Tuesday, October 23, 2018

சதுரகிரி அதிசயங்களும் அற்புதங்களும் ... (2)




ஒவ்வொரு காரியத்தையும் இறைவனே நடத்திக் கொள்கிறான். அதற்கு நம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறான். எந்தக் காலத்தில் எது நடக்க வேண்டும், எது நடக்கக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அவனுக்கு மட்டுமே உண்டு. நம்மால் அறிந்துகொள்ள முடியாது; புரிந்து கொள்ளவும் முடியாது. அது கூடவும் கூடாது. அதற்கு முயற்சிக்கவும் கூடாது.


ஆதிகாலத்தில் சந்தன மகாலிங்கத்தை பார்வதிதேவியே பூஜித்து வந்தாள். 

அதன் பிறகு சட்டை முனிவர் பூஜைகள் செய்தார். பிறகு சித்தர்களும், பளியர் இனத்தவர்களும் பூஜித்தார்கள்


இங்கு ஆகம பூஜை கிடையாது. ஆத்ம பூஜைதான். அதாவது, மந்திரங்கள் கிடையாது. ஆத்மார்த்தமாக நடக்கும் வழிபாட்டு முறைகள், நம்மை சிலிர்க்க வைக்கும். பிரம்மச்சாரிகள் மட்டுமே இங்கு பூஜைகள் செய்ய வேண்டும்.


பிரமாண்டமான தில்லை மரத்தின் அடியில் சந்தன மகாலிங்கம் கொலு வீற்றிருப்பார். சந்தன மகாலிங்கத்தின் சந்நிதிக்கு மட்டும் மண்டபம் எழுப்பி, கும்பாபிஷேகம் செய்யத் தீர்மானித்து வேலைகளைத் துவங்கினார்கள். சந்தன மகாலிங்கத்துக்கு மண்டபம் எழுப்பிக் கட்டடம் கட்டுவதற்காக மூலவர் சந்நிதியைத் தோண்டி இருக்கிறார்கள். ஆனால், மூலவரின் அடிப் பகுதி நீண்டு கொண்டே போனது. சுமார் பத்தடி ஆழம் போனபோது அந்த விபரீதம் நடந்தது. மூலவரின் திருமேனி நீண்டு கொண்டே போகும் அந்த சுயம்பு வடிவத்தின் அடியில் ரத்தம் கொப்பளித்திருக்கிறது. தோண்டிய ஆசாமிகள் பயந்து போய்க் கூடிப் பேசி, மண்ணைப் போட்டு மூடி இருக்கிறார்கள்


சந்தன மகாலிங்கத்தின் பின்னால் இருக்கும் ஓங்கி உயர்ந்த தில்லை மரம் மண்டப வேலைகளுக்கு இடையூறாக இருக்குமே என்று அப்புறப்படுத்த எண்ணினார்கள். வெட்டும்போது சர்வஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஏடாகூடமாக வெட்டினால், மரம் சந்தன மகாலிங்கத்தின் மேலே கூட விழுந்து விட நேரிடலாம். இதை எல்லாம் யோசித்து பயந்த திருப்பணிக்கு குழு அன்பர்கள், 'அந்த சந்தன மகாலிங்கத்திடமே உத்தரவு கேட்டு விடலாம்' என்று லிங்கத் திருமேனி முன் பவ்யமாக அமர்ந்தார்கள். தங்களது கோரிக்கையை இறைவனிடம் சமர்ப்பித்து விட்டு, அவரது உத்தரவுக்காகக் கண்களை மூடிக் காத்துக் கொண்டிருந்தார்கள்.


அப்போது எவரும் எதிர்பாராத நிகழ்வு அங்கே நடந்தது. திடீரென பேய்க் காற்று வீசியது. எந்த வித முகாந்திரமும் இல்லாமல் வீசிய காற்று, தில்லை மரத்தை மட்டும் அப்படியே பெயர்த்து, வேரோடு கீழே சாய்த்தது. ஆச்சரியம் என்னவென்றால் லிங்கத் திருமேனியிலோ, அங்கு கூடி இருந்த எவர் மீதோ விழாமல் சாதுவாக ஓர் ஓரத்தில் விழுந்தது. மற்றபடி, திடீரென வீசிய இந்தப் பேய்க் காற்றால் மலையில் இருக்கும் மற்ற எந்த மரங்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை.


தில்லை மரம் தானாக விழுந்ததை இறைவனின் உத்தரவாக எண்ணி வியந்தார்கள்.


1986ல் ஓர் ஆடி அமாவாசை நேரத்தில்தான் முதன் முதலாக சதுரகிரிக்கு பெங்களூர் ஸ்வாமிகள் வந்தார். திட்டங்கள் போடுவது மட்டும் நமது வேலை. ஆனால், அது நிறைவேறுவது நம் கையில் இல்லை. மகேசன் கையில்தான் உள்ளது. அனைத்தும் உணர்ந்த பெங்களூர் ஸ்வாமிகள் இதை மட்டும் மறந்து விட்டார் போலும்! மலையை விட்டுக் கீழே இறங்கிச் செல்லும் தனது முடிவில் உறுதியாக இருந்தார். ஆனால், சந்தன மகாலிங்கத்தின் முடிவு வேறு விதமாக இருந்தது. இவரை வைத்துதான் தனது ஆலயத் திருப்பணிகள் துவங்க வேண்டும் என்று அவர் முன்கூட்டியே தீர்மானித்திருந்தார் போலும். எனவே, இந்த மலையின் அற்புதத்தை பெங்களூர் ஸ்வாமிகளுக்கு உணர்த்த விரும்பினார். ஏதேனும் ஓர் அற்புதத்தை நிகழ்த்தி, அவரை இங்கேயே தங்க வைக்க வேண்டும் என்பது சந்தன மகாலிங்கத்தின் எண்ணமாக இருக்கலாம்!


ஓர் அமாவாசை தினத்தன்று நள்ளிரவு நேரம்... சற்று முன் சந்தன மகாலிங்கத் திருமேனிக்கு நடந்து முடிந்த அபிஷேக திரவியங்களின் நறுமணம், அந்த ஆலயப் பகுதி முழுவதையும் கமகமவென்று நிறைத்திருந்தது. சந்தன மகாலிங்கத்துக்கு உண்டான தனது வழிபாடுகளை எல்லாம் முடித்துக் கொண்டு கால தாமதமாக மெள்ளக் கண்ணயர்ந்தார் பெங்களூர் ஸ்வாமிகள். அசதியின் காரணமாகப் படுத்ததும் உறங்கி விட்டார்.


அப்போது, அங்கே அந்த அதிசயம் நடந்தது. யதேச்சையாக சட்டென்று கண் விழித்தார் பெங்களூர் ஸ்வாமிகள். சற்று முன் கண்ணயர்ந்த தனக்கு அதற்குள் ஏன் விழிப்பு வந்தது என்பது புரியாமல் திகைத்தார்.


ஒட்டுமொத்த மலைப் பிரதேசமே பெரும் அமைதியில் இருந்தது. அமாவாசை தினம் என்பதால் எங்கும் கரும் இருள் சூழ்ந்திருந்தது. இருட்டில் தட்டுத் தடுமாறி எழுந்து உட்கார்ந்தார். ஏதோ காட்டுப் பறவைகள் 'ஊ ஊ' என உற்சாகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. மெலிதான காற்றில் மரங்கள் 'விஸ்ஸ்ஸ்' என்ற சத்தத்துடன் மெள்ள அசைந்து கொண்டிருந்தன.


சுற்றும் முற்றும் பார்த்து விட்டுப் படுக்கப் போக யத்தனித்த பெங்களூர் ஸ்வாமிகள் ஒரு கணம் துணுக்குற்றார். அவரது பார்வை தவசி குகைப் பக்கம் நிலை குத்தி நின்றது (சுந்தர மகாலிங்கம் ஆலயத்தின் மேல் உள்ள பகுதிதான் தவசி குகை. சித்த புருஷர்களின் சத் சங்கக் கூட்டம் இந்தக் குகையில்தான் கூடும்.)


எங்கும் கும்மிருட்டாக இருந்த நேரத்தில் தவசி குகை பகுதியில் மட்டும் ஒரு வெளிச்சப் பந்து மிகப் பிரகாசமாகத் தெரிந்தது. கிட்டத்தட்ட ஒரு கால்பந்து அளவுக்கு இருந்த அந்த வெளிச்சம், தவசி குகையில் இருந்து மெள்ள வானில் தவழ்ந்து, பெங்களூர் ஸ்வாமிகளுக்கு மேலே நகர்ந்து, சந்தன மகாலிங்கம் திருச்சந்நிதியை அடைந்தது. ஒரு சில விநாடிகளுக்குப் பிறகு, வந்த வழியே அதே வேகத்தில் திரும்பி தவசி குகையை அடைந்தது.


இப்படிப்பட்ட ஒரு நிகழ்வைப் பார்த்த பெங்களூர் ஸ்வாமிகள் பிரமித்துப் போய் விட்டார். இத்தகைய ஒரு குறிப்பால், இறைவன் தனக்கு உணர்த்தும் செய்தி என்ன என்பதையும் அடுத்தடுத்த நாட்களில் அவர் உணர்ந்தார்.


பெங்களூர் ஸ்வாமிகள் சதுரகிரிக்கு வந்தபோது, இங்கு சந்தன மகாலிங்கத்துக்கு மட்டும் சந்நிதி இருந்தது. பிற பரிவார தேவதைகளின் சந்நிதிகள் அவ்வளவாகக் கிடையாது. அவரது முன் முயற்சியாலும் இன்னும் சில அன்பர்களின் ஒத்துழைப்பாலும்தான் இன்றைக்கு நாம் காண்கிற அளவுக்கு சந்தன மகாலிங்கம் திருக்கோயில் வளர்ச்சி அடைந்துள்ளது. 


.....

ஒரு வலைப்பூ பதிவு படித்து அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். 

வலைப்பதிவர் திரு BRS RAJA அவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்

.....

No comments:

Post a Comment