Friday, February 9, 2018

திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் .....


திருச்சியில் ஆலய தரிசனம் (2) : 25-1-2018 : வியாழக்கிழமை

திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் ...

காலை எட்டு மணி அளவில் சூடா நெய்போட்டு வெண்பொங்கல் சாப்பிட்டுவிட்டு, திருவானைக்கோவில் மாம்பழச்சாலை அருகில் இருக்கும் பாரியாள் தங்கை மாலதி இல்லத்திலிருந்து குமார் ஆட்டோவில் கிளம்பினோம்.

கொள்ளிடம் பாலம் கடந்து, டோல்கேட்டில் சென்னை செல்லும் ஹைவேயை பிடித்து, கிட்டத்தட்ட 25 KM பயணித்து சிருகனுர் என்ற இடத்தில் இடதுபுறம் திரும்பி, சுமார் 5 KM சென்றால் ஆலயம் வருகிறது. சிருகனுர் வரைக்கும் சூப்பர் ரோடு, அப்புறம் ஆலயம் வரைக்கும் சுமாரான ரோடு.

கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுக்கு மேல் பழமைவாய்ந்த மிகவும் சக்தி மிக்க ஆலயம். பிரம்மாவின் சாபம் நீங்கிய இடம். பிரம்மா அருள் ஆட்சி செய்யும் இடம். எந்தவித பாரபட்சமின்றி கர்மவினையால் துன்பப்படும் இவ்வாலயம் வரும் யாவருக்கும், சர்வேஸ்வரரின் ஆணைக்கிணங்க வணங்குபவரின் தலைஎழுத்தை மீண்டும் ஒரு முறை மங்களகரமாக மாற்றும் இடம். அன்பால் உள்ளம் உருகி பிரம்மாவின் அருள் ஆசியை வேண்ட தலைஎழுத்தை மாற்றும் அற்புத அலைகளை உணரும் இடம். விதியிருப்பின் விதி கூட்டி அருள் ஏற்படும் இடம். 

யாருக்கெல்லாம் தலை விதி மங்களகரமாக மாற வேண்டும் என்ற விதி இருக்கிறதோ அவர்களே ஸ்ரீ பிரம்மாவை வந்து பார்த்து தங்கள் எழுத்தை மாற்றிக் கொள்ளும் நிலை உருவாகி இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாக்கியம் உருவாகும் என்று கூறுகிறார்கள். இது நிஜம் தான் என்று நான் நம்புகிறேன்.

இவ்வூரிலிரிந்து அருகாமையிலுள்ள ஆங்கரை கிராமத்தை பூர்விமாக கொண்டிருந்தாலும் 2014 வருஷம் தான் இவ்வாலயம் பற்றி அறிந்து கொண்டேன். என் தந்தைக்கும் தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன். அவர் இக்கோவில் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. 2016ல் ஒரு Blogல் ரொம்ப விரிவாக ஒருவர் எழுதியிருந்தார். மேலும் பாரியாள் தங்கை மாலதி இதுபற்றி சொல்லி அவளுக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டாள். ஐந்து தடவை இக்கோயில் செல்ல யத்தனித்தேன். ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒருவித முட்டுக்கட்டைகள். போகமுடியவில்லை. இன்றுதான் ஈசன் அனுகிரஹமும் ப்ரம்மாவின் அருளும் கிடைத்துள்ளது.



சுற்றிலும் மிக உயரமான மதில் சுவர்கள். ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரம். கோபுர தரிசனம் கண்டு நிலையை கடந்து, நந்தியம்பெருமானை வணங்கி, மஹாமண்டபத்தில் துவாரபாலகர்களை பார்த்துவிட்டு, அர்தமண்டபத்திற்குள் நுழைந்து, கர்பகிரஹத்தில் கம்பீரமாக காட்சிகொடுக்கும் கிழக்கு நோக்கிய ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் தரிசனம். பிரம்மனுக்கு அருள் புரிந்து வரம் அருளிய ஸ்தானம். பிரம்மபுரீஸ்வரர் ஒரு சுயம்பு மூர்த்தி.

சிவனின் வேத மந்திரம் முழங்க முழங்க, சிவத்தையே நேரில் கொண்டுவருவது போல் ஒரு மனப்பிரமை. ஆஹா, ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி.






வெளி பிரகாரத்தில் அர்தமண்டபத்தின் தென்திசையில் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ பிரம்மாவின் சன்னதி. திருமஞ்சள் காப்புடன், தாமரைப் பூ மாலைகளுடனும், அட்சரமாலை மற்றும் கமண்டலத்துடன், 6.1/4 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான பிரம்மாவின் திவ்விய தரிசனம். திருப்பட்டூரில் மட்டுமே பிரம்மன் தனி சன்னதியுடன் காணப்படுகிறார்.

கண்களை மூடாது அவரைப் பார்த்தபடியே சிலவினாடிகள் நின்றுகொண்டு இருக்கும்போது, மனதிற்குள் ஒரு ஆனந்தம். அவர் என் தலைஎழுத்தை மங்களகரமாக மீண்டும் ஒரு முறை மாற்றியமைக்கிறார் என்று ஒரு பிடிப்பு. ஆன்மா தூய்மை பெறுகிறது, ஒளி பெறுகிறது.

குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், வியாழக்கிழமைகளில் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும் என்று கூறுகிறார்கள். முதல்முறையாக நானும் பாரியாளும் ப்ரஹ்மாவை தரிசிக்கும் இன்றைய தினம் வியாழக்கிழமை. எல்லாம் அவன் செயல். கூட்டம் அதிகமாய் இருந்ததால் என்னவென்று விஜாரித்தபோது, வியாழக்கிழமை விஷேஷம் என்று தெரிந்துகொண்டோம்.

பக்கத்தில் அன்னை ஸரஸ்வதி தேவி தனிச்சன்னதியில் வீற்றிக்கிறாள்.

ஸ்ரீ பிரம்மாவை வணங்கி வெளிவர, சன்னதிக்கு தென்புறம் பதஞ்சலி முனிவர் சிவத்தோடு ஐக்கியமான இடம். ஒரு அற்புதமான தியான மண்டபம். த்யான மண்டபத்தின் நடுவில் கண்ணாடியால் தடுப்பு அமைத்து சுவர் ஓரமாக ஒரு சிவலிங்கம் பிரதிக்ஷ்டை செய்யப்பட்டு, பின்புறம் யோக நிலையில் இருக்கும் பதஞ்சலி முனிவரின் திருவுருவப் படம் வைக்கப்பட்டுள்ளது. அதன் எதிரில் அமர்ந்து பத்து நிமிஷங்கள் த்யானம் செய்தேன். அப்போது மனம் பெரும் அமைதி அடைவதை அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்.

மண்டபத்தின் ஒருபுறம் பதினெட்டு சித்தர்களின் திருஉருவப்படங்கள் மிகப்பெரிய அளவில் வரிசையாக சுவற்றில் மாட்டப்பட்டுளளது.  இன்னுருபுறம் கணபதியுடன் கூடிய ஸப்த மாதக்களின் 3 அடி உயரமுள்ள திருஉருவச்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. மிகவும் பழமைவாய்ந்த சக்தி மிக்க ஆலயத்தில் பதஞ்சலி முனிவரின் தியான மண்டபத்தில் குடி கொண்டிருக்கும் சப்த மாதாக்கள் மிகவும் சாந்நித்தியம் படைத்தவர்கள் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்.



த்யான மண்டபத்தை விட்டு வெளியே வந்தால் வெளிப்பிரகாரத்தில் கிழக்குநோக்கி தனிச்சன்னதியில் பிரம்மாண்டமான 'கற்பக விநாயகர்'. அதற்கு அருகில் சிறிய சன்னதியில் 'பழமைநாதர்' என்ற திருநாமத்துடன் சிவலிங்கம். 

ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கர்பகிரஹத்தின் நேர்பின்புறம் வெளிப்பிரகாரத்தில் சிறிய சன்னதியில் கிழக்குநோக்கி 'கந்தபுரீஸ்வரர்' என்ற திருநாமத்துடன் சிவலிங்கம்.  முருகப்பெருமான் அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி சென்றதால் "கந்தபுரீஸ்வரர்" என்று அழைக்கப்படுகிறார். அருகில் சிறிய சன்னதியில் 'சண்முகநாதர்' என்ற திருநாமத்துடன் முருகப்பெருமான். 

சற்று தள்ளி இரண்டு சன்னதிகளில் 'கஜலட்சுமி' காட்சிகொடுக்கிறாள்.

வெளிப்பிரகாரத்தில் வடதிசையில் கிழக்குநோக்கி 'பள்ளியறை பாதாள ஈஸ்வரர்' என்ற திருநாமத்துடன் சிவலிங்கம். சற்று கீழ் இறங்கி, இந்த லிங்கத்தை உற்றுநோக்கியபோது ஒருவகை ஈர்ப்பு. ஒரு பிடிப்பு.

சண்டிகேஸ்வரர் தரிசனம். 

காலபைரவர் தரிசனம். தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். அருகில் சூரியன். சற்று தள்ளி பக்தநந்தி. 

வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என தரிசிக்கும் அமைப்பு மிக விசேஷமானது என்று கூறுகிறார்கள்.



ஈசனின் மஹாமண்டபத்தை விட்டு வெளியேவந்து முன்மண்டபம் வழியாக வடக்கே சென்றால் அம்பாளின் கோவில். இங்கு உள்ள மஹாமண்டபத்தில் சிறிய சன்னதியில் 'தாயுமானவர்'.



அர்தமண்டபத்திற்குள் நுழைந்து கர்பகிரஹத்தில் கம்பீரமாக காட்சிகொடுக்கும் கிழக்கு நோக்கிய 'ஸ்ரீ பிரம்ம நாயகி' தரிசனம். பிரம்மனின் சம்பத்தாகிய தேஜஸை அம்பாள் திரும்ப வழங்கியதால் "பிரம்மசம்பத் கௌரி" என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறாள். அவள் அருளால் அவளின் அருளை உணரும் ஒரு வாய்ப்பு கிட்டியது. 



அம்பாள் கோவிலை விட்டு வெளியேவந்தவுடன் வடபக்கம் ஒரு அழகிய நந்தவனம். உள்ளே நுழைந்தவுடன் ஒரு பெரிய கிணறு இருக்கிறது. 'பிரம்ம தீர்த்தம்' என்று பெயர். காசிக்கு நிகரானது என்கிறார்கள். ஸ்தல விருட்சம் மகிழமரம். மகிழ மரம் பூத்துச் சொரிந்திருந்தது. மகிழ மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட கோயில் மிக அபூர்வம் என்று பெரியவர்கள் கூறுவார்கள். 



இந்த ஸ்தல விருக்ஷத்தை சுற்றி 7 சிவலிங்கங்கள் சிறிய தனிசன்னதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவை எல்லாம் ப்ரஹ்மதேவர் பிரதிஷ்டை செய்து பூஜை பண்ணிய புராதன சிவலிங்கங்கள். மிகமிக சக்தி வாய்ந்தவை. பெரிய நந்தவனம் என்பதால் ஒவ்வொவுறு சன்னதிக்கும் நடுவில் நிறைய இடைவெளி இருக்கிறது. ஒவ்வொவுறு சன்னதியும் அழகான நடைபாதையால் இணைக்கப்பட்டுள்ளது.



மண்டுகபுரீஸ்வரர், சப்தரீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்திநாதர், அருணாசலேஸ்வரர். 





கைலாசநாதர் மிகப் பெரிய மிகவும் பழமையான சிவலிங்கம். நான்கு படிகள் ஏறியவுடன் 18 தூண்கள் கொண்ட ஒரு மண்டபம் உள்ளது. அதனையொட்டி கருவறையில் இந்த பிரமாண்டமான லிங்கம் கம்பீரமாக காட்சிகொடுக்கிறது.  மண்டபமும் கருவறையும் மிகவும் சிதிலமடைந்துள்ளது. 
ஆனால் இந்த சிவலிங்கத்தை சில வினாடிகள் கூர்ந்து கவனித்தபோது, சக்திமிக்க அதிர்வு அலைகள் வெளிப்பட்டு சூட்சும தேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொள்ளும் ஒரு உணர்வு. ஜனநடமாட்டம் ஆரம்பித்ததும் சட்டன நின்றுவிட்டது. 



கீழே இறங்கி எதிரிலுள்ள மிகப்பெரிய நந்திதேவரை வணங்கினேன்.  தனிமண்டபத்தில் கம்பீரமாக உட்கார்ந்துகொண்டு இருக்கிறார். அவர் கால்களை தொட்டபோது பவர்புள் மின்சாரம் உடலை ஊடுருவும் ஒரு சிலிர்ப்பு. 

ஒரு தனிசன்னதியில் ஜேஸ்டாதேவி, மாந்தி, மாந்தன் உள்ளனர். 

நந்தவனத்தை விட்டு வெளியேவந்து மறுபடியும் ஈசனின் முன்மண்டபத்திற்குள் நுழைந்து, சிறிய தனிசன்னதிகளில் இருக்கும் சுத்தரத்தினேஸ்வரர் மேலும் நவகிரகங்கள் தரிசனம். 



பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர்.

பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது. 

ஜனநடமாட்டம் மிக குறைந்த நாளில் வந்து நிதானமாக தரிசனம் செய்யவேண்டும். பதஞ்சலி முனிவர் சன்னதி முன் ஒரு மணி நேரம் உட்கார்ந்து த்யானம் செய்யவேண்டும். அப்பதான் சித்தரின் அன்புஅலைகளையும் சப்தமாதக்களின் அருளலைகளையும் ஆத்மபூர்வமாக உணரமுடியும்.
மேலும் பாதாள ஈஸ்வரர், கைலாசநாதர் முன் உட்கார்ந்து ஒரு மணி நேரம் த்யானம் செய்தால்தான் ஆத்மதிருப்தி ஏற்படும். மகிழமரத்தின் கீழ் அமர்ந்து ஒரு மணி நேரம் த்யானம் செய்யவேண்டும். அப்பதான் சப்தம் இல்லாமல் உலாவும் காற்று இந்த மரத்தின் பசுமையான இலைகளில் ஊடுருவி அங்கே உள்ள ஏழு  சிவலிங்கங்கள் மேல் படர்ந்து இறை சக்தியாய் சிவனின் அலைகளய் மாறி காற்றோடு காற்றாக கலந்து என் சுவாசம் வழியாக சூக்ஷ்ம தேகத்திற்குள் ஊடுருவி என் ஆத்மாவை தூய்மை படுத்தும். ஈசன் தான் அருள் புரியவேண்டும்.

மறுபடியும் இராஜகோபுரம் வழியாக வெளியேவந்து ஆட்டோவில் டோல்கேட் வரைவந்து சேலம் ரோட்டில் திரும்பி உத்தமர்கோவில் சென்றோம். 

உத்தமர்கோவில் .....

மும்மூர்த்திகளும் தம் தேவியுருடன் அருளாட்சி செய்யும் ஒரே ஸ்தலம். 
அருள்மிகு பூர்ணவல்லி தாயார் உடனுறை அருள்மிகு புருஷோத்தம பெருமாள் 
அருள்மிகு சௌந்தர்யஈஸ்வரி உடனுறை அருள்மிகு பிக்ஷண்டேஸ்வரர்
அருள்மிகு ஞானசரஸ்வதி தேவி உடனுறை அருள்மிகு ப்ரஹ்மதேவர் 
மேலும் ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ லட்சுமிநாராயணன், ஸ்ரீ தட்சினாமூர்த்தி, ஸ்ரீராமர், ஸ்ரீ வேனுகோபாலன், ஸ்ரீ வரதராஜபெருமாள், தசதரலிங்கம், அருள்மிகு ஆஞ்சேநேயஸ்வாமி தனிசன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள். 

1964, 1965, 1966ல் பிக்ஷண்டார்கோவில் அக்ராஹாரத்தில் வசித்தபோது புரட்டாசி மாசமும் மார்கழி மாசமும் மடப்பள்ளியில் கொடுக்கப்படும் நெய்யும் முந்திரிப்பருப்பும் கூடிய 'உண்டக்கட்டி' வாங்குவதற்காக நானும் என் கசின் துரைராஜூவும் வருவோம். அதற்குஅப்பறம் 52 வருஷங்கள் கழித்து இன்றுதான் வந்துருக்கிறேன். நிறைய மாற்றங்கள். அப்போதிருந்த ஒரு சாந்நித்தியம் தெய்வீகம் இப்போது இல்லை. எல்லாம் புருஷோத்தமன் செயல். சயனித்துக்கொன்டே எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டு இருக்கிறான்.

ஆட்டோவில் இல்லம் திரும்பினோம். நல்ல பசி. மாலாவின் கைவண்ணம் சுடச்சுட சாதம்,  குழம்பு ரசம் கறி கூட்டு தயிர். வயிறுமுட்ட சாப்பிட்டவுடன், உறக்கம்.

திருப்பட்டுர் ஒரு அற்புதத்தலம். அவசியம் ஒரு முறை சென்று வாருங்கள். தெய்வீகத்தை உணருங்கள். 

Pictures: Out of 13 above, 6 are culled from ‘Google Images’ and 7 are my clicks.

No comments:

Post a Comment