தைலக் கிணறு ...
தைலக் கிணறு இருக்கக் கூடிய இடம் ஒரு மர்மமான பூமி. எவருடைய பார்வைக்கும் அந்தப் பிரதேசம் தட்டுப்படவே படாது. இரும்பைத் தங்கமாக்க உதவும் மூலிகைகளும், ஏராளமான தங்கப் புதையல்களும் அடங்கிய பூமி. விலை மதிப்பில்லாத இந்த பொக்கிஷங்களை பல நூற்றாண்டுகளாக காவல் காத்து வருகிறார் பிலாவடி கருப்பர். கற்சிலை வடிவில் இந்த சதுரகிரி மலைக்கே காவல் தெய்வமாக வீற்றிருந்து, தனது கண்காணிப்பின் மூலம் இந்தப் பணியைத் அவர் தொடர்கிறார். இன்றளவும் பாதுகாக்கப்படுவதாகச் சொல்லப் படுகிறது.
சதுரகிரி யாத்திரையின் இறுதிக் கட்டமாக இருப்பது இந்த பிலாவடிக் கருப்பர் குடி கொண்டுள்ள ரம்மியமான பிரதேசம். ஒரு மண்டபம் போல் அமைந்துள்ளது பிலாவடி கருப்பர் சந்நிதி. உள்ளே பழைய கருப்பர் இருக்கிறார்; புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கம்பீரமான கருப்பரும் இருக்கிறார். மலைக்கு மேலே செல்லும்போதும், கீழே இறங்கும்போதும் இவரிடம் உத்தரவு வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும். ஒரு கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து மனமார வழிபட்டாலே போதும், கருப்பரின் அருளாசி கிடைத்து விடும்.
இந்த சந்நிதிக்கு அருகில்தான் சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் ஸ்வாமி ஆலயங்கள்! பிலாவடிக் கருப்பர் ஆலயத்தில் இருந்து சிறிது தொலைவு நடைபயணத்துக்குப் பின் வலப் பக்கம் சென்றால், சுந்தர மகாலிங்கம்; இடப் பக்கம் சந்தன மகாலிங்கம்.
பெரிதான பலா மரத்தின் ஒரே ஒரு காய் மட்டும் சந்நிதியின் உள்ளே கருப்பரின் அருகே காய்த்துத் தொங்குகிறது. ‘‘எப்போதும் கருப்பருக்குப் பக்கத்தில் சுமாரான சைஸில் ஒரு பலாக்காய் காய்த்துத் தொங்கிக் கொண்டிருக்கும். இது முற்றி விழுந்து விட்டால் அடுத்து அதே இடத்தில் இன்னொரு காய் காய்க்கும். இந்த அதிசயம் பல வருடங்களாக நடந்து கொண்டே வருகிறது!’’ என்றார் கருப்பருக்கு பூஜை செய்து கொண்டிருந்த பூசாரி.
பொக்கிஷங்களும் சித்த ரகசியங்களும் அடங்கிய தைலக் கிணறு பிலாவடிக் கருப்பர் சந்நிதியின் அருகே உள்ளது. எவருடைய பார்வைக்கும் தட்டுப்படாது அந்தத் தைலக் கிணறு.
தைலக் கிணறு உருவான வரலாறு .....
ஆதி காலத்தில் வாலைபுரம் எனப்படும் வளமான ஒரு கிராமத்தில் வாமதேவன் என்ற வியாபாரி வசித்து வந்தான். இறை பக்தி அதிகம் கொண்டவன். வியாபாரத்தின் மூலம் தான் சேர்த்த பொருளை வைத்து, தேர்ந்த ஸ்தபதிகளை வரவழைத்து கிராமத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டும் பணியை ஒரு சுப தினத்தில் துவக்கினான். வேலைகள் துரித கதியில் நடந்தது கண்டு ஆனந்தப்பட்டான் வாமதேவன்.
ஆனால், ஒரு கட்டத்தில் பணிகள் ஸ்தம்பித்து நின்றன. காரணம், வாமதேவனிடம் இருந்த பொருள் மொத்தமும் அதுவரை நடந்த கட்டு மானப் பணிகளுக்காகச் செலவாகிப் போயிருந்ததுதான். இதற்கு மேல் கோயில் வேலைகளைத் தொடர வேண்டுமானால், பொருள் தேவை என்ற நிலைமை.
வாமதேவன் கவலை அடைந்தான். தனது கிராமத்துக்கு அருகில் இருக்கும் சில மன்னர்களிடம் போய், தான் கட்டி வரும் கோயில் பற்றிச் சொல்லி, தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளப் பொருளுதவி கேட்டான். ‘தனி ஒருவனை நம்பிப் பொருள் உதவுவதா?’ என்று வாமதேவனின் நாணயத்தின் மேல் சந்தேகப்பட்ட மன்னர்கள் பலரும் அவனை வெறுங் கையோடு திருப்பி அனுப்பினர்.
ஒரு நாள் அவன் சோகத்துடன் வந்து கொண்டிருந்தபோது எதிர்ப்பட்டார் ஒரு துறவி. பக்தி மணம் கமழும் அந்தத் துறவியின் தேஜஸைக் கண்டு மெய்சிலிர்த்து, அவர் பாதம் பணிந்து நமஸ்கரித்து எழுந்து, தனது குறைகள் எல்லாவற்றையும் விலாவாரியாகச் சொன்னான்.
‘‘கவலைப்படாதே வாமதேவா. உனது எண்ணம் நிறைவேற வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது. ஆத்மார்த்தமான பக்தியுடன் நீ கோயில் கட்டி வருவது உண்மையானால், அந்தப் பணி செவ்வனே முடிய ஒரே ஒரு வழி உண்டு. உபாயத்தைக் கேள். சதுரகிரியை நோக்கி உனது பயணத்தை உடனே துவக்கு. அங்கே காலாங்கி முனிவர் என்ற சித்தர் இருக்கிறார். மிகப் பெரும் தவசீலர். அங்கே அவரை வணங்கி, உனது விருப்பத்தைச் சொல். எல்லாம் சுபமாக நிறைவேறும்!’’ என்றார்.
தொடர்ந்து கோயிலைக் கட்டி முடிக்க புதிய வழி தெரிந்து விட்டதில் பெரிதும் பூரிப்படைந்த வாமதேவன், துறவியின் ஆசிர்வாதங்களோடு, சதுரகிரியை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கினான். காடு, மலை எல்லாம் கடந்து சித்த புருஷர்கள் வாழும் உயர்ந்த மலையாம் சதுரகிரியை அடைந்தான். அங்கே காலாங்கி வனத்தில் ஆசிரமம் அமைத்துத் தங்கி இருந்த காலாங்கிநாதரைச் சந்தித்தான். அவரைப் பணிந்து வணங்கினான். புன்னகையுடன் ஆசீர்வதித்தார் காலாங்கிநாதர். திருமூலரின் மாணாக்கராக இருந்த சித்த புருஷர் இவர்!
நெடுந்தொலைவில் இருந்து வந்தவன் என்பதால் வாமதேவனிடம் ஆற அமர அனைத்தையும் விசாரித்தார் காலாங்கிநாதர். கிராமத்தில் கோயில் அமைக்கத் தொடங்கியதில் இருந்து தற்போதைய நிலை வரை எல்லாவற்றையும் விரிவாகச் சொன்னான் வாமதேவன்.
‘இவனுக்கு உதவி செய்யலாம். தப்பில்லை!’ என்று தீர்மானித்த காலாங்கிநாதர் ஒரு கணம் சிந்தித்தார். ‘வந்திருக்கும் இவன் நிஜமாகவே நல்லவன்தானா? ஆலயத் திருப்பணி அது இது என்று சொல்லி சிலர் பணம் வாங்கி, தங்களது சுய தேவைகளுக்குப் பயன்படுத்தி வரும் காலத்தில், இவனுக்கு நாம் பொருளுதவி செய்ய நினைப்பது நியாயமா? இவனும் ஒருவேளை தவறான ஆசாமியாக இருந்து விட்டால்?’ என்று சிந்தித்தார் காலாங்கிநாதர்.
தவிட்டையும் தங்கமாக மாற்றும் வல்லமை கொண்ட அந்த சித்த புருஷர், தயக்கத்துடன் நிற்பது வாமதேவனுக்குக் கலக்கத்தை உண்டு பண்ணியது! அனுகூலமான பதில் எதுவும் அவரிடம் இருந்து கிடைக்கவில்லை. எனினும், தன் முயற்சியில் இருந்து சற்றும் பின்வாங்காத வாமதேவன், ‘என்றைக்கேனும் ஒரு நாள் இந்த முனிவர் நிச்சயம் உதவுவார்!’ என்று மனப்பூர்வமாக நம்பி, காலாங்கிநாதரின் ஆசிரமத்திலேயே தங்கி, அவருக்குப் பணிவிடைகள் செய்ய ஆரம்பித்தான்.
நாட்கள் ஓடின. தான் எதற்காக சதுரகிரிக்கு வந்து, காலாங்கிநாதருக்கு உதவிக் கொண்டிருக்கிறோம் என்பதையே ஒரு கட்டத்தில் மறந்தான் வாமதேவன். அந்த அளவுக்கு மிகுந்த சிரத்தையாக காலாங்கிநாதர் இட்ட பணிகளை சிரமேற்கொண்டு செயல்பட்டான்.
எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாமல் தனக்கு உதவுவதையே ஒரு பாக்கியமாக எண்ணி வாழ்ந்து வந்த வாமதேவனின் செயல், காலாங்கிநாதருக்கு இரக்கத்தை வரவழைத்தது. ‘கோயில் கட்டுவதற்கு உதவி கேட்டு வந்தவனுக்கு உதவ மறுத்து விட்டோம். இது போன்ற சந்தப்பங்களில் சாதாரண மனிதன் என்றால் என்ன பண்ணுவான்? சட்டென்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு ‘நீ இல்லாவிட்டால் என்ன... அடுத்த ஆளைப் பார்க் கிறேன்!’ என்று உடனே புறப்பட்டு விடுவான். ஆனால், இவன் அசையவில்லையே... எனக்கு உதவுவதையே சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு தங்கி விட்டானே... இவன் எந்த உதவியைக் கேட்டு இங்கு வந்தானோ, அந்த உதவியை இப்போது செய்வது அவசியம்!’ என்று முடிவெடுத்தார் காலாங்கிநாதர்.
ஒரு நாள் வாமதேவனை அருகில் அழைத்த காலாங்கிநாதர், சிவன் கோயில் கட்டுவதற்கு, தான் உதவத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்தார். வாமதேவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!
காலாங்கிநாதர் உரோம வேங்கை, உதிரவேங்கை, ஜோதி விருட்சம், கருநெல்லி போன்ற மூலிகைகளாலும், 32 வகையான பாஷாணச் சரக்குகளாலும், இன்னும் சில பொருட்களாலும் தைலம் ஒன்று தயாரித்தார். இந்தத் தைலத்தில் எந்த ஓர் உலோகத்தையும் - அது இரும்பாக இருந்தாலும் சரி, செம்பாக இருந்தாலும் சரி - உள்ளே முக்கி நனைத்து எடுத்தால் சொக்கத் தங்கமாக மாறிவிடும். அதில் சாதாரண சில உலோகங்களை நனைத்து, சொக்கத் தங்கக் கட்டிகளாக மாற்றி வாமதேவனிடம் கொடுத்தார்.
‘‘இந்தத் தங்கக் கட்டிகளை விற்றுக் காசாக்கி, கோயில் திருப்பணிகளைச் சிறப்பாக முடி. இறைவனின் ஆசீர்வாதம் உனக்கு உண்டு!’’ என்று ஆசி கூறி அவனை அனுப்பினார். மனம் நிறைய மகிழ்ச்சியுடன் வாமதேவன் புறப்பட்டுப் போய், கோயில் கட்டும் மீண்டும் பணியை துவங்கினான்.
வாமதேவனின் தேவைக்குக் கொடுத்தது போக, தைலம் அவரிடம் மீதம் இருந்தது. ‘இத்தகைய தைலத்தைக் கையில் வைத்துக் கொண்டிருப்பது ஆபத்து. எந்த ஒரு துஷ்டனிடமாவது இது கிடைத்து விட்டால், பேராசைக்காகத் தங்கம் செய்ய ஆரம்பித்து விடுவான். அது, சில துர்ச் சம்பவங்களுக்குக் காரணமாகி விடும். எனவே, இதை ஓரிடத்தில் பத்திரப்படுத்திக் காவலுக்கு ஆட்களை நியமிக்க வேண்டும்!’என்று முடிவெடுத்தார் காலாங்கிநாதர்.
இதற்காகப் பெரிய கிணறு ஒன்றை வெட்டி, எஞ்சி இருந்த தைலத்தை அதில் கொட்டினார்; வாம தேவனின் தேவைக்குக் கொடுத்தது போக, எஞ்சி இருந்த தங்கக் கட்டிகளையும் அதில் போட்டார். கிணற்றை பத்திரமாக மூடினார். இந்த பொக்கிஷத்தைக் காவல் காக்கவும், சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் ஆகிய சந்நிதிகளைக் கவனித்து வருவதற்காகவும் மந்திரங்கள் ஜபித்து திசைக்கு ஒரு காவல் தெய்வத்தை நியமித்தார். அப்படி நியமிக்கப்பட்ட தெய்வங்களில் ஒன்றுதான் பிலாவடி கருப்பர்.
காலாங்கிநாதர் உருவாக்கிய பிரம்ம தீர்த்தம், பிலாவடிக் கருப்பர் சந்நிதிக்கு முன்னால் ஓடுகிறது. மழைக் காலத்தில் இந்த பிரம்ம தீர்த்தத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடும். இதில் மூழ்கி எழுந்து பிலாவடி கருப்பரை வணங்கினால், எத்தகைய பாவமும் அகன்று, புண்ணிய வாழ்வு கிடைக்கும் என்று புராணம் சொல்கிறது.
தலைமுறைகளையும் தாண்டி தைலக் கிணறு இன்றைக்கும் ஒரு மர்மப் பிரதேசம்தான்!
தங்கம் தயாரிக்கத் தேவையான சில மூலிகைச் செடிகள் சதுரகிரி மலையில் இன்றும் இருக்கின்றன.
சமீப காலத்தில் ஒரு குடும்பத்தினர் சதுரகிரிக்கு வந்து தரிசித்து விட்டுத் திரும்ப வந்துகொண்டு இருக்கும்போது, அவர்களில் ஒரு இளம் பெண் இயற்கை உபாதைக்கு ஒதுங்கி திரும்பிய போது அவளது கால்களைப் பார்த்த பெற்றோருக்கு பிரமிப்பு.
அவள் கால்களில் இருந்த ஒரு வெள்ளிக் கொலுசு, தங்கக் கொலுசாக மாறி இருந்தது. அந்தப் பெண்ணுக்கும் வியப்பு. இது எப்படி மாறியது என்று அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை. பிறகுதான் அவர்களுக்கு விவரம் தெரிந்தது, 'தங்கம் தயாரிக்கப் பயன்படும் ஒரு வித மூலிகைச் செடி அவள் கால்களில் படவே, அது தங்கமாக மாறியது' என்று.
அதன் பிறகு, இந்தச் செடியை அதே இடத்தில் தேடிச் சென்ற சில பேராசைக்காரர்களுக்கு அங்கே இருந்த வேறு சில செடிகள் பட்டு கண் எரிச்சலும், உடல் அரிப்பும் ஏற்பட்டதுதான் மிச்சம்.
எம் நாயகனே, எம் பெருமானே, பேரொளியே, ஈசனே, உள்ளும் புறமும் நீ, உணர்வும் நீ, உடலும் நீ, உள்ஒளியும் நீ, எல்லாம் நினது திருவருளே.
.....
வலைத்தளம்/வலைப்பூ பதிவுகள் படித்து அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.
வலைத்தளம்/வலைப்பூ பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்தும் நான் படித்து திரட்டிய தகவல்கள். என்னுடைய ஆக்கங்கள் இல்லை.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள் (GOOGLE IMAGES)
.....
No comments:
Post a Comment