Friday, November 15, 2013

ஆதி சங்கரரும் அபிராமி பட்டரும் ...



ஆதி சங்கரரும் அபிராமி பட்டரும் மிகச் சிறந்த தேவி உபாசகர்கள். நம்மை வாழ்விக்க வந்த மகான்கள்.
வாழ்ந்த காலம் வெவ்வேறாயினும், உணர்வால் ஒன்றுபட்ட இவ்விரு மகான்களும் தாங்கள் மனக் கண்ணால் கண்ட அம்பிகையின் திவ்ய ரூபக் காட்சியை ஒரேமாதிரியாக வர்ணித்திருப்பதைப் பார்க்கலாம்.

க்வணத் காஞ்சி-தாமா கரிகலப-கும்ப-ஸ்தன-நதா
பரிக்ஷீணா மத்த்யே பரிணத-சரச்சந்த்ர-வதனா
தனுர் பாணாந் பாசம் ஸ்ருணி-மபி ததானா கரதலை:
புரஸ்தா-தாஸ்தாம் ந: புரமதிது-ராஹோ-புரிஷிகா
(சௌ.ல.7)

'தேவி,சிறிய மணிகளை உடைய ஒட்டியாணம் தரித்தவள். யானையின் மத்தகம் போன்ற ஸ்தன பாரத்தால், சற்றே வணங்கின தோற்றமுடையவள். சிறிய இடையுள்ளவள். அவள் முகமே பூர்ண சந்திரன். கைகளில் கரும்பு வில், பாணம், பாசக்கயிறு, அங்குசம் முதலியவற்றைத் தரித்தவள். இத்தகைய பரதேவதை, எங்கள் எதிரில் எப்போதும் நின்று காட்சியளிக்கட்டும்' என்பது இதன் பொருள்.

இதே பொருளை, அந்தாதியின், 100வது பாடலிலும் காணலாம்.

குழையைத் தழுவிய ஒன்றை அம்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும், கரும்புவில்லும்
விழையப்பொருதிறல்வேரி அம்பாணமும்; வெண்ணகையும்,
உழையப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே.

...

சிவ: சக்தி: காம: க்ஷிதி-ரத ரவி: சீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ்-ததனு ச பரா-மார ஹரய:
அமீ ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவாஸானேக்ஷு கடிதா
பஜந்தே-வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம். (சௌ.ல.32)

இதில், 'ஸ்ரீமத்பஞ்சதசாக்ஷரீ' எனும் மந்திரத்திலமைந்த, சிவன், சக்தி, காமன், ப்ருத்வி, சூரியன், சந்திரன், ஆகாசம், இந்திரன், ஹரி போன்ற தெய்வங்களின் பீஜங்களும், மூன்று ஹ்ரீம்காரங்களின் பீஜங்களும், ரகசியமாக விளக்கப்படுகின்றன. குருமுகமாக உபதேசம் பெற்ற பின்பே இவைகளை ஜபிக்க இயலும். மேலோட்டமாகப் பார்க்கும் போது, மேற்குறிப்பிட்ட தேவதைகள் யாவரும், அம்பிகையின் திருநாமத்தின் உறுப்புகளே என்ற பொருள்தான் தோன்றுகிறது.

இதைப் போல், அபிராமி அந்தாதியில்

ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.

...

பக்தியின் உச்சநிலையில், பக்தர்கள், தேவியைத் தவிர வேறெதுவும் அவர்கள் கண்ணுக்குப் புலப்படாததால், தாங்கள் செய்யும் அனைத்துச் செயல்களையும், நடப்பது உண்பது படுப்பது உட்பட, அவளுக்கு அர்ப்பணமாகவே செய்கிறார்கள். தன்னுடைய செயல்களும் அம்மாதிரியே ஆக வேண்டுமென, ஆதிசங்கரர்,

ஜபோ ஜல்ப: ஸில்பம் ஸகலமபி முத்ரா-விரசநா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசநாத்யாஹுதி-விதி:
ப்ரணாம: ஸம்வேஸ: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யந்மே விலஸிதம்
(சௌ.ல.27)

என்ற ஸ்லோகத்தில் பிரார்த்திக்கிறார்.

அபிராமி பட்டரும், இதையே,

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே! (பாடல்:10)

என்ற பாடலில் வெளிப்படுத்துகிறார்.

மிக்க நன்றி: பார்வதி இராமச்சந்திரன், பெங்களூர


2 comments: