சுயம்புவாய் உருவான காலத்தில் இருந்து, சித்தர்கள் மட்டுமே பூஜித்து வரும் வடிவமாய் இருந்தார் சுந்தர மகாலிங்கம். சித்தர்களின் இந்த வழிபாடு, பல நூற்றாண்டுகள் சிறப்பான முறையில் தொடர்ந்து வந்தது. சித்தர்கள் வழிபடும் காலத்தில் சாதாரண பக்தர்கள் அவ்வளவாக இந்த சதுரகிரி மலைக்கு வர மாட்டார்கள்.
அதன் பின் ஒரு காலகட்டத்தில் இறைவனின் விருப்பப்படி, மனிதர்களே சுந்தர மகாலிங்கத்துக்கு பூஜை செய்யும் வழக்கம் ஆரம்பமானது. சுந்தர மகாலிங்கத்துக்கு முதன் முதலில் பூஜை செய்யும் மகத்தான பேறு பெற்ற மாமனிதர் காஞ்சி கணபதி ஸ்வாமிகள் என்பவர். சுமார் 250 வருடங்களுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் வசித்து வந்த இவரை, சுந்தர மகாலிங்கமே நேரில் போய் தனக்கு பூஜைகள் செய்வதற்காக சதுரகிரிக்குக் கூட்டி வந்தார்.
மானுட பூஜையை விரும்பிய சுந்தர மகாலிங்கம் சதுரகிரியில் இருந்து துறவி ரூபத்தில் கீழே இறங்கி, தன்னை பூஜிக்க இருக்கும் அன்பர் எங்கே இருக்கிறார் என்று ஒவ்வொரு ஊராகத் தேடிச் சென்றார்.
'பூஜை செய்ய இவர் தகுதியானவர்' என்று தான் கருதும் நபர்களுக்கு ஓரிரு தேர்வு வைத்தார். அவர்கள் அதில் தேர்வாகவில்லை என்றால், அடுத்த பக்தரைத் தேடி நடையைக் கட்ட ஆரம்பித்தார் துறவி (சுந்தர மகாலிங்கம்). இவருடைய பார்வையில் எவரும் தோதுப்பட்டவராக அமையவில்லை. ஊர் ஊராகத் தேடி நடந்தவர் கடைசியில் காமாட்சிதேவி கோயில் கொண்டுள்ள காஞ்சிபுரம் வந்தார். அங்கு ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அமர்ந்து சிறுவன் ஒருவன் பாடம் படிப்பதைப் பார்த்தார். அப்பழுக்கற்ற பால் போன்ற முகம். அவனது நெற்றியிலும் உடலிலும் திருநீறு துலங்கியது. தும்பைப்பூவென வெளுத்த வேஷ்டி அணிந்திருந்தான். இந்தச் சிறுவனைக் கண்டவுடன் 'இவன்தான் தன்னை பூஜிக்க இருக்கும் முதல் மனிதன்' என்பதைத் தீர்மானித்த சுந்தர மகாலிங்கம் (துறவி), அவன் அருகே சென்று அமர்ந்தார்.
அந்த சிறுவனின் அணுகுமுறையும் அமைதியான குணமும் கண்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். அவனது பெற்றோரிடம் முறையான அனுமதி பெற்றுக் கொண்டு, அவனைக் கூட்டிக் கொண்டு சதுரகிரிக்குப் புறப்பட்டார் துறவி.
திரும்பும் வழியில், பேரையூருக்கு அருகில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கூவளப்புரம் என்கிற கிராமத்தை அடைந்தார் துறவி. அப்போது சிறுவன், 'பசிக்குது. சாப்பிட ஏதாவது வேண்டும்' என்று சொல்ல... அங்கே வயல் வேலைகளில் முனைப்பாக இருந்த ரெட்டியார் ஒருவரை அணுகினார் துறவி.
'என்ன வேணும் சாமீ?' என்று பயபக்தியுடன் திரும்பிய ரெட்டியாரிடம், 'பையனுக்குப் பசிக்குது. சாப்பிட ஏதாவது கொடப்பா' என்றார் துறவி.
'எங்கிட்ட கம்பங்கஞ்சிதான் சாமி இருக்கு. புள்ளை சாப்பிடுமானு கேளுங்க. சொம்புல தர்றேன்' என்று ரெட்டியார் சொல்ல... மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக் கொண்டனர் இருவரும்.
அதன் பின் துறவியானவர், ரெட்டியாரிடம் 'வர்ற ஆடி அமாவாசை அன்னிக்கு இங்கே அன்னதானம் பண்ணு. இனிமேல் தினமும் உன் கைங்கர்யத்துல இந்த ஊர்ல அன்னதானம் தொடர்ந்து நடக்கணும். தவிச்ச வாய்க்கு ஏதோ உன்னால முடிஞ்ச தாகசாந்தி பண்ணு' என்று சொன்னார்.
துறவி சொன்ன வார்த்தைகளைக் கேட்ட ரெட்டியாரின் முகத்தில் சந்தோஷம் தலைதூக்கினாலும் கவலையும் தொற்றிக் கொண்டது.
'ஐயா துறவியாரே... உங்க வார்த்தைகளைக் கேட்க எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. அன்னதானம் செய்ய எனக்கு விருப்பம்தான். ஆனா, அதுக்கேத்த பெரிய வசதி எனக்கு இல்லீங்களே' என்றார் ரெட்டியார்.
அதற்கு, 'நாளைக்கே உனக்கு வசதி வரும். அன்னதானம் செய்வதற்கான முயற்சிகளைத் துவக்குவாய்' என்று சொல்லி விட்டு, சிறுவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றார் துறவி.
மறுநாள் தனக்கு எப்படி வசதி திடீரென்று வந்து சேரும் என்ற சிந்தனையுடனே அன்றிரவு ரெட்டியார் உறங்கிப் போனார்.
துறவி சொன்னபடி அடுத்த நாள் அதிகாலை வேளையில், ரெட்டியாருக்கு ஓர் அதிர்ஷ்டப் புதையல் கிடைத்தது. தனது வயலில் கலப்பை கொண்டு உழும்போது ஏர்முனை தட்டி 'ணங் ணங்' என்ற சத்தம் கேட்டது. உழுவதை நிறுத்தி விட்டு, அந்த இடத்தைத் தோண்டிய ரெட்டியாருக்கு ஆச்சரியம் பல மடங்கு ஆனது. ஒரு மண்பானையில் ஆயிரக்கணக்கான பொற்காசுகள் ஜொலித்துக் கொண்டிருந்தன.
துறவியாக வந்த சுந்தர மகாலிங்கத்தின் வாக்கு பலித்தது. ரெட்டியார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. விலை மதிப்பில்லா அந்தப் பொற்காசுகளை விற்று, கூவளப்புரத்தில் அன்னதானத்துக்கென்று ஒரு மடம் கட்டினார். துறவி சொன்னபடியே அடுத்து வந்த ஆடி அமாவாசை தினத்தன்று அன்னதானத்தைத் தொடங்கினார் ரெட்டியார்.
'கூவளப்புரம் மடம்' என்றே அழைக்கப்பட்ட அந்த மடத்தில், தினமும் அன்னதானம் விமரிசையாக நடந்தது. அங்குள்ள அடுப்புகள் 'அணையா அடுப்புகள்' என்ற பெருமையைப் பெற்றுத் திகழ்ந்தன. அந்த அளவுக்கு எந்நேரமும் அங்கே அன்னதானம் நடந்து கொண்டே இருந்தது. ஆனால், இப்போது அந்த அளவுக்கு இல்லை.
சிறுவனுடன் சதுரகிரியை அடைந்த துறவி, ஆலயத்துக்குள் அவனைக் கூட்டிச் சென்றார்.
'இனிமேல் தினந்தோறும் நீதான் இந்த லிங்கத் திருமேனிக்கு பூஜைகள் நடத்த வேண்டும். இதற்காகத் தான் உன்னைக் கூட்டி வந்துள்ளேன்' என்று சொன்ன துறவி, கருவறையை நோக்கி மெள்ள நடந்தார். சற்றே சாய்ந்த நிலையில் காட்சி தரும் அந்த சுந்தர மகாலிங்கத்தின் திருமேனி அருகே சென்றவுடன், துறவி சட்டென்று மறைந்து போனார்.
அந்த இளம் வயதிலேயே, இறைவனின் கைப்பிடித்துக் கொண்டு அவருடன் வரும் பேறு பெற்ற அந்தச் சிறுவன், பின்னாளில் கணபதி ஸ்வாமிகள் என்று அழைக்கப்பட்டார்.
சதுரகிரியிலேயே தங்கி தினமும் சுந்தர மகாலிங்கத்துக்கு பூஜைகள் செய்து வரலானார் கணபதி ஸ்வாமிகள். பகவானின் அன்புக்குப் பாத்திரமான இந்த ஸ்வாமிகள், சதிகாரர்கள் சிலரின் வஞ்சகத்தால் ஒரு முறை நீதிமன்றத்தின் படிகளை மிதிக்கும்படி நேரிட்டது.
அப்போது, தான் யார் என்பதை, சதிகாரர்களுக்கு மட்டுமல்ல... நீதிபதிக்கும் உணர்த்தினார் கணபதி ஸ்வாமிகள். நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது நிகழ்ந்த ஒரு ஸித்து வேலையால், ஸ்வாமிகளின் நேர்மையையும் பக்தியையும் புரிந்து கொண்ட நீதிபதி, அவரை வழக்கில் இருந்து விடுவித்தாராம்.
தனது அந்திமக் காலம் நெருங்குவதை உணர்ந்த கணபதி ஸ்வாமிகள், புனிதமான மலையில், தான் சமாதி ஆகக் கூடாது என்று தீர்மானித்துக் கீழே இறங்கினார். தம்பிபட்டி என்கிற கிராமத்தில் சமாதி அடைந்தார். அதன் மேல் ஒரு லிங்கத் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஸ்வாமிகள் சமாதி ஆன தினத்தன்று அபிஷேகமும் வழிபாடுகளும் இங்கு அமர்க்களப்படும். சதுரகிரியில் சுந்தர மகாலிங்கத்துக்குச் சார்த்தப்பட்ட பூமாலை, அன்று இவரின் சமாதிக்கு வந்து சேரும்.
.....
வலைத்தளம்/வலைப்பூ பதிவுகள் படித்து அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.
வலைத்தளம்/வலைப்பூ பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்தும் நான் படித்து திரட்டிய தகவல்கள். என்னுடைய ஆக்கங்கள் இல்லை.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள் (GOOGLE IMAGES)
.....
No comments:
Post a Comment