Tuesday, July 30, 2013

திருக்கடவூர் அபிராமியம்மை பதிகம்




காப்பு

தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதன்நால்
வாயைக் கரன்றாள் வழுத்துவாம்-நேயர்நிதம்
எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள் அபிராமவல்லி
நண்ணும் பொற்பாதத்தில் நன்கு.

நூல்-ஆசிரிய விருத்தம்

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரோடு கூட்டு கண்டாய்:
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதசீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே

காரளக பந்தியும் பந்தியின் அலங்கலும்
கரிய புருவச் சிலைகளும்
கர்ணகுண்டலமு மதிமுகமண்டலம் நுதற்
கத்தூரிப் பொட்டு மிட்டுக்
கரணிந்திடு விழியும் அமுதமொழியுஞ் சிறிய
கொவ்வையின் கனி தரமும்
குமிழனைய நாசியும் முத்தநிகர் தந்தமும்
கோடுசோடான களமும்
வாரணிந் திறுமாந்த வனமுலையும் மேகலையும்
மணிநூ புரப்பா தமும்
வந்தெனது முன்னின்று மந்தகா சமுமாக
வல்வினையே மாற்றுவாயே
ஆரமணி வானி லுறை தாரகைகள் போலநிறை
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே

மகரவார் குழல்மேல் அடர்ந்துகுமிழ் மீதினில்
மறைந்து வாளைத் துறந்து
மைக்கயலை வேண்டிநின் செங்கமல விழியருள்
வரம்பெற்ற பேர்களன்றோ?
செகமுழுமீ வொற்றைத் தனிக்குடை கவித்துமேற்
சிங்கா தனத்தி லுற்றச்
செங்கோலும் மனுநீதி முறைமையும் பெற்றுமிகு
திகிரியுல காண்டு பின்பு
புகர்முகத்(து) ஐராவதப் பாக ராகி நிரை
புத்தேளிர் வந்து போற்றிப்
போக தேவேந்திரன் எனப்புகழ விண்ணில்
புலோமிசை யொடுஞ்சு கிப்பர்:
அகரமுதலாகி வளர் ஆனந்த ரூபியே !
ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே

மறிகடல்கள் ஏழையுந்திகிரி இரு நான்கையும்
மாதிறல் கரியெட்டையும்
மாநாகம் ஆனதையும் மாமேரு என்பதையும்
மாகூர்மம் ஆனதையு மோர்
பொறியரவு தாங்கிவரு புவனமீ ரேழையும்
புத்தேளிர் கூட்டத்தையும்
பூமகளை யுந்திகிரி மாயவனை யும் அரையுற்
புலியாடை <உடையானையும்
முறைமுறைகளாயீன்ற முதியவர்களாய்ப் பழைமை
முறைகள் தெரியாத நின்னை
மூவுலகிலுள்ளவர்கள் வாலையென்று அறியாமல்
மொழிகின்ற தேது சொல்வாய்:
அறிவுநிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே
ஆதிகட வூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே

வாடாமல் உ<யிரெனும் பயிர்தழைத் தோங்கிவர
அருள்மழை பொழிந்தும் இன்ப
வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால்
வருந்தா மலேய ணைத்துக்
கோடாமல் வளர்சிற் றெறும்புமுதல் குஞ்சரக்
கூட்டமுதலான சீவ
கோடிகள் தமக்குப் புசிக்கும் புசிப்பினைக்
குறையாமலே கொடுத்து
நீடாழி யுலகங்கள் யாவையும் நேயமாய்
நின்னுதர பந்தி பூக்கும்
நின்மலி ! அகிலங்களுக்(கு) அன்னை என்றோதும்
நீலியென்(று) ஓது வாரோ ?
ஆடாத நான்மறையின் வேள்வியால் ஓங்குபுகழ்
ஆதிகட வூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி அபிராமியே !

பல்குஞ் சரந்தொட்டெறும்பு கடையானதொரு
பல்லுயிர்க் குங்கல் விடைப்
பட்டதே ரைக்குகும் அன்றுற்பவித் திருகருப்
பையுறு சிவனுக்கும்
மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தி னுக்கும்
மற்றுமொரு மூவர்க்கும் மியாவர்க்கும் அவரவர்
மனச்சலிப் பில்லாமலே
நல்குந் தொழிற்பெருமை உண்டோ யிருந்துமிகு
நவநிதி உனக்கிருந்தும்
நானொருவன் வறுமையிற் சிறியனானால் அந்
நகைப்புனக் கே அல்லவோ ?
அல்கலந்தும்பர் நாடளவெடுக் குஞ்சோலை
ஆதிகட வூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி அபிராமியே !

நீடுலகங்களுக்(கு) ஆதரவாய் நின்று
நித்தமாய் முத்தி வடிவாய்
நியமமுடன் முப்பத் நிரண்டறம் வளர்க்கின்ற
நீமனை வியாய் இருந்தும்
வீடுவீடுகடோறும் ஓடிப் புகுந்துகால்
வேசற்(று) இலச்சை யும்போய்
வெண்டுகில் அரைக்கணிய விதியற்று நிர்வாண
வேடமுங் கொண்டு கைக்கோர்
ஓடேந்தி நாடெங்கும் உள்ளந் தளர்ந்துநின்(று)
உன்மத்த னாகி அம்மா !
உன்கணவன் எங்கெங்கும் ஜயம்புகுந்தேங்கி
உழல்கின்ற தேது சொல்வாய்
ஆடுகொடி மாடமிசை மாதர்விளை யாடிவரும்
ஆதிகட வூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி அபிராமியே !

ஞானத் தழைத்துன் சொரூபத்தை அரிகின்ற
நல்லோர் இடத்தினிற்போய்
நடுவினிலிருந்து வந்தடிமையும் பூண்டவர்
நவிற்றும் உபதேச முட்கொண்டு
ஈனந்தனைத் தள்ளி எனது நானெனுமானம்
இல்லாமலே துரத்தி
இந்திரிய வாயில்களை இறுகப்பு தைத்து நெஞ்(சு)
இருளற விளக்கேற்றியே
ஆனந்த மானவிழி அன்னமே ! உன்னை என்
அகத்தாமரைப் போதிலே
வைத்துவேறேகவையற்று மேலுற்றபர
வசமாகி அழியாத தோர்
ஆனந்த வாரிதியில் ஆழ்கின்ற தென்றுகாண்:
ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி அபிராமியே !

சலதியுல கத்திற் சராசரங் களையீன்ற
தாயா கினாலெ னக்குத்
தாயல்லவோ ? யான் உன் மைந்தனன்றோ ? எனது
சஞ்சலம் தீர்த்து நின்றன்
முலைசுரந்தொழுகு பாலூட்டி என் முகத்தை உன்
முன்தானையால் துடைத்து
மொழிகின்ற மழலைக் குகந்து கொண்டிளநிலா
முறுவல் இன்புற்றரு கில்யான்
குலவிளையாடல் கொண்டருண் மழைபொழிந்(து) அங்கை
கொட்டி வாவென்(று) அழைத்துக்
குஞ்சரமுகன் கந்தனுக்(கு) இளையன் என்றெனைக்
கூறினால் ஈனம் உண்டோ ?
அலைகடலிலே தான்று மாறாத அமுதமே !
ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி அபிராமியே !

கைப்போது கொண்டுன் பதப்போது தன்னில்
கணப்போதும் அர்ச்சிக் கிலேன்:
கண்போதினாலுன் முகப்போது தன்னையான்
கண்டு தரிசனை புரிகிலேன்:
முப்போதில் ஒருபோதும் என்மனப் போதிலே
முன்னி உன் ஆலயத்தின்
முன்போது வார்தமது பின்போத நினைகிலேன்:
மோசமே போய்உழன்றேல்:
மைக்கடா மீதேறியே
மாகோர காலன் வரும்போது தமியேன்
மனங்கலங்கித்தி யங்கும்
அப்போது வந்துன் அருட்போது தந்தருள்
ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி அபிராமியே !

மிகையுந்துரத்தவெம்பிணியுந் துரத்த
வெகுளியான துந்துரத்த
மிடியுந்துரத்த நரை திரையும் துரத்தமிகு
வேதனைகளுந் துரத்த
பகையுந்துரத்த வஞ்சனையுந் துரத்த
பசியென் பதுந்துரத்த
பாவந்துரத்த பதிமோகந்துரத்த
பலகாரியமுந் துரத்த
நகையுந் துரத்த ஊழ் வினையுந் துரத்த
நாளும் துரத்த வெகுவாய்
நாவரண் டோடிகால் தளர்ந்திடும் என்னை
நமனுந் துரத்து வானோ ?
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே !
ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி அபிராமியே !


ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஆதி சக்தி மஹா சக்தி பராசக்தி ஓம்







No comments:

Post a Comment