Thursday, December 26, 2013

எட்டு நிலைகளைக் குறிக்கும் கணபதி மூர்த்திகள்

மனிதன் வாழ்க்கையின் எட்டு நிலைகளைக் குறிக்கும் எட்டு கணபதி மூர்த்திகளின் சக்திகளை ஒரு சேரப் பெற்ற ஸ்ரீவரத கணபதி மூர்த்தி வழிபாடு எந்நிலையிலும் மாறாத லட்சுமி கடாட்ச சக்திகளை கைக்கொள்ள அருள்புரியும்.

ஸ்ரீவரத கணபதி ...
ஒருமுறை சிவனும் பார்வதியும் கயிலையின் சித்திர மண்டபத்தில் இருக்கும் மந்திரங்கள் மீது அருள்பார்வை செலுத்தினர். அப்போது, மந்திர உயிர்நிலை ஒளி வட்டம் இட்டது. அந்த வட்டத்தில் இருந்து தண்டம் ஒன்று நீண்டது. தண்டம் ஒலியாக தழைத்தது. அந்த ஒளி&ஒலியிலிருந்து உதித்தது ஒரு திருவடிவம். அந்த வடிவமே ஸ்ரீவரத கணபதி.

தவ சீலர்கள் தங்கள் எண்ணம் ஈடேற வணங்க வேண்டிய மூர்த்தி. குறிப்பாக 4, 13, 22 தேதிகளில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய மூர்த்தி. இவர் அளிக்கும் செல்வம் நிரந்தரம் பெறும். எடுத்த காரியத்தை நடத்தும் மூர்த்தி இவரே.

மும்பாய் பூனே நெடுஞ்சாலை மார்க்கத்தில் கொபோலியிருந்து 40 KM. தொலைவில் உள்ள பாலி கிராமத்தின் ஒரு சிறிய பகுதியில் உள்ள கணேசருக்கு பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வரம் அளிப்பவர் என்பதால் வரத விநாயகர் என்று பெயர்.

பல்லாலேஸ்வர கணபதி ...
வாழ்க்கையில் உள்ள மேடு பள்ளங்களை அறிந்து வேதனைகளையும், சோதனைகளையும் சாதனைகளாக மாற்ற அருள்புரியும் கணபதி மூர்த்தி. சகட யோக ஜாதகக்காரர்கள் வழிபட வேண்டிய மூர்த்தி இவரே.

கோபோலியிலிருந்து 40 கி.மீ.தொலைவில் பாலியில் ஒரு குன்றின் அடிவாரத்தில் பல்லாலேஸ்வரனின் பிரதான சன்னதி அமைந்துள்ளது.

மகா கணபதி ...

இளமை இருக்கும் வரை மரணத்தைக் கண்டு யாரும் அஞ்சுவது கிடையாது. ஆனால், ஒரு சிறு நோய் நொடியில் விழுந்து விட்டால் கூட மரண பயத்தால் மிரண்டு விடுபவர்களே பெரும்பான்மையினர். இறுதிக் கால வாழ்வு மரண பயத்தால் நசித்து விடாமல் இருக்க அருள்புரியும் மூர்த்தி இவரே.

பேஷ்வா ராஜா மாதவராவ் அவர்களால் கட்டப்பட்ட மஹாகணபதி கோயில் பூனாவில் இருந்து 50 KM உள்ள உருலியிலிருந்து 16 km தூரத்தில் உள்ள ரஞ்சன்காம் கிராமத்தில் உள்ளது.  நடுப்பகலில் சூரியனின் கிரணங்கள் இந்த மூர்த்தியின் மீது வீழ்வது ஒரு தனிச்சிறப்பாகும். 

மயூரேஸ்வர கணபதி ...
 கார், பஸ் போன்ற வாகனங்கள் தயாரிப்பவர்களும், உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் வணங்க வேண்டிய மூர்த்தி. அடிக்கடி விமானப் பயணங்கள் மேற்கொள்வோர் வழிபட வேண்டிய அனுகிரக மூர்த்தி இவரே.

பூனாவிலிருந்து 64 கி.மீ. தொலைவில் உள்ள பாராமதி மாவட்டத்தில் உள்ள மயில்களின் கிராமம் என்று அழைக்கப்படும் நதிக்கரையில் அமைந்து உள்ளது. இங்கு கணேசர் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். கண்களிலும், தொப்புளிலும் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. சித்தி - புத்தி இருவரும் இரண்டு பக்கங்களிலும் அமர்ந்து உள்ளனர். சாதாரணமாக எலிதான் கணேசருக்கு வாகனமாக இருப்பினும், இந்தத் தலத்தில் மயில் வாகனமாக அமைந்துள்ளது. ஆகையால் இங்குள்ள மூர்த்திக்கு மயூரேஸ்வரர் (மோரேஸ்வரர்) என்று பெயர் ஏற்பட்டுள்ளது. 


சித்தி விநாயகர் ...
கன்னிப் பெண்கள் வணங்க வேண்டிய மூர்த்தி. தங்களுக்கு வரப் போகும் கணவன்மார்கள் பணம் படைத்தவனாய் இருக்க வேண்டும் என்று கன்னிப் பெண்கள் நினைப்பது இயற்கையே. ஆனால், பணம் படைத்தவனை விட நல்ல மனம் படைத்தவனே மேல் என்று உத்தம வழிகாட்டும் மூர்த்தி இவரே.

மும்பாய் - சென்னை மார்க்கத்தில் டௌண்ட் நிலையத்திற்கு 13 KM தொலைவில் உள்ள சித்தாதேக் கிராமத்தில் இந்த ஆலயம் உள்ளது. இங்குள்ள கணபதி ஸ்வயம்பூ தானாக தோன்றியவர் என்றும் விஷ்ணுவால் பூஜிக்கப்பட்டவர் எனவும் சொல்லப்படுகிறது. இந்த கோயிலின் அருகில் பீமா நதி ஒடுகிறது. 

சிந்தாமணி விநாயகர் ...
தங்களையும் அறியாமல் பலரும் நான்காம் பிறையை தரிசனம் செய்து விடுவதுண்டு. நான்காம் பிறையைப் பார்த்தால் வீண் பழி நேரும் என்று கிருஷ்ண பரமாத்மாவே தன்னுடைய அனுபவத்தால் நமக்குப் பாடம் புகட்டி உள்ளார். இவ்வாறு தவறிப் போய் நான்காம் பிறையை தரிசனம் செய்தவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே சிந்தாமணி விநாயகர்.

மூன்றாம் பிறை அன்றுதான் சிந்தாமணி விநாயகர் அற்புதமான சிந்தாமணி என்ற ஆபரணத்தை தரித்தார். அதனால் பக்தர்கள் இவரை வணங்குவதால் மூன்றாம் பிறையை தரிசனம் பெற்ற பலன் கிட்டும். உலகிலுள்ள அனைத்து நவரத்தினங்களின் சக்தியை ஈர்க்கும் வல்லமை உடையதே விநாயகர் தரித்துள்ள சிந்தாமணி ஆகும். எனவே, சிந்தாமணி விநாயகரைப் பிரார்த்னை செய்து நவரத்தினங்களை அணிவதால் லட்சுமி கடாட்ச சக்திகள் ஸ்திரம் பெறும். நவரத்தினம் தன் சக்திக் கிரணங்களை விரயம் செய்யாது.

முல - முத்தா நதியின் கரையில் பூனாவிலிருந்து 23 கி.மீ தொலைவில் உள்ளது. 

கிரிஜாத்மஜ கணபதி ...
குன்றிருக்கும் இடமெல்லாம் கணபதி குடியிருக்கும் இடம் என்ற சிறப்பைக் கொண்டவரே கிரிஜாத்மஜ கணபதி. மீண்டும் ஒரு மனிதப் பிறவி எடுக்காத உயர் நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டோர் வணங்க வேண்டிய மூர்த்தி இவரே. தாயை குருவாக மதிப்பவர்களுக்கும், தாய் சொல்லைத் தட்டாத தனயன்களுக்கும் அருள்புரியும் மூர்த்தி.

பூனாவிற்கு வடக்கில் சற்று தூரத்தில் "குக்டி" நதிக்கரையில் லென்யாத்ரியில் உள்ள கணபதி கோயிலில் உள்ள மூர்த்தி "கிரிஜாத்மஜ"என்று அழைக்கப் படுகிறார்.

விக்நேஸ்வர கணபதி ...
நற்காரியங்களில் ஏற்படும் இடர்களைக் களைந்து இறுதி வெற்றியைத் தரும் மூர்த்தி. அரிஷ்ட யோகங்களிலிருந்து மீள அருள்புரியும் அண்ணல்.

பூனா மாவட்டத்தில் ஜீன்றார் தாலுக்காவில் குக்குடி நதிக்கரையில் ஒஜார் கிராமத்தில் விக்னேஸ்வரர் ஆலயம் உள்ளது. ஜீன்னாரிலிருந்து 8கி.மீ  தொலைவில் உள்ளது. கிரேனைட் கல்லில் செதுக்கப்பட்ட அழகு மிக்க விக்ரகம். ரூபி கற்கள் கண்களிலும் நெற்றியில் வைரக்கல்லும் பதிக்கப் பட்டுள்ளது.

..... " குழலுறவு தியாகி "

No comments:

Post a Comment