Sunday, August 30, 2015

குருவார பிரதோஷ மகிமை ...வியாழனன்று பிரதோஷ வழிபாடு அமைதல் குருகுந்தள சக்திகளை, உத்தமர்களின் நல்ஆசி நிரம்பிய நல்வரங்களாகப் பெற்றுத் தருவதாகும்.

குந்தளம் எனில் முன்னும். இருப்பும், பின்னுமாகப் பொலிந்து நல்வரங்கள் நன்கு விருத்தி அடைய உதவுவதாகும்.

உதாரணமாக குருவாரப் பிரதோஷ பூஜா பலன்கள்,
முன்னுமாக - முன்னோர்களின் நன்னிலைகளுக்கும்,
இருப்பாக - அதாவது நடப்பு வாழ்வு வாழ்விற்கும்,
பின்னுமாக - வருங்காலச் சந்ததிகளுக்கும் நல்ல பலன்களைப் பெற்றுத் தருவதாகும்.

பிரதோஷ பூஜையின் மகத்துவம் யாதெனில், இதில் திரள்வது புண்ய சக்திகள் மட்டுமல்ல, இறைவனே பிரதோஷ நேரத்தில் திருநடனக் காட்சி அளிப்பதால், நடராஜத் தத்துவமாகிய - அனைத்தும் எப்போதும் இறையருளால் இயங்குவதே! - என்ற பேருண்மையை நன்கு உணர்த்துவதாகும்.

பிரதோஷ பூஜையில் பங்கு கொண்டேன் என்று பலரும் சொல்வார்கள்.

எவ்வகையில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகச் சில ஆன்ம சாதனங்கள் இங்கு அளிக்கப்படுகின்றன.

* வில்வம், புஷ்பம், கற்பூரம், அருகம்புல், தர்பை எடுத்துச் சென்று இறைவனுக்கு அளித்தல்.
* சுவாமியைப் பல்லாக்கில் தூக்கி வரக் கை கொடுத்து உதவுதல்.
* உடை மற்றும் ஏதேனும் உணவு, கனி பிரசாதத்தைத் தானமாக அளித்தல்.
* வேட்டி, சட்டை அல்லது வேட்டி, துண்டு அணிந்து வணங்குதல். பெண்கள் புனிதமான முறையில் சேலை அணிந்து வணங்குதல் நன்று.
* தமிழ் மறை, தேவ மொழி மறைகளை மாலை நான்கு மணிக்குத் துவங்கி இரவு ஏழு மணி வரை இடைவிடாது ஓதிக் கொண்டிருத்தல்.
* மாலை நான்கு மணி முதல் ஏழு மணிவரையேனும் - இறைத் துதி ஓதுதலைத் தவிர - ஏனைய வகையில் மெளனம் பூணுதல்.
* பிரதோஷப் பூஜைக்குக் குடும்பத்தாருடன் சென்று வணங்குதல்.
* அடிப் பிரதட்சிணம், உயரக் கை கூப்பிய நிலைப் பிரதட்சிணம், இயன்றால் அங்கப் பிரதட்சிணம் ஆற்றுதல்
- இவ்வாறாக, பல்வகைகளில் ஆன்ம சாதனங்களுடன் இறைவனை, பிரதோஷ நாளில் வழிபடுதல் வேண்டும்.

பிரதோஷ மூர்த்தி பவனி வருகையில் அவருடன் சேர்ந்து மறைத் துதிகளை ஓதிக் கொண்டே வலம் வருதல் சிறப்புடையது.

வியாழக் கிழமையில் கூடும் பிரதோஷம் குருசுதாயப் பிரதோஷமாகப் போற்றப்படுகின்றது. யாக்ஞவல்கியர் தம் குருவின் ஆணையாக குருகுல பர்ணசாலையில் இருந்து தலயாத்திரை பூண்ட போது, ஒவ்வொரு குருவாரப் பிரதோஷத்திலும், சூரியநாராயண மூர்த்தியே தோன்றி குருசுதாய சக்திகளை அளித்து அரவணைத்திட்டார். இதனால்தாம் இன்றும் சூரிய மண்டலத்தில் பிரதோஷ காலத்தில், யாக்ஞவல்கிய மஹரிஷி சிவபூஜை ஆற்றுகின்றார். இன்றையப் பிரதோஷ நேரத்தில், மாலைச் சூரியனையும் யாக்ஞவல்கிய மஹரிஷியின் நினைவோடு ஆலயத்தில் இருந்தவாறே தரிசித்து, சிவபூஜை ஆற்றுதல் மிகவும் விசேஷமானது. பிள்ளைகளிடம் கொண்டுள்ள கருத்து வேறுபாடுகள் அகல, குருவாரப் பிரதோஷ நாளில் ஆறு அல்லது ஒன்பது சுற்று முறுக்குகளைப் படைத்துத் தானமாக அளித்து சிவபூஜை ஆற்றிடுக!

..... என் ஆத்மார்த்த குரு திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் அவர்களின் தெய்வ வாக்குப் பொக்கிஷங்கள்

No comments:

Post a Comment