மருதமலை முருகப்பெருமான் கோயில் ...
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைச் சேர்ந்த மருதமலையின் மீது அமைந்துள்ள 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில்.
கோயம்புத்தூரில் சாய்பாபா காலனியில் கோபால் அண்ணா இல்லத்தில் இருந்து, மாலை 3 மணிக்கு அண்ணா நான் பார்யாள் மூன்று பேரும் Olaவில் கிளம்பினோம். மலை அடிவாரத்திலிருந்து வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை மூலம் மலை உச்சியிலுள்ள கோவில் வரைக்கும் பயணம் மிக ரம்யமாக இருந்தது.
இங்கு திருமுருகப்பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்றும், தண்டாயுதபாணி என்றும், மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படுகிறது.
அடிவாரத்திலிருந்து நடைப்பயணமாக மலையேறும் படிக்கட்டுகள் (837 படிகள்) வழியே, மலைமேல் கார்கள் நிற்கும் இடத்திலேர்ந்து 60 படிகள் ஏறி, ஆதி மூலஸ்தானத்தில் சுயம்புவாக உள்ள சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையை தரிசித்தபின், பஞ்ச விருட்ச ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் தரிசனம்.
சுயம்புமூர்த்தியாக இருக்கும் முருகப்பெருமானுடன் வள்ளி, தெய்வானையும் சுயம்புவடிவில் இருப்பது ஒரு மிக அபூர்வமான அதிசயமான அமைப்பு. முருகனுக்கு பின்புறத்தில் பிளவு இருக்கிறது. வள்ளி உயரமாகவும், தெய்வானை சற்று உயரம் குறைந்தும் காட்சி தருகின்றனர். இந்த முருகனே இத்தலத்தின் ஆதிமூர்தியாவார். இவரது சன்னதி ‘ஆதி மூலஸ்தானம்’ எனப்படுகிறது.
ஆதிமூலஸ்தானத்திற்கு அடுத்து பஞ்ச விருட்ச விநாயகர் சன்னிதி உள்ளது. அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்களுக்கடியில் ஐந்து முகங்களுடன் கம்பீரமாக வீற்றுருக்கும் ஸ்ரீ பஞ்சமுக விநாயகப்பெருமான்.
இந்த விநாயகரைத் தரிசித்தபின் ஸ்ரீ தண்டாயுதபாணி சன்னிதிக்குச் சென்றோம். கர்பகிரஹத்தின் நுழைவாயிலின் இடப்புறம் ஸ்ரீ விநாயகரும், வலப்புறம் ஸ்ரீ வீரபத்திரரும் அருள்பாலிக்கிறார்கள்.
கர்பகிரஹத்தில் தண்டத்துடன் காட்சிதரும் ஸ்ரீ தண்டாயுதபாணி தரிசனம். முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர் வடித்த சிலையே மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வலது கையில் தண்டத்துடன் இடதுகையை இடுப்பில் வைத்தபடி, பழநி முருகனைப் போலவே, ஸ்ரீ தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். தலைக்கு பின்புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார்.
தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்றுவித அலங்காரங்களுடன் காட்சி தருவார் என்றும், அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இவரை தண்டாயுதபாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும் என்றும் இங்குள்ள சிவாச்சாரியார் கூறினார்.
சுற்றுப்பிரகாரத்தில் ஸ்ரீ தண்டாயுதபாணி ஸ்வாமியின் கர்பகிரஹத்தின் வலப்புறம் ஸ்ரீ பட்டீசுவரரும், இடப்புறம் அன்னை மரகதாம்பிகையும் தனிச்சன்னதிகளில் தரிசனம் கொடுக்கிறார்கள். பெற்றோருக்கு மத்தியில் காட்சியளிப்பது விசேஷம் என்பதால் ஸோமஸ்கந்தர் என்றும் அழைக்கப்படுகிறார்.
அன்னை மரகதாம்பிகை சன்னிதிக்கு எதிராக சுற்றுப்பிரகாரத்தில் நவகிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளது. மேலும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ லிங்கோத்பவர், ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ சண்டிகேஸ்வரர் வெளிமண்டபச் சுவற்றில் தனித்தனிச் சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.
புதியதாக அமைக்கப்பட்ட இராஜகோபுரத்தின் வழியே நேராக ஸ்ரீ தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம். இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் ஸ்ரீ வலம்புரி விநாயகர் தனிச்சன்னதியில் அருள்காட்சி தருகிறார். அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கின் அடிப்புற ஆமை வடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் அதிசயமான அமைப்பாக உள்ளது.
வரதராஜப் பெருமாள் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
மருத மரங்கள் நிறைந்தும், நோய் நீக்கும் மருந்து குணங்களை உள்ளடக்கிய மூலிகைகளைக் கொண்டதுமான மலையில் அருளுபவர் என்பதால் இங்கு முருகப்பெருமான் ‘மருதாச்சலமூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார். இவரை வனங்கினால் நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மருதமரமே இங்கு ஸ்தலவிருஷம். தீர்த்தத்தின் பெயர் ‘மருது சுனை’.
மலையில் உள்ள ஒரு மருதமரத்தின் அடியில் இருந்து இந்த தீர்த்தம் உற்பத்தியாகி வருகிறது என்றும், இந்த தீர்த்தமே சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்று ஒரு ஆலய சிப்பந்தி கூறினார்.
அடிவாரத்திலிருந்து நடைபயணமாக மலையேறும் பாதையில் படிகள் ஆரம்பிக்கும் இடத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னிதியும், சற்று மேலே சென்றால் காவடி சுமந்த வடிவிலுள்ள இடும்பன் சன்னிதியும் அமைந்துள்ளன என்றும், மேலும் பதினெட்டாம் படி எனப்படும் முதல் பதினெட்டுப் படிகளும், குதிரைக் குளம்புச் சுவடு காணப்படும் பாறையும் மிகவும் விஷேஷம் என்று அங்குவந்த பக்தர்கள் கூறினார்கள். வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர் சில காலம் வசித்து வந்த குகைக்கோயில் அமைந்துள்ளது என்றும் கூறினார்கள்.
நாங்கள் மலைப்பாதை வழியாக காரில் வந்ததால் இவைகளையெல்லாம் பார்க்கமுடியவில்லை. திருமுருகப்பெருமான் அருளுடன் அடுத்ததடவை வந்து எல்லாவற்றையும் நிதானமாக பார்க்கவேண்டும்.
புதியதாக அமைக்கப்பட்ட படிகள் வழியாக கீழே வந்து, வாகனங்கள் நிற்கும் இடத்தில் தேவஸ்தான மினிபஸ்ஸை பிடித்து, மலை அடிவாரம் வந்து, அங்கிருந்து டவுன்பஸ்சை பிடித்து சாய்பாபா காலனி பஸ்ஸ்டாப்பில் இறங்கி இல்லம் வந்து சேர்ந்தோம்.
அருணகிரிநாதர் திருப்புகழில் "மருதமலை முருகன்" ...
திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்
எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!
சினமுடைஅசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி விடுவோனே!
பருவரை யதனை உருவிட எறியும்
அறுமுகமுடைய வடிவேலா!
பசலையொ டணையும் இளமுலை மகளை
மதன்விடு பகழி தொடலாமோ!
கரிதிரு முகமும் இடமுடை வயிறும்
உடையவர் பிறகு வருவானே!
கனதனமுடைய குறவர்தம் மகளை
கருணையொ டணையும் மணிமார்பா!
அரவணை துயிலும் அரிதிரு மருக
அணிசெயு மருத மலையோனே!
அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே!
No comments:
Post a Comment