Wednesday, October 31, 2018

சதுரகிரி அதிசயங்களும் அற்புதங்களும் ... (7)


சுந்தரலிங்கம் ... சுந்தரமூர்த்தியின் திருச்சந்நிதி. 


சதுரகிரியான் அருளாசியை பெறுவதற்கு முன் அனைவரும் தரிசிக்கும் ஒரு முக்கியமான சந்நிதி. லிங்கத் திருமேனியான சுந்தரலிங்கம், இங்கு வந்து குடிகொண்ட வரலாறு.


கயிலாய மலையில் இறைவனுக்கும் இறைவிக்கும் நடக்க இருக்கும் திருமணக் காட்சியைக் காண பிரம்மா விஷ்ணு முப்பத்துமுக்கோடி தேவர்கள் உள்பட எண்ணற்ற ரிஷிகளும் முனிவர்களும் வந்து குவிந்தால், வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இந்த நிலையில் உதவக் கூடியவர் அகத்திய மாமுனியே என்று தெளிந்த ஈசன், அகத்தியரிடம் “தாங்கள் உடனே தென்திசை சென்று அங்கு தங்கி இருப்பீர்கள் என்றால் பூமி சமம் ஆகும். தாங்கள் சற்றும் தாமதியாமல் தென்திசை செல்லுங்கள். தங்களால் மட்டுமே இது சாத்தியம்!’’ என்றார்.


அங்கிருந்து புறப்பட்ட அகத்தியர் பொதிகை மலைக்கு வர பூமி சமமானது. பொதிகையில் இருந்து புறப்பட்ட அகத்தியர் குற்றாலத்தில் சில காலம் தங்கி இருந்தார். அப்போதுதான் சதுரகிரியைப் பற்றி பிரமிப்பூட்டும் தகவல்களைக் கேள்விப்பட்டார். சதுரகிரியின் மருத்துவ மகிமை மற்றும் அங்கு கிடைக்கும் இறை இன்பம் ஆகியவற்றை யெல்லாம் குற்றாலத்தில் வசித்த முனிவர்கள் சிலர், அகத்தியரிடம் விவரித்தனர். அத்துடன் சுந்தரானந்தர், கொங்கணர் போன்ற எண்ணற்ற சித்தர்கள் சதுரகிரியில் தங்கி, காயகற்ப மூலிகைகள் தயாரித்து வருவதையும் அறிந்தார் அகத்தியர்.


ஒரு தினத்தில் அகத்தியர் சதுரகிரியை வந்தடைந்தார். சித்தர்களின் தலைமை பீடாதிபதி அந்தஸ்தில் இருக்கும் அகத்திய மாமுனிவர், தாங்கள் தங்கியிருக்கும் சதுரகிரிக்கு வருவதை அறிந்து மகிழ்ந்தனர் அங்குள்ள ரிஷிகளும் முனிவர்களும். சுந்தரானந்தர், யூகி முனிவர், கொங்கணர் உட்பட முனிவர்கள் பலரும் உரிய மரியாதை செய்து அகத்தியரை வரவேற்றனர்.

இதனால் மகிழ்ந்த அகத்தியர், சதுரகிரியின் மகிமைகளைக் கேட்டு, அவற்றை நேரில் அனுபவித்து இன்புறவே, தான் சதுரகிரிக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார். 


சதுரகிரியில் சுந்தரானந்தரின் ஆசிரமத்தில் தங்கினார் அகத்தியர். தனது வழிபாட்டுக்காக சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார். ஆகம சாஸ்திரங்கள் படி அந்த சிவலிங்கத்தை வேளை தவறாமல் பூஜித்தார். அவர் ஸ்தாபித்த இந்த லிங்கத் திருமேனியை சதுரகிரியில் தவம் இருந்த ரிஷிகளும் வழிபட்டு, போற்றிப் புகழ்ந்தனர். இந்த லிங்கமே பின்னாளில் சுந்தர லிங்கம் (சுந்தரமூர்த்தி என்றும் சொல்கிறார்கள்) என அழைக்கப்பட்டது.


சதுரகிரியில் இன்றைக்கு சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் என சந்நிதிகள் இருந்தாலும் அவை எல்லாவற்றையும் விட முதலில் தோன்றியது சுந்தர லிங்கமே. 

அகத்தியர் பிரதிஷ்டை செய்த லிங்கத்துக்கு ‘சுந்தர லிங்கம்’ என்ற பெயர் எப்படி வந்தது? 

அந்த லிங்கம், அகத்தியர் பெயரால் அழைக்கப்படாதது ஏன்?


சதுரகிரியில் தினமும் சிவ பூஜையில் திளைத்திருந்த அகத்தியர், ஈசன் அருள் பாலிக்கும் அநேக தலங்களுக்கும் சென்று அவன் ஆசி பெற விரும்பினார். 

‘‘ஆகம சாஸ்திரங்கள் சொன்னபடி, அனுதினமும் தாங்கள் இந்த லிங்கத்தை பூஜித்து வழிபடுவதை, பெரும் பேறாகக் கருதி தரிசித்து வந்தேன். இனி, இந்த லிங்கத் திருமேனியை தொடர்ந்து பூஜிக்கும் பாக்கியத்தைத் தாங்கள் எனக்கு அருள வேண்டும்!’’ என்று சுந்தரானந்தர் வேண்டுகோள் விடுத்தார்.

“எனது ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு. இந்த லிங்கத் திருமேனிக்கு இனி நீங்களே தொடர்ந்து வழிபாடுகளை நடத்துங்கள்’’ என்றார் அகத்தியர். இதனால் பெரிதும் மகிழ்ந்த சுந்தரானந்தர், சதுரகிரியில் அகத்தியர் ஸ்தாபித்த லிங்கத்துக்கு, தான் தொடர்ந்து பூஜைகள் செய்ய இருப்பதை நினைத்து, இறைவனுக்கு நன்றி சொன்னார்.


அதன் பின், அகத்தியர் சதுரகிரியில் இருந்து புறப்பட்டு, பக்கத்தில் உள்ள ஒரு மலையில் நீண்ட காலம் தவம் இருந்தார். அகத்தியர் தவம் இருந்ததால், அந்த மலை அவரது பெயராலேயே ‘கும்ப மலை’ (கும்பமுனி என்றும் அகத்தியரை அழைப்பதுண்டு) எனப்பட்டது. 


அகத்தியரது உபதேசத்தின்படி தினமும் பூஜைகளைத் தொடர்ந்தார் சுந்தரானந்தர். 

இந்தக் காலத்தில்தான் அந்த லிங்கத் திருமேனிக்கு ‘சுந்தர லிங்கம்’ என்ற திருநாமம் சூட்டப்பட்டது.


சுந்தர லிங்கம், மிகுந்த சக்தி வாய்ந்த கடவுள். சித்தரான அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாலும், சித்த புருஷர்களாலேயே பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தப் பட்டதாலும் இவருக்கு சக்தி அதிகம். இவரிடம் வைக்கும் எந்த ஒரு பிரார்த்தனையும் வீண் போவதில்லை. 


அருளை வழங்குவது சதுரகிரியின் பிரதான மூர்த்திகளான சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம்; பொருளை வழங்குவது சுந்தர லிங்கம். 


இவருக்கு நடைபெறும் அபிஷேகங்களும் ஆரத்தியும் அற்புதமானவை.

பக்தர்கள் வேண்டும் வரம் அருளி, அருள் பாலித்து வரும் சுந்தரலிங்கத்தின் திருச்சந்நிதியில் பக்தர்களால் பாடப்படும் பாடல்கள், நமசிவாய கோஷ முழக்கங்கள் ஆகியவை சதுரகிரி முழுதும் பரவி எதிரொலிக்கும். எங்கெங்கிருந்தெல்லாமோ இங்கு வந்து திரளும் பக்தர்கள் தங்களது பக்திப் பெருக்கை இந்தப் பரவெளியில் பகிர்ந்து கொள்வார்கள். இந்தக் காட்சியைக் காண அவன் அருள் வேண்டும். 


நள்ளிரவு பன்னிரண்டு மணி வாக்கில், சுந்தரலிங்கம் சந்நிதிக்கு அருகே செல்லக் கூடாது என்பர். காரணம், அந்த நேரத்தில் பஜனைப் பாடல்களின் முழக்கங்கள் வெகு சன்னமாகக் கேட்குமாம். இந்த பஜனையை நிகழ்த்துபவர்கள் பக்தர்கள் அல்ல; சித்தர்கள். இந்த வேளையில் பூசாரிகள் உட்பட எவருமே சுந்தர லிங்கம் சந்நிதியின் அருகே செல்ல மாட்டார்கள்.


இந்தப் பாடல்களின் முழக்கத்தைக் கேட்கும் பேறு, அதிர்ஷ்டம் உள்ள ஒரு சில பக்தர்களுக்கு மட்டும்தான் வாய்க்கப் பெறும். அதில் ஒரு அபூர்வ பக்தர் சுந்தரம் என்பவர். சாப்டூரைச் சேர்ந்தவர். இவர் ஒரு நாவிதர் (முடி திருத்துபவர்). அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் சதுரகிரிக்கு வந்து, நேர்ந்து கொண்ட பக்தர்களுக்கு மொட்டை அடித்து விடுவார். ஊரில் இருந்து வரும்போது சில தேங்காய்களையும் கொண்டு வந்து விற்பார்.

அது நவராத்திரி கொண்டாட்டங்கள் முடிகிற நேரம்... சதுரகிரியே களைகட்டி ஓய்ந்திருந்தது. சுந்தரத்துக்கும் ஓரளவு வருமானம் சேர்ந்தது. மலை மேல் இருந்தவர்கள் எல்லாம் தங்கள் ஜாகையைக் காலி செய்து புறப்பட்டு விட்டனர். சுந்தரத்துக்கு கொஞ்சம் அசதியாக இருக்கவே, ‘சற்று ஓய்வெடுத்துக் கொண்டு பிறகு செல்லலாம்!’ என்று தீர்மானித்து சுந்தர லிங்கம் சந்நிதியின் அருகே அமர்ந்தார். அப்போது ஆலய அதிகாரி ஒருவர், ‘‘என்னப்பா சுந்தரம்... பசியோட இருக்கே போலிருக்கு. இந்தாப்பா. சுந்தர லிங்கம் பிரசாதம். சாப்பிடு’’ என்று ஒரு சில தேங்காய் மூடிகளையும் வெல்லக் கட்டியையும் கொடுத்தார்.


தேங்காய் மூடிகளைத் துருவலாகத் துருவிக் கொண்டு, அதில் வெல்லத்தைக் கலந்த சுந்தரம், ஒரு பிடி எடுத்துச் சாப்பிடலாம் என்று வாய் அருகே கொண்டு போனார். அப்போது, சற்றுத் தொலைவில் சுந்தரலிங்கம் சந்நிதிக்கு எதிரே துறவி ஒருவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அதிசயித்தார். ஏனெனில், அங்கு இவரைத் தவிர வேறு எவருமே இல்லை. இவருக்கு பிரசாதம் தந்த ஆலய அதிகாரியும் புறப்பட்டுச் சென்று விட்டார். வியப்படைந்த சுந்தரம், ‘யார் இவர்?’ என எண்ணியபடி அவரின் அருகே சென்றார்.


காவி நிற உடை, நெற்றி, மார்பு மற்றும் கைகளில் பளீரென்ற திருநீறு, கழுத்தில் ருத்திராட்சம், நீளமாகத் தொங்கும் தாடி, கண்களில் ஓர் அதீத ஒளி, கண்டவர் எவரும் விழுந்து வணங்கும் தெய்வீகத் தோற்றம்... சுந்தரமும், அதையே செய்தார்.


பிறகு, ‘‘சாமீ பிரசாதம் சாப்பிடுங்க. சுந்தர லிங்கத்துக்கு காணிக்கையா வந்த தேங்காய். வெல்லம் கலந்தது. டேஸ்ட்டா இருக்கும்!’’ என்று வெல்லம் கலந்த தேங்காய்த் துருவலை அவரிடம் பவ்யமாக நீட்டினார். ஒரு பிடி எடுத்துச் சாப்பிட்டு விட்டு, சுந்தரத்தைப் பார்த்துப் புன்னகைத்தார் அந்தத் துறவி. 


அதற்கு மேல் அவர் அருகில் நிற்க முடியவில்லை சுந்தரத்தால். கால்கள் பின்னுக்கு இழுத்தன. அவர் கண்களைத் தூக்கம் தழுவியது. தடுமாறி மெள்ள நடந்து வந்து, சுந்தர லிங்கம் சந்நிதியை விட்டுச் சற்றுத் தள்ளி இருக்கும் பலகை ஒன்றில் சாய்ந்து படுத்தார்.


‘எவ்வளவு நேரம் தூங்கினோம்’ என்பது சுந்தரத்துக்குத் தெரியாது. 

எங்கோ பஜனைப் பாடல்கள் பாடும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தார். எங்கும் கும்மிருட்டு! ‘எல்லோரும் போய் விட்ட பிறகு, யார் புதிதாக வந்து பஜனை செய்கிறார்கள்?’ என்று எழுந்து உட்கார்ந்தவர், கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தார்.


சற்றுத் தள்ளி சுந்தரலிங்கம் சந்நிதியின் முன் கண்களைக் கூச வைக்கும் பிரமாண்ட ஒளி வெள்ளத்தைக் கண்டு (மலைக்கு மேலே மின்சார வசதி கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது) பிரமித்தார். அங்குதான் பஜனை நடக்கிறது என்று யூகித்தபடி எழுந்து நடந்தார். ‘அந்த நேரத்தில், அங்கு செல்லக் கூடாது’ என்பது, அப்பாவி பக்தன் சுந்தரத்துக்கு அப்போது தெரியாது!


தன்னைக் கண் விழிக்கச் செய்த பஜனை முழக்கத்தையும், சுந்தரலிங்கம் சந்நிதியின் முன் பிரமாண்டமான ஒளி வெள்ளத்தையும் கண்டு மிரண்ட சுந்தரம், பதைபதைப்புடன் எழுந்து நடந்தார். அந்த நேரத்தில் சுந்தரம் தன்னிலையில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க கால்கள் தகராறு செய்தன. இதோ, அவரின் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டும் தொலைவில் பஜனை முழக்கம் துல்லியமாகக் கேட்கிறது; பார்க்க முடிகிறது.


காவி நிற உடை தரித்த சாதுக்கள், வட்டம் என்று வர்ணிக்க முடியாத ஒரு வடிவத்திலும், சதுரம் என்று குறிப்பிட முடியாத ஒரு அமைப்பிலும், ஆனால், மிக அழகாக நேர்த்தியாக சுந்தர லிங்கம் சந்நிதியின் முன் கூடி இருந்ததைப் பார்த்து சுந்தரம் பிரமித்துப் போய் விட்டார்.


நவராத்திரி திருவிழாவுக்காக சதுரகிரிக்கு வந்த பக்தர்கள் அனைவரும் மலையை விட்டு நண்பகல் வேளையிலேயே இறங்கி விட்டனர் என்பதை சுந்தரம் நன்கு அறிவார். மகாலிங்கம் கோயில் பூசாரிகள் தங்களுக்கான இடங்களில், பத்து நாள் திருவிழா ஓய்ந்த களைப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். புதியவர்கள் எவரும் மாலை வேளையில் மலைக்கு வரவில்லை. அதனால்தான், முன்னறிவிப்பே இல்லாமல் மலைக்கு வந்து சேர்ந்த இந்த பஜனைக் கூட்டத்தை சுந்தர லிங்கம் சந்நிதி முன் பார்த்த சுந்தரம், வெலவெலத்துப் போய் விட்டார்.


பஜனை நடக்கும் இடத்தை நோக்கி சுந்தரத்தின் கால்கள் தளர்வாக நடை போட்டன. மத்தளத்தின் சத்தமும் டோலக்கின் இசையும் சன்னமாகக் காற்றில் மிதந்து வந்தது. பஜனை நடக்கும் இடத்தை சுந்தரம் இன்னும் நெருங்கவில்லை. சுமார் ஐம்பதடி தொலைவில் அவர் இருந்திருக்கலாம்.


கழுத்தில் புரளும் ருத்திராட்சமும், மேனியில் துலங்கும் திருநீறும் பளீரிட, நமக்கெல்லாம் நாயகனான அந்த நமசிவாயனின் நாமத்தை ராகத்துடன் இசைத்தபடி பஜனை, களை கட்டி இருந்தது. கணீரென்ற குரலும் கலீரென்ற இசையும் ஒன்றுக்கொன்று சளைத்தது போல் இல்லாமல் போட்டி போட்டுக் கொண்டு கம்பீரம் காட்டின. சதுரகிரி வனத்தில் இருந்த ஒவ்வொரு புல் பூண்டும், நெடிதுயர்ந்த மரங்களும், உயிர்வாழ் ஜந்துக்களும் அந்த நாம கீதத்தில் லயித்திருந்தன போலும். வேறு எத்தகைய ஓர் அசைவும் அப்போது இல்லை, சுந்தரத்தின் தளர்வான நடமாட்டம் தவிர.


பஜனை முழக்கமாக ஓங்கி உயர்ந்து வந்த வெங்கலக் குரலோசையில் தன்னை மறந்து, சுந்தரலிங்கம் சந்நிதியின் மிக அருகே சென்ற சுந்தரத்துக்கு, அங்கே வாத்தியங்களை இசைத்துக் கொண்டிருந்த ஒவ்வொருவரின் முகமும், கைகளை இப்படியும் அப்படியும் ஆட்டி ஆலாபனை செய்து பாடல்களை ஆனந்தமாகப் பாடிக் கொண்டிருந்தவர்களின் முகமும் தெள்ளத் தெளிவாகவே தெரிந்தது. அவர்கள் ஒவ்வொருவரையும் கண் கொட்டாமல் பார்த்தார்; மனதில் என்னவோ தோன்ற ஒரு கட்டத் தில் அந்தக் குழுவினரைப் பார்த்துக் கன்னத்திலும் போட்டுக் கொண்டார்.


ஆனால், அவர்களிடம் இருந்து மட்டும் சுந்தரத்துக்கு எந்த ஒரு ரியாக்ஷனும் வரவில்லை. இவர் மட்டும் எல்லோரைப் பார்த்தும் சிநேகமாக ஒரு புன்னகையைப் பூத்தார். ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டே வந்த சுந்தரம் அந்தக் கூட்டத்தில் நடுநாயகமாகத் தெரிந்த அந்த ஜோதிசொரூபமான நபரைப் பார்த்ததும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போனார்.


சதுரகிரியை விட்டு எல்லோரும் கிளம்பி விட்ட அந்த நண்பகல் வேளையில் ஒரே ஒரு துறவி மட்டும் சுந்தர லிங்கம் சந்நிதிக்கு எதிரே அமர்ந்திருப்பதைப் பார்த்தார் அல்லவா? அந்தத் துறவியிடம் கூட, ‘சாமீ... பிரசாதம் சாப்பிடுங்க. சுந்தர லிங்கத்துக்குக் காணிக்கையா வந்த தேங்காய். வெல்லம் கலந்தது. டேஸ்ட்டா இருக்கும்!’ என்று பவ்யமாக நீட்டினார் அல்லவா? அதற்கு அந்தத் துறவி கூட ஒரு பிடி எடுத்துச் சாப்பிட்டு, சுந்தரத்தைப் பார்த்துப் புன்னகைத்தாரே... அதே துறவி! அவர்தான் இந்த பிரமாண்ட பஜனை கோஷ்டிக்கு நடுவே சம்மணமிட்டு அமர்ந்து, ஒட்டுமொத்த குழுவையே தன் கண்களால் இயக்கிக் கொண்டிருந்தார்! குழுவை மட்டுமல்ல... கோடானு கோடி உயிர்கள் வாழும் இந்த உலகத்தையே இயக்குபவரும் அவர்தான் என்பதை ஒரு சில விநாடிகளுக்குப் பிறகே சுந்தரம் உணர்ந்தார்.


ஆயிரம் வாட்ஸ் பல்புகள் அனைத்தும் ஒரே கணத்தில் ஆஃப் ஆகிப் போனது போல் இருந்தது. மையிருட்டு. ஒட்டு மொத்த வனமே இருளாகிப் போனது. இரவு வேளையில் பூஜைக்குப் பின் ஏற்றி வைத்த எண்ணெய் விளக்கு, கருவறையில் சுந்தர லிங்கத்துக்கு அருகே செந்நிறத்தில் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது. வானத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. அவற்றுள் சில மட்டும், பெயர் சொல்லும்படி தனித்துத் தெரிந்தன.


‘அட... மத்தியானம் நான் கொடுத்த தேங்காய்த் துருவலைப் புன்னகையோடு வாங்கிச் சாப்பிட்ட சாமீ... இவருதான் இந்த பஜனைக் கோஷ்டிக்கே தலைவரா... எந்த ஊரா இருக்கும்... கோவில்பட்டி? ராஜபாளையம்? ஸ்ரீவில்லிபுத்தூர்?’ என்று சிந்தித்த சுந்தரம், அவரையே கேட்டு விடலாம் என்று தீர்மானித்து துறவியை நெருங்கி, ‘‘சாமீமீ.....’’ என்று உருக்கமாகக் குரல் கொடுத்த அந்த விநாடியில், சுந்தரத்துக்கு உலுக்கிப் போட்டது உடம்பு.


சுந்தர லிங்கம் சந்நிதிக்கு முன் எவருமே இல்லை. சற்று முன், தன் கண்களால் மிகப் பெரிய பஜனை கோஷ்டியினர், அமுத கானம் பொழிந்து கொண்டிருப்பதைக் கண்ட சுந்தரத்துக்கு இந்த வெறுமையான காட்சி மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. அப்படி என்றால், சில விநாடிகளுக்கு முன் தான் கண்டு வியந்த காட்சி..? மதியம் தன்னிடம் வெல்லம் கலந்த தேங்காய்த் துருவல் வாங்கிச் சாப்பிட்ட அந்தத் துறவி யார்?


நடந்து முடிந்த இந்த சம்பவங்களுக்கு மௌன சாட்சியாக இருக்கும் சுந்தர லிங்கத்தைப் பார்த்துக் கதறினார் சுந்தரம். தரையில் விழுந்து ஒற்றை ஆளாக ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார். ‘‘மகாலிங்கமே, மலைமேல் அருளாட்சி புரியும் மகேசனே, மனித ரூபத்தில் வந்து நீ நடத்திய நாடகத்தைக் காணும் அற்புதப் பேறை எனக்கு அளித்தாயே. உனக்கு உதவிகள் செய்ய எத்தனையோ அன்பர்கள் காத்திருக்கும்போது எளியவனான என்னைத் தேடி வந்தாயே. அன்புடன் நான் கொடுத்த தேங்காய்த் துருவலை வாங்கிச் சாப்பிட்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தாயே. ஆனால், பஜனை நடக்கும் வேளையில் புகுந்து உன் கானத்தைத் தடுத்து விட்டேனே. என்னை மன்னித்து விடு. நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த என்னை, பஜனை முழக்கத்தால் எழச் செய்ததும் நீதான்! இந்த சதுரகிரியில் வாழும் சித்தர்களுடன் நீ நடத்தும் நாம கோஷங்களை நான் காணச் செய்யும் பாக்கியத்தை அளித்ததும் நீதான்!’’ என்று அரற்றினார். 


நண்பகலில் தேங்காய்த் துருவல் சாப்பிட்டதும், நடுநிசியில் பஜனை முழக்கம் செய்ததும், சாட்சாத் அந்த மகாலிங்கம் தவிர வேறு யாராக இருக்க முடியும்?


சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சந்நிதிகளில் பணி புரியும் பூசாரிகள் கூட நள்ளிரவு நேரத்தில், சுந்தரலிங்கத்தின் சந்நிதி அருகே வர மாட்டார்கள். சித்தர்கள் அந்த நேரத்தில் வழிபடவும் வரலாம்; வாய்ப் பாட்டு பாடவும் வரலாம். 


பல வருடங்களுக்கு முன் இங்கு பணி புரிந்து வந்த ஒரு பூசாரிக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒரு பெரியவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்: ‘‘சுந்தரலிங்கம் சந்நிதிக்குப் பக்கத்துல படுத்திருந்த அந்தப் பூசாரி நள்ளிரவில் இயற்கை உபாதைக்காக வெளியே வந்தார். சுந்தர லிங்கம் சந்நிதிக்கு அருகே இருக்கும் படிக்கட்டுகளில் சுமார் ஏழடி உயரமுள்ள ஒருவர் இறங்கிச் செல்வதைப் பார்த்தார். அவர் யார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ஆர்வக்கோளாறில் பின்னாடியே சென்றார். நான்கு படி கீழிறங்கிய அந்த உருவம், சட்டென்று திரும்பி பூசாரியைப் பார்க்க, திடுக்கிட்டார். அந்த உருவத்தின் கண்கள் பளிங்கு போல் இருந்தது. கண்களில் இருந்து தகதகவென ஒளி வெள்ளம் பாய்ந்து வந்தது. அதைச் சில விநாடிகள் தொடர்ந்து பார்த்ததால், பூசாரியின் கண்கள் ஏகத்துக்கும் கூசின. இரண்டு கண்களையும் கைகளால் பொத்திக் கொண்டு, தனது இருப்பிடத்துக்கு ஓடியே வந்து விட்டார்...’’ 


இதுபோல் நிறைய அனுபவங்களை மலையில் வாழ்ந்தவர்களும், மலைக்கு வந்து செல்பவர்களும் சொல்கிறார்கள்.


சிவமென்னும் அற்புதம். 

அலை பாயும் மனதிற்கு ஒரு சம்மட்டி அடி கொடுத்து, அதன் ஆதிமூலம் உணரவைக்கும் உண்மையின் உறைவிடம் சிவம். 

சிவத்தை உணர்ந்தால் ஞானம். சிவமே எல்லாம். சிவமே எங்கும். சிவமே எங்கெங்கும்.

நாள் தோறும் அழிந்துகொண்டிருக்கும் இந்த பூதஉடலுள்ளே ஒரு தற்காலிக பயணம் செய்துகொண்டிருக்கும் பேராற்றல் நாயகனின் இந்த உயிர் என்ற தூசியும் ஒரு சிவமே. 

ஒன்றை மற்றொண்டாய் மாற்றுவதும் சிவமே.


.....

வலைத்தளம்/வலைப்பூ பதிவுகள் படித்து அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.

வலைத்தளம்/வலைப்பூ பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்தும் நான் படித்து திரட்டிய தகவல்கள். என்னுடைய ஆக்கங்கள் இல்லை.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள் (GOOGLE IMAGES)

.....









Tuesday, October 30, 2018

சதுரகிரி அதிசயங்களும் அற்புதங்களும் ... (6)


தைலக் கிணறு ...


தைலக் கிணறு இருக்கக் கூடிய இடம் ஒரு மர்மமான பூமி. எவருடைய பார்வைக்கும் அந்தப் பிரதேசம் தட்டுப்படவே படாது. இரும்பைத் தங்கமாக்க உதவும் மூலிகைகளும், ஏராளமான தங்கப் புதையல்களும் அடங்கிய பூமி. விலை மதிப்பில்லாத இந்த பொக்கிஷங்களை பல நூற்றாண்டுகளாக காவல் காத்து வருகிறார் பிலாவடி கருப்பர். கற்சிலை வடிவில் இந்த சதுரகிரி மலைக்கே காவல் தெய்வமாக வீற்றிருந்து, தனது கண்காணிப்பின் மூலம் இந்தப் பணியைத் அவர் தொடர்கிறார். இன்றளவும் பாதுகாக்கப்படுவதாகச் சொல்லப் படுகிறது.





சதுரகிரி யாத்திரையின் இறுதிக் கட்டமாக இருப்பது இந்த பிலாவடிக் கருப்பர் குடி கொண்டுள்ள ரம்மியமான பிரதேசம். ஒரு மண்டபம் போல் அமைந்துள்ளது பிலாவடி கருப்பர் சந்நிதி. உள்ளே பழைய கருப்பர் இருக்கிறார்; புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கம்பீரமான கருப்பரும் இருக்கிறார். மலைக்கு மேலே செல்லும்போதும், கீழே இறங்கும்போதும் இவரிடம் உத்தரவு வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும். ஒரு கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து மனமார வழிபட்டாலே போதும், கருப்பரின் அருளாசி கிடைத்து விடும்.


இந்த சந்நிதிக்கு அருகில்தான் சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் ஸ்வாமி ஆலயங்கள்! பிலாவடிக் கருப்பர் ஆலயத்தில் இருந்து சிறிது தொலைவு நடைபயணத்துக்குப் பின் வலப் பக்கம் சென்றால், சுந்தர மகாலிங்கம்; இடப் பக்கம் சந்தன மகாலிங்கம்.


பெரிதான பலா மரத்தின் ஒரே ஒரு காய் மட்டும் சந்நிதியின் உள்ளே கருப்பரின் அருகே காய்த்துத் தொங்குகிறது. ‘‘எப்போதும் கருப்பருக்குப் பக்கத்தில் சுமாரான சைஸில் ஒரு பலாக்காய் காய்த்துத் தொங்கிக் கொண்டிருக்கும். இது முற்றி விழுந்து விட்டால் அடுத்து அதே இடத்தில் இன்னொரு காய் காய்க்கும். இந்த அதிசயம் பல வருடங்களாக நடந்து கொண்டே வருகிறது!’’ என்றார் கருப்பருக்கு பூஜை செய்து கொண்டிருந்த பூசாரி.


பொக்கிஷங்களும் சித்த ரகசியங்களும் அடங்கிய தைலக் கிணறு பிலாவடிக் கருப்பர் சந்நிதியின் அருகே உள்ளது. எவருடைய பார்வைக்கும் தட்டுப்படாது அந்தத் தைலக் கிணறு.


தைலக் கிணறு உருவான வரலாறு .....


ஆதி காலத்தில் வாலைபுரம் எனப்படும் வளமான ஒரு கிராமத்தில் வாமதேவன் என்ற வியாபாரி வசித்து வந்தான். இறை பக்தி அதிகம் கொண்டவன். வியாபாரத்தின் மூலம் தான் சேர்த்த பொருளை வைத்து, தேர்ந்த ஸ்தபதிகளை வரவழைத்து கிராமத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டும் பணியை ஒரு சுப தினத்தில் துவக்கினான். வேலைகள் துரித கதியில் நடந்தது கண்டு ஆனந்தப்பட்டான் வாமதேவன்.


ஆனால், ஒரு கட்டத்தில் பணிகள் ஸ்தம்பித்து நின்றன. காரணம், வாமதேவனிடம் இருந்த பொருள் மொத்தமும் அதுவரை நடந்த கட்டு மானப் பணிகளுக்காகச் செலவாகிப் போயிருந்ததுதான். இதற்கு மேல் கோயில் வேலைகளைத் தொடர வேண்டுமானால், பொருள் தேவை என்ற நிலைமை.


வாமதேவன் கவலை அடைந்தான். தனது கிராமத்துக்கு அருகில் இருக்கும் சில மன்னர்களிடம் போய், தான் கட்டி வரும் கோயில் பற்றிச் சொல்லி, தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளப் பொருளுதவி கேட்டான். ‘தனி ஒருவனை நம்பிப் பொருள் உதவுவதா?’ என்று வாமதேவனின் நாணயத்தின் மேல் சந்தேகப்பட்ட மன்னர்கள் பலரும் அவனை வெறுங் கையோடு திருப்பி அனுப்பினர். 

 

ஒரு நாள் அவன் சோகத்துடன் வந்து கொண்டிருந்தபோது எதிர்ப்பட்டார் ஒரு துறவி. பக்தி மணம் கமழும் அந்தத் துறவியின் தேஜஸைக் கண்டு மெய்சிலிர்த்து, அவர் பாதம் பணிந்து நமஸ்கரித்து எழுந்து, தனது குறைகள் எல்லாவற்றையும் விலாவாரியாகச் சொன்னான்.


‘‘கவலைப்படாதே வாமதேவா. உனது எண்ணம் நிறைவேற வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது. ஆத்மார்த்தமான பக்தியுடன் நீ கோயில் கட்டி வருவது உண்மையானால், அந்தப் பணி செவ்வனே முடிய ஒரே ஒரு வழி உண்டு. உபாயத்தைக் கேள். சதுரகிரியை நோக்கி உனது பயணத்தை உடனே துவக்கு. அங்கே காலாங்கி முனிவர் என்ற சித்தர் இருக்கிறார். மிகப் பெரும் தவசீலர். அங்கே அவரை வணங்கி, உனது விருப்பத்தைச் சொல். எல்லாம் சுபமாக நிறைவேறும்!’’ என்றார்.


தொடர்ந்து கோயிலைக் கட்டி முடிக்க புதிய வழி தெரிந்து விட்டதில் பெரிதும் பூரிப்படைந்த வாமதேவன், துறவியின் ஆசிர்வாதங்களோடு, சதுரகிரியை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கினான். காடு, மலை எல்லாம் கடந்து சித்த புருஷர்கள் வாழும் உயர்ந்த மலையாம் சதுரகிரியை அடைந்தான். அங்கே காலாங்கி வனத்தில் ஆசிரமம் அமைத்துத் தங்கி இருந்த காலாங்கிநாதரைச் சந்தித்தான். அவரைப் பணிந்து வணங்கினான். புன்னகையுடன் ஆசீர்வதித்தார் காலாங்கிநாதர். திருமூலரின் மாணாக்கராக இருந்த சித்த புருஷர் இவர்!





நெடுந்தொலைவில் இருந்து வந்தவன் என்பதால் வாமதேவனிடம் ஆற அமர அனைத்தையும் விசாரித்தார் காலாங்கிநாதர். கிராமத்தில் கோயில் அமைக்கத் தொடங்கியதில் இருந்து தற்போதைய நிலை வரை எல்லாவற்றையும் விரிவாகச் சொன்னான் வாமதேவன். 


‘இவனுக்கு உதவி செய்யலாம். தப்பில்லை!’ என்று தீர்மானித்த காலாங்கிநாதர் ஒரு கணம் சிந்தித்தார். ‘வந்திருக்கும் இவன் நிஜமாகவே நல்லவன்தானா? ஆலயத் திருப்பணி அது இது என்று சொல்லி சிலர் பணம் வாங்கி, தங்களது சுய தேவைகளுக்குப் பயன்படுத்தி வரும் காலத்தில், இவனுக்கு நாம் பொருளுதவி செய்ய நினைப்பது நியாயமா? இவனும் ஒருவேளை தவறான ஆசாமியாக இருந்து விட்டால்?’ என்று சிந்தித்தார் காலாங்கிநாதர்.


தவிட்டையும் தங்கமாக மாற்றும் வல்லமை கொண்ட அந்த சித்த புருஷர், தயக்கத்துடன் நிற்பது வாமதேவனுக்குக் கலக்கத்தை உண்டு பண்ணியது! அனுகூலமான பதில் எதுவும் அவரிடம் இருந்து கிடைக்கவில்லை. எனினும், தன் முயற்சியில் இருந்து சற்றும் பின்வாங்காத வாமதேவன், ‘என்றைக்கேனும் ஒரு நாள் இந்த முனிவர் நிச்சயம் உதவுவார்!’ என்று மனப்பூர்வமாக நம்பி, காலாங்கிநாதரின் ஆசிரமத்திலேயே தங்கி, அவருக்குப் பணிவிடைகள் செய்ய ஆரம்பித்தான்.


நாட்கள் ஓடின. தான் எதற்காக சதுரகிரிக்கு வந்து, காலாங்கிநாதருக்கு உதவிக் கொண்டிருக்கிறோம் என்பதையே ஒரு கட்டத்தில் மறந்தான் வாமதேவன். அந்த அளவுக்கு மிகுந்த சிரத்தையாக காலாங்கிநாதர் இட்ட பணிகளை சிரமேற்கொண்டு செயல்பட்டான். 


எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாமல் தனக்கு உதவுவதையே ஒரு பாக்கியமாக எண்ணி வாழ்ந்து வந்த வாமதேவனின் செயல், காலாங்கிநாதருக்கு இரக்கத்தை வரவழைத்தது. ‘கோயில் கட்டுவதற்கு உதவி கேட்டு வந்தவனுக்கு உதவ மறுத்து விட்டோம். இது போன்ற சந்தப்பங்களில் சாதாரண மனிதன் என்றால் என்ன பண்ணுவான்? சட்டென்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு ‘நீ இல்லாவிட்டால் என்ன... அடுத்த ஆளைப் பார்க் கிறேன்!’ என்று உடனே புறப்பட்டு விடுவான். ஆனால், இவன் அசையவில்லையே... எனக்கு உதவுவதையே சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு தங்கி விட்டானே... இவன் எந்த உதவியைக் கேட்டு இங்கு வந்தானோ, அந்த உதவியை இப்போது செய்வது அவசியம்!’ என்று முடிவெடுத்தார் காலாங்கிநாதர்.


ஒரு நாள் வாமதேவனை அருகில் அழைத்த காலாங்கிநாதர், சிவன் கோயில் கட்டுவதற்கு, தான் உதவத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்தார். வாமதேவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! 


காலாங்கிநாதர் உரோம வேங்கை, உதிரவேங்கை, ஜோதி விருட்சம், கருநெல்லி போன்ற மூலிகைகளாலும், 32 வகையான பாஷாணச் சரக்குகளாலும், இன்னும் சில பொருட்களாலும் தைலம் ஒன்று தயாரித்தார். இந்தத் தைலத்தில் எந்த ஓர் உலோகத்தையும் - அது இரும்பாக இருந்தாலும் சரி, செம்பாக இருந்தாலும் சரி - உள்ளே முக்கி நனைத்து எடுத்தால் சொக்கத் தங்கமாக மாறிவிடும். அதில் சாதாரண சில உலோகங்களை நனைத்து, சொக்கத் தங்கக் கட்டிகளாக மாற்றி வாமதேவனிடம் கொடுத்தார். 


‘‘இந்தத் தங்கக் கட்டிகளை விற்றுக் காசாக்கி, கோயில் திருப்பணிகளைச் சிறப்பாக முடி. இறைவனின் ஆசீர்வாதம் உனக்கு உண்டு!’’ என்று ஆசி கூறி அவனை அனுப்பினார். மனம் நிறைய மகிழ்ச்சியுடன் வாமதேவன் புறப்பட்டுப் போய், கோயில் கட்டும் மீண்டும் பணியை துவங்கினான்.


வாமதேவனின் தேவைக்குக் கொடுத்தது போக, தைலம் அவரிடம் மீதம் இருந்தது. ‘இத்தகைய தைலத்தைக் கையில் வைத்துக் கொண்டிருப்பது ஆபத்து. எந்த ஒரு துஷ்டனிடமாவது இது கிடைத்து விட்டால், பேராசைக்காகத் தங்கம் செய்ய ஆரம்பித்து விடுவான். அது, சில துர்ச் சம்பவங்களுக்குக் காரணமாகி விடும். எனவே, இதை ஓரிடத்தில் பத்திரப்படுத்திக் காவலுக்கு ஆட்களை நியமிக்க வேண்டும்!’என்று முடிவெடுத்தார் காலாங்கிநாதர்.


இதற்காகப் பெரிய கிணறு ஒன்றை வெட்டி, எஞ்சி இருந்த தைலத்தை அதில் கொட்டினார்; வாம தேவனின் தேவைக்குக் கொடுத்தது போக, எஞ்சி இருந்த தங்கக் கட்டிகளையும் அதில் போட்டார். கிணற்றை பத்திரமாக மூடினார். இந்த பொக்கிஷத்தைக் காவல் காக்கவும், சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் ஆகிய சந்நிதிகளைக் கவனித்து வருவதற்காகவும் மந்திரங்கள் ஜபித்து திசைக்கு ஒரு காவல் தெய்வத்தை நியமித்தார். அப்படி நியமிக்கப்பட்ட தெய்வங்களில் ஒன்றுதான் பிலாவடி கருப்பர்.


காலாங்கிநாதர் உருவாக்கிய பிரம்ம தீர்த்தம், பிலாவடிக் கருப்பர் சந்நிதிக்கு முன்னால் ஓடுகிறது. மழைக் காலத்தில் இந்த பிரம்ம தீர்த்தத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடும். இதில் மூழ்கி எழுந்து பிலாவடி கருப்பரை வணங்கினால், எத்தகைய பாவமும் அகன்று, புண்ணிய வாழ்வு கிடைக்கும் என்று புராணம் சொல்கிறது.


தலைமுறைகளையும் தாண்டி தைலக் கிணறு இன்றைக்கும் ஒரு மர்மப் பிரதேசம்தான்!

தங்கம் தயாரிக்கத் தேவையான சில மூலிகைச் செடிகள் சதுரகிரி மலையில் இன்றும் இருக்கின்றன.


சமீப காலத்தில் ஒரு குடும்பத்தினர் சதுரகிரிக்கு வந்து தரிசித்து விட்டுத் திரும்ப வந்துகொண்டு இருக்கும்போது, அவர்களில் ஒரு இளம் பெண் இயற்கை உபாதைக்கு ஒதுங்கி திரும்பிய போது அவளது கால்களைப் பார்த்த பெற்றோருக்கு பிரமிப்பு. 


அவள் கால்களில் இருந்த ஒரு வெள்ளிக் கொலுசு, தங்கக் கொலுசாக மாறி இருந்தது. அந்தப் பெண்ணுக்கும் வியப்பு. இது எப்படி மாறியது என்று அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை. பிறகுதான் அவர்களுக்கு விவரம் தெரிந்தது, 'தங்கம் தயாரிக்கப் பயன்படும் ஒரு வித மூலிகைச் செடி அவள் கால்களில் படவே, அது தங்கமாக மாறியது' என்று.


அதன் பிறகு, இந்தச் செடியை அதே இடத்தில் தேடிச் சென்ற சில பேராசைக்காரர்களுக்கு அங்கே இருந்த வேறு சில செடிகள் பட்டு கண் எரிச்சலும், உடல் அரிப்பும் ஏற்பட்டதுதான் மிச்சம்.


எம் நாயகனே, எம் பெருமானே, பேரொளியே, ஈசனே, உள்ளும் புறமும் நீ, உணர்வும் நீ, உடலும் நீ, உள்ஒளியும் நீ, எல்லாம் நினது திருவருளே.



.....

வலைத்தளம்/வலைப்பூ பதிவுகள் படித்து அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.

வலைத்தளம்/வலைப்பூ பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்தும் நான் படித்து திரட்டிய தகவல்கள். என்னுடைய ஆக்கங்கள் இல்லை.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள் (GOOGLE IMAGES)

.....

Sunday, October 28, 2018

சதுரகிரி அதிசயங்களும் அற்புதங்களும் ... (5)




உண்மையான பக்தியுடன் புறப்படும் எந்த ஒரு பக்தரும், ‘சதுரகிரி மலைக்குச் சென்று சுந்தர மஹாலிங்கத்தையும் சந்தன மஹாலிங்கத்தையும் கண் குளிர தரிசிக்க வேண்டும்என்று நினைத்து மலை ஏற ஆரம்பித்து விட்டால், சம்பந்தப்பட்ட பக்தரை மலைக்கு மேல் பத்திரமாக அழைத்துக் கொள்வது சதுரகிரியில் வாழும் சுந்தர மஹாலிங்கம் பொறுப்பு. எந்தச் சிரமமும் இல்லாமல் அவர்களைத் தனது சந்நிதிக்கு அழைத்து தரிசனம் தந்து விடுவார்கள் சுந்தர மஹாலிங்கமும், சந்தன மஹாலிங்கமும்


இதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்களைக் கூறலாம். 

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ஆன்மிக அன்பர் ஒருவர் விவரித்த ஒரு சம்பவம்:


தன்னை தரிசிக்க வரும் எவரையும் எந்த விதச் சிரமத்துக்கும் உள்ளாக்குவதில்லை மலையில் குடிகொண்டுள்ள சுந்தரமஹாலிங்க ஸ்வாமிகள். மலைப் பாதையின் சில இடங்களில் பக்தர்கள் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது பாதை இரண்டாகப் பிரியும். எந்த வழியே சென்றால் சதுரகிரி மலை உச்சியை அடையலாம் என்பது பக்தருக்குத் தெரியாது. தவறான வழியே பயணப்பட்டு விட்டால், சூரிய வெளிச்சம் கூட விழாத அடர்ந்த கானகத்துக்குள் போய் மாட்டிக் கொண்டு விடுவோம். நாம் பத்திரமாகத் திரும்புவதற்கு வழி சொல்ல அங்கே யாருமே கிடைக்க மாட்டார்கள். மலைப் பகுதியில் தவறான பாதையில் பயணித்து, ஒரு வாரம் கழித்து எந்த வித ஆபத்தும் இல்லாமல், இறைவனின் திருவருளால் திரும்பி வந்தவர்களும் இருக்கிறார்கள்.


சமீபத்தில் ஓர் அமாவாசை தரிசனத்துக்காக அடிக்கடி சதுரகிரிக்கு வந்து செல்லும் வழக்கம் உள்ள மூன்று அன்பர்கள், பொழுது சாய்ந்த வேளையில் மலைக்கு மேல் ஏற ஆரம்பித்தனர். பச்சரிசிமேடு என்ற இடத்தைத் தாண்டி அவர்கள் போய்க் கொண்டிருந்தபோது முதலில் சென்று கொண்டிருந்தவரின் டார்ச் லைட் திடுமென செயலற்றுப் போனது. பேட்டரிகளைக் கையில் எடுத்துத் துடைத்தார்; மாற்றிப் போட்டார். ஆனால், லைட் எரியவில்லை. 


‘பரவாயில்லை. நான் முன்னாலே போறேன். என் பின்னாலே வா’ என்றபடி அதுவரை நடுவில் சென்று கொண்டிருந்தவர், முன்னால் வெளிச்சம் ஏற்படுத்திக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். ஏற்கெனவே, முதலில் சென்றவர் இப்போது இவரைத் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்.


இருள் சூழ ஆரம்பித்ததும், தாங்கள் வைத்திருந்த டார்ச் லைட்டின் உதவியால், ஒருவர் பின் ஒருவராக, பாதையைப் பார்த்துப் பார்த்துப் பயணித்துக் கொண்டிருந்தனர்.


தற்போது முதலில் செல்பவரிடமும், மூன்றாவதாக வருபவரிடமும் டார்ச் லைட்கள் இருக்கின்றன. நடுவில் இருப்பவர் தட்டுத் தடுமாறிப் போய்க் கொண்டிருந்தார். இருபது அடி தொலைவு போயிருப்பார்கள். அதிர்ச்சி தரும் வகையில் முதலில் சென்று கொண்டிருந்தவரின் டார்ச் லைட்டும் சட்டென ஆஃப் ஆனது. அவர், சற்று நேரம் அங்கேயே நின்று என்னென்னவோ செய்து பார்த்தார். ஆனால், பிரயோஜனம் இல்லை. காரணம் புரியாமல் தவித்தார். 


எங்கும் கும்மிருட்டு. வனம் முழுதும் மையை அப்பிக் கொண்டது போல் காட்சி அளித்தது. மரம், செடி, கொடி, பாறை என்று எதுவுமே கண்களுக்குத் தெரியவில்லை. எதிரே எதன் மீதாவது மோத நேரிட்டால்தான் அது ஒரு மரம் என்பதையோ, பாறை என்பதையோ உணரமுடியும். அதேபோல் அங்கு அதல பாதாளங்களும் உண்டு. டார்ச் லைட் இருந்தால்தானே பள்ளம் மேடு, மரம் பாறை இவற்றைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள முடியும்?


இப்போது மூன்றாவதாக வந்த தாடிக்கார ஆசாமியின் டார்ச் லைட் மட்டுமே எரிந்து கொண்டிருந்தது. இவர் கொஞ்சம் விவரமானவர்; தைரியசாலியும்கூட! ‘கவலைப்படாதீங்க... என் பின்னாலயே வாங்க. நான் முன்னால டார்ச் லைட் அடிச்சுக்கிட்டே நடக்கிறேன். எல்லாத்தையும் மஹாலிங்கம் பாத்துக்குவான். பயப்படாம வாங்கஎன்று நடக்க ஆரம்பித்தார். ‘சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா... சந்தன மஹாலிங்கத்துக்கு அரோகராஎன்று மனதுக்குள் துதித்தபடி அந்த மூவருமே விறுவிறுவென நடை போட்டார்கள்.


அதேபோல் வெறும் பத்தடி தூரமே நடந்திருப்பார்கள். சொல்லி வைத்தது போல் தாடிக்காரரது டார்ச் லைட்டும் மக்கர் செய்தது. தனக்குத் தெரிந்த உத்திகளை எல்லாம் பயன்படுத்தி எப்படியாவது அதை ஒளிர வைத்துவிட வேண்டும் என்று அவர் பட்ட பாடெல்லாம் பயனற்றுப் போயின. இப்போது ஒருவர் அருகில் மற்றவர் நிற்பதே தெரியவில்லை. தொட்டுப் பார்த்தால்தான் ஒருவர் மற்றவரை உணர முடியும். 


தாடிக்கார ஆசாமிக்கு சட்டென ஏதோ ஒரு பொறி தட்டியது. அருகில் நின்றிந்த இருவரையும் தோளில் தொட்டு, ‘அப்படியே உக்காருங்க. நான் சொல்ற வரைக்கும் எதுவும் பேசாதீங்க’ என்று அவர்களின் காதில் கிசுகிசுத்தார். காரணம் இது போன்ற ஒரு திகில் அனுபவம் அந்த இருவருக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை. தாடிக்காரர் சொன்னபடி அப்படியே உட்கார்ந்தார்கள். தாடிக் காரரும் சம்மணமிட்டு அமர்ந்தார். 


இந்த மூவருமே மூச்சைக் கூட சத்தம் இல்லாமல் விட்டனர். ஒருவருக்கொருவர் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. சுமார் பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்கும். தனது டார்ச் லைட் எரிகிறதா என்று சும்மா கை வைத்துப் பார்த்தார் தாடிக்காரர்.


என்னே ஆச்சரியம்! தரையில் ஒளி வெள்ளமாகப் பாய்ந்தது. தாடிக்காரர் பிரகாசமானார். இதை அடுத்து முதலாமவர், இரண்டாமவர் ஆகியோரும் தங்கள் டார்ச் லைட்டில் கை வைக்க, அனைத்துமே பளீரென்று எரிய ஆரம்பித்தன. 


‘தரையைத் தவிர, வேற எங்கும் டார்ச் லைட் வெளிச்சத்தை அடிக்காதீங்க’ என்று கறாராகச் சொன்ன தாடிக்காரர், இவர்கள் அமர்ந்த இடத்தில் இருந்து சுமார் முப்பதடி தொலைவில் கை நீட்டிக் காட்டினார்.


அங்கே கண்ட காட்சி அவர்களை உறைய வைத்தது. சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட யானைகள், இவர்கள் செல்ல வேண்டிய பாதையைக் குறுக்காகக் கடந்து சென்று கொண்டிருந்தன. மரங்களையும், செடிகொடிகளையும் கடந்து ஏதோ ஒரு திசையைக் குறி வைத்து அவை கூட்டமாகச் சென்று கொண்டிருந்தன.


செடிகொடிகளின் சலசலப்பையும், பிரமாண்ட அந்த உருவ அமைப்பையும் வைத்து ‘அவை எல்லாம் யானைதான்’ என்று உறுதி செய்து கொண்ட இருவரின் முகமும் வெளிறிப் போயின. தாடிக்காரர், தனது ஜோல்னாப் பையில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து இருவருக்கும் குடிக்கத் தந்தார். அப்போதுதான் யானை போடும் லத்தியின் வாசனையையும் சிறுநீர் வாசனையையும் இருவரும் உணர்ந்தார்கள்.


பிறகு தாடிக்காரர் அந்த இருவரிடமும் சொன்னார்: ‘இப்ப நம்மளை எல்லாம் காப்பாத்தினது சாட்சாத் அந்த மஹாலிங்கம்தான். இந்த யானைங்கள்ல ஏதோ ஒரு யானைக்குச் சில நிமிடங்களுக்கு முன்னாலதான் பிரசவம் நடந்திருக்கணும். அதனால்தான், இத்தனை யானைங்களும் அதுக்குத் துணையா போயிட்டிருக்கு. பொதுவா, காட்டுலயே வசிக்கிற யானைங்களுக்கு நெருப்புனா ஆகாது.


டார்ச் லைட் வெளிச்சத்தை யானைங்க பாத்தா, யாரோ வேட்டைக்கார கும்பல் வந்திருக்கு போலிருக்குனு நாம மேல பாய்ஞ்சு, மிதிச்சிருக்கும். ஒட்டுமொத்தமா மூணு பேருமே காலி ஆகி இருப்போம்.


பிரசவிச்ச யானை இருக்கிற இடத்துக்கிட்டே நெருங்கினதும், மேற்கொண்டு பயணத்தைச் சில நிமிடங்களுக்கு நாம தொடரக் கூடாதுனு மஹாலிங்கம் தீர்மானிச்சிருக்கார். எனவே, நம்மளைக் காப்பாத்தறதுக்காக நாம ஒவ்வொருத்தரோட டார்ச் லைட்டையும் அடுத்தடுத்து இயங்காமல் செய்தது சாட்சாத் அந்தக் கருணாமூர்த்தி மகாலிங்கத்தோட வேலை. நம்மளை பத்திரமா மலைல கொண்டு போய்ச் சேக்கணும்கறதுக்காக அவரே நம்ம கூட வந்திட்டிருக்கார்என்று அவர் சொன்னதும், பொழச்சது மறு பொழப்புனு எல்லாருமே தீர்மானிச்சாங்க. அப்புறம் டார்ச் லைட் வெளிச்சத்தோட பத்திரமா அவங்க மலை ஏறிட்டாங்க...’’ என்று சொல்லி முடித்தார் அந்தத் திருமங்கலம் அன்பர்.


புரிய இயலா விந்தை புரியும் ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே, எம் பெருமானே, ஈசனே, எல்லாம் நினது திருவருளே. நின் பொற்பாதங்களில் சரணாகதி, சரணாகதி, சரணாகதி.

சிவமந்திரம், சிவதரிசனம், சிவவழிபாடு ... 

இவை மூன்றும் ஒவ்வொருவருடைய வாழ்கையிலும் மிகவும் இன்றியமையதாவை. 

இம்மூன்றுமே இந்த உலகத்தில் பிறவி எடுத்தவர்கள் நல்ல வழியைப் பெறுவதற்கு துணை.


.....

வலைத்தளம்/வலைப்பூ பதிவுகள் படித்து அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.

வலைத்தளம்/வலைப்பூ பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்தும் நான் படித்து திரட்டிய தகவல்கள். என்னுடைய ஆக்கங்கள் இல்லை.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள் (GOOGLE IMAGES)

.....