Wednesday, September 18, 2013
விநாயகர் வணக்கம் & கணபதிக்கு பிரியமான 21
அகதியர் தனது "அகதியர் தீட்சாவிதி" என்னும் நூலை விநாயகர் வணக்கதுடன் இவ்வாறு ஆரம்பிக்கிறார்.
"பாதிமதி யணிந்த பரமன் எனக்கிசைந்த
பருதிமதி சுழிமூன்றும் நன்றாய்ச் சொல்வேன்
வேதனைவா ராமல் முதற்தீட்சை மார்க்கம்
விளம்புவேன் மஹா கணபதி காப்பாமே"
போகர் தனது "போகர் ஞான சூத்திரம் 100" என்னும் நூலை விநாயகர் வணக்கத்துடனேயே தொடங்குகிறார்.
"பெருமையுள்ள சதநூலைப் படுவதற்கு
கருவூலந் திருமேனி தும்பிக்கையான்
கணபதி செந்தாமரைத்தாள் காப்பதாமே"
உரோமரிஷியும் தனது "உரோம ரிஷி வைத்தியம் 500" என்னும் நூலை விநாயகர் வணக்கதுடனேயே ஆரம்பிக்கின்றார்.
"மூலமு தலாதார முடிவினின்ற
மூர்த்தியெனும் கணேசரது பாதங்காப்பு"
நந்தீசரும் தனது "நந்தீசர் நிகண்டு 300" என்னும் நூலை விநாயகர் வணக்கதுடனேயே ஆரம்பிக்கின்றார்.
"வெள்ளியங் கிரியான் தந்த
வேழமா முகனே யெந்தன்
உள்ளினுக் குள்ளாய் நாளும்
உரிவினுக் குருவாய் நின்று"
"ஐஞ்சு கரத்தானின் அடியிணையைப் போற்றிசெய்து
நெஞ்சிற் பொருந்தி நிலைபெறுவ தெக்காலம்?"
பத்ரகிரியார்
இவற்றை எல்லாம் விட, பகுத்தறிவுக் கருத்துக்களை முகத்தில் அறைந்தாற் போல பாடியவரும், உருவ வழிபாட்டை மிகக் கடுமையாக எதிர்த்தவருமான சிவவாக்கியாரும் கூட தனது "சிவவாக்கியம்" என்னும் நூலை ஆரம்பிக்கும் போது விநாயகர் வணக்கத்தை முன்வைத்தே பாடியிருப்பதும் இங்கு குறிப்பிடதக்கது..
"கரியதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே"
கணபதிக்கு பிரியமான 21
கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர்.
அதிலென்ன சிறப்பு?
ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள்-5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.
மலர்கள் 21:
புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை. சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.
அபிஷேகப் பொருட்கள் 21:
தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.
இலைகள் 21:
மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு. ஜன்பகப்பூ
நிவேதனப் பொருட்கள் 21:
மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்
விநாயகர் சதுர்த்தியால் கிடைக்கும் 21 பேறு
அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர். மிகவும் எளிமையான கடவுள் கணபதி.
வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடியவர். வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். விநாயகரே முழு முதற்கடவுள் என்று வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும்.
எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை. பாரத தேசத்தின் இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப் பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார்.
ஆகையினாலேயே எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும், தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் இணைந்து "உ'' எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடிந்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு.
எந்த ஒரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது, யோக சாஸ்திரங்களின்படி, நம் தலையின் இரு பக்கமிருக்கும் அமிர்தமானது சுண்டிவிடப்பட்டு, சுரந்து சுழுமுனாநாடி வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிஷேகமாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது.
அன்னை தந்தையான சிவ பார்வதியை வலம் (சுற்றி) வந்ததாலேயே உலகம் முழுமையும் சுற்றிய பெருமை கிடைத்ததால் ஞானப் பழத்தினை மிக சுலபமாகப் பெற்றவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். அந்த விநாயகரையே வலம் வந்தால், ஞானம் எனும் கல்வியறிவு, பழம் எனும் முயற்சியில் வெற்றி பெறலாம்.
விநாயகப் பெருமானுடைய சிறப்பினை உணர்த்த, விநாயகர் புராணம் உள்ளது. சிவபெருமான் வாயிலாகத் தாம் உணர்ந்த விநாயக புராணத்தை பிரம்மன் வியாசருக்கு உபதேசிக்க, அவர் பிருகு முனிவருக்கு உபதேசிக்க அவர் இப்புராணத்தை 250 பிரிவுகளையுடைய உபாசனா காண்டம், லீலா காண்டம் என இரு காண்டங்களாக அமைத்துப் பன்னிரெண்டாயிரம் சுலோகங்களாக "ஸ்ரீ விநாயகர் புராணம்" பாடினார்.
விநாயகர் புராணத்தில் இரண்டாம் காண்டமாகிய லீலா காண்டத்தில் விநாயகப் பெருமான் எடுத்த பன்னிரண்டு அவதாரங்களும் கூறப்பட்டுள்ளன.
அந்த அவதாரங்களில் அவர், வக்கிரதுண்டர், சிந்தாமணி விநாயகர், கஜநாதர், விக்கினராஜர், மïரேசர், பாலசந்திரர், தூமகேது, கணேசர், கணபதி, மகோத்சுதர், முண்டி விநாயகர் மற்றும் வல்லபை கணேசர் என்ற பெயர்களோடு விளங்கியதாக அப்புராணம் கூறுகிறது.
பார்வதி தேவி மண்ணால் ஒரு உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்து ஸ்ரீ விநாயகராக அவதாரம் செய்வித்தது ஆவணி மாதத்து சதுர்த்தி தினத்தில் தான். அந்த நாளையே ஸ்ரீ விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாகக் கொண்டாடுகின்றோம். மண்ணில் அமைந்த விநாயகருக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து, விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி முதலான அனைத்தும் அமைத்து வழிபாடு செய்தல் வேண்டும்.
விநாயக சதுர்த்தி வழிபாட்டினால்
1. தர்மம், 2. பொருள், 3. இன்பம், 4. சௌபாக்கியம், 5. கல்வி, 6. பெருந்தன்மை, 7. நல்வாழ்வுடன் கூடிய மோட்சம்,8. முக லக்ஷணம், 9. வீரம், 10. வெற்றி, 11. .எல்லோரிடமும் அன்பு பெறுதல், 12. நல்ல சந்ததி, 13. நல்ல குடும்பம், 14. நுண்ணறிவு, 15. நற்புகழ், 16. சோகம் இல்லாமை, 17. அசுபங்கள் அகலும், 18. வாக்கு சித்தி, 19. சாந்தம், 20. பில்லி சூனியம் நீங்குதல், 21. அடக்கம்
ஆகிய 21 விதமான பேறுகள் கிடைக்கும்.
விநாயகப்பெருமானையே தங்கள் வழிபடு கடவுளாகக் கொண்டு வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுகியவர்களின் வாழ்க்கையில் அவர் நடத்திக் காட்டிய அற்புதங்கள் எண்ணிலடங்காது.
அகத்திய முனி மூலம் காவிரி தந்தமையும், நம்பியாண்டார் நம்பி மூலம் அப்பர், சம்பந்தர், திருநாவுக்கரசர் மூவர் தேவாரங்களை உலகுக்கு கொடுத்து சைவ சமயத்தையே காப்பாற்றிய பெருமையும், யாவரும் அறிந்ததே.
இன்னும் எண்ணிலடங்காத அற்புதங்களையும் நிகழ்த்திவரும் விநாயகப்பெருமான் தனது பக்தர்களுக்கு அருள் பாலித்துவரும் கருணைத் திறன் அளவிடற்கரியது. விநாயகப்பெருமான் திருத்தாள் பணிந்து அவர் அருளாலே அவன் தாள் வணங்கி உய்வோமாக.
-
இதில் காணப்படுபவை யாவும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். அறிந்த ஆன்மீக விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.
சிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி
Subscribe to:
Post Comments (Atom)
மிகவும் அருமையான பதிவு
ReplyDelete