ஷேத்ர யாத்திரை .. கும்பகோணம் 2024 (6)
1-9-2024 .. ஞாயிறு
திருமங்கலக்குடிலிருந்து 6 கிமீ. தொலைவில் உள்ள
திருவிசநல்லூர் யோகநந்தீசுவரர் திருக்கோயில் ..
10 நிமிஷ டிரைவ்
அருள்மிகு அன்னை சவுந்தர நாயகி உடனுறை
அருள்மிகு அய்யன் சிவயோகிநாத சுவாமி தரிசனம்..
நந்தியுடன் தொடர்புடைய ரிசப ராசி ஸ்தலம் …பொதுவாக எல்லா சிவத்தலங்களிலும் உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம் முதலில் இருக்கும். பின்னர்
பலிபீடம், நந்தி என்று இருக்கும்.ஆனால் இத்தலத்தில்
நந்தி முதலில் இருக்கும். ஒரு கால்எடுத்து எழுந்த
பாவனையிலும் திரும்பி வாசலைப்பார்த்த நிலையிலும்
இருக்கும்.
ஒரு சமயம் பெரும் பாவங்கள் செய்த ஒருவன், தன்
விதிப்படி மரணிக்கவேண்டிய தினத்தன்று இக்கோவில்
வாசலில் நின்று இறைவனை அழைத்தான்.அப்போது
சிவபெருமான் நந்திதேவரிடம்வாசலில் நிற்பது யார்
என்று கேட்டார். நந்திதேவர் வாசலை நோக்கி திரும்பி
வந்தவனை பார்த்தார். அன்று பிரதோஷ தினமாக
இருந்ததாலும், நந்திதேவர் பார்வைபட்டதாலும்
உடனே அவன் பாவங்கள் தொலைந்தன. அதே சமயம்
விதிப்படி அந்த மனிதனின் உயிரை பறிக்க எமன்
வந்தான். நந்திதேவர் எமனை கொடிமரத்திற்கு
வெளியே தடுத்து நிறுத்தி சண்டையிட்டு
வெளியேற்றினார். இதனால்தான் நந்திதேவர்
இக்கோவிலில் வேறு எந்ததலத்திலும் காணமுடியாத,
மாறுபட்ட நிலையில்அமைந்திருக்கிறார்.
இங்கு நந்தி ரிஷபவாகனமாக காத்து நிற்பதால், ரிஷப
ராசிக்காரரர்களின் பரிகார தலமாக விளங்குகிறது.
இவரை பிரதோஷம் சிவராத்திரி சோமவார நாட்களில்
வழிபடுவது சிறப்பு.
மரண பயம் விலகும் ....
சிவனடியாரின் உயிரைப் பறிக்க வந்த தன் செயலுக்கு
மன்னிப்பு கேட்டு எமதர்மனே சிவயோகிநாதரையும்,
நந்திதேவரையும் வணங்கினான் என்பது புராணம்.
எனவே இறைவனை வணங்கினால் மரணபயம் விலகும்
குரு தோஷம் நீங்கும், குருவின் அருள் கிடைக்கும்.
இறைவன் ஏழு முனிவர்களுக்கு அடைக்கலம்
கொடுத்ததால் அவருடைய லிங்கத் திருமேனியில் ஏழு
சடைகள் இருக்கின்றன. இந்த இறைவனை வழிபட
குரு தோஷம் நீங்கும். குருவின் அருள்கிடைக்கும்.
பெண் பாவம் சம்பந்தப்பட்ட பழிகளை போக்கும்
ஸ்தலம் …
கேரள நாட்டைச் சேர்ந்த அரசன் ஒருவன், பல
பெண்களுடன் நட்பு கொண்டு பெரும் தவறிழைத்து
வந்தான். ஏராளமான பெண்களை ஏமாற்றியும்
வஞ்சித்தும் ஈன வாழ்க்கை வாழ்ந்துவந்தான். ஒரு
கட்டத்தில் பாவ வாழ்க்கையில் இருந்து மீள வழி
தேடிய இந்த அரசனுக்கு, திருவிசநல்லூரின்
பெருமைகள் பற்றி ஒரு மகான் கூறினார். அதன்படி
இங்குவந்த அரசன் காவிரியில் நீராடி, இந்தத்தலத்தில்
உறையும் இறைவனை தரிசித்து பெண் பாவங்கள்
நீங்கப்பெற்றான் என்று தல வரலாறு கூறுகிறது.
தெரிந்தோ, தெரியாமலோ பெண்களின் பாவத்திற்கும்
பழிக்கும் ஆளாகி இருப்பவர்கள் இந்த ஆலயம் வந்து
வழிபட்டால் நலம் பெறலாம்.
மகான் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் அவதரித்த
ஸ்தலம் …
மகான் ஸ்ரீதரஐயாவாள் அவதரித்து பல அற்புதங்களை
நிகழ்த்திய தலம் திருவிசநல்லூர். தன் இல்லத்து
சிராத்த தினத்தன்று உணவளிப்பதற்காக
அந்தணர்களை எதிர்பார்த்து ஸ்ரீதர ஐயாவாள் தன்
வீட்டு வாசலில் காத்திருக்கிறார். அப்போது
தாழ்த்தப்பட்டவர் ஒருவர் அவர் இல்லம் வந்து
பசியால் துடிப்பதாக சொன்னார்.உடனே அந்தணர்கள்
உண்பதற்காக தயாராக வைத்திருந்த உணவை அந்த
தாழ்த்தப்பட்டவருக்கு அளித்து மகிழ்ந்தார். இதனைக்
கண்டு வெகுண்டனர் அந்த அக்கிரஹாரத்தில் வசித்த
அந்தணர்கள், “நீ தூய்மையானவன் என்பதை
எங்களுக்கு நிரூபித்தால்தான் இங்கே இருக்க
வேண்டும். இல்லாவிட்டால், கிராமத்தை விட்டு
வெளியேற வேண்டும். நீ தூய்மையானவன் என்பதை
நிரூபிக்க விரும்பினால் உடனே கங்கை நதியை
இங்கே வரவழைத்து அதில் நீ நீராட வேண்டும்.
இதுதான் பரிகாரம்” என்று கட்டளை இட்டனர்.
'ஆண்டவனுக்கு முன்அனைவரும் சமம்' என்பதே
ஐயாவாளின் கொள்கை. பக்தியில் சிறந்த ஸ்ரீதர
ஐயாவாள் இறைவனை உருகி வேண்ட, அவர் வீட்டுக்
கிணற்றில் கங்கை கொப்பளித்து வந்தது. கிணற்றின்
நீர்மட்டம் விறுவிறுவென ஏறி, வழிந்து, அந்தத் தெரு
முழுதும் கங்கை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
அப்பொழுது தான் அந்த தெருவில் வாழ்ந்த
அந்தணர்கள் ஐயாவாளின் மகிமையை அறிந்தனர்.
மன்னிப்பும் கேட்டனர்.
இப்பொழுதும் கார்த்திகை அமாவசை தினத்தில்
ஐயாவாள் வசித்த வீட்டின் கிணற்றில் கங்கை
எழுந்தருளுகிறாள். ஏராளமான பக்தர்கள் அன்றைய
தினம் அங்கு சென்று நீராடி புண்ணியம்பெறுகின்றனர்.
சிவன் க்ருத யுகத்தில் புராதனேஸ்வரராகவும், த்ரேத
யுகத்தில் யோகநந்தீஸ்வரராகவும், துவாபரயுகத்தில்
வில்வாரண்யேஸ்வரராகவும், கலியுகத்தில்
சிவயோகநாதராகவும் வழிபடப்படுகிறார்,
அகத்தியரும் லோபாமுத்திரையும், சப்தரிஷிகளும்,
பதினெண் சித்தர்களும் நித்தம் வணங்கும்ஸ்தலம்.
சதுர் கால பைரவர் ஸ்தலம்.
திருவிசநல்லூர்லிருந்து கும்பகோணம் ராயாஸ் ரிட்டர்ன் .. 12 கிமீ, 30 நிமிஷ டிரைவ் .. சாயங்காலம்
நாலரை ஆயிடுத்து .. பிரேக்பாஸ்ட் லஞ்ச் அங்கங்க
சாப்டாச்சு. கும்பகோணம், அதனால தரமான ருசியான
உணவு .. ரெண்டுமணி நேரம் நன்னா தூங்கியாச்சு ..
ஏழரை மணிக்கு மகாமகம் குளத்துக்கிட்ட ஒரு
கையேந்தி பவன்ல சூடா இட்லி சட்னி சாம்பார்
நின்னுண்டே சாப்பிட்டு, சுக்கு காபி குடிச்சுட்டு
ராயாஸ்க்கு திரும்பியாச்சு ..
ஒன்பது மணிக்கு படுக்கையை போட்டாச்சு
வலைத்தளம்/வலைப்பூ/முகநூல் பதிவுகள் படித்து
அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு
அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு
ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். பதிவர்களுக்கு
மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படங்கள் உதவி: வலைப்பூ பதிவுகள்