Wednesday, October 24, 2018

சதுரகிரி அதிசயங்களும் அற்புதங்களும் ... (3)


காஞ்சி மட்டுமல்ல... சிருங்கேரிக்கும் சதுரகிரி சுந்தர மகாலிங்கத்துக்கும் தொடர்பு உண்டு. 






சுமார் 45 வருடங்களுக்கு முன், வத்திராயிருப்பில் ஹரிஹர ஐயர் என்கிற வக்கீல் வசித்து வந்தார். மதுரை நீதிமன்றத்தில் 'ப்ராக்டீஸ்' செய்து வந்தார், சிருங்கேரி மடத்தின் பக்தர். அப்போது பீடாதிபதியாக இருந்த சிருங்கேரி மடத்து ஸ்வாமிகளை பாத பூஜை செய்து வழிபடுவதற்காக தன் இல்லத்துக்கு அழைத்திருந்தார் ஹரிஹரன்.


உன்னத பக்தரான ஹரிஹரனின் அழைப்பை ஏற்றுத் தன் சீடர்களுடன் வத்திராயிருப்பு வந்தார் சிருங்கேரி ஸ்வாமிகள். ஹரிஹரனின் இல்லத்திலேயே தங்கினார் ஸ்வாமிகள்.

பாத பூஜை வழிபாடு, ஆசி வழங்குதல் என்று அந்த முதல் தினம் மிகுந்த கோலாகலமாக இருந்தது. ஸ்வாமிகள் வரவை அறிந்து, அக்கம்பக்கத்து ஊர்க்காரர்கள் அனைவரும் பெருமளவில் திரண்டனர்.


பக்தர்களின் அன்பான கோரிக்கையை ஏற்று ஸ்வாமிகள் அங்கேயே ஓரிரு நாட்கள் தங்கிச் செல்வது என்றும் முடிவாயிற்று. அதற்குரிய ஏற்பாடுகள் துரித கதியில் நடந்தன.


அன்று நள்ளிரவு. அசதியின் காரணமாக சீடர்கள் உட்பட ஏனையோர் அனைவரும் நன்றாக உறங்கி விட்டனர். தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஓர் அறையில் ஸ்வாமிகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று தன்னை உலுக்கிப் போட்ட மாதிரி ஓர் உணர்வு ஏற்பட, திடுக்கிட்டு மெள்ள எழுந்தார் ஸ்வாமிகள். நடந்து வெளியே வந்தார்.


ஊரே உறங்கிக் கிடந்தது. சிற்சில இடங்களில் ஓரிரு தெருவிளக்குகளைத் தவிர, எங்கும் கும்மிருட்டு. சற்றுத் தொலைவில் சதுரகிரி அமைந்துள்ள பகுதியை இருட்டில் இன்னதென்று புரியாமல் ஆழ்ந்து நோக்கினார்.


இதை அடுத்து நிகழ்ந்த செயல்களை இறைவனின் திருவிளையாடல் என்றேதான் சொல்ல வேண்டும். அவருடைய மனதுக்குள் சிற்சில காட்சிகள் ஓடின. அந்த வேளையில் மலையின் உச்சியில் இருந்து, ஜோதி சொரூபமாக பீடாதிபதிக்கு தரிசனம் தந்தார் மகாலிங்க ஸ்வாமி. கண்களை மூடி பரவசத்துடன் தரிசித்து, இன்பமுற்றார். திரும்பி உள்ளே நடந்தார்.


இதற்குள், ஸ்வாமிகள் நள்ளிரவில் எழுந்து எங்கோ வெளியே போன தகவல் அறிந்து அவரது சிஷ்யர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் உட்பட அனைவரும் பதற்றத்துடன் எழுந்து திரண்டு விட்டனர்.


அருகில் இருந்த ஊர்க்காரர்களிடம் ஸ்வாமிகள் அன்போடு கேட்டார் 'மலைக்கு மேலே ஏதோ ஒரு சேத்ரம் இருக்கிற மாதிரி தெரியறதே... என்ன சேத்ரம்?'


மலைக்கு மேலே மகாலிங்கம் குடி கொண்டிருக்கிறார் என்பதை அப்போது ஸ்வாமிகளிடம் சொன்னால், 'புறப்படுங்கள்' என்று தங்களையும் கூட்டிக் கொண்டு அந்த நள்ளிரவில் கிளம்பி விடுவார் என்று அலைச்சலுக்கு பயந்த ஊர்க்காரர்களும், சிருங்கேரி மடத்து முக்கியஸ்தர்களும் 'வேற ஒண்ணுமில்ல ஸ்வாமி... மகாலிங்கம்னு ஒரு சிவன் இருக்கார். அங்கெல்லாம் ஆடு, கோழி வெட்டுவாங்க... பலி பூஜை நடக்கும். தங்களைப் போன்ற ஆச்சாரமான ஸ்வாமிகளெல்லாம் அங்கே போகக் கூடாது. உள்ளே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் ஸ்வாமி' என்று தடுத்து, அவரை வணங்கினர்.


சதுரகிரியின் மேலே கண்களால் காட்சி கண்டவர் ஆயிற்றே அந்த சிருங்கேரி மகான்! இறைவனே தரிசனம் தந்து, குறிப்பு கொடுத்த பின்னும் அமைதியாக இருப்பாரா? கூடி இருந்த பக்தர்களை ஆழ்ந்து நோக்கினார். 'நான் அங்கே போக வேண்டும். உடனே ஏற்பாடு செய்யுங்கள்!' என்றார் திடமாக. இதை அடுத்து ஏற்பாடுகள் மளமளவென்று துவங்கின.


விடிந்தும் விடியாத அந்த அதிகாலைப் பொழுதில், சிருங்கேரி பீடாதிபதிகளின் சதுரகிரி யாத்திரை துவங்கியது. வத்திராயிருப்பில் இருந்து தனது காரில் பயணித்து, தாணிப்பாறையை அடைந்தார்.


பிறகு, மலைக்கு மேல் நடைபயணம் ஆரம்பமானது. ஸ்வாமிகளுக்குத் தேவையான பூஜைப் பொருட்கள் உட்பட அனைத்தையும் சுமந்தபடி சீடர்கள் பின்தொடர்ந்தனர். மலையின் மேலே ஸ்வாமிகள் படுவிரைவாக நடந்து செல்வதைப் பார்த்து உடன் வந்த மலைவாசிகள் வியந்தனர். அவரின் வேகத்துக்கு சீடர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. இறைவனின் சூட்சுமமான அழைப்பை ஏற்று, சதுரகிரியை நோக்கி தன் யாத்திரையைத் தொடங்கி இருந்தார் சிருங்கேரி ஸ்வாமிகள்.


சிருங்கேரி ஸ்வாமிகள் விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார். சதுரகிரியைப் பற்றி எதுவுமே கேள்விப்பட்டிராத அவருக்கு, நள்ளிரவு வேளையில் ஜோதி சொரூபமாக மகாலிங்கம் தரிசனம் தந்து அவரை ஆட்கொண்டான். அருளாசி புரிந்து விட்டான். தவிர, தன் சந்நிதி அருகே ஸ்வாமிகளையும் அவரது சிஷ்யகோடிகளையும் வரவழைத்தும் விட்டான். 


மலைக்கு மேலே சிருங்கேரி ஸ்வாமிகளின் யாத்திரை துவங்கிவிட்டது. ஸ்வாமிகளின் நடைக்கு ஈடு கொடுக்க முடியாத சீடர்களும் மலைவாசிகளும் அவர் பின்னே மிகுந்த சிரமப்பட்டு நடையைத் தொடர்ந்தனர். காணக் கிடைக்காத இறை காட்சியை, முந்தின தினம் நள்ளிரவில் கண்ட ஸ்வாமிகளுக்கு இறைவனே ஒரு தெம்பைக் கொடுத்து, நடக்க வைத்து விட்டான். 


வத்திராயிருப்பைச் சேர்ந்த ஊர்ப் பிரமுகர்கள் சிலரும் சிருங்கேரி ஸ்வாமிகளின் சதுரகிரி யாத்திரை குறித்த தகவல் கேள்விப்பட்டு, அவசரம் அவசரமாகக் கிளம்பி வந்து, ஸ்வாமிகளின் பின்னே மிகுந்த பவ்யத்துடன் நடக்க ஆரம்பித்தனர்.


கரடுமுரடான பாறைகள் நிறைந்த பாதையில் பயணித்த பக்தர்களின் நாவில் இருந்து 'ஓம் நம சிவாய' எனும் நாம கோஷம் கிளம்பி, மலைகளில் பட்டு எதிரொலித்தது. இரைச்சலோடு கொட்டிக் கொண்டிருக்கும் அருவிகள், அபார வேகத்துடன் பாயும் ஆறுகள், துள்ளிக் குதித்தோடும் மான்கள், பறவைகளின் ராகங்கள், மிருகங்கள் எழுப்பும் விதம்விதமான சத்தங்கள்... இவற்றை எல்லாம் கடந்து பகல் பதினோரு மணி வாக்கில், சதுரகிரியின் உச்சியை அடைந்தார் சிருங்கேரி ஸ்வாமிகள். அவர் முகத்தில் கொஞ்சம் கூட அலுப்போ, சலிப்போ தெரியவில்லை. புறப்படும்போது அவரது முகம் எப்படிப் பிரகாசமாக இருந்ததோ, அதே பிரகாசம் இப்போதும் அவர் முகத்தில் இருந்தது.


வெம்மையைக் கக்காத வெயில். காற்றில் குளுமையைக் கலந்து வீசும் மரங்கள். ஆள் அரவமே இல்லாத அற்புதமான மலைப் பகுதி. மனிதர்களின் வாழ்க்கையில் மாறுபாடுகளை ஏற்படுத்தும் மூலிகைகளின் சுகந்தமான வாசம்... இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையைப் பார்த்ததும் அதில் லயிக்க ஆரம்பித்தார் சிருங்கேரி ஸ்வாமிகள். இறைவன், தான் குடிகொள்ள தேர்ந்தெடுத்திருக்கும் இந்த அதிசய மலையையும் அதன் அழகையும் கண்டு வியந்தார். சதுரகிரியின் புராணமும், மகாலிங்கம் அங்கு வந்து குடி கொண்ட கதையும் தகுந்த ஆசாமிகளால் ஸ்வாமிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.


பிலாவடி கருப்பரின் தரிசனத்துக்குப் பிறகு உச்சி வேளையில் சுந்தரமகாலிங்கம் சந்நிதியை அடைந்தார் சிருங்கேரி ஸ்வாமிகள். அப்போது நண்பகல் சுமார் பன்னிரண்டு மணி இருக்கும். எண்ணற்ற சித்தர் பெருமக்களால் வணங்கிப் போற்றப்பட்ட சுந்தர மகாலிங்கத்தையும், அவருக்கும் முன்னே குடி கொண்ட சுந்தரமூர்த்தியையும், சிவநாமம் ஜபித்து வணங்கினார் சிருங்கேரி மடத்து ஸ்வாமிகள். சுந்தர மகாலிங்கம் சந்நிதிக்குப் பின்னால் இருக்கும் அம்மன் மண்டபத்தில் அமர்ந்து நெடுநேரம் ஜபத்தில் இருந்தார். தனக்கு மிகவும் பழக்கப்பட்ட ஓர் இடம் போல் ஸ்வாமிகள் அங்கே நடமாடியது கண்டு, அனைவரும் அதிசயித்தனர்.


மடாதிபதியின் மதிய வேளை பூஜை நேரம் வந்தது. ஸ்வாமிகளுடன் வந்த சீடர்கள், தாங்கள் கொண்டு வந்த பூஜா விக்கிரகங்களையும், பூஜைக்குத் தேவையான பொருட்களையும், சுந்தர மகாலிங்கம் சந்நிதி முன்னால் எடுத்து வைத்தனர். சிருங்கேரியில் உறையும் அன்னையாம் சாரதாம்பாளின் சிறிய விக்கிரகத்துக்கு அன்று சுந்தர மகாலிங்கத்தின் முன்னிலையில் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிருங்கேரி மடத்தின் ஆத்மார்த்த பக்தர்களாக விளங்கிய ஊர்ப் பிரமுகர்கள் சிலர், தங்கள் கண்ணெதிரில் சாரதாம்பாளுக்கு ஸ்வாமிகள் செய்யும் அபிஷேகத்தைக் கண்டு அவர்கள் அடைந்த சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை.


மாலை மணி சுமார் ஐந்து இருக்கும். சந்தன மகாலிங்கத்தை தரிசிக்க எண்ணம் கொண்டார். சுந்தர மகாலிங்கம் சந்நிதியில் இருந்து புறப்பட்டார். கீழே இறங்க ஆரம்பித்தார். சந்தன மகாலிங்கம் குடி கொண்டிருக்கும் சந்நிதி நோக்கித் தனிமையில் கிளம்பினார் சிருங்கேரி ஸ்வாமிகள். அவரது நோக்கத்தைப் புரிந்து கொண்ட அன்பர்கள் எவரும் அவரைப் பின்தொடர்ந்து செல்லவில்லை. சுந்தரம் என்கிற மலைவாசி ஒருவர் மட்டும் தன்னுடன் வருவதற்கு அனுமதித்தார் ஸ்வாமிகள். சதுரகிரியின் அனைத்து மூலை முடுக்குகளும் சுந்தரத்துக்கு அத்துப்படி. பல காலமாக அங்கே வசித்து வருகிற துறவிகள் உட்பட அனைவரையும் சுந்தரம் நன்கறிவான். எனவேதான் ஸ்வாமிகளுடன் செல்லும் பாக்கியம் சுந்தரத்துக்குக் கிடைத்தது. சிருங்கேரி பீடாதிபதி முன்னே நடக்க, சுந்தரம் பின்னே நடந்தான்.





சிறிய மலை ஏறி, சந்தன மகாலிங்கம் சந்நிதியை அடைந்தனர். சுயம்பு வடிவான அந்த லிங்கத் திரு மேனியைத் தன் கண்களுக்குள் வாங்கி, ஆனந்தமாக தரிசனம் செய்தார் ஸ்வாமிகள். சுந்தரத்தையும் ஸ்வாமிகளையும் தவிர, வேறு எவருமே அந்தப் பிரதேசத்தில் இல்லை. உள்ளத்தையும் உணர்வு களையும் கொள்ளை கொள்ளும் அமைதி. மரங்கள் அசைந்தன; உராய்வுகள் இல்லை. பட்சிகள் பறந்தன; கூக்குரல்கள் இல்லை. 


'சற்று நேரம் நீ இங்கேயே இருப்பா!' என்று சைகை மூலம் சுந்தரத்துக்கு உத்தரவிட்ட பின், சந்தன மகாலிங்கத்தின் அருகே உள்ள செங்குத்தான மலையின் மீது, மிகுந்த பழக்கப்பட்ட ஆசாமி மாதிரி விறுவிறுவென்று ஏறினார் ஸ்வாமிகள். அண்ணாந்து பார்த்த சுந்தரம், வெலவெலத்து விட்டான். ஏனென்றால், தன் வாழ்நாளில் இந்த மாதிரி ஒரு வேகத்தில் எவரும் ஏறி, அவன் பார்த்தது இல்லை. அதனால்தான் அதிசயித்தான். 


இதைப் பார்த்த பின் அவனுக்குள் ஓர் ஆவல் எழுந்தது. 'மேலே ஏறிப் போன ஸ்வாமிகள் அங்கே என்ன பண்ணுவாரு?' இருந்தாலும் தனது ஆவலை அடக்கிக் கொண்டான்.

'இங்கேயே இருப்பா' என்று ஸ்வாமிகள் உத்தரவு போட்டு விட்டுப் போயிருக்கிறாரே! மகான்களின் வார்த்தைகளை மீறலாமா?


ஏறிப் போய், அரை மணி நேரம் கடந்திருக்கும். இன்னும் அவர் திரும்பவில்லை. அதற்கு மேல் சுந்தரத்தால் ஆவலைக் கட்டுப்படுத்த முடிய வில்லை. 'மலைக்கு மேலே ஏறிப் போன ஸ்வாமி அங்கே என்னதான் செஞ்சுக்கிட்டு இருப்பாரு?' - ஸ்வாமிகளுக்குப் பாதுகாப்பாக வந்தவன் என்பதால் பொறுப்பு வேறு அவனுக்கு இருந்தது.


ஒரு கட்டத்தில் அவனே முடிவெடுத்தான். அருகில் உள்ள ஒரு பிரமாண்ட மரத்தின் மேல் கிடுகிடுவென்று ஏறினான். சிருங்கேரி ஸ்வாமிகள் ஏறிய மலைப் பகுதி, தன் கண்களுக்குப் புலப்படும் உயரத்துக்கு ஏறி விட்டான். ஸ்வாமிகள் எங்கே இருக்கிறார் என்று தன் பார்வையால் துழாவினான். அந்த மலையின் சிறிய ஓர் இறக்கத்தில், சமதளப் பகுதி ஒன்றில் சிருங்கேரி ஸ்வாமிகள் சம்மணம் இட்டு அமர்ந்திருப்பதைப் பார்த்தான் சுந்தரம். அவருக்கு எதிரே காவி உடை தரித்த முனிவர் போன்ற தோற்றத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார். ஜடாமுடியுடனும் கண்களில் ஒளியுடனும் கூடிய அந்த முனிவரிடம் ஸ்வாமிகள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்.


பிரமித்துப் போய் விட்டான் சுந்தரம். 'ஸ்வாமிகள் தனியாகத்தான் போனார்... பிறகு, இந்த இன்னொரு ஆசாமி எப்படி இங்கே வந்தார்?' சிருங்கேரி ஸ்வாமிகளுடன் பேசிக் கொண்டிருந்த அந்த முனிவரை இதற்கு முன் சதுரகிரிப் பகுதியில் எங்குமே இவன் பார்த்ததில்லை. இந்தக் காட்சியை வெகு நேரத்துக்குப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை அவனால். ஒரு கட்டத்தில் அவனது கண்கள் செருக ஆரம்பித்தன. மரத்தில் இருந்து பிடிமானம் நழுவ ஆரம்பித்தது. தன்னிலையை இழப்பதற்கு முன் விறுவிறுவென மரத்தில் இருந்து கீழே இறங்கினான். ரொம்ப ஓய்ச்சலாக இருக்கவே, மரத்தின் அடியில் அமர்ந்தான்.


சற்று நேரம் கழித்து, தான் ஏறிய மலை உச்சியில் இருந்து இறங்கி வந்தார் ஸ்வாமிகள். சந்தன மகாலிங்கத்தை மீண்டும் ஒரு முறை தரிசித்தவர், சுந்தரத்துக்குக் கண்ஜாடை காட்டி விட்டு, புறப்பட்ட இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். சுந்தரமும் பின்தொடர்ந்தான்.


அதன் பின், சதுரகிரியில் இருந்து கீழே இறங்கினார் சிருங்கேரி ஸ்வாமிகள். வத்திராயிருப்பை அடைந்து, தனது பயணத்தைத் தொடங்கினார். சதுரகிரியின் உச்சியில் தான் கண்ட காட்சி பற்றி எவரிடமும் மூச்சு விடவில்லை சுந்தரம். ஆனாலும், ஒரு நாள் ஆர்வ மிகுதியின் காரணமாக சதுரகிரியில் வசித்து வரும், தனக்குப் பழக்கப்பட்ட ஒரு துறவியிடம், சிருங்கேரி ஸ்வாமிகள் முனிவருடன் மலை உச்சியில் பேசிக் கொண்டிருந்த விதத்தை விலாவாரியாக விவரித்துச் சொல்லி விட்டான்.


அதைக் கேட்ட அந்தத் துறவியின் முகத்தில் பரவசம். ''யப்பா... சிருங்கேரி ஸ்வாமிகள் அன்று பேசிக் கொண்டிருந்தது ஒரு மகா சித்த புருஷருடன். எவர் கண்களுக்கும் தரிசனம் தராத சித்த புருஷர் அன்றைய தினம் சிருங்கேரி ஸ்வாமிகளுக்கு தரிசனம் தந்திருக்கிறார். ஆன்ம பலத்தை அருளி இருக்கிறார். சிருங்கேரி ஸ்வாமிகள் போன்ற மகான்கள், அடிக்கடி இது போன்ற இடங்களுக்கு வந்து சித்த புருஷர்களின் ஆசியைப் பெற்று, அவர்களுடன் உரையாடி விட்டுச் செல்வது வழக்கம். இதைப் போன்ற பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடாது. மலைக்கு மேல் நடந்த காட்சிகளை சாமான்யனான நீயெல்லாம் பார்க்கக் கூடாது என்பதால்தான் உன்னைக் கீழேயே இருக்கச் சொல்லி விட்டு, அவர் மட்டும் மேலே ஏறிப் போய் இருக்கிறார். என்னிடம் சொன்ன மாதிரி வேறு எவரிடமும் இந்த விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருக்காதே. இதை எல்லாம் பார்க்க வேண்டும் என்பது உன் பாக்கியம். பார்த்திருக்கிறாய். அதை அனுபவித்திருக்கிறாய். சிருங்கேரி ஸ்வாமிகளின் அருளாசி உனக்கு என்றென்றும் உண்டு'' என்று சொல்லி விட்டு போனாராம்.


எவருடைய கண்களுக்கும் புலப்படாத ஒரு சித்தருடன் பேசி விட்டு, அந்த மலையில் இருந்து அன்றைக்கு இறங்கி இருக்கிறார் சிருங்கேரி ஸ்வாமிகள் என்ற விஷயம் பின்னாளில் பலருக்கும் தெரிய வந்தது. அதன் பின், இந்த மலையின் மகத்துவம் மேலும் பரவியது.


.....

வலைப்பதிவர் திரு BRS RAJA அவர்களின் “சதுரகிரி யாத்திரை” பதிவுகளை படித்து அறிந்த விஷயங்களை அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். திரு RAJA அவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள் (GOOGLE IMAGES)
.....

No comments:

Post a Comment