Thursday, February 15, 2018

கோட்டை ஈஸ்வரனும், கோனியம்மனும் .....


கோட்டைமேடு ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயில் ...

கோயம்புத்தூரில் சாய்பாபா காலனியில் கோபால் அண்ணா இல்லத்தில் 3 நாட்கள் வாசம். 

இன்று (29.1.2018) பிரதோஷம். அண்ணாவிடம் 'சிவன் கோவில் எங்கு உள்ளது, நான் போகவேண்டும்' என்று கேட்டேன்.  "வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு சிவன் கோவில் இருக்கு. ஆனா கோட்டை ஈஸ்வரன் என்று ஒரு பழையகாலத்து கோவில் கொஞ்சம் தள்ளி இருக்கு, நா கூட்டிண்டு போறேன்" என்று சொன்னார். 

மாலை நான்கு மணிக்கு அண்ணா நான் பார்யாள் மூன்று பேரும் கிளம்பினோம். Ola பிடித்து அக்கோவில் போவதற்கு 5 மணி ஆகிவிட்டது. கூட்டம் மிக அதிகமாய் இருந்ததால் என்னவென்று விஜாரித்தபோது, 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மிகவும் அபூர்வ பிரதோஷம் என்று தெரிந்துகொண்டோம்.

இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள் நட்சத்திரம் திதி ... திங்கள்கிழமை திருவாதிரை திரயோதசி ... இந்த மூன்றும் ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது. இந்த அபூர்வ நாளில் பிரதோஷ வழிபாடு செய்தால் 108 பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். 

எல்லாம் அவன் செயல்.

நீண்ட வரிசை. கொஞ்சம்கொஞ்சமாக நகர்ந்து அப்பனை தரிசிக்கும் போது மாலை 6:30 ஆகிவிட்டது.

இந்த சிவலிங்கத்தின் மேல் "ப்ரஹ்மஸூத்திரம்" வரையப்பட்டுள்ளது என்றும், இப்படிப்பட்ட அபூர்வஅமைப்பு நம் படைப்பில் எந்தவித கோளாறுகள் இருந்தாலும் விதியையே மாற்றும் வல்லமை படைத்தது என்றும் இங்குள்ள சிவாச்சாரியார்கள் கூறுகிறார்கள்.

ஸ்வாமிக்கு இடப்புறமாக தனிச்சன்னதியில் அம்பாள் அகிலாண்டேஸ்வரி அன்னையாக அருள்பாலிக்கிறாள். அவள் அருளால் அவளின் அருளை உணரும் ஒரு வாய்ப்பு கிட்டியது.   

அம்பாள் சன்னதி அர்த்தமண்டபத்திற்கு முன்பாக இருபக்கங்களிலும்  சுமார் ஐந்து அடி உயரமுள்ள இரு தூண்களிலும் புடைப்புச்சிற்பமாக ஸ்ரீ ஆஞ்சேநேயஸ்வாமி இருக்கிறார். வட புறமுள்ள தூணில்  தெற்கு நோக்கிய  ஆஞ்சநேயர்  பெண் உருவமும், தென்புறமுள்ள தூணில் வடக்கு நோக்கிய ஆஞ்சநேயர் ஆண் உருவம்  உள்ள சிறபமும் வரலாற்றுச்  சிறப்புக்கொண்டவை.
ஆஞ்சநேயர் உருவம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆண் பெண் என இரு தோற்றங்களிலும் இரு தூண்களில் அனுமன் தரிசனம் அன்னையின் சன்னதி முன் காட்சியளிப்பது வியப்பளிக்கிறது.

சுற்றுப்பிரகாரத்தில் ஸ்ரீ விநாயகப்பெருமான் காப்பு விநாயகர் என்ற திருநாமத்துடன் காட்சிகொடுக்கிறார். தனிசன்னதிகளில் காசி விஸ்வநாதர் மேலும் நீலகண்டேஸ்வரர் என்ற திருநாமங்களுடன் அருள்பாலிக்கும் சிவலிங்கங்களின் திவ்யதரிசனம். 

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ பைரவர், 63 நாயன்மார்கள் அருள்பாலிக்கின்றனர்.

இங்கே திருமுருகப்பெருமான் அவரின் ஆறுமுகங்களும் நேராகவே ஒரே திசையை நோக்கிய நிலையில், பன்னிரண்டு கைகளிலும் ஆயுதங்களை தாங்கியபடி வடக்குநோக்கிய மயில் வாகனத்துடன் "சண்முக சுப்ரமணியர்" என்கிற அழகிய திருநாமத்துடன் தனிச்சன்னதியில் அருள்காட்சி தருகிறார். இது ஒரு மிக அபூர்வமான அதிசயமான அமைப்பு.கோயம்புத்தூரில் கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான சிவபெருமான் கோவில், நடைமுறையில் ’கோட்டை ஈஸ்வரன் கோயில்’ என வழங்கப்படுகிறது. இவ்வாலயம் சங்குபுஷ்பம் இருந்த காட்டை அழித்து கட்டப்பட்டதால் சங்கீஸ்வரன் என்றும், விஜயநகரப் பேரரசினர் வழிபட்டதால் சங்கமீஸ்வரன் என்றும் சிவபெருமான் அழைக்கப்படுகிறார்.

இங்கே தரிசனங்கள் முடித்துவிட்டு, ஒரு KM நடந்து கோனியம்மன் ஆலயத்திற்கு சென்றோம். 

கோனியம்மன் ஆலயம் ...

கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 13ம் நூற்றாண்டை சேர்ந்த புகழ்பெற்ற அம்மன் கோவில். இக்கோயிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது. ஏழுநிலைகள் கொண்ட 84 அடி உயர இராஜகோபுரம். கோபுர தரிசனம் கண்டு நிலையை கடந்து, வெளிப்பிரகாரத்தில் கிழக்கு திசையில் அரசமரத்திற்கு அடியில் 10 கைகளுடன் கம்பீரமாக வீற்றிக்கிறும் பஞ்சமுக விநாயகப்பெருமானை வணங்கி, அர்தமண்டபத்திற்குள் நுழைந்து, கர்பகிரஹத்தில் 
மூன்றடி அகலமும் இரண்டரை அடி உயரமும் கொண்டு எட்டு கைகளிலும் ஆயுதங்களை தாங்கியபடி ... திரிசூலம், உடுக்கை, வாள், சங்கு, கபாலம், ஜுவாலை, சக்கரம், மணி ... உக்கிரமான பார்வையுடன், வலது காலை மடித்து பீடத்தின்மீது வைத்துக்கொண்டு, இடது காலைக் கீழே தொங்கவிட்டபடி வடக்கு நோக்கி கம்பீரமாக அமர்ந்திருக்கும் கோனியம்மன் தரிசனம்.  இடது காதில் தோடும், வலது காதில் குண்டலமும் அணிந்துருக்கிறாள். இந்த அபூர்வமான அமைப்பு, சிவசக்தி ஸுரூபம் என்று அங்குள்ள பூஜாரி சொன்னார். அம்மனுக்கு எதிரே சிம்ம வாஹனம் உள்ளது. துர்கா லக்ஷ்மி ஸரஸ்வதி தேவியர்கள் இருக்கிறார்கள்.கர்பகிரஹத்திற்கு நேர்பின்புரம் மார்பு அளவுள்ள ஆதி கோனியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அருகிலிருக்கும் சன்னதியில் வள்ளி தேவயானை சமேத ஸுப்ரமண்யர் தரிசனம் கொடுக்கிறார். சற்றுத்தள்ளி நவகிரகங்களின் சன்னதி. தேவியர்களுடன் கூடிய நவகிரஹ நாயகர்கள் அருள்பாலிக்கிறார்கள். சுற்றுப்பிரகாரத்தில் மாசானியம்மனும் சப்தகன்னியர்களும் உள்ளனர்.  வேப்பமரம் வில்வமரம் இருக்கிறது. ஸ்தல வருஷமாக நாகலிங்க மரம்.  பெரியபெரிய நாகலிங்க பூக்கள். முதல்தடவையாக பெரிய நாகலிங்க பூவை இப்போதுதான் பார்க்கிறேன். அம்மன் அனுகிரஹம்.அம்மன் தரிசனம் முடித்துவிட்டு, பத்து பதினைந்து தப்படிகள் நடந்தால் அரசு பேருந்து நிலையம். 7B பஸ் பிடித்து சாய்பாபா காலனியில் இறங்கி இல்லம் சென்றோம்.


No comments:

Post a Comment