உண்மையான பக்தியுடன் புறப்படும் எந்த ஒரு பக்தரும், ‘சதுரகிரி மலைக்குச் சென்று சுந்தர மஹாலிங்கத்தையும் சந்தன மஹாலிங்கத்தையும் கண் குளிர தரிசிக்க வேண்டும்’ என்று நினைத்து மலை ஏற ஆரம்பித்து விட்டால், சம்பந்தப்பட்ட பக்தரை மலைக்கு மேல் பத்திரமாக அழைத்துக் கொள்வது சதுரகிரியில் வாழும் சுந்தர மஹாலிங்கம் பொறுப்பு. எந்தச் சிரமமும் இல்லாமல் அவர்களைத் தனது சந்நிதிக்கு அழைத்து தரிசனம் தந்து விடுவார்கள் சுந்தர மஹாலிங்கமும், சந்தன மஹாலிங்கமும் !
இதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்களைக் கூறலாம்.
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ஆன்மிக அன்பர் ஒருவர் விவரித்த ஒரு சம்பவம்:
தன்னை தரிசிக்க வரும் எவரையும் எந்த விதச் சிரமத்துக்கும் உள்ளாக்குவதில்லை மலையில் குடிகொண்டுள்ள சுந்தரமஹாலிங்க ஸ்வாமிகள். மலைப் பாதையின் சில இடங்களில் பக்தர்கள் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது பாதை இரண்டாகப் பிரியும். எந்த வழியே சென்றால் சதுரகிரி மலை உச்சியை அடையலாம் என்பது பக்தருக்குத் தெரியாது. தவறான வழியே பயணப்பட்டு விட்டால், சூரிய வெளிச்சம் கூட விழாத அடர்ந்த கானகத்துக்குள் போய் மாட்டிக் கொண்டு விடுவோம். நாம் பத்திரமாகத் திரும்புவதற்கு வழி சொல்ல அங்கே யாருமே கிடைக்க மாட்டார்கள். மலைப் பகுதியில் தவறான பாதையில் பயணித்து, ஒரு வாரம் கழித்து எந்த வித ஆபத்தும் இல்லாமல், இறைவனின் திருவருளால் திரும்பி வந்தவர்களும் இருக்கிறார்கள்.
சமீபத்தில் ஓர் அமாவாசை தரிசனத்துக்காக அடிக்கடி சதுரகிரிக்கு வந்து செல்லும் வழக்கம் உள்ள மூன்று அன்பர்கள், பொழுது சாய்ந்த வேளையில் மலைக்கு மேல் ஏற ஆரம்பித்தனர். பச்சரிசிமேடு என்ற இடத்தைத் தாண்டி அவர்கள் போய்க் கொண்டிருந்தபோது முதலில் சென்று கொண்டிருந்தவரின் டார்ச் லைட் திடுமென செயலற்றுப் போனது. பேட்டரிகளைக் கையில் எடுத்துத் துடைத்தார்; மாற்றிப் போட்டார். ஆனால், லைட் எரியவில்லை.
‘பரவாயில்லை. நான் முன்னாலே போறேன். என் பின்னாலே வா’ என்றபடி அதுவரை நடுவில் சென்று கொண்டிருந்தவர், முன்னால் வெளிச்சம் ஏற்படுத்திக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். ஏற்கெனவே, முதலில் சென்றவர் இப்போது இவரைத் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்.
இருள் சூழ ஆரம்பித்ததும், தாங்கள் வைத்திருந்த டார்ச் லைட்டின் உதவியால், ஒருவர் பின் ஒருவராக, பாதையைப் பார்த்துப் பார்த்துப் பயணித்துக் கொண்டிருந்தனர்.
தற்போது முதலில் செல்பவரிடமும், மூன்றாவதாக வருபவரிடமும் டார்ச் லைட்கள் இருக்கின்றன. நடுவில் இருப்பவர் தட்டுத் தடுமாறிப் போய்க் கொண்டிருந்தார். இருபது அடி தொலைவு போயிருப்பார்கள். அதிர்ச்சி தரும் வகையில் முதலில் சென்று கொண்டிருந்தவரின் டார்ச் லைட்டும் சட்டென ஆஃப் ஆனது. அவர், சற்று நேரம் அங்கேயே நின்று என்னென்னவோ செய்து பார்த்தார். ஆனால், பிரயோஜனம் இல்லை. காரணம் புரியாமல் தவித்தார்.
எங்கும் கும்மிருட்டு. வனம் முழுதும் மையை அப்பிக் கொண்டது போல் காட்சி அளித்தது. மரம், செடி, கொடி, பாறை என்று எதுவுமே கண்களுக்குத் தெரியவில்லை. எதிரே எதன் மீதாவது மோத நேரிட்டால்தான் அது ஒரு மரம் என்பதையோ, பாறை என்பதையோ உணரமுடியும். அதேபோல் அங்கு அதல பாதாளங்களும் உண்டு. டார்ச் லைட் இருந்தால்தானே பள்ளம் மேடு, மரம் பாறை இவற்றைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள முடியும்?
இப்போது மூன்றாவதாக வந்த தாடிக்கார ஆசாமியின் டார்ச் லைட் மட்டுமே எரிந்து கொண்டிருந்தது. இவர் கொஞ்சம் விவரமானவர்; தைரியசாலியும்கூட! ‘கவலைப்படாதீங்க... என் பின்னாலயே வாங்க. நான் முன்னால டார்ச் லைட் அடிச்சுக்கிட்டே நடக்கிறேன். எல்லாத்தையும் மஹாலிங்கம் பாத்துக்குவான். பயப்படாம வாங்க’ என்று நடக்க ஆரம்பித்தார். ‘சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா... சந்தன மஹாலிங்கத்துக்கு அரோகரா’ என்று மனதுக்குள் துதித்தபடி அந்த மூவருமே விறுவிறுவென நடை போட்டார்கள்.
அதேபோல் வெறும் பத்தடி தூரமே நடந்திருப்பார்கள். சொல்லி வைத்தது போல் தாடிக்காரரது டார்ச் லைட்டும் மக்கர் செய்தது. தனக்குத் தெரிந்த உத்திகளை எல்லாம் பயன்படுத்தி எப்படியாவது அதை ஒளிர வைத்துவிட வேண்டும் என்று அவர் பட்ட பாடெல்லாம் பயனற்றுப் போயின. இப்போது ஒருவர் அருகில் மற்றவர் நிற்பதே தெரியவில்லை. தொட்டுப் பார்த்தால்தான் ஒருவர் மற்றவரை உணர முடியும்.
தாடிக்கார ஆசாமிக்கு சட்டென ஏதோ ஒரு பொறி தட்டியது. அருகில் நின்றிந்த இருவரையும் தோளில் தொட்டு, ‘அப்படியே உக்காருங்க. நான் சொல்ற வரைக்கும் எதுவும் பேசாதீங்க’ என்று அவர்களின் காதில் கிசுகிசுத்தார். காரணம் இது போன்ற ஒரு திகில் அனுபவம் அந்த இருவருக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை. தாடிக்காரர் சொன்னபடி அப்படியே உட்கார்ந்தார்கள். தாடிக் காரரும் சம்மணமிட்டு அமர்ந்தார்.
இந்த மூவருமே மூச்சைக் கூட சத்தம் இல்லாமல் விட்டனர். ஒருவருக்கொருவர் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. சுமார் பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்கும். தனது டார்ச் லைட் எரிகிறதா என்று சும்மா கை வைத்துப் பார்த்தார் தாடிக்காரர்.
என்னே ஆச்சரியம்! தரையில் ஒளி வெள்ளமாகப் பாய்ந்தது. தாடிக்காரர் பிரகாசமானார். இதை அடுத்து முதலாமவர், இரண்டாமவர் ஆகியோரும் தங்கள் டார்ச் லைட்டில் கை வைக்க, அனைத்துமே பளீரென்று எரிய ஆரம்பித்தன.
‘தரையைத் தவிர, வேற எங்கும் டார்ச் லைட் வெளிச்சத்தை அடிக்காதீங்க’ என்று கறாராகச் சொன்ன தாடிக்காரர், இவர்கள் அமர்ந்த இடத்தில் இருந்து சுமார் முப்பதடி தொலைவில் கை நீட்டிக் காட்டினார்.
அங்கே கண்ட காட்சி அவர்களை உறைய வைத்தது. சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட யானைகள், இவர்கள் செல்ல வேண்டிய பாதையைக் குறுக்காகக் கடந்து சென்று கொண்டிருந்தன. மரங்களையும், செடிகொடிகளையும் கடந்து ஏதோ ஒரு திசையைக் குறி வைத்து அவை கூட்டமாகச் சென்று கொண்டிருந்தன.
செடிகொடிகளின் சலசலப்பையும், பிரமாண்ட அந்த உருவ அமைப்பையும் வைத்து ‘அவை எல்லாம் யானைதான்’ என்று உறுதி செய்து கொண்ட இருவரின் முகமும் வெளிறிப் போயின. தாடிக்காரர், தனது ஜோல்னாப் பையில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து இருவருக்கும் குடிக்கத் தந்தார். அப்போதுதான் யானை போடும் லத்தியின் வாசனையையும் சிறுநீர் வாசனையையும் இருவரும் உணர்ந்தார்கள்.
பிறகு தாடிக்காரர் அந்த இருவரிடமும் சொன்னார்: ‘இப்ப நம்மளை எல்லாம் காப்பாத்தினது சாட்சாத் அந்த மஹாலிங்கம்தான். இந்த யானைங்கள்ல ஏதோ ஒரு யானைக்குச் சில நிமிடங்களுக்கு முன்னாலதான் பிரசவம் நடந்திருக்கணும். அதனால்தான், இத்தனை யானைங்களும் அதுக்குத் துணையா போயிட்டிருக்கு. பொதுவா, காட்டுலயே வசிக்கிற யானைங்களுக்கு நெருப்புனா ஆகாது.
டார்ச் லைட் வெளிச்சத்தை யானைங்க பாத்தா, யாரோ வேட்டைக்கார கும்பல் வந்திருக்கு போலிருக்குனு நாம மேல பாய்ஞ்சு, மிதிச்சிருக்கும். ஒட்டுமொத்தமா மூணு பேருமே காலி ஆகி இருப்போம்.
பிரசவிச்ச யானை இருக்கிற இடத்துக்கிட்டே நெருங்கினதும், மேற்கொண்டு பயணத்தைச் சில நிமிடங்களுக்கு நாம தொடரக் கூடாதுனு மஹாலிங்கம் தீர்மானிச்சிருக்கார். எனவே, நம்மளைக் காப்பாத்தறதுக்காக நாம ஒவ்வொருத்தரோட டார்ச் லைட்டையும் அடுத்தடுத்து இயங்காமல் செய்தது சாட்சாத் அந்தக் கருணாமூர்த்தி மகாலிங்கத்தோட வேலை. நம்மளை பத்திரமா மலைல கொண்டு போய்ச் சேக்கணும்கறதுக்காக அவரே நம்ம கூட வந்திட்டிருக்கார்’ என்று அவர் சொன்னதும், பொழச்சது மறு பொழப்புனு எல்லாருமே தீர்மானிச்சாங்க. அப்புறம் டார்ச் லைட் வெளிச்சத்தோட பத்திரமா அவங்க மலை ஏறிட்டாங்க...’’ என்று சொல்லி முடித்தார் அந்தத் திருமங்கலம் அன்பர்.
புரிய இயலா விந்தை புரியும் ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே, எம் பெருமானே, ஈசனே, எல்லாம் நினது திருவருளே. நின் பொற்பாதங்களில் சரணாகதி, சரணாகதி, சரணாகதி.
சிவமந்திரம், சிவதரிசனம், சிவவழிபாடு ...
இவை மூன்றும் ஒவ்வொருவருடைய வாழ்கையிலும் மிகவும் இன்றியமையதாவை.
இம்மூன்றுமே இந்த உலகத்தில் பிறவி எடுத்தவர்கள் நல்ல வழியைப் பெறுவதற்கு துணை.
.....
வலைத்தளம்/வலைப்பூ பதிவுகள் படித்து அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.
வலைத்தளம்/வலைப்பூ பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்தும் நான் படித்து திரட்டிய தகவல்கள். என்னுடைய ஆக்கங்கள் இல்லை.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள் (GOOGLE IMAGES)
.....
No comments:
Post a Comment