...
சித்தமெல்லாம் சிவமயமாய் திளைத்திருக்க, ஆதிசக்தியின் அருளும், ஆசியும் பூரணமாக தேவைப் படும். இதை உணர்ந்திருந்த சித்தர்கள், அத்தகைய ஆதிசக்தியின் அம்சம் ஒன்றினையே போற்றி பூசித்தனர்.
இந்தஅம்சம் பத்து வயதுக்குறிய ஒரு சின்னஞ் சிறிய பெண்ணின் அம்சம் என்பது ஆச்சர்யமான ஒன்று, நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று.
இந்த உயர் தெய்வத்தைப் பற்றி கொங்கணவர் பின்வருமாறு கூறுகிறார்.
"வாலையைப் பூசிக்க சித்தரானார்
வாலைக் கொத்தாசையாய் சிவகர்த்தரானார்
வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார்
இந்த விதம் தெரியுமோ? வாலைப் பெண்ணே!"
சித்தர்கள் வணங்கிய அந்த பால தெய்வத்தின் பெயர் வாலை என்பதாகும். ஆதி சக்தியின் பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை. அனைத்திற்க்கும் ஆதி காரணமான இந்த வாலை தெய்வத்தையே சித்தர்கள் அகப்புற வழிகளில் பூசை செய்தார்கள். இந்த வாலையை பூசிக்காத சித்தர்கள் யாருமே இல்லை. இவள் அருமையை போற்றிப் பாடாத சித்தர்களும் இல்லை எனலாம்.
இத்தகைய வாலை தெய்வம் நமது உடலில் இருந்து இயங்குவதை உணர்ந்து கொண்டு அவளே அனைத்திற்கும் காரண காரியமாக இருந்து ஆட்டுவிப்பதை அறிந்து எல்லாவித யோகா ஞானங்களுக்கும் அவளே தலைமைத்தாய் என்று அறுதியிட்டு உரைத்த சித்தர்கள். அவளையே போற்றி பூசித்து சித்தி பெற்றனர்.
சின்னஞ்சிறு பெண்ணான வாலையின் அருளால் சித்தியடைந்து, பின் அவளை கண்ணித் தெய்வமாக வழிபட்டு படிப்படியாக மனோன்மணித் தெய்வமாக பூசை முடித்து, இறுதியில் ஆதிசக்தியின் அருள் பெற்று முக்தி நிலையான மெய்ஞான நிலையினை அடைந்தனர். இதுவே ஞானத்தின் அதி உயர் நிலையாக கருதப் பட்டது. இந்த நிலை எய்தியவர்களே சித்த புருஷர்கள்.
வாலை பூசை என்பது என்ன?
இதன் அருமையினை அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்
"கூடப்பா துரியமென்ற வாலை வீடு
கூறரிய நாதர் மகேச்சுவரியே யென்பர்
நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு
நந்திசொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும்
ஊடப்பா சிகாரவரை எல்லாம் தோன்றும்
ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊறலாகும்
தேடப்பா இது தேடு காரியம் ஆகும்
செகத்திலே இதுவல்லவோ சித்தியாமே
வாமென்ற அவள் பாதம் பூசை பண்ணு
மற்றொன்றும் பூசை அல்ல மகனேசொன்னேன்!"
பாலாம்பிகையான வாலையை அனைத்துக்கும் ஆதாரமானவள். இந்த ஆதார சக்தியினை வழிபட அகாரம், (சிகாரம்) உகாரம், மகாரம் என்ற மூன்றேழுத்து ஓங்கார மந்திரமே மூல மந்திரமாகும். வாலையை தங்கள் உடலில் இனங்கண்டு, இந்த ஓங்காரத்தின் உட்பொருளை உணர்ந்து அதன் வழி நின்று சித்தியடைவதுதான் வாலைபூசையின் நோக்கம்.
இதன் மகத்துவத்தினை கொங்கணவர் பின் வருமாறு கூறுகிறார்.
"மாதா பிதா கூட இல்லாமலே வெளி பல்லே
மண்ணும் விண்ணும் உண்டு பண்ணவென்று
பேதைப்பெண் ணாமுதல் வாலைப்பெண்ணாளென்று
புகுந்தா ளிந்த புவியடக்கம் "
"மனமு மதியு மில்லாவி டில்வழி
மாறுதல் சொல்லியே யென்ன செய்வாள்
மனமுறுதியும் வைக்க வேணும் பின்னும்
வாலை கிருபையுண் டாகவேணும்"
"வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை
வாய் கொண்டு சொல்பவர் யார் காணும்
மேல் ஒன்றும் கீழ் ஒன்றும் மத்திமமுங்கூட்டி
விரைந்து பாரடி ஞானப் பெண்ணே.!"
- வாலைக் கும்மி -
கருவூரார் தனது கருவூரார் பூஜாவிதி என்னும் நூலில் வாலை பூசை பற்றி இப்படி சொல்கிறார்..
"பத்து வயதாகும் வாலையவள்
மர்மம் வைத்து பூசை பண்ண
மதியுனக்கு வேணுமடா அதிகமாக
கனரிது சிறு பிள்ளை கன்னி கன்னி
ஆமிவளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர்
அறிந்ததுமே மன அடக்கம் வந்து சேரும்
நாட்டிலே சொன்னாயானால் நகைப்பர்"
வாலையின் மந்திரம் அ+உ+ம் என்னும் ஓங்கார அட்சரங்களும், அதை மாற்றி வரும் ம்+உ+அ (முருகா) என்னும் அட்சரங்களுமே ஆகும். இதுவே வாலை பூசையின் இரகசிய மந்திரமும், வாலைப் பூசையின் சூட்சுமமும் ஆகும்.
வாலையின் யந்திரம் - முக்கோண பீடம்
வாலையின் மந்திரம் - அ+உ+ம் , ம்+உ+அ.
ஆகவே, அகிலமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த வாலை தெய்வத்தை புற நிலையில் அல்லாமல் அக நிலையில் தெரிந்து கொண்டு , உணர்வைவும், நினைவையும் ஒன்றாக்கி, சித்தத்தில் பரம்பொருளுடன் சேர இவ் வாலைப் பூசையை கைக்கொண்டு சித்திபெற வழிகாட்டுகிறார்கள் சித்தர்கள்.
ஆர்வமும், தீவிரமும் உள்ள எவரும் சித்தர்கள் வழி சென்று சித்தி பெறலாம்.
... இவை அனைத்தும் சித்தர்கள் இராச்சியம் வலைத்தளம் பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.
படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
Thursday, May 16, 2013
வாலை ...
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment