Thursday, February 22, 2018

ஒன்றே பிடி, உறுதியாய் பிடி, இறுதிவரை பிடி ...


கர்மவினை தாக்கத்தால் நன்கு அடிபட்டு, நல்ல சம்மட்டி அடி வாங்கி, எங்கே வழி, இதிலிருந்து தப்பித்து பிழைக்க ஏதேனும் ஒரு சிறு வழியாவது கிடைக்காதா எனும் நிலையில் இருக்கும் போது, என் அப்பன் ஈசன் " இதோ பாதை " என்று காண்பித்தான். காண்பித்தது மட்டும் அல்லாமல் கூடவே இருந்துகொண்டு வழிநடத்தினான்


Jan 24ம் தேதி 


உச்சிப்பிள்ளையார் தரிசனத்தோடு ஆரம்பித்தான்

35 வருஷங்கள் கழித்து ஸ்ரீ கற்பக மூர்த்தி தரிசனம்


மட்டுவார் குழலம்மையுடன் 'தாயும் ஆனவன்' தரிசனம்


அன்று சாயங்காலமே திருமகள் விரும்பி உறையும் மார்பை உடைய அரங்கன் ஆதிசேஷன் மீது அழகுறச்சாய்ந்து கொண்டிருக்கும் சயனக்கோல தரிசனம்


அடுத்து தாயார் ஸ்ரீரங்கநாச்சியார் தரிசனம்


அப்புறம் பதினாறு ஆயுதங்கள் ஏந்தியுள்ள பிரமாண்டமான சக்கரத்தாழ்வார் தரிசனம். பின்புறம் அமர்ந்த கோலத்தில் யோக ந்ருஸிம்மர் தரிசனம்


Jan 25ம் தேதி 


திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மாவின் தரிசனம்

எந்தவித பாரபட்சமின்றி கர்மவினையால் துன்பப்படும் இவ்வாலயம் வரும் யாவருக்கும், சர்வேஸ்வரரின் ஆணைக்கிணங்க வணங்குபவரின் தலைஎழுத்தை மீண்டும் ஒரு முறை மங்களகரமாக மாற்றும் இடம். விதியிருப்பின் விதி கூட்டி அருள் ஏற்படும் இடம்.


பிரம்மனுக்கு அருள் புரிந்து வரம் அருளிய ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் தரிசனம்


பிரம்மனின் சம்பத்தாகிய தேஜஸை திரும்பி வழங்கிய "பிரம்மசம்பத் கௌரி" தரிசனம்


ஸ்தல விருட்சம் மகிழமரம் தரிசனம்

விருக்ஷத்தை சுற்றி மிகமிக சக்தி வாய்ந்த 7 சிவலிங்கங்கள் ( மண்டுகபுரீஸ்வரர், சப்தரீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்திநாதர், அருணாசலேஸ்வரர் ) தரிசனம்.


சிவத்தோடு ஐக்கியமான பதஞ்சலி முனிவர் தரிசனம்


கணபதியுடன் கூடிய ஸப்த மாதக்களின் தரிசனம்


பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் தரிசனம். எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன்.


உத்தமர்கோவில் அருள்மிகு பூர்ணவல்லி தாயார் உடனுறை அருள்மிகு புருஷோத்தம பெருமாள், அருள்மிகு சௌந்தர்யஈஸ்வரி உடனுறை அருள்மிகு பிக்ஷண்டேஸ்வரர். அருள்மிகு ஞானசரஸ்வதி தேவி உடனுறை அருள்மிகு ப்ரஹ்மதேவர் தரிசனம்


Jan 26ம் தேதி


என்னை வாழவைக்கும், என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் வழிநடத்தும் என் குலதெய்வத்தின் - ஸ்ரீ வாலாம்பிகா ஸமேத ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் - தரிசனம்.


என்னைக் காத்து ரட்சிக்கும் காவல் தெய்வம் 'அருள்மிகு கருப்பண்ண சுவாமி' தரிசனம்


எங்களது கிராம தேவதை ஈசம்பலத்தி அம்மன் தரிசனம்


Jan 29ம் தேதி


நம் படைப்பில் எந்தவித கோளாறுகள் இருந்தாலும் விதியையே மாற்றும் வல்லமை படைத்த, "ப்ரஹ்மஸூத்திரம்" வரையப்பட்டுள்ள அபூர்வஅமைப்பு கொண்ட கோட்டைமேடு ஸ்ரீ சங்கமேஸ்வரர் தரிசனம்.


எட்டு கைகளிலும் ஆயுதங்களை தாங்கியபடி, உக்கிரமான பார்வையுடன், வலது காலை மடித்து பீடத்தின்மீது வைத்துக்கொண்டு, இடது காலைக் கீழே தொங்கவிட்டபடி, இடது காதில் தோடும் வலது காதில் குண்டலமும் அணிந்து, வடக்கு நோக்கி கம்பீரமாக அமர்ந்திருக்கும் கோனியம்மன் தரிசனம்.


Jan 30ம் தேதி


பழநி முருகனைப் போலவே, வலது கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி, தலைக்கு பின்புறம் குடுமியும் காலில் தண்டையுடன் மருதமலை ஸ்ரீ தண்டாயுதபாணி தரிசனம். (முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர் வடித்த சிலை)


Feb 13ம் தேதி


36 பட்டிகள் உள்ள சதுர வடிவமான ஆவுடையாரில் தகடூர் மல்லிகார்ஜுனேஸ்வர ஸ்வாமி தரிசனம்.


பிரம்மா விஷ்ணு ருத்ரன் மகேஸ்வரன் நான்கு கால்களாக சதாசிவர் மேற்பலகையாக இருக்கும் பஞ்ச ப்ரஹ்ம ஆசனத்தில், சிவசக்தி ஐக்ய சுருபமாக கம்பீரமாக நின்றுகொண்டு அருள்புரியும் கல்யாணகாமாக்ஷி தரிசனம்.


கீழே விழுந்து கிடக்கும் மஹிஷனின் கொம்பை இடதுகரத்தால் பிடித்துக்கொண்டு வலதுபாதத்தால் அவன் கழுத்தை மிதித்துக்கொண்டு, மூன்று வகை சூலங்களுடன், ஸம்ஹாரத்தில் அருள்புரியும் அம்பிகை சூலினியின் இராஜதுர்காம்பிகை வடிவ தரிசனம்.


ஸ்ரீசக்கரத்தின் நடுவில் சூர்ய சந்திர அக்கினிஜுவாலையுடன் அருள்பாலிக்கும் சக்கரபைரவர் தரிசனம்


Feb 14ம் தேதி


தலையிலே அக்னி பிழம்பினை தாங்கி, காதுகளில் குண்டலத்துடனும், கழுத்தினிலே கபால மாலையுடனும், பூனூல் அணிந்தும், அரைஞான் கயிறாக பாம்பினை முடிந்தும், கால்களிலே சலங்கினை கொண்டும், வலது மேல் கரத்தில் பாசங்குசமும், கீழ் கரத்தில் திரிசூலத்துடனும், இடது மேல் கரத்தில் பாசங்குசமும், கீழ் கரத்தில் கபாலத்துடனும், நாய் வாகனத்தோடு, பத்மபீடத்தில் தெற்கு நோக்கி நிர்வாணமாக நின்றுகொண்டு அருள்புரியும் அருள்மிகு தக்ஷின காசி காலபைரவநாத ஸ்வாமி தரிசனம்.



சர்வேஸ்வரன் திருவிளையாடலை கவனியுங்கள்

சகலவிதமான விக்கினங்களையும் விலக்கும் முழுமுதற் கடவுள் விக்னேஸ்வரரிடம் ஆரம்பித்து, காலத்தையும் கோள்களையும் கட்டுப்படுத்தும் காலபைரவரிடம் முடித்துள்ளான். ஏழு நாட்களும் ஏழு வித பிரத்யோக தரிசனம்.


நன்கு உணரும் வண்ணம் பாதையை காண்பித்து, கர்மவினை தாக்கம் குறைய வழி இருக்கிறது என்ற நம்பிக்கையை மனதிலே எழசெய்து, விழிப்புறச்செய்து, வாழ்வை பிரகாசமான வெளிச்சத்தை நோக்கி பயணிக்க, மிக அற்புதமாக செயல்படுத்தி விட்டான்.  


"ஒன்றே பிடி, உறுதியாய் பிடி, இறுதிவரை பிடி" என்று சொல்லாமல் சொல்லிவிட்டான்.

எத்தகைய சூழலிலும் இறைவழிபாடால் நலம் காணலாம் என்று நிரூபணம் செய்துவிட்டான்




அங்கிங்கெனாதபடி எங்கும் எங்கெங்கும் வியாபித்திருக்கும் ஆயிரம் ஆயிரம் கோடி சூரிய ஜோதியே, என் உள்ளும் புறமும் நீ, உணர்வும் நீ, உடலும் நீ, உள்ஒளியும் நீயே. நீயே அனைத்தையும் ஆள்கிறாய்புரிய இயலா விந்தை புரியும் ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே, என் பெருமானே, என் ஈசனே, மகிழ்ச்சியுடன் உன் பாதங்களைப் பற்றுகின்றேன்.

எல்லாம் நீ போட்ட  பிச்சையே, எல்லாம் நினது திருவருளே.


அனைவரும் ஈசனின் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள் , நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்க வளமுடன்.


No comments:

Post a Comment