Monday, October 22, 2018

சதுரகிரி அதிசயங்களும் அற்புதங்களும் ... (1)





உள்ளன்போடு தன்னை வணங்கும் பக்தர்களுக்கு எப்படியாவது காட்சி கொடுத்து விடுவார் சந்தன மகாலிங்கம். அபரிமிதமான அன்பு வைத்திருக்கும் பக்தர்களின் உள்ளம் வருத்தம் அடைவதற்கு அந்த இறைவன் விரும்ப மாட்டார். இதுபோன்ற எத்தனையோ சம்பவங்களை ஸ்ரீ சந்தன மகாலிங்கம் நிகழ்த்தி இருக்கிறார்.


இப்படித்தான் ஒரு முறை, இறை அனுபவத்தை நேரில் தரிசிக்கும் பாக்கியத்தை சென்னை அன்பர் ஒருவருக்கு அருளினார் ஸ்ரீ சந்தன மகாலிங்கம்.


கடந்த 2003-ஆம் வருடம் ஆடி அமாவாசை தினத்தன்று நடந்த மகேஸ்வர பூஜையின்போது, இறைவனான சந்தன மகாலிங்கமே வந்து உணவு சாப்பிட்டுச் சென்றிருக்கிறாராம். சுவாரஸ்யமான அந்த அனுபவத்தை சாப்டூர் அன்பர் சொல்லக் கேட்போம்.


''சென்னையைச் சேர்ந்த அண்ணாமலை என்கிற அன்பர், மகேஸ்வர பூஜைக்குப் பொறுப்பாக உள்ளே இருந்தார். சுடச் சுட உணவு தயாரிக்கப்பட்டு, மிகப் பெரிய வெள்ளைத் துணியின் மேல் மலை போல் சாதம் குவிக்கப்பட்டிருந்தது. தவிர, இதர பதார்த்தங்களான குழம்பு, ரசம் போன்ற அனைத்தையும் பாத்திரங்களில் கொட்டி வைத்திருந்தனர். இலை போடப்பட்டு அடியார்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர்.


சாதாரணமாக உணவு எல்லாம் தயாரான பின், சந்தன மகாலிங்கத்தின் கோயிலில் இருந்து பூசாரி இங்கு வந்து உணவுப் பொருட்களின் மேல் தீர்த்தம் தெளித்து கற்பூரம் காட்டுவார். இந்த வழிபாடு முடிந்த பின் அடியார்களுக்கு அன்னமிடத் துவங்குவார்கள்.


சுமார் நூறு பேர் இருப்பார்கள். அடியார்கள் குடிப்பதற்குத் தண்ணீர் வைக்கப்பட்டு, உணவெல்லாம் இலையில் பரிமாறி முடித்த பின் சிவநாமம் கோஷம் எழுப்பி, துதித்த பின் அனைவரும் உண்ண ஆரம்பித்தனர். அப்போதுதான் அங்கிருந்த ராம்குமார் என்கிற தன் நண்பரைப் பார்த்து, 'இன்னிக்கு இங்கே இப்ப சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறவர்களில் சந்தன மகாலிங்கமும் ஒருவர்' என்றார் அண்ணாமலை. 


'என்னது... சந்தன மகாலிங்கம் இங்கே சாப்பிட வந்திருக்கிறாரா?' என்று வியந்து போன ராம்குமார், தன்னிடம் இருந்த மினி விடியோ கேமராவில் அங்கு உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அனை வரையும் பதிவு செய்தார். இவர் படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, சில சாதுக்கள் இவரைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தனர். அதன் பொருள் ராம்குமாருக்குப் பின்னால்தான் தெரிய வந்தது.


லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடிய அந்த ஆடி அமாவாசை அன்று சந்தன மகாலிங்கம் திருக் கோயில் அருகே நடந்த மகேஸ்வர பூஜையில் முதல் பந்தியில் சாப்பிடும் அடியவர்களில் சந்தன மகாலிங்கமும் ஒருவர் என்கிற தகவலைக் கேட்ட பின் அன்பர் ராம்குமார் பரபரப்பானார்.


அவரால் இந்த விஷயத்தை நம்ப முடியவில்லை என்றாலும் தன் உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. 'இது போன்ற மகேஸ்வர பூஜைகள் நடக்கும்போது அடியவர்களோடு அடியவராக இறைவனும் கலந்து கொண்டு உணவு உண்பார்' என்று பெரியோர்கள் சொல்லக் கேள்விப்பட்ட அவருக்கு, இன்று அத்தகைய ஒரு சம்பவத்தை நேரிலேயே காணப் போகிறோம் என்ற சந்தோஷம். உற்சாகமாக வளைய வந்தார் ராம்குமார். 'இன்று, சந்தன மகாலிங்கத்தை எப்படியும் நேருக்கு நேர் பார்த்து விடப் போகிறேன்' என்கிற பெருமிதம் அவரிடம் இருந்தது.


தன்னிடம் இருந்த மினி வீடியோ கேமராவில், அங்கே உணவருந்தும் அடியவர்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியாகப் பதிவு செய்து கொண்டிருந்தார் ராம்குமார். இவரது இந்த செயலை அடியவர்களும் அவ்வப்போது கண்ணுற்றுத் தங்களுக்குள் புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர். அத்துடன், கருமமே கண்ணாக தங்களுக்குப் பரிமாறப்பட்ட உணவு வகைகளை ருசித்துச் சாப்பிடுவதிலும் முனைப்பாக இருந்தனர்.


அன்புள்ளம் கொண்ட உதவியாளர்கள் பலரும் ஓடியாடி அடியவர்களுக்கு உணவு பரிமாறினர். சொல்லி வைத்தது போல் அடியவர்கள் அனைவரும் ஒரே மாதிரி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அதாவது, அடியவர் ஒருவர் குழம்பு சாதத்தை ஒரு கவளம் எடுத்து வாய் அருகே கொண்டு போனார் என்றால், அங்கே உணவருந்திய அனைத்து அடியார்களும் அதே மாதிரி குழம்பு சாதத்தை எடுத்து வாய் அருகே கொண்டு போனார்கள். அதே போல், ஒருவர் பொரியலை எடுத்து உட்கொள்ள முற்படும்போது அனைத்து அடியவர்களும் பொரியலையே எடுத்து உண்டனர். இது திட்டமிட்டு நடக்கும் செயல் அல்ல. தவிர, ஒரே நேரத்தில் இத்தனை அடியவர்களும் பெரிய அளவில் பயிற்சி எடுத்துக் கொண்டால்தான் இப்படி ஒரு சம்பவம் சாத்தியமாகும். ஆனால், இப்படி ஓர் அதிசயம் - எப்படி அழகாக இங்கே நிகழ்கிறது என்பது எவருக்கும் புரியவில்லை. அதுதான் தெய்வ சங்கல்பம்.


எப்படித்தான் அந்தப் பந்தி அவ்வளவு சீக்கிரம் நடந்து முடிந்தது என்பது தெரியவில்லை... தங்கள் இலையில் பரிமாறப்பட்ட உணவு வகைகள் அனைத்தையும் முழுக்கச் சாப்பிட்டு முடித்திருந்தனர் அடியவர்கள். சொல்லி வைத்தது மாதிரி சாப்பிட்டு முடித்த எல்லா இலைகளும் படுசுத்தமாக இருந்தன!


ராம்குமார் பரபரப்பானார். இன்னும் சில மணித் துளிகளே பாக்கி. அதற்குள், அடியவர்களில் எவர் சந்தன மகாலிங்கம் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அன்னதானம் நடந்து கொண்டிருந்த இடத்தில், கையில் விடியோ கேமராவுடன் குறுக்கும் நெடுக்குமாக- முகத்தில் கேள்விக் குறியுடன் அலைந்து கொண்டிருந்தார்.


'அட! அதோ, அந்த அடியவர் பார்ப்பதற்குக் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறாரே... மனிதர்களுக்கு உண்டான இயல்பான குணங்கள் அவர் முகத்தில் தெரியவில்லையே? ஒருவேளை அவர், அடியவர் வடிவில் வந்த சந்தன மகாலிங்கமாக இருக்குமோ' என்று ராம்குமார் யூகித்த அதே கணம்... அந்த சாது மெள்ள எழுந்தார். சொல்லி வைத்தது போன்று, அவர் எழுந்த அதே விநாடியில் மற்ற சாதுக்களும் எழுந்தனர்! இது எப்படி நிகழ்ந்தது என்பதை எவராலும் வர்ணிக்க இயலாது! இறைவனின் சித்தம் என்னவோ, அப்படித்தானே எல்லாமும் நடக்கும்?


அந்த சாது, கை கழுவும் இடம் நோக்கி மெள்ள நகர்ந்தார். அவர் அருகில் சென்று தரிசிக்கலாம் என்று ராம்குமார் யத்தனிப்பதற்குள்... கசகசவென்று சூழ்ந்து நின்று கொண்டனர் மற்ற அடியவர்கள்!


'இனியும் காலடி எடுத்து வைத்து, அந்த அடியவரைக் காண நெருங்க முடியாது' என்கிற நிலையில், தான் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து கொண்டே குதிகால்களை மெள்ள மேலே உயர்த்தி, தலையை மட்டும் இப்படியும் அப்படியும் திருப்பி, அடியவர்கள் சூழ்ந்திருக்கும் இடத்தில் தன் கண்களைச் சுழல விட்டார். ஆனால், அந்தப் பரம்பொருள் அங்கு இருந்தால்தானே? அவரை அங்கே காணவில்லை. எங்கு தேடியும் அவர் சிக்கவில்லை. 


ஒவ்வொருவராக செம்பில் நீர் எடுத்துக் கொண்டு வெளியே ஓரிடத்துக்குப் போய்த் தங்கள் கையைக் கழுவிக் கொண்டனர். அங்கேயும் ஓடினார் ராம்குமார். அந்த அடியவர் கையைக் கழுவிக் கொண்ட மாதிரி இருந்தது. ஆனால், கண்களில் சிக்கவில்லை. அங்கு, கை கழுவ வந்த மற்ற அடியார்களிடம் விசாரித்தும் பயனில்லை!


அப்போதுதான் அடியவர் ஒருவர் மற்றொரு அடியவரிடம் நிதானமான குரலில் எவருக்கோ சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தார் ''உணர்ந்து கொண்ட அனுபவங்களை எப்போதும் உனக்குள்ளேயே புதைத்து வை. வெளியே சொல்லாதே. இறைவனே உன்னை சோதிப்பான்; நீ இறைவனை சோதிக்க முற்படாதே!”.


இறைவன் தரிசனம் தருவதில் இரண்டு விதம் இருக்கிறது. தான் மிகவும் விரும்பி, குறிப்பிட்ட ஒரு பக்தனுக்குக் காட்சி தர வேண்டும் என்பதற்காகத் தோன்றுவார். அப்போது, அந்த பக்தருடன் இருக்கும் பலரும் இறைவனின் நேரடி தரிசனத்தைத் துல்லியமாகப் பெறுவர். ஆக, இறைவன் வந்தது ஒருவருக்காக மட்டுமே! ஆனால், அதன் பொருட்டு அந்தப் பக்தரைச் சார்ந்த பலரும் தரிசனத்தை எளிதில் பெறுவர். இது நிகழக் கூடிய ஒன்று!


அதுபோல் இன்று இறைவன் இங்கே மகேஸ்வர பூஜையில் பங்கு கொள்ள விருப்பம் கொண்டு எழுந்தருளி உள்ளான். யார் யாருக்கெல்லாம் இந்த தரிசனம் கிடைக்க வேண்டும் என்று பிராப்தம் இருக்கிறதோ, அவர்களெல்லாம் ஆனந்தப்படட்டும். உனக்கும் எனக்கும் தரிசனம் கிடைத்து விட்டது. அந்த மட்டில் உனது சந்தோஷத்தைப் பூர்த்தி செய்து கொள். அதை விட்டு விட்டு, 'சாப்பிட்டு முடித்த பின் கை கழுவினாரா இறைவன்? கை கழுவியதும் எங்கே போவார்... என்றெல்லாம் மனம் குழம்பி, அவரைத் தொடர்ந்து சென்று பார்க்காதே. அது உன்னால் சாத்தியம் இல்லை. தவிர, அவருக்கும் உண்டு ஆயிரம் வேலைகள்.


இன்றைக்கு ஒரு நல்ல காட்சி நமக்குக் கிடைத் திருக்கிறது. கிடைத்த உணவில் திருப்தி கொண்டது மாதிரி, கிடைத்த தரிசனத்தில் திருப்தி கொள். வா, சந்தன மகாலிங்கம் கோயிலில் மணி அடிக்கிறது. அந்தப் புனிதனை தரிசிப்போம்'' என்று ஒருவரின் கையைப் பிடித்து இழுத்துச் செல்லாத குறையாக அழைத்துச் சென்றார்.


இறை அனுபவங்கள் இப்படித்தான். ஆழ்ந்த பக்தியின் வெளிப்பாடாக சிலருக்கு இத்தகைய அனுபவங்கள் வாய்க்கும். இதற்கு வயது தடையே இல்லை. ஒன்றுபட்ட மனம் மட்டும் போதும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. கிடைத்த அனுபவங்களை அனுபவிக்க வேண்டும். அனுபவிக்கிற நேரத்தில் ஆராய முற்படக் கூடாது. ஆராய முற்பட்டால் ஆன்மிகம் அங்கே இருக்காது. அதாவது, மெய்ஞானம் போய் விஞ்ஞானம் தலை தூக்கும். விஞ்ஞானத்துக்கு விளக்கங்கள் தேவை. மெய்ஞானத்துக்கு விளக்கங்கள் வேண்டாம். தன்னை அர்ப்பணித்தாலே போதும்.


ராம்குமார் அப்போது எடுத்த அந்த வீடியோ காட்சிகள் தற்போது அவரிடம் இல்லை. அவர் கேட்டார்... இவர் கேட்டார் என்று அது பல கைகள் மாறி மாறி, எங்கோ போயிற்று. போகட்டும். ஆசாமிகளுக்குத்தான் போட்டோவும் வீடியோவும் தேவை. இறைவனுக்குமா?

.....

ஒரு வலைப்பூ பதிவில் படித்ததை, படித்து வியந்ததை, உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவருக்கு மிக்க நன்றி.

.....

No comments:

Post a Comment