Wednesday, June 26, 2013
வாலைக் கும்மி
கொங்கணச் சித்தர் வாலைக் கும்மி ...
காப்பு
விநாயகர் துதி
பின் முடுகு வெண்பா
கல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்ற
செல்வியின்மேற் கும்மிதனைக் செப்புதற்கே - நல்விசய
நாதனின்சொல் வேதனஞ்சு போதன்மிஞ்சி மானகஞ்ச
பாதம்வஞ்ச நெஞ்சினில்வைப் போம். 1
கும்மி
சத்தி சடாதரி வாலைப்பெண் ணாமந்த
உத்தமிமேற் கும்மிப் பாட்டுரைக்க
வித்தைக் குதவிய வொற்றைக்கொம் பாம்வாலை
சித்தி விநாயகன் காப்பாமே. 2
சரசுவதி துதி
சித்தர்கள் போற்றிய வாலைப்பெண் ணாமந்த
சக்தியின் மேற்கும்மிப் பாட்டுரைக்கத்
தத்தமித் தோமென ஆடும் சரசுவதி
பத்தினி பொற்பதங் காப்பாமே. 3
சிவபெருமான் துதி
எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்மாலின்
தங்கையின் மேற்கும்மி பாடுதற்குக்
கங்கை யணிசிவ சம்புவாம் சற்குரு
பங்கயப் பொற்பாதம் காப்பாமே. 4
சுப்பிரமணியர் துதி
ஞானப்பெண் ணாமருள் சோதிப்பெண் ணாமாதி
வாலைப்பெண் மேற்கும்மி பாடுதற்கு
மானைப் பெண்ணாக்கிய வள்ளிக் கிசைந்திடும்
மால்முரு கேசனும் காப்பாமே. 5
விஷ்ணு துதி
ஆண்டிப்பெண் ணாம்ராச பாண்டிப்பெண் ணாம்வாலை
அம்பிகை மேற்கும்மி பாடுதற்குக்
காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம்
ஆண்டவன் பொற்பதங் காப்பாமே. 6
நந்தீசர் துதி
அந்தரி சுந்தரி வாலைப்பெண் ணாமந்த
அம்பிகை மேற்கும்மி பாடுதற்குச்
சிந்தையில் முந்திநல் விந்தையாய் வந்திடும்
நந்தீசர் பொற்பதங் காப்பாமே. 7
நூல்
கும்மி
தில்லையில் முல்லையி லெல்லையுளாடிய
வல்லவள் வாலைப்பெண் மீதினிலே
சல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும்
தொல்லைவினை போக்கும் வாலைப்பெண்ணே! 8
மாதா பிதாகூட இல்லாம லேவெளி
மண்ணும் விண்ணுமுண்டு பண்ணவென்று
பேதை பெண் ணாமுதல் வாலைப்பெண் ணாளென்று
புகுந்தா ளிந்தப் புவியடக்கம். 9
வேதமும் பூதமுண் டானது வும்வெளி
விஞ்ஞான சாத்திர மானதுவும்
நாதமுங் கீதமுண் டானதுவும் வழி
நான்சொல்லக் கேளடி வாலைப்பெண்ணே. 10
மூந்தச் செகங்களுண் டானது வும்முதல்
தெய்வமுந் தேவருண் டானதுவும்
விந்தையாய் வாலையுண் டானதுவும் ஞான
விளக்கம் பாரடி வாலைப்பெண்ணே. 11
அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும்
அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம்
தரிக்கும் முந்தின தஞ்செழுத்தாம் வாசி
பரிக்குள் நின்றது மஞ்செழுத்தாம். 12
ஆதியி லைந்தெழுத் தாயினாள் வாலைபெண்
ஐந்தெழுத் துமென்று பேரானாள்;நாதியி னூமை யெழுத்தியவள் தானல்ல
ஞான வகையிவள் தானானாள். 13
ஊமை யெழுத்தே யுடலாச்சு மற்றும்
ஓமென் றெழுத்தே யுயிராச்சு
ஆமிந் தெழுத்தை யறிந்துகொண்டு விளை
யாடிக் கும்மி யடியுங்கடி. 14
செகம் படைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும்
சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம்
உகமு டிந்தது மஞ்செழுத்தாம் பின்னும்
உற்பன மானது மஞ்செழுத்தாம். 15
சாத்திரம் பார்த்த்தாலுந் தானுமென்ன? வேதம்
தானுமே பார்த்திருந் தாலுமென்ன?
சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு
சொல்லை யறிந்தல்லோ காணவேணும்? 16
காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில்
காரிய மில்லையென் றேநினைத்தால்
காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில்
காரிய முண்டுதியானஞ் செய்தால். 17
ஆயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயறி
வாயனு மைந்தா மெழுத்துக்குள்ளே
வாயனு மைந்தாம் எழுத்துக்குள் ளேயிந்த
வாலையு மைந்தாம் எழுத்துக்குள்ளே. 18
அஞ்செழுத் தானதும் எட்டெழுத்தாம் பின்னும்
ஐம்பத்தோர் அட்சரந் தானாச்சு
நெஞ்செழுத் தாலே நிலையா மலந்த
நிசந்தெ ரியுமோ வாலைப்பெண்ணே! 19
ஏய்க்கு தேய்க்கு ஐந்செழுத் துவதை
எட்டிப் பிடித்துக்கொளிரண் டெழுத்தை
நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி
நிலையைப் பாரடி வாலைப்பெண்ணே? 20
சிதம்பர சக்கரந் தானறிவா ரிந்தச்
சீமையி லுள்ள பெரியோர்கள்
சிதம்பர சக்கர மென்றால் அதற்குள்ளே
தெய்வத்தை யல்லோ அறியவேணும்! 21
மனமு மதியு மில்லாவிடில் வழி
மாறுதல் சொல்லியேயென்ன செய்வாள் ?
மனமு றுதியும் வைக்கவேணும் பின்னும்
வாலைக் கிருபையுண் டாகவேணும். 22
இனிவெ ளியினிற் சொல்லா தேயெழில்
தீமட்டு திந்தவரி விழிக்கே
கனிமொ ழிச்சியீர் வாருங்கடி கொஞ்சங்
கருவைச் சொல்லுவேன் கேளுங்கடி. 23
ஊத்தைச் சடலமென் றெண்ணாதே இதை
உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே
பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்
பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே. 24
உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடி
அச்சுள்ள விளக்கு வாலையடி அவி
யாம லெரியுது வாலைப்பெண்ணே! 25
எரியு தேஅறு வீட்டினி லேயதில்
எண்ணெயில் லையமிழ் தண்ணீரில்லை
தெரியுது போக வழியுமில்லை பாதை
சிக்குது சிக்குது வாலைப்பெண்ணே. 26
சிலம்பொலி யென்னக் கேட்குமடி மெத்த
சிக்குள்ள பாதை துடுக்கமடி
வலம்புரி யச்சங்கமூது மடி மேலே
வாசியைப் பாரடி வாலைப்பெண்ணே! 27
வாசிப் பழக்க மறியவே ணும்மற்றும்
மண்டல வீடுகள் கட்டவேணும்
நாசி வழிக்கொண்டு யோகமும் வாசியும்
நாட்டத்தைப் பாரடி வாலைப்பெண்ணே! 28
முச்சுடரான விளக்கி னுள்ளே மூல
மண்டல வாசி வழக்கத்திலே
எச்சுடராகி அந்தச் சுடர் வாலை
இவள்விட வேறில்லை வாலைப்பெண்ணே! 29
சூடாமல் வாலை இருக்கிறதும் பரி
சித்த சிவனுக்குள் ளானதனால்
வீடாமல் வாசி பழக்கத்தை பாருநாம்
மேல்வீடு காணலாம் வாலைப்பெண்ணே! 30
மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில்
விளக்கில் நின்றவன் வாணியடி
தாய்வீடு கண்டவன் ஞானியடி பரி
தாண்டிக் கொண்டான்பட் டாணியடி 31
அத்தியி லேகரம் பத்தியி லேமனம்
புத்தியி லேநடு மத்தியிலே
நெற்றி சதாசிவ மென்றுசொன் னேனுன்றன்
நிலைமையைப் பாரடி வாலைப்பெண்ணே! 32
அழுத்தி லேசொல்லஞ் செழுத்தி லேநானும்
வழுத்தி னேன்ஞானப் பழத்திலே
கழுத்தி லேமயேச் வரனு முண்டுகண்
கண்டு பாரடி வாலைப்பெண்ணே 33
அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சியரே நிதம்
கொஞ்சி விளையாடும் வஞ்சியரே
நெஞ்சிலே ருத்திரன் சூழிருப்பா னவன்
நேருட னாமடி வாலைப்பெண்ணே 34
தொந்தியி லேநடு பந்தியிலே திடச்
சிந்தையி லேமுந்தி உன்றனுடன்
உந்தியில் விட்ணுவுந் தாமிருப் பாரிதை
உண்மையாய்ப் பாரடி வாலைப்பெண்ணே! 35
ஆலத்திலே இந்த ஞாலத்திலே வருங்
காலத்தி லேயனு கூலத்திலே
முலத்திலே பிரமன் தானிருந் துவாசி
முடிக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே. 36
தேருமுண் டைஞ்சூறாம் ஆணியுண்டே அதில்
தேவரு முண்டுசங் கீதமுண்டே
ஆருண்டு பாரடி வாலைத்தெய் வம்மதிலே
அடக்கந் தானடி வாலைப்பெண்ணே! 37
ஒன்பது வாயில்கொள் கோட்டையுண் டேஅதில்
உள்ளே நிலைக்கார ரஞ்சுபேராம்
அன்புடனே பரிகாரர்கள் ஆறு பேர்
அடக்கந் தானடி வாலைப்பெண்ணே! 38
இந்த விதத்திலே தேகத்திலே தெய்வம்
இருக்கையில் புத்திக் கறிக்கையினால்
சந்தோட வாலையைப் பாராமல் மனிதர்
சாகிற தேதடி வாலைப்பெண்ணே! 39
நகார திட்டிப்பே ஆனதனால் வீடு
வான வகார நயமாச்சு!உகார முச்சி சிரசாச்சே இதை
உற்றுப் பாரடி வாலைப்பெண்ணே! 40
வகார மானதே ஓசையாச்சே அந்த
மகார மானது மாய்கையாச்சே
சிகார மானது மாய்கையாச்சே இதைத்
தெளிந்து பாரடி வாலைப்பெண்ணே! 41
ஓமென்ற அட்சரந் தானுமுண்டு அதற்குள்
ஊமை யெழுத்து மிருக்குதடி;நாமிந்தெ ழுத்தை யறிந்துகொண் டோ ம்வினை
நாடிப் பாரடி வாலைப்பெண்ணே! 42
கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை
வெட்டவே ணும்வாசி யொட்டவேணும்
எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காயம்
என்றைக் கிருக்குமோ வாலைப்பெண்ணே! 43
இருந்த மார்க்க்கமாய்த் தானிருந்து வாசி
ஏற்காம லேதான டக்கவேணும்
திரிந்தே ஓடிய லைந்துவெந்து தேகம்
இறந்து போச்சுதே வாலைப்பெண்ணே! 44
பூத்த மலராலே பிஞ்சுமுண்டே அதில்
பூவில்லா பிஞ்சும் அநேகமுண்டு
மூத்த மகனாலே வாழ்வுண்டு மற்ற
மூன்று பேராலே அழிவுமுண்டு! 45
கற்புள்ள மாதர் குலம்வாழ்க நின்ற
கற்பை யளித்தவரே வாழ்க!
சிற்பர னைப் போற்றி கும்மியடி
தற்பரனைப் போற்றி கும்மியடி. 46
அஞ்சி னிலேரெண் டழிந்ததில் லையஞ்
சாறிலேயும் நாலொழிந்த தில்லை
பிஞ்சிலே பூவிலே துஞ்சுவ தாம்அது
பேணிப் போடலாம் வாலைப்பெண்ணே! 47
கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட்டா னிரு
காலில்லா நெட்டையன் முட்டிக்கிட்டான்
ஈயில்லாத் தேனெனத் துண்டுவிட் டானது
இனிக்கு தில்லையே வாலைப்பெண்ணே! 48
மேலூரு கோட்டைக்கே ஆதரவாய் நன்றாய்
விளக்கு கன்னனூர்ப் பாதையிலே
காலூரு வம்பலம் விட்டத னாலது
கடுநடை யடி வாலைப்பெண்ணே! 49
தொண்டையுள் முக்கோணக் கோட்டையிலே இதில்
தொத்திக் கொடிமரம் நாட்டையிலே
சண்டை செய்துவந்தே ஓடிப்போனாள் கோட்டை
வெந்து தணலாச்சு வாலைப்பெண்ணே! 50
ஆசை வலைக்குள் அகப்பட்டதும் வீடு
அப்போதே வெந்தே அழிந்திட்டதும்
பாச வலைவந்து மூடியதும் ஈசன்
பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே! 51
அன்ன மிருக்குது மண்டபத்தில் விளை
யாடித் திரிந்தே ஆண்புலியும் அங்கே
இன்ன மிருக்குமே யஞ்சு கிளியவை
எட்டிப் பிடிக்குமே மூன்று கிளியடி வாலைப்பெண்ணே. 52
தோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது
மாப்பிள்ளை தான்வந்து சாப்பிடவும்
ஏய்க்கு மிப்படி யஞ்சா றாந்தைஇருந்து
விழிப்பது பாருங்கடி வாலைப்பெண்ணே. 53
மீனு மிருக்குது தூரணி யிலிதை
மேய்ந்து திரியுங் கலசாவல்
தேனு மிருக்குது போரையிலே யுண்ணத்
தெவிட்டு தில்லையே வாலைப்பெண்ணே! 54
காக்கை யிருக்குது கொம்பிலே தான்கத
சாவி லிருக்குது தெம்பிலேதான்
பார்க்க வெகுதூர மில்லை யிதுஞானம்
பார்த்தால் தெரியுமே வாலைப்பெண்ணே! 55
கும்பி குளத்திலே யம்பல மாமந்தக்
குளக்க ருவூரில் சேறுமெத்த
தெம்பிலிடைக் காட்டுப் பாதைக ளாய்வந்து
சேர்ந்து ஆராய்ந்துபார் வாலைப்பெண்ணே! 56
பண்டுமே ஆழக் கிணற்றுக்குள் ளேரெண்டு
கெண்டை யிருந்து பகட்டுதடி
கண்டிருந்து மந்தக் காக்கையுமே அஞ்சி
கழுகு கொன்றது பாருங்கடி! 57
ஆற்றிலே அஞ்சு முதலைய டியரும்
புற்றிலே ரண்டு கரடியடி
கூற்றுனு மூன்று குருடன டிபாசங்
கொண்டு பிடிக்கிறான் வாலைப்பெண்ணே! 58
முட்டை யிடுகு தொருபற வைமுட்டை
மோசம் பண்ணு தொருபறவை
வட்டமிட் டாரூர் கண்ணியி லிரண்டு
மானுந் தவிக்குது வாலைப்பெண்ணே! 59
அட்டமா விண்வட்டப் பொட்டலி லேரண்டு
அம்புலி நிற்குது தேர் மேலே
திட்டமாய் வந்து அடிக்குதில் லைதேகம்
செந்தண லானதே வாலைப்பெண்ணே! 60
முக்கோண வட்டக் கிணற்றுக்குள்ளே மூல
மண்டல வாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத்தில் வாலை
அமர்ந்தி ருக்கிறாள் வாலைப்பெண்ணே! 61
இரண்டு காலாலொரு கோபுரமாம் நெடு
நாளா யிருந்தேஅமிழ்ந்து போகும்
கண்டபோ துகோபு ரமிருக்கும் வாலை
காணவு மொட்டாள் நிலைக்கவொட்டாள். 62
அஞ்சு பூதத்தை யுண்டுபண்ணிக் கூட்டி
ஆரா தாரத்தை யுண்டுபண்ணிக்
கொஞ்சு பொண்ணாசை யுண்டுபண்ணி வாலை
கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள். 63
காலனைக் காலால் உதைத்தவளாம் வாலை
ஆலகா லவிட முண்டவளாம்
மாளாச் செகத்தைப் படைத்த வளாமிந்த
மானுடன் கோட்டை இடித்தவளாம். 64
மாதாவாய் வந்தே அமுதந்தந்தாள் மனை
யாட்டியாய் வந்து சுகங்கொடுத்தாள்
ஆதரவாகிய தங்கையானாள் நமக்
காசைக் கொழுந்தியு மாமியானாள். 65
சிரித்து மெல்லப் புரமெரித் தாள்வாலை
செங்காட்டுச் செட்டியைத் தானுதைத்தாள்
ஒருத்தி யாகவே சூரர்தமை வென்றாள்
ஒற்றையாய்க் கஞ்சனைக் கொன்று விட்டாள். 66
இப்படி யல்லொ இவள்தொழி லாமிந்த
ஈனா மலடி கொடுஞ்சூலி
மைப்படுங் கண்ணியர் கேளுங்கடி அந்த
வயசு வாலை திரிசூலி. 67
கத்தி பெரிதோ உறைபெரிதோ விவள்
கண்ணு பெரிதோ முகம் பெரிதோ
சத்தி பெரிதோ சிவன் பெரிதோ நீதான்
சற்றே சொல்லடி வாலைப்பெண்ணே! 68
அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல
அப்படி வாலை பெரிதானால்
பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல
பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி. 69
மாமிச மானால் எலும்புண்டு சதை
வாங்கிஓடு கழன்று விடும்
ஆமிச மிப்படிச் சத்தியென்றே விளை
யாடிக் கும்மி அடியுங்கடி. 70
பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் விளையாதென்று
கண்டுகொண்டு முன்னே அவ்வை சொன்னாளது
உண்டோ இல்லையோ வாலைப்பெண்ணே! 71
மண்ணு மில்லாமலே விண்ணுமில்லை கொஞ்சம்
வாசமில் லாமலே பூவுமில்லை
பெண்ணு மில்லாமலே ஆணுமில் லையிது
பேணிப் பாரடி வாலைப்பெண்ணே! 72
நந்த வனத்திலே சோதியுண்டு நிலம்
நத்திய பேருக்கு நெல்லுமுண்டு
விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில்
விட்ட குறைவேணும் வாலைப்பெண்ணே! 73
வாலையைப் பூசிக்கச் சித்தரானார் வாலைக்
கொத்தாசை யாய்ச்சிவ கர்த்தரானார்
வேலையைப் பார்த்தல்லோ கூலிவைத்தா ரிந்த
விதந்தெ ரியுமோ வாலைப்பெண்ணே! 74
வாலைக்கு மேலான தெய்வமில்லை மானங்
காப்பது சேலைக்கு மேலுமில்லை
பாலுக்கு மேலான பாக்கியமில்லை வாலைக்
கும்மிக் மேலான பாடலில்லை. 75
நாட்டத்தைக் கண்டா லறியலாகு மந்த
நாலாறு வாசல் கடக்கலாகும்
பூட்டைக் கதவைத் திறக்கலா கும்மிது
பொய்யல்ல மெய்யடி வாலைப்பெண்ணே! 76
ஆணும் பெண்ணும்கூடி யானதால் பிள்ளை
ஆச்சுதென் றேநீரும் பேசுகின்றீர்
ஆணும் பெண்ணுங்கூடி யானதல்லோ பேதம்
அற்றொரு வித்தாச்சு வாலைப்பெண்ணே! 77
இன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே
என்வாழ்க்கை யென்பதும் பொய்யல்லவே
அன்றைக் கெழுத்தின் படிமுடியும் வாலை
ஆத்தாளைப் போற்றடி வாலைப்பெண்ணே! 78
வீணாசை கொண்டு திரியாதே இது
மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு
காணாத வாலையைக் கண்டுகொண்டால் காட்சி
காணலாம் ஆகாயம் ஆளலாமே. 79
பெண்டாட்டி யாவதும் பொய்யல்லவோ பெற்ற
பிள்ளைக ளாவதும் பொய்யல்லவோ?
கொண்டாட்ட மானதகப்பன் பொய்யே முலை
கொடுத்த தாயும் நிசமாமோ? 80
தாயும் பெண்டாட்டியும் தான்சரி யேதன்யம்
தாமே இருவருந் தாங்கொடுத்தார்
காயும் பழமுஞ் சரியாமோ உன்றன்
கருத்தைப் பார்த்துக்கொள் வாலைப்பெண்ணே! 81
பெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்ற
பிள்ளை மசானக் கரையின் மட்டும்
தொண்டாட்டுத் தர்மம் நடுவினிலே வந்து
சேர்ந்து பரகதி தான்கொடுக்கும். 82
பாக்கியமும் மகள் போக்கியமும் ராச
போக்கியமும் வந்த தானாக்கால்
சீக்கிரந் தருமஞ் செய்யவேண்டும் கொஞ்சந்
திருப்ப ணிகள்மு டிக்கவேண்டும். 83
திருப்பணி களைமுடித் தோரும் செத்துஞ்
சாகாத பேரி லொருவரென்றும்
அருட் பொலிந்திடும் வேதத்தி லேயவை
அறிந்து சொன்னாளே வாலைப்பெண்ணே! 84
மெத்தை தனிலே படுத்திருந் துநாமும்
மெல்லிய ரோடு சிரிக்கும்போது
யுத்தகாலன் வந்துதான் பிடித்தால் நாமும்
செத்த சவமடி வாலைப்பெண்ணே! 85
ஏழை பனாதிக னில்லையென்றால் அவர்க்கு
இருத்தால் அன்னங் கொடுக்க வேண்டும்
நாளையென்று சொல்ல லாகாதே என்று
நான்மறை வேத முழங்குதடி. 86
பஞ்சை பனாதி யடியாதே அந்தப்
பாவந் தொலைய முடியாதே
தஞ்சமென்றோரைக் கெடுக்காதே யார்க்கும்
வஞ்சனை செய்ய நினையாதே. 87
கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில்
காணாத வுத்தரம் விள்ளாதே
பெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற
பிள்ளைக் கிளப்பங் கொடுக்காதே. 88
சிவன்ற னடியாரை வேதியரை சில
சீர்புல ஞானப் பெரியோரை
மவுன மாகவும் வையாதே அவர்
மனத்தை நோகவும் செய்யாதே. 89
வழக்க ழிவுகள் சொல்லாதே கற்பு
மங்கையர் மேல்மனம் வையாதே
பழக்க வாசியைப் பார்த்துக்கொண் டுவாலை
பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே! 90
கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக்
கொளைக ளவுகள் செய்யாதே
ஆடிய பாம்பை யடியா தேயிது
அறிவு தானடி வாலைப்பெண்ணே! 91
காரிய னாகினும் வீரியம் பேசவும்
காணா தென்றவ்வை சொன்னாளே
பாரினில் வம்புகள் செய்யாதே புளிப்
பழம்போ லுதிர்த்து விழுந்தானே. 92
காசார் கள்பகை செய்யா தேநடுக்
காட்டுப் புலிமுன்னே நில்லாதே
தேசாந்தி ரங்களுஞ் செல்லா தேமாய்கைத்
தேவடி யாள்தனம் பண்ணாதே! 93
தன்வீடி ருக்க அசல்வீடு போகாதே
தாயார் தகப்பனை வையாதே
உன்வீட்டுக் குள்ளேயே யூக மிருக்கையில்
ஓடித் திரிகிறாய் வாலைப்பெண்ணே! 94
சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ ?
ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
உற்பத்தி நெய்தயிர் மோராச்சு. 95
பாலோடு முண்டிடு பூனையு முண்டது
மேலாக காணவுங் காண்பதில்லை
மேலந்த ஆசையைத் தள்ளிவிட் டுள்ளத்தில்
வேண்டிப் பூசையைச் செய்திடுங்கள். 96
கோழிக் காறுகாலுண் டென்றுசொன்னேன் கிழக்
கூனிக் மூன்றுகா லென்றுசொன் னேன்
கூனிக்கிரண் டெழுத்தென்று சொன்னேன் முழுப்
பானைக்கு வாயில்லை யென்றுசொன்னேன். 97
ஆட்டுக் கிரண்டுகா லென்றுசொன் னேன்நம்
பானைக்குப் பானைக்குநிற்கு மேல்சூல்
மாட்டுக்கு காலில்லை யென்றுசொன்னேன் கதை
வகையைச் சொல்லடி வாலைப்பெண்ணே! 98
கோயிலு மாடும் பறித்தவ னுங்களறிக்
கூற்று மேகற் றிருந்தவனும்
வாயில்லாக் குதிரை கண்டவனும் மாட்டு
வகை தெரியுமோ வாலைப்பெண்ணே! 99
இத்தனை சாத்திரஞ் தாம்படித்தோர் செத்தார்
என்றா லுலகத்தோர் தாம்சிரிப்பார்
செத்துப் போய்கூட கலக்கவேண்டும் அவன்
தேவர்க ளுடனே சேரவேண்டும். 100
உற்றது சொன்னாக்கா லற்றது பொருந்தும்
உண்டோ உலகத்தில் அவ்வைசொன்னாள்
அற்றது பொருந்து முற்றது சொன்னவன்
அவனே குருவடி வாலைப்பெண்ணே! 101
பூரணம் நிற்கும் நிலையறியான் வெகு
பொய்சொல்வான் கோடி மந்திரஞ்சொல்வான்
காரணகுரு அவனு மல்ல இவன்
காரியகுரு பொருள் பறிப்பான். 102
எல்லா மறிந்தவ ரென்றுசொல்லி இந்தப்
பூமியி லேமுழு ஞானியென்றே
உல்லாச மாக வயிறு பிழைக்கவே
ஓடித் திரிகிறார் வாலைப்பெண்ணே! 103
ஆதிவா லைபெரி தானா லும்மவள்
அக்காள் பெரிதோ? சிவன் பெரிதோ
நாதிவா லைபெரி தானாலும் அவள்
நாயக னல்ல சிவம்பெரிது. 104
ஆயுசு கொடுப்பாள் நீரிழி வுமுதல்
அண்டாது மற்ற வியாதியெல்லாம்
பேயும் பறந்திடும் பில்லிவி னாடியில்
பத்தினி வாலைப்பெண் பேரைச்சொன்னால். 105
நித்திரை தன்னிலும் வீற்றிருப்பா ளெந்த
நேரத்தி லும்வாலை முன்னிருப்பாள்
சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை
உற்றகா லனையும் தானுதைப்பாள். 106
பல்லாயி ரங்கோடி யண்டமுதல் பதி
னாங்கு புவனமும் மூர்த்திமுதல்
எல்லாந் தானாய்ப் படைத்தவளாம் வாலை
எள்ளுக்கு ளெண்ணைய்போல நின்றவளாம். 107
தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும்மித் தமிழ்
செய்ய எனக்குப தேசஞ்செய்தாள்
நேசவான் வீரப் பெருமாள் குருசாமி
நீள்பதம் போற்றிக்கொண் டாடுங்கடி. 108
ஆறு படைப்புகள் வீடுகடை சூத்ர
அஞ்செழுத் துக்கும் வகையறிந்து
கூறுமுயர் வல வேந்திரன் துரைவள்ளல்
கொற்றவன் வாழக்கொண் டாடுங்கடி. 109
ஆடுங்கள் பெண்டுகள் எல்லோரு மந்த
அன்பான கொங்கணர் சொன்னதமிழ்
பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை
பாதத்தைப் போற்றிக் கொண்டாடுங்கடி. 110
சித்தர்கள் வாழி சிவன்வாழி முனி
தேவர்கள் வாழி, ரிஷிவாழி,
பத்தர்கள் வாழி, பதம்வாழி
குருபாரதி வாலைப்பெண் வாழியவே! 111
வாலை பூஜை
ஓம் ஐயும் கிலியும் சவும் சவும் கிலியும் ஐயும் வா வா வாலை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி நமக
மூன்று லட்சம் ஊரு
மஹாநெய்வேத்தியம்
இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி..
படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment