
மகாகணபதியின் பெண்வடிவமே ஸ்ரீவித்யாகணபதி என உபாசகர்களால் போற்றப்படுகிறது.
இந்த ஸ்ரீவித்யா கணபதியின் மந்திரத்தில் உள்ள ஸ்ரீம் பீஜம் மகாலட்சுமியைக் குறிக்கும்.
அதனால்தான் இந்த ஸ்ரீவித்யா கணபதி தன் மேலிரு கரங்களில் தாமரையையும், விஷ்ணுவைக் குறிக்கும் சக்கரத்தையும் ஏந்தியுள்ளாள்.
அடுத்து ஹ்ரீம் பீஜம் பராசக்தியைக் குறிக்கும். எனவே அடுத்த இரு கரங்களில் பாசத்தையும் (பராசக்தி), சூலத்தையும் (ஈசன்) தாங்கியுள்ளாள்.
அடுத்துள்ள க்லீம் பீஜம் ரதிதேவியைக் குறிக்கும். காமம் இல்லாமல் இந்த உலகம் இல்லை. எனவே ரதிதேவியின் அம்சமாக நீலோத்பல மலர்களையும், மன்மதனின் அம்சமாக கரும்பு வில்லையும் தன் அடுத்த கரங்களில் வித்யாகணபதி ஏந்தியுள்ளாள்.
அடுத்துள்ள க்லௌம் பீஜம் பூமாதேவியைக் குறிக்கும்.
எனவே பூமாதேவியின் அம்சமாக பூமியிலிருந்து விளையும் நெற்கதிரையும், வராஹமூர்த்தியின் அம்சமாக கதையையும் தாங்கி அருள்கிறாள்.
அடுத்து கணபதி பீஜமான கம் என்பதைக் குறிக்கும் வகையில் தன் திருக்கரங்களில் மாதுளம் பழத்தையும், உடைந்த தந்தத்தையும் அடுத்த இரு கரங்களில் தாங்கியுள்ளாள்.
இவை அனைத்திற்கும் சிகரம் வைத் தாற் போல் தன் வலது அபயகரத்தில் தங்கசங்கிலியை ஏந்தியும் இடது கரத்தை வரத முத்திரை காட்டியும் துதிக்கையில் அம்ருதத்தோடு கூடிய ரத்ன கலசத்தை ஏந்தியருளும் திருக்கோலம் கொண்டுள்ளாள்.
லட்சுமி, விஷ்ணு, பராசக்தி, ஈசன், ரதிதேவி, மன்மதன், பூமாதேவி, வராகமூர்த்தி, கணபதி, ஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஆகிய அனைத்து தேவ தேவியரின் அருட்கடாட்சத்தையும் பெற்றுத் தருவாள் இந்த ஸ்ரீவித்யா கணபதி என்பது உபாசனா ரகஸ்யம்.
விஷ்ணு-லட்சுமிக்குரிய சக்கரமும் தாமரையும் தர்மத்தைக் குறிக்கின்றன.
வராஹர்-பூமிதேவிக்குரிய கதையும், நெற்கதிரும் அர்த்தத்தைக் குறிக்கின்றன.
மன்மதன்-ரதிக்குரிய கரும்பு வில்லும், நீலோத்பல மலரும் காமத்தைக் குறிக்கின்றன.
சிவன்-பார்வதிக்குரிய சூலமும், பாசமும் மோட்சத்தைக் காட்டுகின்றன. மோட்ச ரூபத்தில், தர்மம் மிக நெருக்கமாகத் தன் தூய வடிவில் உள்ளது.
இந்த ஸ்ரீவித்யாகணபதியின் உபாசனையால் தர்ம, அர்த்த, காம, மோட்சம் எனும் நான்கு வித புருஷார்த்தங்களையும் உபாசகர்கள் பெறலாம்.
ஸ்ரீவித்யாகணபதியின் கையில் உள்ள மாதுளம் பழம் இந்த உலகைக் குறிக்கிறது.
அதனுள் உள்ள மாதுளை முத்துக்கள் கோடிக்கணக்கான
அண்டங்களைக் குறிக்கிறது.
அவ்வளவு பெரிய பிரபஞ்சமே ஸ்ரீவித்யாகணபதியின் கரத்தில் அடக்கம் என்பதை மாதுளை உணர்த்துகிறது.
உள்ளம் கனிந்து ஸ்ரீவித்யாகணபதியை பிரார்த்தனை செய்தால் நம் வாழ்வில் ஏற்படும் இடர்கள் பொடி படும்.
கணபதியின் திருவருளோடு அம்பிகையின் அருட்கடாட்சமும் கிட்டும்.
... ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி தகவல்களுக்கு மிக்க நன்றி.
No comments:
Post a Comment