Tuesday, October 15, 2013

சிவ கவசம்


அகில நாயகனாய், ஞான ஆனந்த ரூபியாகித்,
துகள்தரும் அணுவாய், வெற்பின் தோற்றமாய், உயிரை எல்லாம்
தகவுடன் அவனி யாகித் தரிப்பவன் எம்மை இந்த
மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க
எல்லாவற்றிற்கும் தலைவனாகியும் ஞானனந்த
வடிவினராகியும் துகளாகிய அணுதன்மையாகியும்
மலைபோலப் பெரியதாகியும் பூமியுமாகியும்
தகுதியுடன் ஆன்ம கோடிகளைத் தாங்குகின்ற கடவுள் இந்த
உலகத்திற்குத் தீங்கு நேரிடாவண்னம் அருள் செய்து என்னைக் காக்கக்கடவர்
குரைபுனல் உருவம் கொண்டு கூழ்தொறும் பயன்கள் நல்கித்
தரையிடை உயிர்கள் யாவும் தளர்ந்திடாவண்ணம் காப்போன்
நிரைநிரை முகில்கள் ஈண்டி நெடுவரை முகட்டில் பெய்ய
விரைபுனல் அதனுள் வீழ்ந்து விளிந்திடாது எம்மைக் காக்க.
ஒலிக்கா நின்ற நீருருவம்கொண்டு பயிர்கள்தோறும் பயன்
கொடுத்து இவ்வுலகில் இருக்கும் உயிர்களெல்லாம் தளர்வடையாவண்ணம்
காப்பவனாகிய கடவுள் வரிசை வரிசையாய் வருகின்ற மேகங்கள் சேர்ந்து பெரிய
மலைகளில் மழை பொழியப் பெருக்கெடுத்தோடும் தண்ணீரில் வீழ்ந்து இறவாத
வண்ணம் எங்களைக் காக்கக் கடவர்.
கடையுகம் தன்னில் எல்லா உலகமும் கடவுள்தீயால்
அடலைசெய்து அமலை தாளம் அறைதர நடிக்கும் ஈசன்
இடைநெறி வளைதாபத்தில் எறிதரு சூறைக் காற்றில்
தடைபடாது எம்மை இந்தத் தடங்கடல் உலகில் காக்க
யுகத்தின் இறுதியில் எல்லா உலகத்தையும் தெய்வத்
தன்மையுள்ள தீயினால் சாம்பராகச் செய்து, பார்வதி தேவியார்
தாளம் போட நடனமாடும் பரமசிவன் வழியின் நடுவில் வளைந்து
கொள்ளும் தீ வெப்பத்துடன்
வீசுகின்ற சூரைக் காற்றினால் தடைபடாமல் பெரிய கடல் சூழ்ந்த
இவ்வுலகத்தில் எம்மைக்காக்கக் கடவர்.
தூயகண் மூன்றினோடு சுடரும் பொன் வதனம் நான்கும்
பாயுமான் மழுவினோடும் பகர் வரத அபயங்கள்
மேயதிண் புயங்கள் நான்கும் மிளிரும் மின்னனைய தேசும்
ஆயதற் புருடன் எம்மைக் குணதிசை யதனில் காக்க
பரிசுத்தமுள்ள முக்கண்களும் ஒளிவிடாநின்ற பொன்னிறமுள்ள நான்கு
திருமுகங்களும் பாய்கின்ற மான்
மழுவினுடன் சொல்லுகின்ற வரதமும் அபயமும்
பொருந்திய திண்ணிய நான்கு புயங்களும் விளங்குகின்ற
மின்னலை யொத்த திருமேனி ஒளியுமுள்ள தற்புருட மூர்த்தியானவர்
கிழக்கு திசையில் எம்மைக் காக்கக் கடவர்.
மான்மழு சூலம் தோட்டி வனைதரு நயன மாலை
கூன்மலி அங்குசம் தீத் தமருகம் கொண்ட செங்கை
நான்முகம் முக்கண் நீலநள் இருள் வருணம் கொண்டே
ஆன்வரு மகோர மூர்த்தி தென்திசை யதனில் காக்க
மான், மழு, சூலம், கோடரி புனையப்பட்ட உருத்திராக்க மாலை,
வளைவான அங்குசம், தீ, தமருகம் என்னும் இவைகளைத் தாங்கிய
செங்கைகளும், நான்கு திருமுகங்களும், முக்கண்களும்,
நீலம் போலச் செறிந்த இருள் நிறமும் கொண்டு இடபத்திலேறி
வருகின்ற அகோரமூர்த்தியானவர் தெற்குத் திசையில் எம்மைக் காக்கக் கடவர்.
திவள்மறி அக்க மாலை செங்கை ஓர் இரண்டும் தாங்க
அவிர்தரும் இரண்டு செங்கை வரதத்தொடு அபயம் தாங்கக்
கவின் நிறை வதனம் நான்கும் கண் ஒரு மூன்றும் காட்டும்
தவளமா மேனிச் சத்தியோ சாதன் மேல் திசையில் காக்க
தாவுகின்ற மானையும் உருத்திராக்க மாலையினையும் இரண்டு கைகள் தாங்கவும்
ஒளிவிடாநின்ற இரண்டு திருக்கைகள் அபய வரதம் தாங்கவும், அழகு நிறைந்த நான்கு
முகங்களும் மூன்று கண்களும் விளங்குகின்ற சத்தியோசாத மூர்த்தியானவர் மேற்குத்
திசையில் எம்மைக் காக்கக் கடவர்.
கறைகெழு மழுவும் மானும் அபயமும் கண்ணின் நாமம்
அறைதரும் தொடையும் செய்ய அங்கைகள் நான்கும் ஏந்திப்
பொறைகொள் நான்முகத்து முக்கண் பொன்னிற மேனியோடும்
மறைபுகழ் வாமதேவன் வடதிசையதனில் காக்க
உதிரம் தோயும்படியான மழுவாயுதத்தையும்,
மானையும், அபய வரதங்களையும் உருத்திராக்க மாலையினையும் சிவந்த நான்கு
திருக்கைகளிலும் தாங்கிச் சாந்தமுடைய நான்கு திருமுகங்களிலும் மும்மூன்று
திருக்கண்களும் பொன்னிற மேனியுமுள்ள வேதங்களால் புகழத் தக்க வாம தேவ மூர்த்தி
வடக்குத் திசையில் காக்கக் கடவர்.
அங்குசம் கபாலம் சூலம் அணிவரத அபயங்கள்
சங்குமான் பாசம் அக்கம் தமருகம் கரங்கள் ஏந்தித்
திங்களின் தவள மேனித் திருமுகம் ஐந்தும் பெற்ற
எங்கள் ஈசான தேவன் இருவிசும்பு எங்கும் காக்க
அங்குசம், கபாலம், சூலம், அழகிய வரதாபயங்கள், சங்கம்,
மான், பாசம், உருத்திராக்கம், தமருகம் என்னும் இவைகளைப்
பத்துக் கைகளிலும் ஏந்திச் சந்திரனைப் பொல வெண்மை நிறங்கொண்ட
திருமேனியும் ஐந்து திருமுகங்களும் பெற்றுள்ள எங்கள் ஈசான
மூர்த்தியானவர் பெரிய ஆகாயமெங்கும் காக்கக் கடவர்.
சந்திர மவுலி சென்னி தனிநுதல் கண்ணன் நெற்றி
மைந்துறு பகன்கண் தொட்டோன் வரிவிழி அகில நாதன்
கொந்துணர் நாசி வேதம் கூறுவோன் செவி கபாலி
அந்தில் செங்கபோலம் தூய ஐம்முகன் வதனம் முற்றும்
சந்திர சேகர மூர்த்தியானவர் எங்கள் தலையினையும்,
ஒப்பற்ற நெற்றிக் கண்ணையுடையவரான பாலலோசன மூர்த்தியானவர் நெற்றியினையும்,
வலிமிக்க பகன் என்னும் சூரியனுடைய கண்ணைப் பறித்த மூர்தியானவர் நீண்ட கண்களையும்,
விசுவநாதரானவர் பூங்கொத்தின் மணத்தை அறியதக்க மூக்கினையும்,
வேதமருளிச் செய்த மூர்த்தியானவர் காதுகளையும், கபாலியென்பவர் செவ்விதாகிய
கபோலத்தையும், பரிசுத்தமுள்ள பஞ்சானன மூர்தியானவர் முகத்தையும் காக்கக் கடவர்.
வளமறை பயிலும் நாவன்நா, மணி நீல கண்டன்
களம் அடு பினிகபான கையினை தரும வாகு
கிளர்புயம் தக்கன் யாகம் கொடுத்தவன் மார்பு தூய
ஒளிதரு மேருவில்ல உதரம் மன்மதனைக் காய்ந்தோன்
வளப்பமுள்ள வேதங்களைப் பயில்கின்ற நாவுள்ள மூர்த்தியானவர்
நாவினையும், நீலகண்ட மூர்த்தியானவர் கழுத்தினையும்,
போர்செய்யத் தக்க பினாகம் என்னும் வில்லேந்திய பினாகபாணியானவர் கைகளையும்,
தர்மவாகு என்பவர் விளங்குகின்ற புயங்களையும், தக்கன் யாகத்தை அழித்த
மூர்த்தியானவர் மார்பினையும், நல்ல ஒளியைத் தருகின்ற மேருவில்ல என்னும்
மூர்த்தியானவர் வயிற்றினையும் காமதகன மூர்த்தியானவர் காக்கக் கடவர்.
இடைஇப முகத்தோன் தாதை உந்தி நம் ஈசன் மன்னும்
புடைவளர் அரை குபேர மித்திரன் பொருவில் வாமம்
படர் சக தீசன் சானு பாய்தரும் இடப கேது
விடைநெறி கணைக்கால் ஏய்ந்த விமலன் செம்பாதம் காக்க
(காமதகன மூர்த்தி) இடையினையும், கணபதி பிதாவாகிய மூர்த்தியானவர் நாவினையும்,
நம்முடைய ஈசுவரனானவர் புடை பரந்த அரையினையும், குபேரன் தோழனாகிய
மூர்த்தியானவர் ஒப்பில்லாத தொடையினையும், பரந்த சகதீசன் முழங்கால்களையும்,
பாய்கின்ற ரிஷபகேதுவான மூர்த்தி கணைக்காலையும், பொருந்திய விமல மூர்த்தியானவர் செவ்விய
பாதத்தையும் தனித்தனி காக்கக் கடவர்.
வருபவன் முதல் யாமத்து மகேசன் பின் இரண்டாம் யாமம்
பொருவரு வாம தேவன் புகன்றிடும் மூன்றாம் யாமம்
செருமலி மழுவாள் அங்கைத் திரியம்பகன் நாலாம் யாமம்
பெருவலி இடப ஊர்தி பிணியற இனிது காக்க
வேதங்களில் வழங்கப்படுகின்ற பவன் என்னும் திருப்பெயருள்ள
மூர்த்தியானவர் முதற் சாமத்திலும், மகேசுவரன் பின்
இரண்டாஞ் சாமத்தும். ஒப்பிலாத வாமதேவர் மூன்றாம்
சாமத்தும், போருக்கேற்ற மழுவாயுத மேந்திய திருக்கரத்தையுடைய
திரியம்பகர் நாலாம் சாமத்தும், மிக்க சரீரவன்மையைப் பிணியால் சோர்வுறாதபடி
இடபவாகன மூர்த்தியுமாகத் தனித்தனி காக்கக் கடவர்.
கங்குலின் முதல் யாமத்துக் கலைமதி முடித்தோன் காக்க
தங்கிய இரண்டாம் யாமம் சானவி தரித்தோன் காக்க
பொங்கிய மூன்றாம் யாமம் புரிசடை அண்ணல் காக்க
பங்கமில் நாலாம் யாமம் கவுர்¢தன் பதியே காக்க
இரவின் முதற் சாமத்தில் பிறைசூடிய மூர்த்தி காக்கக் கடவர்.
இரண்டாம் சாமத்தில் கங்காதர மூர்த்தி காக்கக் கடவர்.
மூன்றாம் சாமத்தில் சடாமகுட மூர்த்தியானவர் காக்கக் கடவர்.
கெடுதலில்லாத நாலாஞ்சாமத்தில் உமாபதி காக்கக் கடவர்.
அனைத்துள காலம் எல்லாம் அந்தகன் கடிந்தோன் உள்ளும்
தனிப்பெரு முதலாய் உள்ள சங்கரன் புரமும் தாணு
வனப்புறு நடுவும் தூய பசுபதி மற்றும் எங்கும்
நினைத்திடற் கரிய நோன்மை சதாசிவ நிமலன் காக்க
எல்லாக் காலங்களிலும் கால சங்கார மூர்த்தியும் உட்புறத்தில்
ஒப்பற்ற முதற்காரண கர்த்தாவாகிய சங்கர மூர்தியும்,
வெளிப் புறத்துத் தாணு மூர்த்தியும். நடுப்புறத்துத் தூய பசுபதியும்,
மற்றவிடம் எங்கும் நினைப்பதற்கரிய சதாசிவ முர்த்தியுமாகத்
தனித்தனி காக்கக் கடவர்.
நிற்புழி புவனநாதன், ஏகுழி நிமலன், மேனி
பொற்புறும் ஆதி நாதன், இருப்புழி பொருவி லாத
அற்புத வேத வேத்தியனும், துயில்கொள்ளும் ஆங்கண்
தற்பர சிவன், விழிக்கின் சாமள ருத்திரன் காக்க
நிற்குமிடத்துப் புவன நாதரும், நடக்குமிடத்து நிர்மல மூர்தியும்,
உடலழகினை ஆதி மூர்த்தியும், இருக்குமிடத்து ஒப்பிலாத அற்புதமூர்த்தியாகிய
வேத வேத்தியனும், நித்திரை செய்யுமிடத்துத் தற்பர சிவனும்,
விழிக்கும் போது சாமள ருத்திரனுமாகத் தனித்தனி காக்கக் கடவர்.
மலைமுதல் துருக்கம் தன்னில் புராரி காத்திடுக மன்னும்
சிலைமலி வேட ரூபன் செறிந்த கானகத்தில் காக்க
கொலையமர் கற்பத்து அண்ட கோடிகள் குலுங்க நக்குப்
பலபட நடிக்கம் வீர பத்திரன் முழுதும் காக்க
மலை முதலாகிய துருக்கங்களில் புராரி காக்கக் கடவர்,
காட்டினில் வில்லேந்திய வேட வடிவ மூர்த்தி யானவர் நீங்காமலிருந்து
காக்கக் கடவர். சர்வசங்காரம் உண்டாகும் பிரளயகாலத்தில் அண்டகோடிகள்
எல்லாம் நடுங்கும்படி நடனஞ் செய்கின்ற வீரபத்திரரானவர் முழுவதுங் காக்கக் கடவர்.
பல்உளைப் புரவித் திண்தேர் படுமதக் களிறு பாய்மா
வில்லுடைப் பதாதி தொக்கு மிடைந்தியும் எண்ணில்கோடி
கொல்லியல் மாலை வைவேல் குறுகலர் குறுகும் காலை
வல்லியோர் பாகன் செங்கை மழுப்படை துணித்து மாய்க்க
கழுத்து மயிரினையுடைய குதிரைகள் கட்டிய பல தேர்கள், மத நீர் ஒழுகும் யானைகள்,
தாவிச் செல்லுங் குதிரைகள், வில்லேந்திய பதாதியர் யென்னு மிவைகள்
சேர்ந்து நெருங்கிய அளவில்லாதவர்களாய்ப் போரில்
வெற்றிமாலை யணிந்த கூர்மையான கொலை வேலுள்ள பகைவர்களைப்
பார்வதிபாகன் திருக்கரத்தில் இருக்கும் மழுவாயுதம் துணித்துக் காக்கக் கடவர்.
தத்துநீர்ப் புணரி ஆடைத் தரணியைச் சுமந்து மானப்
பைத்தலை நெடிய பாந்தள் பல்தலை அனைத்தும் தேய்ந்து
முத்தலை படைத்த தொக்கும் மூரிவெம் கனல் கொள் சூலம்
பொய்த்தொழில் கள்வர் தம்மைப் பொருதழித்து இனிது காக்க
படமாகிய தலைகளையுடைய ஆதிசேடன் தாவுகின்ற நீரையுடைய கடலாகிய
ஆடை உடுத்த பூமியைத் தாங்கிய பல தலைகள் தேய்ந்து மூன்று தலைகளைப் படைத்ததை
யொக்கும் பலமும் வெவ்விய தீயையுங்
கொண்ட சூலமானது பொய்த்தொழிலையுடைய கள்வர்களைப்
போர்புரிந்து அழித்து இனிதாகக் காக்கக் கடவர்.
முடங்குளை முதலாய் நின்ற முழுவலிக் கொடிய மாக்கள்
அடங்கலும் பினாகம் கொல்க என்று இவை அனைத்தும் உள்ளம்
திடம்பட நினைந்து பாவம் தெறும் சிவகவசம் தன்னை
உடம்படத் தரிப்பை யானால் உலம்பொரு குலவுத் தோளாய்
திரண்ட கல்லையொத்துக் குவிந்த தோளையுடையவனே!
சிங்கம் ஆதியான மிக்கப் பலமுள்ள கொடிய மிருகங்களையெல்லாம்
பினாகம் என்கிற வில்லானது கொல்லக் கடவது என்றிவ்வாறு எல்லாவற்றையும்
இருதயத்தில் உறுதிகொள்ளத் தியானித்துப் பாவங்களை வெல்லும் சிவ கவசத்தை
அணிந்து கொள்வாயானால்.
பஞ்ச பாதங்கள் போம் பகைகள் மாய்ந்திடும்
அஞ்சலில் மறலியும் அசூசி ஆட்செயும்
வஞ்சநோய் ஒழிந்திடும் வறுமை தீர்ந்திடும்
தஞ்சம் என்றிதனை நீ தரித்தல் வேண்டுமால்
பஞ்சமா பாதகங்கள் நீங்கும், பகைகள் கெட்டுப்போம்,
ஒருவருக்கும் பயங்கொள்ளாத இயமனும் உனக்குப் பயந்து
பணிவிடை செய்குவன், கொடிய வியாதிகளுந் தீர்ந்துவிடும்,
தரித்திரம் தொலையும். ஆதலால் இதுவே நமக்கு ஆதாரம் என்று
நீ அணிந்துகொள்ள வேண்டும்.
திருச்சிற்றம்பலம்

 நன்றி: தமிழ்மறை/முக நூல்

No comments:

Post a Comment