Saturday, October 6, 2012

மாந்துறையான் ...

...
எங்களுடைய குலதெய்வம் ஆதரவளிக்கும் ஸ்ரீ வாலாம்பிகா ஸமேத ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர்
எங்களை காத்து ரட்சிக்கும் காவல் தெய்வம் ஸ்ரீ கருப்பண்ண சாமி
...

படைத்த உயிர்களுக்கெல்லாம் படியளிக்கும் பார்வதியை இட்ப்பாகத்தில் கொண்ட ஈசன், மருண்டு தவித்த மானுக்கருளிய பரமதயாளமூர்த்தியை

"நீல மாமணி நித்திலத் தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி வடகரை மாந்துறை யமர்வானை
மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா மலரடி யிணைநாளுங்
கோல மேத்திநின் றாடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே"

-எனப்பல வகைகளாக உணர்ந்து தொழுது திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற, திருச்சி பகுதியில் உள்ள பஞ்ச சிவாலயங்களில் மாந்துறையும் ஒன்று. (இரண்டாம் திருமுறை 110வது திருப்பதிகம்)

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 58வது தலம்.
கும்பகோணத்திற்கு அருகில் மாந்துறை என்றொரு ஊர் இருப்பதால், இது வடகரை மாந்துறை எனவும், கும்பகோணத்தில் அருகில் உள்ளது தென்கரை மாந்துறை எனவும் வழங்குகின்றன.

முருகன் அருள் பெற்று திருப்புகழ் பலவற்றினை வாய்மலர்ந்த அருணகிரிநாதரும் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளார்.

ஆதிசங்கரர் ஆம்ரவனேஸ்வரரை பூஜை செய்து வணங்கியுள்ளார். இவர் கோஷ்டத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.

மிருகண்டு மகரிஷியும் சுவாமியை வணங்கியுள்ளார்.

துர்க்கை சாந்த கோலத்தில் இருக்கிறாள். இவளது காலுக்கு கீழே மகிஷாசுரனும் இல்லை.

பிரகாரத்தில் திருப்புகழில் பாடிய சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். (திருப்புகழ் பாடல்.899)

மாமரங்கள் நிறைந்திருந்த தலம் என்பதாலும், மானுக்கு அருள் புரிந்த சிவதலம் என்பதாலும் இத்தலம் "மாந்துறை' என வழங்கப்படுகிறது.

இவ்வூர் காயத்ரி நதிக் கரையில் அமைந்துள்ள புண்ணியத்தலம். இங்கு காவிரித் தாயே தன் கரங்களை வடதிசை நோக்கி விரித்து காயத்ரி நதியாக ஓடி வருகிறாள்.

அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பால தோஷத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குணமாகும் என்பது நம்பிக்கை.

கிரக தோஷம் உள்ளவர்கள் நவக்கிரக சன்னதியில் வேண்டிக்கொள்கிறார்கள்.

சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளியை சுவாமி மீது பரப்பி பூஜை செய்வது சிறப்பு.

தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகளாக பேரழகு கொண்ட சமுக்யா தேவி பிறந்தாள். அவளை சூரியன் மணந்து கொண்டார். அவள் சூரியனுடன் மிகுந்த அன்பு கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தாள்.

நாளுக்குநாள் சூரியனின் உக்கிரம் அதிகரிக்கவே அவளால் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் சூரியனிடம் முறையிட்டும் அவர் உக்கிரத்தை குறைக்கவில்லை. ஒரு காலகட்டத்தில் அவரது வெப்பத்தை தாங்கவே முடியாது என்ற நிலைக்கு வந்த சமுக்யாதேவி, தான் தந்தையிடமே வந்துவிடுவதாக விஸ்வகர்மாவிடம் கேட்டாள். அவரோ மகளுக்கு ஆறுதல் கூறி சாந்தப்படுத்தினார். ஆனாலும் அவளால் கணவனின் உக்கிரத்தை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. எனவே, கணவனைப் பிரிந்து செல்ல முடிவெடுத்தாள்.

தான் சென்றுவிட்டால் கணவன் மனம் வருந்துவார் என்று எண்ணிய அவள் தன்னில் இருந்து சற்றும் வித்தியாசம் காணமுடியாதபடி தன் நிழலில் இருந்து ஒரு உருவத்தை உண்டாக்கினாள். அவளை தனக்கு பதிலாக சூரியனின் மனைவியாக இருந்து பணிவிடை செய்யும்படி பணித்தாள். (சமுக்யாதேவியால் நிழல் வடிவமாக உருவாக்கப்பட்டவளே சாயாதேவி).

பின் அவள் சூரியனைப்பிரிந்து தன் தந்தையிடமே வந்து சேர்ந்தாள். விஸ்வகர்மா அவளுக்கு பலவாறு எடுத்துச் சொல்லியும் அவள் கணவனிடம் செல்லவில்லை.

தந்தையின் அனுமதியில்லாமலேயே அவருடன் தங்கியிருந்ததால் மனம் கலங்கிய சமுக்யாதேவி குதிரை வடிவம் எடுத்து இத்தலம் வந்து தன் கணவனின் உக்கிரம் குறையவும், அவரது உக்கிரத்தை பொறுத்துக் கொண்டு மீண்டும் கணவனுடன் சேரவும் சிவனை வேண்டி தவம் செய்தாள்.

இதனிடையே சாயாதேவியின் நடத்தையின் வித்தியாசத்தைக் கண்ட சூரியன், அவள் சமுக்யாதேவி அல்ல என அறிந்து கொண்டார். அவர் விஸ்வகர்மா மூலமாக தன் மனைவி பிரிந்து வந்ததை தெரிந்து கொண்டு, அவரிடமே தன் உக்கிரத்தையும் குறைத்தார். பின் அவர் இத்தலம் வந்து சிவனை வழிபட்டு சமுக்யாதேவியுடன் மீண்டும் சேர்ந்தார்.

இதன் அடிப்படையில் இங்கு நவக்கிரக சன்னதியில் சூரியன் சமுக்யாதேவி மற்றும் சாயாதேவி ஆகிய இருவருடன் இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே சூரியன் தனியாகவும் இருக்கிறார். பிற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தபடியே இருக்கிறது.

சதுர்த்தி பூஜை:

மான்களாக பிறந்த அசுர தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு அங்காரக சதுர்த்தியன்று (செவ்வாய்க்கிழமை சதுர்த்தி) விமோசனம் தந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்கு சுவாமிக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்நேரத்தில் சுவாமியை வழிபட்டால் குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் இப்பகுதி மாமரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இவ்வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக பிறக்கும்படி சாபம் பெற்றார். அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாக பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்கு பிறந்தார்.

ஒருநாள் குட்டி மானை விட்டுவிட்டு, தாய் மானும், தந்தை மானும் வெளியே சென்றுவிட்டன. அவை இரைதேட சென்ற இடத்தில் வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் அவற்றை அம்பால் வீழ்த்தி சாபவிமோசனம் தந்தனர்.

இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மான் இருப்பிடத்திற்கு திரும்பாததால் கலங்கிய குட்டிமான் கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது. நேரம் ஆக, ஆக மானுக்கு பசியெடுக்கவே அது அலறியது. சிவனும், பார்வதியும் அதனைப் பெற்ற மான் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்கு பார்வதி தேவி பால் புகட்டினார்.

தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார். சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான் தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. அவரது வேண்டுதலுக்காக சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதிதேவியும் இங்கேயே தங்கினாள்.

திருவண்ணாமலையில் சிவபெருமானின் முடி கண்டதாகப் பொய்யுரைத்த பிரமன் இத்தலத்தில் தவமியற்றித் தனது பாவத்தைப் போக்கிக் கொண்டதாகவும் கூறுவர்

முன்னர் மாந்தோப்புக்கள் நிறைந்து காணப்பட்டமையாலேயே "மா-உறை" இடம் எனக் கூறப்பட்டுப் பின்னர் மாந்துறை என வழக்கில் மாறியது என்பர். தல வரலாற்றின்படி, மான்களாய்ப் பிறப்பெடுத்த அசுரர்களுக்கு முக்தி அளித்தமையால், மான்- உறை என்பதே மாந்துறையானது என்பதும் உண்டு. இந்தக் கோயிலின் தல மரம் மாமரமே என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கிராமத்தில் சோழர் காலக் கல்வெட்டுக்கள் இரண்டு படி எடுக்கப்பட்டுள்ளமை இதன் தொன்மையைப் பறைசாற்றுவதாக உள்ளது

கோயிலின் மூலவர் 'ஆம்ரனேஸ்வரர்' (ஆம்- என்பது வடமொழியில் மாங்காயைக் குறிப்பது). மிருகண்டு முனிவர் இங்கு வந்து வழிபட்டமையால் இவருக்கு 'மிருகண்டீஸ்வரர்' என்று மற்றொரு பெயரும் உண்டு. 'சுத்த ரத்னேஸ்வரர்' என்று பெயரும் உண்டு.
அம்மனின் பெயர் வாலாம்பிகா (தமிழில் அழகம்மை; அழகு உயர்ந்த அம்மை என்று கூறுவதும் உண்டு).

சூரியனார், சந்திரனார் மற்றும் இந்திரன் ஆகியோர் இங்கு வழிபட்டதாக நம்பிக்கை நிலவுகிறது.

லால்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆங்கரை போன்ற கிராமங்களில் வசித்தவர்களும், அவர்கள் மரபில் வந்து தற்போது உலகெங்கும் பரவியுள்ள பலரும், மாந்துறையில் உள்ள இக்கோயிலினை இன்றளவும் புண்ணியத்தலமாகவும், இந்த இறைவனை மாந்துறையான் என்ற வழக்குப் பெயருடன் குல தெய்வமாகவும் கொண்டுள்ளனர்.

இக்கோயிலை ஒட்டி கிராமத்துத் தெய்வமான கருப்பண்ணசாமியின் பூசையிடமும் அமைந்துள்ளது. கிராமத்து வழக்கப்படி மூலவர் என சிலை ஏதும் இல்லாது, குதிரைகளும், வேல்களுமே காவல் தெய்வத்தின் உருவகமாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். இக்காவல் தெய்வத்தின் காலடி மண் நோய்களைப் போக்கும் சக்தி கொண்டது எனும் நம்பிக்கை இங்கு வரும் பக்தர்களுக்கு மிக அதிகம் உண்டு.

மாந்துறை கருப்பண்ண சாமி கோவில் அருள் வாக்கு ஒரு காலத்தில் ரொம்ப பிரபல்ம். அங்குள்ள பூசாரிக்கு அடிக்கடி அருள் வரும். அவ்வாறு வரும் போது உடுக்கு அடித்து மிக உயரமாகத் துள்ளிக் குதிப்பார். சொன்னால் சொன்ன படி நடக்கும். இப்போது அந்த சக்திவாய்ந்த பூசாரி அங்கு இல்லை. அவருடைய வாரிசு தான் பூசாரியாக இருக்கிறார்.

...

பிறப்பின் மூலமே குலதெய்வம்.

குலதெய்வ வழிபாடு என்பது நம் அனைத்து முன்னோர்களுக்கும் முதலான ஆதி முன்னோர் என இறைவனையே நம் முன்னோராக கருதி வழிபடுவதாகும். நம் கலாச்சார பூஜா விதிகள் அவ்வாறு வழிபடாமல் எந்த பூஜை செய்தாலும் அதற்கு பலன் இருக்காது என்கிறது.

குலதெய்வத்தை மறந்துவிட்டால் .....
மனசஞ்சலம், காரியங்களில் 99% அடைந்து பிறகு தோல்வியை தழுவுவது, தீர்க்க முடியாத உடல் நோய்கள், ஆன்மீக வளர்ச்சியில் தடை, குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து உறவினர்களால் கைவிடப்படுதல் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். எளிமையாக சொல்வதானால் ஒரு மனிதன் கடமையை தவறினால் என்ன நடக்குமோ அத்தனையும் நடக்கும்.

...

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த 'திருமாந்துறை' தேவாரத் திருப்பதிகம்
(இரண்டாம் திருமுறை 110வது திருப்பதிகம்)

செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ்
செருந்திசெண் பகமானைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை
குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைகின்ற
எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழ
லேத்துதல் செய்வோமே.

விளவு தேனொடு சாதியின் பலங்களும்
வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை உறைவானத்
துளவ மால்மக னைங்கணைக் காமனைச்
சுடவிழித் தவனெற்றி
அளக வாணுதல் அரிவைதன் பங்கனை
யன்றிமற் றறியோமே.

கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங்
கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யிற்பலி கொள்பவன்
வானவர் மகிழ்ந்தேத்துங்
கேடி லாமணி யைத்தொழ லல்லது
கெழுமுதல் அறியோமே.

இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை
இளமரு திலவங்கங்
கலவி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும்
ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை யல்லது
வணங்குதல் அறியோமே.

கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி
குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைவானைப்
பாங்கி னாலிடுந் தூபமுந் தீபமும்
பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில்
தலைப்படுந் தவத்தோரே.

பெருகு சந்தனங் காரகில் பீலியும்
பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப்
புனிதனெம் பெருமானைப்
பரிவி னாலிருந் திரவியும் மதியமும்
பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி
வணங்குதல் செய்வோமே.

நறவ மல்லிகை முல்லையும் மௌவலும்
நாண்மல ரவைவாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை
மாந்துறை யிறைஅன்றங்
கறவ னாகிய கூற்றினைச் சாடிய
அந்தணன் வரைவில்லால்
நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன்
நிரைகழல் பணிவோமே.

மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட
மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைவானை
நிந்தி யாவெடுத் தார்த்தவல் லரக்கனை
நெரித்திடு விரலானைச்
சிந்தி யாமனத் தாரவர் சேர்வது
தீநெறி யதுதானே.

நீல மாமணி நித்திலத் தொத்தொடு
நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி வடகரை
மாந்துறை யமர்வானை
மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா
மலரடி யிணைநாளுங்
கோல மேத்திநின் றாடுமின் பாடுமின்
கூற்றுவன் நலியானே

நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர்
நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலங்களும்
நாணலின் நுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை
மாந்துறை யொருகாலம்
அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது
அதுவவர்க் கிடமாமே.

வரைவ ளங்கவர் காவிரி வடகரை
மாந்துறை யுறைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன்
செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம்
பந்தனன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும்
பாவமும் இலர்தாமே.

பொழிப்புரை :

வேங்கை , ஞாழல் , செருந்தி , செண்பக மலர்களையும் ஆனைக் கொம்பையும் , சந்தனமரம் , மாதவி மலர் , சுரபுன்னை மலர் , குருந்து மலர் ஆகியவற்றையும் உந்திவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில் உறையும் எம்பிரானின் இமையோர் வணங்கும் திருவடிகளை ஏத்துவோம்

விள முதலிய பயன்தரும் மரங்களின் பழங்களோடு முத்துக்களையும் அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில் , மால் மகனாகிய காமனைக் கனல் விழியால் எரித்து விளங்கும் இறைவனை , அம்பிகைபாகனை அன்றி உலகில் வேறொன்றையும் அறியோம் .

தேன் சொரியும் குன்றிடைத் தோன்றிக் கமுகு முதலிய மரங்களின் இலைகளை வாரிவரும் காவிரி வடகரையில் மாந் துறையில் விளங்கும் கேடிலாமணியைத் தொழுதலையல்லது வேறொருவரைத் தொழுதல் அறியோம் .

இலவம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறை உறை தலைவனும் கங்கை , பிறை , அரவு முதலியவற்றைத் தலையில் சூடியவனும் ஆகிய வானோர் தலைவனையன்றி வணங்குதலறியோம் .

கோங்கு , செண்பகம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறையில் உறைவானை , தூபம் தீபம் தோத்திரம் நிவேதனம் ஆகியவற்றால் மலர்தூவி வழிபட்டு அவன் திருநாமங்களைச் சொல்லுவார் மேலான தவமுடையோராவர் .

சந்தனம் அகில் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறைப் புனிதனின் இரவி , மதி , மன்னர்கள் , மருத்துக்கள் அன்போடுவழிபடும் திருவடிகளை வணங்குவோம் .

மல்லிகை முல்லை முதலிய மலர்களை மிகுதியாக வாரி வரும் காவிரி வடகரை மாந்துறை இறைவனும் காலனைக் காய்ந் தவனும் , மேருவில்லால் முப்புரம் எரித்தவனும் ஆகிய பெருமானின் திருவடிகளைப் பணிவோம் .

மந்திகள் மாங்கனிகளை உண்டு மகிழுமாறு அடர்ந்து வளர்ந்த மாமரங்களை உடைய மாந்துறையில் எழுந்தருளிய இறைவனை , நிந்தித்து அவனை மலையோடு எடுத்து ஆரவாரித்த இராவணனைக் கால் விரலால் நெரித்தவனைச் சிந்தியாதவர் தீநெறி சேர்வர் .

நீல மணிகளையும் , முத்துக்களையும் , மலர்களை யும் அடித்து வரும் காவிரி வடகரை மாந்துறையில் திருமாலும் பிரமனும் தேடிக் காணமுடியாதவாறு எழுந்தருளிய இறைவனின் திருவடிகளைப் பாடி வழிபடுங்கள்.

சமணரும் தேரரும் நிலையற்ற உரையினராவர் . நீண்ட மூங்கில் , தேன் பொருந்திய வேலமரம் , மாங்கனி , வாழைக் கனி , நாணலின் நுரையை அடித்துக் கொண்டு வரும் காவிரியின் வடகரையிலுள்ளதிருமாந்துறை இறைவனை எக்காலத்தும் நெஞ்சுருகி வழிபடும் பரமானந்த நிலையே.

மலைவளங்களைக் கொணர்ந்து தரும் காவிரி வடகரையில் - மாந்துறையில் உறைபவன் மீது கவுணிய கோத்திரத் தனாய் , சிறந்த வேதங்கள் நிறைந்த நாவினனும் சிவனுக்குத் திருத் தொண்டு செய்வதில் வல்லவனுமான காழி ஞானசம்பந்தன் பாடிய அன்புறு பாமாலைகளை ஓதி வழிபடுவோர் அல்லல் பாவம் ஆகியன நீங்கப் பெறுவர் .

...

திருப்புகழ் பாடல் (899) - "திருமாந்துறை"

ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து ஆய்ஞ்சுதளர் சிந்தை ...... தடுமாறி
ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து ஆண்டுபல சென்று ...... கிடையோடே
ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து ஓய்ந்துணர் வழிந்து ...... உயிர்போமுன்
ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து ஊன்றிய பதங்கள் ...... தருவாயே
வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த வேந்திழையி னின்ப ...... மணவாளா
வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச வேண்டிய பதங்கள் ...... புரிவோனே
மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து மாண்புநெல் விளைந்த ...... வளநாடா
மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற மாந்துறை யமர்ந்த ...... பெருமாளே.

நன்றாக இருந்த குடல் வளைவுற்று கூன்விழுந்து, விழவேண்டிய பற்கள் தளர்ச்சி அடைந்து, ஆய்ந்து ஓய்ந்து மனம் தடுமாற்றம் அடைந்து, வரவேண்டிய கடன்களை வாங்கவேண்டிய இடங்களில் வாங்கி, இவ்வாறே பல ஆண்டுகள் செல்ல, படுத்த படுக்கையாகி, மிகுந்த இருமல் நோய் ஏற்பட்டு, வீங்கும் குடலும் நோவுற்று, சோர்வடைந்து, உணர்ச்சியும் அடங்கி, உயிர் போவதற்கு முன்பு, விளங்கி நிற்கும் மயில் மீது நீ வந்து யான் விண்ணுலகை அடைவதற்கு நீ மனம் இணங்கி, நிலைபெற்ற உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. வேங்கை மரங்களும் உயரமான, இனிய தினைப்பயிர்களும் மிகுந்த வயலிலே இருந்த அழகிய தேவி வள்ளியின் இனிய மணவாளனே, வேண்டிக்கொள்ளும் அடியார்கள் கொண்டுள்ள பதவி மேம்பட்டு விளங்க, அவர்கள் விரும்பிய திருவடிகளை அருள் புரிபவனே, மாம்பழம் உடைந்து அதன் சாறு வயலில் நிறைந்து, சிறந்த நெற்பயிர் விளையும் வளமான சோழ நாடனே, மனிதர்களும், தவசிகளும், தேவேந்திரனும் பரவிப் போற்ற நின்ற திருமாந்துறைத் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

...

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.
படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

No comments:

Post a Comment