அப்பனுக்கு முந்திவரும் அருட்கனி கணபதி
அப்பமுடன் பொரி கடலை அவலுடனே
அருங்கதலி ஒப்பில்லா மோதகமும் ஒருமனதாய் ஒப்பித்து
எப்பொழுதும் வணங்கிடும் விநாயகர் உலகின் தலையாய எழுத்தர்.
விநாயகர் முதற்கடவுள். முழுமுதற் கடவுளர். அவரை வணங்குவோர் எல்லாவற்றிலும் முதல்நிலையில் தான் இருப்பார்கள் என்றாள் ஔவை.
பிள்ளையார் சுழி தேவதைகள் .....
பிள்ளையார் சுழியில் உள்ள அகரத்திற்குப் பிரம்மன், உகரத்திற்குத் திருமால், மகரத்திற்கு ருத்திரன், பிந்துவிற்கு மகேசன், நாதத்திற்குச் சிவன் என்று குறிப்பிடுகின்றனர்.
எனவே, ஐந்து தெய்வ வணக்கமே பிள்ளையார் சுழி.
கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கை தொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே!
"நல்லார் பழிப்பினெழிற் செம்ப-வனத்தை நாணா நின்ற
பொல்லா முகத்தெங்கள் போத-கமே புரமூன் றெரித்த
வில்லா னளித்த விநாயகனே யென்று மெய்ம் மகிழ
வல்லார் மனத்தன்றி மாட்டானி-ருக்க மலர்த்திருவே..”
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிநுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய்
துங்கக்கரி முகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் மெயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே
வினாயகனே வௌ;வினையை வேரறுக்க வல்லான்
வினாயகனே வேற்கை தணிவிப்பான்
வினாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து
அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரும் போம் நல்ல
குணம் அதிகமாம அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கை தொழுதற்க்கால்
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்-உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை.
கணபதி துதியை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும் பெறலாம்
மங்கலத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா
பொங்குதள வயிற்றானே பொற்புடைய ரத்தின்னே
சங்கரனார் தருமதலாய் சங்கடத்தைச் சங்கரிக்கு
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!
அப்பமுடன் பொறிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பில்லா மோதகமும் ஒருமனதாய் ஒப்பித்து
எப்பொழுதும் வணங்கிடுவேன்; எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கணியே கணபதியே
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்கு உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தை உமக்காக்கி
தெள்ளியனாய்த் தெளிவதற்கு தென்தமிழில் போற்றுகிறேன்
உள்ளியதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியெனப் போற்றுகிறேன்.
‘அகரம் என அறிவாகி உலகம் எங்கும்
அமர்ந்தக உகரங்கள் தம்மால்
பகரும் ஒரு முதலாகி வேறுமாகிப்
பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகரில் பொருள் நான்கனையும் இடர்தீர்த்தெய்தப்
போற்றுநருக்கு அறக்கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைந்து வாழ்வாம்’
~ கச்சியப்ப முனிவரர்
பரஞ்சோதி முனிவர் ..
உள்ளமெனும் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி உறுதியாகத்
தள்ளரிய அன்பெனும் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுகட் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணை என்னும்
வெள்ளமதம் பொழி சித்தி வேழத்தை நினைந்து வல்வினைகள் தீர்ப்பாம்
திருக்கடைக்காப்பு - திருஞான சம்பந்தர் ..
பிடியதனுருவுமை கௌமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடுமவரிடர்
கடி கணபதிவர அருளினன் முகுகொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே.
இரட்டை மணி மாலை - கபிலர் ..
திருவாக்கும் செய்கருமமும் கைகூட்டும் செஞ்சொல்
பொருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால், வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம்கை.
விநாயகர் அகவல் - நக்கீரர் ..
வெண்ணீ றணியும் விமலன் புதலவர்
பெண்ணா முமையாள் பெற்றிடுந் தேவே
அரிதிரு மருகா அறுமுகன் துணைவா
கரிமுக வாரணக் கணபதி சரணம்
குருவே சரணம் குருவே சரணம்
பெருவயிற் றோனே பொற்றாள் சரணம்
கண்ணே மணியே கதியே சரணம்
விண்ணே யொளி வேந்தே சரணம்
பெருந்தேவனார் ..
ஓதவினை அகலும்; ஓங்கு புகழ் பெருகும்
காதற் பொருள் அனைத்தும் கைகூடும் - சீதப்
பனிக்கோட்டு மால்வரை மேல் பாரதப்போர் தீட்டும்
தனிக் கோட்டு வாரணத்தின் தாள்!
நம்பி ஆண்டார் நம்பி ..
என்னை நினைத்து அடிமை கொண்டு என் இடர் கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
விரசு மகிழ் சோலை, வியன் நாரையூர் முக்கண்
விரசு மகிழ் அத்தி முகத்தான்.
குமர குருபரர் ..
சீர்கொண்ட காசிநகர் சேர்துண்டி ராஜனெனும்
பேர்கொண்ட வைங்கரற்குப் பேசுபுகழ்த் - தார்கோண்ட
நற்றிருப்பாட் டீரைந்த்தும் ஞாலமிசைத் தொண்டரெலாங்
கற்றிருப்பார் மேலாங் கதி.
கந்தபுராணம் ..
மண்ணுலகத்தினிற் பிறவிமாசற
எண்ணிய பொருள் எல்லாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையோர் களிற்றுமாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்.
திருஅருட்பா - இராமலிங்க அடிகளார் ..
முன்னவனே யானைமுகத்தவனே முத்தி் நலம்
சொன்னவனே தூய்மைச் சுகத்தவனே - மன்னவனே
சிற்பரனே, ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
தற்பரனே நின் தாள் சரண்.
திருப்பல்லாண்டு - சேந்தனார் ..
குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகுதிரு ஆருரின்
மழவிடை யாற்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
பழஅடி யாரொடுங் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
உமாபதி சிவச்சாரியர் ..
வானுலகும் மண்ணுலகும் வாழ் மறைவாழப்
பான்மை தருசெய்ய தமிழ் பார்மிசை விளங்க
ஞானமத, ஐங்கர மூன்றுவிழி, நால்வாய்
ஆனைமுகனை பரவி அஞ்சலி செய்கிற்போம்
கற்பக விநாயகக் கடவுளே போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக்கிறையவன், பண்ணவர் நாயகன்
இந்திர குரு எனது இதயத்தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்!
குணமதில் பலவாம்; கூறக் கேளீர்!
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்;
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்;
விடத்தையும் நோவையும் வெம்பகை அதனையும்
துச்சமென்றெண்ணித் துயரிலாது இங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்று ஓங்கலாம்;
அச்சம் தீரும்; அமுதம் விளையும்;
வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மை எய்தவும்
இங்கு நாம் பெறலாம்; இஃதுணர்வீரே
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
ஆற்றங்கரை ஓரத்திலே அரச மரத்து நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
ஆறுமுக வேலவனின் அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் தீர்த்துவைக்கும் பிள்ளையார்
ஊரைக் காக்கும் பிள்ளையார் உலகை காக்கும் பிள்ளையார்
பாரிலுள்ள அனைவருக்கும் பலனளிக்கும் பிள்ளையார்
மஞ்சளிலெ செய்யினும் மண்ணினாலெ செய்யினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் காட்டும் பிள்ளையார்
அவல் பொரி கடலையும் அரிசி கொழுக் கட்டையும்
கவலை யின்றித் தின்னுவார் கண்ணை மூடி தூங்குவார்
கலியுகத்தின் விந்தையை காண வேண்டி அனுதினம்
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார.
(இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.)
No comments:
Post a Comment