அருணாசலம் என்றால் அருணம் + அசலம் - அருணம் என்றால் நெருப்பு, அசலம் என்றால் மலை - இது நெருப்பு மலை. அண்ணாமலை என்றால் அண்ண முடியாத மலை என்பது பொருளாகும். அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்பது பொருள். ஆக யாவரும் எளிதாய் நெருங்க இயலாத பரம் பொருளே இங்கு அண்ணாமலையாய், அருணாசலமாய் வீற்றிருக்கிறார்.
இம்மலையின் மிக முக்கிய சிறப்பு இங்கு ஏற்றப்படும் கார்த்திகை தீபத் திருவிழா.
கார்த்திகைக்குக் கார்த்திகை நாள் ஒரு ஜோதி
மலை நுனியில் காட்டா நிற்போம்
வாய்த்து வந்த சுடர்காணில்
பசிபிணி இல்லாது உலகில் மன்னி வாழ்வார்
பார்த்தவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் இது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்துஓர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம்
– அருணாசல புராணம்
ஒவ்வொரு வருட அருணாசல கார்த்திகைத் தீபத்திலும் எண்ணற்ற வகையான ஈஸ்வர ஜோதிக் கிரணங்கள் தோன்றுகின்றன. ஆதிமுதல் காண இயலா அண்ணாமலையில்தான், அடி முதல் காண இயலா மஹாபிரபு சர்வேஸ்வரன், நம் மானுட அறிவு மற்றும் அறிவுக்குப் புலனாகும் வகையில், அருணாசல தீபமாக ஆண்டு தோறும் கார்த்திகைத் திருநாளில் காட்சி தருகின்றார்.
கோடானுகோடி யுகங்களில் தோன்றிய அருணாசல ஜோதிகள் யாவும் கிரிவலப் பாதையில்தாம் பரவி நிறைந்துள்ளன. கிருத யுகம் முதல் கலியுகம் வரை பல்வேறு பிறவிகளைப் பெற்று வாழ்ந்தோர், இங்கு திருஅண்ணாமலையில் அருணாசல மலையைக் கிரிவலம் வருகையில் தங்கள் பூர்வ ஜென்ம வினைகளின் செயற்கழிவிற்கான எளிய வழிமுறைகளைப் பெறுகின்றனர்.
அருணாசல ஜோதியின் ஒவ்வொரு ஜோதிக் கற்றையும் விதவிதமான பலன்களைத் தாங்கி வருவதாகும். ஒவ்வொரு அருணாசல தீபக் கதிரிலுமே கோடானு கோடி வகையில் அதியற்புதமான பலன்கள் பொதிந்து இருக்கின்றன.
உத்தமமான பிரார்த்தனைகளை நாம் அருணாசல தீபத்திடம் வைத்தால், தீப ஜோதி அனுக்கிரக தேவதைகளும் உத்தமமான பலன்களை அள்ளித் தருகின்றன.
ஷோடச அனுக்ரஹ ஜோதி ...
பதினாறு விதமான பலன்களைத் தருகின்ற தீப ஜோதி.
பரவெளித் திசைகள் எட்டு, உள்மனத் திசைகள் எட்டாக, பதினாறு திசைகளில் இருந்தும் மனிதனுக்கு வரும் துன்பங்களைத் தீர்க்க உதவுபவையே ஷோடச அனுக்ரஹ ஜோதி.
அன்ன தாரண ஜோதி ...
முப்பத்திரண்டு விதமான அறங்களின் பலாபலன்களைத் தர வல்ல ஜோதியும் உண்டு. ஒவ்வொரு ஆண்டிற்கான சிறப்புடைத் தான தர்ம வகைகளும் உண்டு.
திருஅண்ணாமலையில் ஸ்ரீஉண்ணாமுலை அம்மனும், காஞ்சிபுரத்தில் ஸ்ரீகாமாட்சி தேவியும், முப்பத்திரண்டு விதமான அறங்களை, சாதாரணமான மானிடப் பெண் வடிவில் வந்தி நிறைவேற்றி, கலியுகப் பெண்மணிகள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு நல்வழிகாட்டித் தந்து அருள்கின்றனர்.
ஒவ்வொரு தானமும், தர்மமும், ஒவ்வொரு விதமான ஜோதி வகைகளைத் தோற்றுவித்துத் தரும். அருணாசலப் புண்ணிய பூமியில், சிறிய அளவில் அன்னதானம் நிகழ்த்தினால் கூட, அங்கு அன்ன தாரண ஜோதி எழுந்து, ஜீவ சுத்தி, வான சுத்தி, பரவெளி சுத்தி, மன சுத்தி, உடல் சுத்தி போன்ற முப்பத்திரண்டு வகையான சுத்திகளை, உடல், மனம், உள்ளத்திற்கு அளிக்கக் கூடியதாகத் திகழ்கின்றது.
அஷ்டோத்திர மாலா ஜோதி ...
அஷ்டோத்திர மாலா ஜோதி என்கின்ற கார்த்திகை தீப ஜோதியில், 108 வகையான அனுக்கிரக ஜோதிகள் உண்டு.
சாதாரண பாமரர் முதல் நாட்டுத் தலைவர்கள் வரை அனைவருக்கும் அருள வல்ல ஜோதி இது. “மக்கள் செய்வது மன்னன் தலையில்” என்பதாக, குடிமக்கள் ஆற்றுகின்ற செயல்களின் தன்மைகள், நாட்டுத் தலைவர்களையுமம பலவகைகளில் பாதிக்கும் ஆதலின் இந்த ‘அஷ்டோத்திர மாலா ஜோதி” மூலம் தக்க நிவர்த்திகளைப் பெற்றிட, குடும்பத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நாட்டுத் தலைவர்கள் ஆண்டு தோறும் குறைந்தது ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து அருணாசல ஜோதி தரிசனம் பெற்றிடல் வேண்டும்.
ஜோதியில் இருந்து தோன்றுவதே ஜோதிடக் கலை!
எனவே, அனைத்து ஜோதிடர்களும் அருணாசல தீபத்தன்று கட்டாயமாக ஜோதி தரிசனம் பெற்றாக வேண்டும்.
பூவுலகின் அனைத்துத் துறையினரும் - விவசாயிகள், தொழிலாளர்கள், முதலாளிகள், பாமரர்கள், அரசியல் தலைவர்கள், நாட்டுத் தலைவர்கள் - போன்று அனைவருக்கும் தேவையான அனைத்து வகை தரிசனப் பலாபலன்களையும் அருள வல்லதே அருணாசல தீபமாகும்.
சாயா சாலேஷு அருணாசல ஜோதி ...
வென்றவர் தோற்கவும், தோற்றவர் வெல்லவும், கற்றவர் ஏற்கவும், கல்லாதவர் உணரவும் - இவ்வாறாக ஒவ்வொருவருக்கும் தேவையான நல்வர அனுக்ரஹ சக்திகளைத் தருவதே "சாயா சாலேஷு அருணாசல ஜோதி."
தோல்வி என்பதும் வாழ்வில் அடைய வேண்டிய ஒன்றே! ஒருவர் வென்று, மற்றொருவர் ஜெயித்தல் உலக நியதி. ஆனால் ஆன்ம ஜோதிப் பாடத்தில், தீவினைகள் தோற்று, உள்ளம் சீர்மை பெறுதல் மிகவும் முக்கியமானதாகும். தோல்வியில் மானுடம் சீர் பெறுதல் நிகழுமாயின் சீர்திருத்தப் பாடமாக அது ஏற்புடையதுதானே! எனவே, அருணாசல தீப தரிசனப் பலாபலன்கள், ஒவ்வொருவருடைய வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் உறைந்து உணர்விப்பதாகும்.
அருணாசல தீபம் நன்கு சுடர் விட, ஒவ்வொருவரும் தன் குடும்பத்தின் சார்பில் குறைந்த பட்சம் ஒரு மீட்டர் திரியையாவது அருணாசல தீப ஜோதி ஏற்றிட அளித்திட வேண்டும்.
அடுத்த ஒரு மீட்டர் திரியை, அறியாமையாலும், திரியைக் கூட வாங்கித் தராத நிலையில் உள்ள பாமரர்கள் சார்பாகவும் அளித்திட வேண்டும்.
மூன்றாவது மீட்டர் துணியை தாவரங்கள், பிராணிகள் போன்ற இதர ஜீவன்களின் நலன்களுக்காக அளித்திட வேண்டும்.
இதுவும் அருணாசல சேவையின் ஒரு பாங்கேயாம்.
அவரவர் வசதிக்கேற்ப இவ்வகையில், மூன்று பங்கு தைலம், திரி, பசு நெய் போன்றவற்றை அளித்து, அருணாசல தீபத்தைப் பன்னாட்கள் காட்சி அளிக்கச் செய்திட வேண்டும்.
உண்மையில், அருணாசல ஜோதியை ஆற்றுவிக்கும் தீபத்தின் ஒரு சிறிய திரி இழையில் தோன்றும் அருணாசல தீப ஜோதிக் கிரணங்களும் யாங்கணும் பரவி, விரவி, பல்கிப் பெருகி சந்ததி சந்ததியாய் நல்வரங்களை வர்ஷிக்க வல்லதெனில் என்னே இதன் மஹிமை!
எனவே, இனியேனும் ஆண்டுதோறும் பிற ஜீவன்களின் நல்வாழ்விற்காக, ஆண்டு தோறும் குறித்த நற்காரியங்களை ஆற்றிட, தக்க இறைச் சங்கல்பங்களை எடுத்துக் கொண்டு நற்செயல்களை ஆற்றி வருவதுடன், வருடம் தோறும், அருணாசல தீப ஜோதிக்காகத் தைலம், எண்ணெய், கற்பூரம், திரி, பசு நெய் ஆகிய ஐந்தையும் அவரவர் வசதிக்கேற்ற அளவில் தானம் அளித்தலால், ஒரு சிறிய இழையில் எழும் தீப ஜோதிக் கிரண அருளமுதமானது, தத்தம் சந்ததிகளுக்கும், மூதாதையர்களுக்கும் எண்ணற்ற பலாபலன்களைக் கொழித்துச் செழித்துத் தருவதாகும்.
அருணாசலத் தீப ஜோதி தோன்றும் அற்புதத் திருநாளில், அவரவர் மன எண்ணங்களின் பதிவு மேற்கண்ட தீபப் பொருட்களில் பதிந்து, எண்ணங்களை, ஏக்கங்களை, ஆசைகளை முறைப்படுத்தி, கிரக, கோசார, கோள தசமஹா பலாபலன்களை நன்முறையில் நிலை நிறுத்தி ஜீவன்களுக்கு உதவிட, அருணாசல தீபம் துணை புரிய வேண்டி ஜோதிப் பிரகாச வள்ளலாம் சிவபெருமானை வேண்டித் துதித்திடுவோம்.
அருணாசல தீபம் நாம் பூகோளப் பூர்வமாக எண்ணுவது போல, அருணையைச் சுற்றி 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு மட்டும் தெரிவதல்ல.
குறித்த கோணத்தில் இருந்து அனைத்து நாடுகளிலும், அண்ட சராசரக் கோளங்களிலும், நட்சத்திரங்களிலும் காண வல்லதே அருணாசல தீப ஜோதி.
எனவே, இந்த அருணாசல தீப ஜோதி தோன்றும் நாளில், இயன்ற தான தர்மங்களைச் செய்து, தான தர்மத்தில் சாசுவதமாகப் பொலியும் ஜோதிப் பிரகாசத்தை நிரவி, நல் எண்ண சக்திகளை விருத்தி செய்து, உண்மையாகவே தியானம் பயில்வோருக்கு, சத்குருவே எங்கிருந்தும் இறையருளால் அருணாசல ஜோதிக் கிரணங்கள் மூலமாக ஆசி ஜோதிகளை அருள்கின்றார்.
எந்த நாடு இத்தகைய அனுகிரக நல்வழி முறைகளை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றதோ அந்நாடு நன்னிலை பெறும்.
வருங்காலத்தில் அருணாசல தீபப் பெருவிழாவில் பல நாடுகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, ஜோதி விருத்திக்காகத் தங்கள் உதவிகளை நல்கி, பன்னாட்டுக் கொடிகளும் தீபப் பெருவிழாவில் பறக்கும் படியாக உலகப் பெருவிழாவாக அருணாசல கார்த்திகை தீபப் பெருவிழா அகில உலக ஜோதிப் பெருநாளாகத் துலங்க உள்ளது.
பூமியின் இதயமாகக் கூறப்படும் அருணாச்சலத்தின் சிகரத்தில் விளங்கும் ஜோதி ஒளியின் உண்மையானது, அழியக் கூடிய இந்த ஜட உடலே நான் ஆவேன் என்று நினைக்கும் (தேகாத்ம புத்தி) மனதை நீக்கி, அந்த மனதை உள் முகமாக்கி இதயத்தில் நிலையாக ஒன்றி, உண்முக திருஷ்டியால் இரண்டற்ற ஏக சக்தியாகிய உள் ஒளியின் உண்மை சொரூபத்தை உணர்வதே.
– பகவான் ரமணர்
.....
.....
No comments:
Post a Comment