Monday, February 5, 2018

திருச்சியில் ஆலய தரிசனம் (1) ..


திருச்சியில் ஆலய தரிசனம் : 24-1-2018 : செவ்வாய்க்கிழமை

உச்சிப்பிள்ளையார் ...

திருவானைக்கோவில் மாம்பழச்சாலை அருகில் பாரியாள் தங்கை மாலதி இல்ல ஜாகை. காலை எட்டு மணி அளவில் சூடா நெய்போட்டு ரவா உப்புமா சாப்பிட்டுவிட்டு, குமார் ஆட்டோவில் பயணம். காவேரி ஆற்றை கடக்கும்போது, நடுப்பாலத்தில் இறங்கி (ரோட்டின்மேல்தான்) காவேரி அன்னை தரிசனம். நீர் வரத்து நன்றாகவே இருக்கு. வேகமாக சுழற்சியுடன் செல்கிறது. 

பார்யாள் படித்த காலேஜ் வழியாக ( மெயின்கார்டு கேட் போகாமல் ) மலைக்கோட்டை அடிவாரத்தில் இறங்கி உள் செல்ல, அருள்மிகு மாணிக்கவிநாயகர் சன்னதி. 

முழுமுதற்க் கடவுளான மாணிக்கவிநாயகரை வணங்கி, மேலே செல்ல படிக்கட்டுகளில் நடக்க ஆரம்பித்தோம். 473 படிகள் , 273 அடி உயரம்.

கிட்டதட்ட மலைகோட்டையின் மையபகுதி வந்தவுடன், இடது புறம் உள்ள படிக்கட்டுகள் தாயுமானவர் சுவாமி சன்னதிக்கு செல்கிறது. வலது புறம் உள்ள படிக்கட்டுகள் உச்சிபிள்ளையார் கோவிலை நோக்கி செல்கிறது. 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று பெயர். 

செங்குத்தான மலைப்படிகளில் ஏறி, மலை உச்சியில் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு இருக்கும் என் ஆத்மார்த்த ஆப்த சிநேகிதரான ஸ்ரீ கற்பக மூர்த்தி தரிசனம். என்னைக் காக்கும் விநாயகனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்கினேன்

கணபதி இருக்க, கவலை எதற்கு


35 வருஷங்கள் கழித்து உச்சிப்பிள்ளையார் விஜயம். ஒரு மாற்றமும் தெரியவில்லை. படிகளில் ஏறிச்செல்ல வசதியாக கைப்பிடிகள் போடப்பட்டுள்ளது. பிள்ளையாரை சற்று தூரத்தில் நின்றுதான் தரிசிக்க முடிகிறது. ஒரு தடுப்பு இருக்கிறது. ஒருவேளை சிறப்பு தரிசனத்திற்காக (காசுகொடுத்து கிட்ட தரிசனம்) போட்டுருக்கலாம். கோயிலிலிருந்து கீழே பாக்கும்போது, படிக்கட்டுகளும் மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கிறது.





தாயுமான சுவாமி ...

சற்று கீழ் இறங்கி, வலது புறம் உள்ள படிக்கட்டுகள் ஏறி தாயுமானவர் சுவாமி சன்னதிக்கு சென்றோம். இங்கே விநாயகப்பெருமான் "செவ்வந்தி விநாயகர்" என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார். முத்துக்குமாரசுவாமி தனிச்சன்னதியில் வீற்றிக்கிறார். 


இங்குள்ள சிவபெருமான் ரத்னாவதி என்ற பெண்மணிக்கு தக்கசமயத்தில் அவளது தாயின் வடிவில் சென்று பிரசவம் பார்த்ததால் "தாயும் ஆனவர்" என்று அழைக்கபடுகிறார்.

கிட்டத்தட்ட ஆறு அடி உயரம் உள்ள பிரமாண்டமான சிவ லிங்கம். முதல் பார்வையிலேயே மிக அற்புதமாக காட்சிதருகிறார். ஒருவகை ஈர்ப்பு. என்னையும் பாரியாளும் தவிர யாருமே இல்லை. குருக்கள் சற்றேத்தள்ளி ஒரு நபரிடம் பேசிகொண்டுருந்தார். நந்தியம்பெருமானை வணங்கி கண்களை மூடி எனக்குத்தெரிந்த சிவ ஸ்லோகங்களை மனதிற்குள் சொல்லிக்கொண்டு இருந்தேன். சில வினாடிகளில் சூட்சும இறைஅலைகள் தேகமெங்கும் ஆக்கிரமிக்க தொடங்கியது. ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, ஒரு அரவணைப்பு, ஒரு பிடிப்பு, அலைகளின் அடர்த்தி மெருகேறி மெருகேறி, சிவத்தையே நேரில் கொண்டுவருவது போல், சொர்க்கலோகம் போல், என்றும் ஆனந்தம் தரும் அன்பு அலைகள் சூழ்ந்த உலகம் போல் ஜோதியாய் ஒளிர்கிறது. ஆன்மா தூய்மை பெறுகிறது, ஒளி பெறுகிறது. அங்கிங்கெனாதபடி எங்கும், எங்கெங்கும் வியாபித்திருக்கும், ஆயிரம் ஆயிரம் கோடி சூரிய ஜோதியே, நின் பொற்பாதங்களில் சரணாகதி. 

சிவ சிந்தனை நீங்காதிருந்தால்  பெருமான் கூடவே இருப்பதை நமக்கு உணர்த்துவான். இன்று அதை உணர்ந்தேன். எங்கெங்கும் சிவம். சிவமயம், சிவ ஒளி, சிவ நாமம், சிவ மந்திரம், சிவ அதிர்வு, சிவ தரிசனம், எல்லாம் சிவமே. அனைத்தும் சிவமே. 

இங்கு சிவபெருமானின் சன்னதிக்கு பின்புறம் 'கொடிமரம்' இருக்கிறது. நவகிரக மண்டபத்தில் சூர்யநாராயண ஸ்வாமி உஷா ப்ரத்யுஷா தேவியர்களுடன் காட்சிகொடுக்கிறார். இதர கிரஹங்கள் அவரை நோக்கி இருக்கின்றனர். 
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி தர்பை ஆசனத்தில் அமர்ந்துருக்கிறார். அவருக்கு கீழே எட்டு சீடர்கள் அமர்ந்த்திருக்கிறார்கள். 

பிரகாரத்தில் மஹாலக்ஷ்மி தாயார் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். இச்சிலை மரத்தில் செய்யப்பட்டது என்று கூறுகிறார்கள். மரத்தினால் செய்யப்பட்ட துர்காதேவியும் தனிச்சன்னதியில் இருக்கிறாள்.  விஷ்ணுதுர்கை எட்டு கரங்களுடன் காட்சிகொடுக்கிறாள்.

கொடிமரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவில் சங்கு ஊதியபடி ஒரு சிவகணம் இருக்கிறது. "சங்கநாதர்" என்று இவரை அழைக்கிறார்கள். 




சற்று கீழ் இறங்கியவுடன் மட்டுவார் குழலம்மை சன்னதி. அன்னையின் கண்களிலிரிந்து ஒளிரும் 'தீக்ஷண்ய பார்வை' சூட்சும தேகத்தில் உள்ள ஒவ்வொரு செல்களிலும் ஊடுருவிச்செல்கிறது. உவகைகள் பூத்துகுலங்கி உள்ளத்தை வருடிகிறது. அம்பாள் வாசனையுடைய கூந்தலை உடையவள் என்பதால் 'சுகந்த குந்தளாம்பிகை' என்றும் அழைக்கப்படுகிறாள்.

ஒரு அன்பர் வாழைத்தாரிலிருந்து வாழைப்பழங்கள் பிய்த்து கொடுத்தார்.  சாப்பிட்டுவிட்டு இறங்கினோம். 


அடிவாரத்திலேர்ந்து மலைக்கோட்டையை கிழக்கிலிருந்து பார்த்தால் விநாயகர் போன்றும், வடக்கில் இருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போன்றும், மேற்கிலிருந்து பார்த்தால் சிவலிங்கம் போலவும், தெற்கிலிருந்து பார்த்தால் யானை மேல் அம்பாரி இருப்பது போலவும், தோற்றம் அளிக்கிறது. இயற்கையின் வினோதம். 

மதியம் 2 மணி அளவில் இல்லம் திரும்பினோம். மலை ஏறி இறங்கியதால் நல்ல பசி. மாலாவின் கைவண்ணம் சுடச்சுட சாதம்,  குழம்பு ரசம் கறி கூட்டு தயிர். வயிறுமுட்ட சாப்பிட்டவுடன், உறக்கம். 4 மணிக்கு எழுந்தவுடன் ஆவிபறக்க காபி. கூட நேந்திரங்கா வருவல். சுமார் 6 மணிக்கு ஆட்டோ பிடித்து ஸ்ரீரங்கம் கோவில் சென்றோம்.


ஸ்ரீரங்கநாதர் ... 

லட்சுமி தேவி தினமும் வந்து பூஜிக்கும் ஸ்தலம். 
11 ஆழ்வார்களால்  247 பாசுரங்களால்  மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.
156 ஏக்கர் பரப்பளவில் உலகிலேயே 7 பிரகாரங்களைக் கொண்டதும், 21 கோபுரங்கள், 9 தீர்த்தங்களையும் உள்ளடக்கிய புராதன ஆலயம்.
ராஜகோபுரம் ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமைக்குரியது. 236 அடி உயரம், 13 நிலைகளுடன், 13 கலசங்களுடன் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது. 

அரங்கன் பள்ளிகொண்டுஇருக்கும் அரவத்தின் வால்போல் வளைந்து வளைந்து செல்லும் வரிசை. சாயரட்சை பூஜை நடந்துகொண்டுரிந்தது. "Q" நகரவில்லை. 45 நிமிஷங்கள் கழித்து மூவ் ஆனதும் 10 நிமிஷங்களில் ஸ்ரீ அரங்கனின் தரிசனம்.

திருமகள் விரும்பி உறையும் மார்பை உடைய அரங்கன் ஆதிசேஷன் மீது அழகுறச்சாய்ந்து கொண்டிருக்கும் சயனக்கோலம். 
நெஞ்சம் நிறைந்து உள்ளம் உறைந்து, கோடான கோடி ஜீவன்களை காத்து அரவணைத்து விந்தைபுரியும் ஸ்ரீரங்கநாதர் தாள் பணிந்து போற்றி வீழ்ந்து வணங்கினேன்.


தாயார் சந்நிதிக்கு செல்லும் வழியில் அரங்கனுக்கே வைத்தியம் செய்யும் விதமாக ஸ்ரீமந் நாராயணனே, கையில் அட்டைப் பூச்சி, அமிர்த கலசம் இவற்றுடன் "தன்வந்திரியாகக்" காட்சியளிக்கிறார். 


அடுத்து தாயார் ஸ்ரீரங்கநாச்சியார் தரிசனம். 
பட்டர்களைத்தவிர ஓரிருவர் தான் இருந்தனர். ஒரு தொந்தரவும் இல்லாமல் அமைதியான ஆழந்த தரிசனம். கருவறையின் அருகில் நின்றுகொண்டு இருந்ததால் தாயாரின் அருள் அலைகளை உணர்ந்து, அவளே மிக அழகாக அருகில் வந்து கருணையோடு பார்ப்பதுபோல் ஒரு மனப்பிரமை. ஆஹா, என்ன ஒரு மிக பெரும் பாக்கியம்.


அடுத்து சக்கரத்தாழ்வார் சன்னதி.
திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். 
பதினாறு ஆயுதங்கள் ஏந்தியுள்ள பிரமாண்டமான சக்கரத்தாழ்வார். பின்புறம் அமர்ந்த கோலத்தில் யோக ந்ருஸிம்மர்.
கர்மவினை தாக்கத்தால் நல்ல சம்மட்டி அடி வாங்கி, இதிலிருந்து தப்பித்து பிழைக்க ஒரு சிறு வழியாவது கிடைக்காதா எனும் நிலையில் இருக்கும் எனக்கு, இவ்விருவரையும் சேவிக்கும்போது கர்மவினை தாக்கம் படிப்படியாக குறையும் என்று நம்பிக்கை ஏற்பட்டது.


ஒவ்வொவுறு சன்னதிக்கும் இடையே நல்ல தூரம். கோவிலை விட்டு வெளியேவர கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆகிவிட்டது. நல்ல நடை, நல்ல பசி. ஆட்டோ பிடித்து வீடு வர இரவு 10 மணி ஆயிடுத்து. சுடச்சுட மிருதுவான குண்டு இட்லி காரசாரமான சட்னியுடன் ரெடியாக இருந்தது. மாலாவுக்கு பெரிய "ஜெ". ஏழுஎட்டு உள்ளே தள்ளி. ஒரு டம்ளர் மோர் குடிச்சவுடன், உண்டமயக்கம். உறக்கம்.

No comments:

Post a Comment