு. அவர்களுள் தலையாயவர் மூஷிகேஸ்வரர் என்னும் நாமத்துடன் பிள்ளையாரின் வாகனமாக அருள்புரியும் மூர்த்தியாவார். அவர் தன்னுடைய தவத்தின் நிறைவில் ஸ்ரீஅருணாசல மூர்த்தியிடமிருந்து ஈஸ்வர பட்டம் பெற்றவுடன் தன்னுடைய சற்குருவான பிள்ளையார் அப்பனுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் எழுந்தருளிய கோலமே அதாவது பிள்ளையாரின் திருப்பாதக் கமலங்களை வணங்கி நின்ற தோற்றத்தையே பிள்ளையார் மூர்த்தி எண்களில் முதலிடம் ஒன்றுக்கு உரிய கோலமாக ஏற்றுக் கொண்டார். பணிந்தவனே பக்தன் என்று பக்திக்கு ஆதாரமாக பணிவு இருக்க வேண்டும் என்ற காரணத்தால் முதல் எண்ணிற்குரிய கோலமாக இதைக் கணபதி மூர்த்தி ஏற்றுக் கொண்டார் எனலாம்.

கணபதி மூர்த்தியின் இந்தத் திருவிளையாடலின் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன? எல்லா ரகசியங்களுக்கும் மூலமாக இருப்பதே திருஅண்ணாமலை புனித பூமியாகும். தான் சுமக்கும் ஈசனான பிள்ளையாருக்குத் தகுதியான வாகனமாக அமையும் பொருட்டு ஈஸ்வர பட்டம் பெறுவதற்காக எம்பெருமானை வணங்கி அதற்குரித்தான உபாயத்தையும் மூஷிகம் கேட்டார். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த பிள்ளையார் மூர்த்தி திருஅண்ணாமலையைத் தொடர்ந்து வலம் வந்தாலே எல்லா அனுகிரகமும் கிடைத்து விடும் என்று பதிலுரைத்து அதற்கான ஒரு பூஜை முறையையும் தெரியப்படுத்தினார்.

திருஅண்ணாமலையை வலம் வரும்போது கிரிவலப் பாதையில் உடன் வரும் மற்ற ஜீவன்களின் திருப்பாதங்களை மட்டுமே நோக்கி வலம் வர வேண்டும். எக்காரணம் முன்னிட்டும் எந்த ஜீவனுடைய முழங்காலிற்கு மேல் மூஷிக வாகனத்தின் பார்வை பட்டு விடக் கூடாது என்பதே கணபதி மூர்த்தி மூஷிகருக்கு அளித்த பூஜை முறையாகும். கேட்பதற்கு மிகவும் எளிமையாக இருந்தாலும் சற்று யோசித்துப் பார்த்தால்தான் இந்த பூஜையை நிறைவேற்றுவது எவ்வளவு கடினம் என்பது புரிய வரும். திருஅண்ணாமலையை ஈ, எறும்பு, பறவைகள், விலங்குகள், பாம்புகள் என கோடி கோடி ஜீவ ராசிகள் வலம் வருகின்றன. எறும்பு, புழு, பூச்சி போன்ற ஜீவன்களை விட எலி வடிவில் இருக்கும் மூஷிக வாகனம் உருவத்தில் பெரிதாக இருப்பதால் இத்தகைய நுண்ணிய ஜீவ ராசிகளின் பாதங்களை மட்டும் பார்ப்பது என்பது எப்படி சாத்தியமாகும்?

அதற்காக ஓர் விந்தையான பூஜை முறையை தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டார் மூஷிகர். தரைக்கு மேல் கிரிவலம் மேற்கொண்டால்தானே மற்ற ஜீவ ராசிகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கிரிவலப் பாதையில் பூமிக்கு கீழ் மூன்று சாண் ஆழத்தில் துளையிட்டுக் கொண்டே அத்துளை வழியாகத் தன்னுடைய கிரிவலத்தை மேற்கொண்டார். தொடர்ந்து பல வருடங்கள் துளையிட்டுக் கொண்டே சென்றதால் மூஷிகருடைய பற்கள் நாளடைவில் பலம் இழக்கத் தொடங்கின. சிறிது காலம் சென்றவுடன் பற்கள் எல்லாம் கொட்டிப் போய் தன்னுடைய மூக்கு, கால்களால் மட்டுமே மண்ணைத் தோண்டித் தோண்டி கிரிவலத்தைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தார். யுகங்கள் கடந்தன. கொஞ்சம், கொஞ்சமாக கால்களும் தேய்ந்து போனதால் மேற்கொண்டு மண்ணைத் தோண்ட முடியாமல் எங்கெல்லாம் சிறிய பொந்துகள் தென்படுகின்றனவோ அதன் வழியாக உருண்டு உருண்டு கிரிவலத்தைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தார் மூஷிகர்.

ஒரு யுகத்தில் ஆவணி மாத சுக்ல பட்ச சதுர்த்தி திதி அன்று ஏக முக தரிசனப் பகுதியில் அருணாசல ஈசன் மூஷிகருக்கு காட்சி அளித்து, மூஷிகேஸ்வரா என்று தன் திருவாக்கால் அழைத்தார். அத்தருணத்திலும் மூஷிகேசருக்கு ஒரு சோதனை காத்திருந்தது. தன்னை அழைத்த குரல் எல்லாம் வல்ல எம்பெருமானின் குரலோசை என்று உணர்ந்தவுடன் உள்ளம் எல்லையில்லா ஆனந்தப் பரவசத்தில் திளைத்து தன்னையும் அறியாமால் எம்பெருமானின் திருமுகத்தை நிமிர்ந்து பார்க்கலாம் என்று சற்றே நினைத்தார். அப்போது தன் குருநாதரான கணபதி மூர்த்தியின் அருளாணை ஞாபகத்திற்கு வரவே தன் தவறை உணர்ந்து தன்னிலை பெற்றார். ஈசனின் திருமுகத்தை நோக்காமலே அவருடைய திருப்பாதங்களை மட்டும் வணங்கி தன்னுடைய பூஜையை நிறைவேற்றினார். எந்தச் சூழ்நிலையிலும் கடமை மறவாத, குரு வாக்கை உயிரினும் மேலாகப் போற்றி மதித்த மூஷிகேசரின் தவத்தை மெச்சிய ஈசன் அதிஅற்புதமான தெய்வீக வரங்களை எல்லாம் அவருக்கு வழங்கி மறைந்தார். மூஷிகேசருக்கு அருணாசல ஈசன் அருளாசி வழங்கிய ஏகலிங்க முக தரிசனப் பகுதி தற்போது ரமணாஸ்ரமத்தை அடுத்துள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு எண்ணிற்கும் உரிய கணபதி கோலத்தின் பின்னால் பற்பல காரணங்கள் உண்டு. இந்த காரணங்கள் என்னவென்பதை நீங்கள் ஆத்ம விசாரம் செய்து பாருங்கள். உரிய காலத்தில் மற்ற எண்களின் கோலத்திற்குரிய மகத்துவம் அளிக்கப்படும்

இரண்டாம் எண் கணபதி

இரண்டு கைகளாலும் லட்டைப் பிடித்துக் கொண்டு இரண்டு கால்களால் நின்று கொண்டிருக்கும் மூஷிக வாகனத்தை உடைய கணபதி மூர்த்தி எண் இரண்டுக்கு உரியவர் ஆவார். இத்தகைய மூர்த்திகளை வழிபட்டு பூரண கொழுக்கட்டைகளை 11, 20 என்ற எண்ணிக்கையில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்து சந்தியா நேரங்களில் தானம் செய்து வந்தால் எண் இரண்டின் சக்திகள் வாழ்விற்கு பல நன்மைகளைச் செய்யும்.

மூன்றாம் எண் கணபதி

கணபதி மூர்த்தியின் வாகனமான மூஷிகம் வெண்மையாக இருக்க வேண்டும். வெண்ணிற வாகனம் பெற்ற கணபதி மூர்த்தி எண் மூன்றுக்கு உரிய மூர்த்தியாகத் திகழ்வதால் அவரவர் கை கொள்ளும் அளவிற்கு மூன்று கைப்பிடி வேகவைத்த நிலக்கடலையை சுவாமிக்கு நைவேத்யம் செய்து மாணவர்களுக்குத் தானமாக அளித்தலால் எண் மூன்றின் சுப சக்திகளை எளிதில் பெறலாம்.

நான்காம் எண் கணபதி

இரண்டு கைகளிலும் தாமரை மலர்களை ஏந்திய கோலத்தில் திகழும் கணபதி மூர்த்தி எண் நான்கிற்கு உரிய மூர்த்தியாவார். மண் கலயத்தில் கொள்ளை வேக வைத்து சர்க்கரை கலந்து சுவாமிக்கு நைவேத்யம் செய்து கழுதைகளுக்கு தானம் அளித்தலால் எந்த வேலையிலும் நிரந்தரமாகப் பணி செய்ய முடியாமல் அலை பாயும் மனதுடன் இருப்பவர்களின் மன வேதனை தணியும். கடுமையாக வேலை செய்தும் அதற்குரிய கூலியோ, சன்மானமோ பெற முடியாக நிலை மாறும்.

ஐந்தாம் எண் கணபதி

பாசம், அங்குசத்தை கைகளில் ஏந்தி அருள் புரியும் கணபதி மூர்த்தி எண் ஐந்திற்குரிய கணபதி மூர்த்தி ஆவார். இவரை வணங்கி உருண்டை வடிவில் இலவம் பஞ்சு வைத்துத் தைத்த திண்டு தலையணைகளை நீண்ட நாள் படுத்த படுக்கையாக கிடக்கும் நோயாளிகளுக்கு, வயதானவர்களுக்குத் தானமாக அளித்தலால் வயதான காலத்தில் மற்றவர்கள் உதவியை எதிர்பார்த்து வாழும் நிலை ஏற்படாமல் இறைவன் காத்தருள்வார்.

ஆறாம் எண் கணபதி

கணபதி மூர்த்தி தன்னுடைய வலது காலை மடக்கி இடது காலைத் தொங்க விட்ட நிலையில் அருள்புரியும் கோலம் எண் ஆறுக்கு உரியதாகும். சுவாமியின் துதிக்கை வலஞ்சுழியாக இருத்தல் வேண்டும். இம்மூர்த்திகளை வணங்கி தேங்காய் பர்பி நைவேத்யம் செய்து தானம் அளித்தலால் நேரம் காலம் பார்க்காது கொடுத்த கடன்கள் உரிய காலத்தில் வசூலாகும். இது ஒருமுறையே கிட்டும் பரிகாரம் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஏழாம் எண் கணபதி

கணபதி மூர்த்தியின் துதிக்கை இடஞ்சுழியாக அமைந்து, மூர்த்தியானவர் தன்னுடைய இடது காலை மடக்கி, வலது கால் தொங்கிய நிலையில் அருள் வழங்கும் கோலம் எண் ஏழிற்கு உரியதாகும். இம்மூர்த்தியின் தரிசனமும், ஏழை இசைக் கலைஞர்களுக்கு நரம்பு இசைக் கருவிகள் தானமும் சொந்த வீடுகள் வாங்க விரும்புவோர்க்கு நலம் பயக்கும். சம்பூர்ண ராகங்களில் அமைந்த தியாகராஜ கீர்த்தனைகளை இறைவன் முன் பாடி வருதலால் வாஸ்து தோஷங்கள் விலகும்.

எட்டாம் எண் கணபதி

துதிக்கை மேலே தூக்கியவாறு ஆசீர்வதிக்கும் நிலையில் உள்ள கணபதி மூர்த்தி எண் எட்டுக்குரியவர் ஆவார். இவரை வணங்கி எள் கலந்த முறுக்கு, சீடைகளைத் தானம் அளித்தலால் சனி பகவான் பீடிப்பால் வரும் துன்பங்கள் ஓரளவு குறையும். எல்லா தெய்வ மூர்த்திகளுமே சனி பகவான் பீடிப்பால் துன்பம் அடைந்து விதியின் வலிமையை மக்களுக்கு உணர்த்தியுள்ளார்கள் அல்லவா? இந்த விதிக்கு விலக்காக அமைந்தவர்கள் பிள்ளையார், ஆஞ்சநேயர் மூர்த்திகள் மட்டுமே. இவ்வாறு பிள்ளையாரைப் பீடிக்க முடியாமல் சனி பகவான் தன்னுடைய பணியில் ஏற்பட்ட குழப்பத்தை நினைத்து மனம் வருந்தி நின்றபோது விநாயகப் பெருமான் தன்னுடைய துதிக்கையை துக்கி அவரை ஆசீர்வதித்து ஆறுதல் கூறினார். அன்று முதல் பிள்ளையாரின் இந்த தரிசனம் சனி பகவானால் பூஜிக்கப்பட்டு மக்களின் துயர் நீக்க வந்த கணபதி பிரசாதமாக அளிக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் எண் கணபதி

பத்மாசன கோலத்தில் அமர்ந்து துதிக்கையில் கும்பம் ஏந்திய கணபதி மூர்த்தி எண் ஒன்பதிற்குரிய இறை மூர்த்தியாவார். மங்கள சக்திகள் பூரணமாய்ப் பொலியும் இந்த இறைக் கோலத்தை தரிசனம் செய்து ஒன்பது சுற்றுகள் உடைய கை முறுக்கு தானம் செய்து வருதலால் பெண்களின் திருமணத் தடங்கல்கள் நீங்கி விரைவில் மண வாழ்வு மலரும். அபாய நிலையில் உள்ள நோயாளிகள் நலம் பெறுவர்.

குசா கணபதி

குசா எண்ணுக்கு உரித்தான மூர்த்தி குசா வாகன மூர்த்தி. பறவை இனத்தில் மயில் குசா சக்திகளைப் பெற்றுள்ளதால் இரண்டு மயில்களை வாகனமாக உடைய ஸ்ரீவைபவ கணபதி மூர்த்தி குசா எண்ணுக்கு உரிய மூர்த்தியாக போற்றப்படுகிறார்.

... சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள்

No comments:

Post a Comment