அன்னை லலிதா திரிபுரசுந்தரி பண்டாசுரவதத்தின் போது முதலில்
போருக்கு வந்த பண்டாசுரனின் புத்திரர்களை அழிக்க தன்னுள்
இருந்து ஒரு சிறு பெண்ணை தோன்றச் செய்து அனுப்பி வைத்தாள்.
அக்குழந்தையும் அனைவரையும் மாய்த்து வெற்றியுடன் திரும்பியது.
அச்சிறு குழந்தை தான் பாலாம்பிகை.
அம்பிகையின் 9 வயது ரூபமே பாலா திரிபுர சுந்தரி.
பாலாம்பிகையின் அனுக்ரஹம் கிடைத்தால்,
பராம்பிகைஅனுக்ரஹம் சுலபமாகுமாம்.
இவளே வாலாம்பிகை, வாலையம்மன், அசோக சுந்தரி, பாலா
திரிபுரசுந்தரி, பாலா என்ற திருநாமங்களில் அழைக்கப்படுகிறாள்.
சிவ வழிபாடு அனைத்து சித்தர்களும் செய்து வந்தாலும்,
சக்தி இல்லையேல் சிவமில்லை என்று உணர்ந்த சித்தபெருமக்கள்,
அந்த சித்த நிலையை அடைய வேண்டிய சக்திகளை பெறுவதற்கு
வாலை என்கிற அந்த சிறுவயது குழந்தையை வணங்கி, சில இரகசிய
வழிபாட்டு முறைகளை செய்து வந்துள்ளனர். பாலா திரிபுரசுந்தரியை
அக கண்ணினாலே கண்டு தான் சித்தர்கள் பூஜித்தனர். அவள் அருள்
பெற்றுக்கொள்கிற ஒரு மாதமாக "ஆடி" மாதத்தை வகுத்துக்
கொண்டுள்ளனர். அதுவும் இந்த ஆடி மாதத்தில், செவ்வாய்/வெள்ளிக்
கிழமைகளில் வழிபாடுகளை செய்வது வாலை அம்மன்அருளை பெற
மிக எளிய வழியாகும்.
பெண்மை என்றாலே சக்தி, வீரம், ஞானம், தாய்மை, கருணை என
அனைத்து குணங்களும் நிரம்பியிருக்கும். பெண் குழந்தை என்றாலே
அனைவருக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியை வழங்கும். இதனை தான்
பாலாவும் செய்கிறாள். குழந்தையை கொஞ்சி அழைத்தவுடன்
ஓடி வருவது போல ஓடி வருபவள். இவளின் வடிவாமானது
சொல்லுதற்கரிய பேரழகு பொருந்திய ஒன்பது வயது குழந்தையாகும்.
கையில் ஜெபமாலை, சுவடிகள் கொண்டு அபய வரத அஸ்தத்துடன்
பட்டு பாவாடை, ஆபரணங்கள் அணிந்து வெண்தாமரையில்
வீற்றிருப்பவள். ஞானமே வடிவாக இருப்பவள் ஆவாள்.
ஸ்ரீ சக்ர வடிவமானவள், ஸ்ரீபுரத்தில் அன்னை லலிதாவுடன் எப்போதும்
இருப்பவள். இவளை உபாசனை செய்பவர்களுக்கு ஞானம், தனம்,
வாக்குவன்மை, சித்து, அறிவு என அனைத்தும் கைகூடும்.
கலியுகத்தின் ஒப்பற்ற சக்தி பாலாம்பிகை. அவள் பாதம் பணிந்து
சரணாகதி அடைந்து எல்லா வளங்களும்பெற்று இன்புற்று வாழ்வோம்.
இவளைப் பற்றி பிரமாண்ட புராணத்தில் லலிதா மகாத்மியத்தில்
26-ஆம் அத்தியாத்தில் விரிவாகக் கூறியுள்ளனர்.
ஸ்ரீவித்யைக்கு முதல் படியான பாலா திரிபுர சுந்தரிக்கான தியான
ஸ்லோகத்தின் பொருளாவது;
சிவந்தநிறமுடைய கிரணங்களின் கூட்டங்களால் நிரம்பிய எல்லாத்
திக்குகளையும் உடையவளும், இரு கைகளிலே ஜபத்திற்கான
மாலையையும், புத்தகத்தையும் ஏந்தியும், மற்ற இரு கரங்கள்
அபய-வரத முத்திரைகளுடனும், செந்தாமரையில் அமர்ந்து
நிரந்தரமான ஸுகத்தை தருபவள் என் ஹ்ருதயத்தில் வசிக்கட்டும்.
அன்னையின் மேல் வலது கையில் ஜப மாலையும்,
மேல் இடது கையில் புஸ்தகத்தையும், கீழ் இடது-வலதுமுறையே
அபய, வரத முத்திரைகளும் கொண்டதாக பாவிக்க வேண்டும்.
பாலை என்னும் பாலா திரிபுரசுந்தரி ஆராதனை தேவி வழிபாட்டில்
முதற்படி என்பர்.
ஸ்ரீ வித்யையில் “பாலா” மந்திரத்துடன் பெரும்பாலோர் நின்றுவிடுவது
வழக்கம். இதனால் தானோ என்னவோ இம்மந்திரத்திற்கு
“லகு ஸ்ரீ வித்யா” என்றே பெயர் இருக்கிறது. அன்னையை
இந்தரூபத்தில் ஆராதிக்க என்றே தனியாக கட்கமலா மற்றும் ஆவரண
பூஜைகள் எல்லாம் இருக்கிறது.
குண்டலினி யோகத்தில் முதல் இரு ஆதார சக்ரங்களில் அம்பிகையை
பாலையாக பூஜிக்கச்சொல்லப்பட்டிருக்கிறது.
சித்தர்களின் முதல்வரான அகத்தியரும் லலிதா சகஸ்ரநாமத்தில்
“பாலா லீலா வினோதினி” என்று இவளைகுறிப்பட்டுள்ளார்.
கொங்கணவர் தனது வாலை கொம்மியில்,
“முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல
மண்டல வாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத் திக்வாலை
அமர்ந் திருக்கிறாள் வாலைப் பெண்ணே” (54)
“காலனை காலால் உதைத்தவளாம் வாலை
ஆலகால விடம் உண்டவளாம்
மாளாச் செகத்தைப் படைத்தவள் இந்த
மானுடன் கோட்டை பிடித்தவளாம்” (57)
“வீணாசை கொண்டு திரியாதே
இது மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு
காணாத வாலையைக் கண்டுகொண்டால்
காட்சி காணலாம் ஆகாயம் ஆளலாமே”
திருமூலர் தனது திருமந்திரத்தில்,
“சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை” (1199)
“முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்
ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண் பிள்ளை” (1073)
“நீங்காத பச்சை நிறம் உடையவள்
ஆங்காரியாகிய ஐவரை பெற்றிட்டு
ஹ்ரீங்காரத்துள்ளே இனித்திருந்தளே”
என்பதாக கூறியிருக்கிறார்.
கருவூரார் கூறுகையில்,
“ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சர்யம் மெத்த மெத்த அதுதான் பாரு”
என்று அன்னையை வாலைப் பெண்ணாக வைத்து அவளது மாயை
போன்ற கூறுகளைப் பற்றிக் கூறுகிறார்.
பாலா பரபிரம்மத்தை காண நம்மை கைப்பிடித்து அழைத்து
செல்பவள். இவளை மூல மந்திரங்கள் மூலம் ஜெபம் செய்ய
சீக்கிரமே நம்வசப்படுபவள்.
மூன்று வித மான மூல மந்திரத்தின் மூலம் இவளை துதிக்கின்றனர்.
பாலா திரியட்சரி மூல மந்திரம்
“ஓம் ஐம் க்லீம் சௌ” என்ற மந்திரம் பாலாவின் மூல மந்திரம் ஆகும்.
ஐம் என்பது பிரம்மா, வாணி பீஜம் ஆகும்.
க்லீம் என்பது விஷ்ணு, லட்சமி மற்றும் காளி பீஜமாகும்.
சௌம் என்பது சிவன், சக்தி மற்றும் முருகன் பீஜமாகும்.
எனவே பாலாவை இம்மந்திரத்தால் வழிபட கல்வி, செல்வம், வீரம் என
அனைத்தும் கிடைக்கும்.
பாலா சடாட்சரி மூல மந்திரம் …
“ஓம் ஐம் க்லீம் சௌ
சௌ க்லீம் ஐம்”
திரியட்சரி மூலமந்திரம் பலித்தமான பின்பு சடாட்சரியால் வழிபடலாம்
பாலா நவாட்சரி மூல மந்திரம்
“ஓம் ஐம் க்லீம் சௌ
சௌ க்லீம் ஐம்
ஐம் க்லீம் சௌ”
சடாட்சரி மூல மந்திர பலத்தமான பின் நவாட்சரி மூல மந்திரத்தால்
வழிபடலாம்.
பாலா தியான மந்திரம்
"அருண கிருண ஜாலா ரஞ்சிதா சாவகாசா
வித்ருத ஜப படீகா புஸ்தகா பீதி ஹஸ்தா
இதரகர வராட்யா புஹ்ல கஹ்லார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா!!!"
என்று அவளை தியானித்த உடனே குழந்தையாய் ஓடி வருபவள்.
வேத மந்திரங்கள் சரியான ஸ்வரத்தோடு ஓதப்பட வேண்டும்.
தப்பான ஸ்வரத்தோடு ஓதினால் அது விபரீத பலனை அளிக்கும்.
மந்திரங்களை, தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம்
செய்யும்படி தாழ்மையுடன்வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.
ஒரு மந்திரத்தை ஓதுங்கால், அக்ஷரப் பிழையோ, ஸ்வரத்தில் பிழையோ
வேறேனும் தவறோ ஏற்பட்டால், எஜமானனுக்கே தீங்கு விளைவிக்கும்.
ஒரு முறை குபேரன் அம்பிகையை பூஜிக்கையில், ‘நித்ய யெளவனா‘
என்ற நாமாவைச் சொன்னபோது அன்னையைக் கூர்ந்து
நோக்கினானாம். அதாவது, தன்னை மறந்து, தான் செய்யும் பூஜையை
மறந்து அன்னையின் பிம்பத்தினை தன் கண்களிலிருந்து மறைத்து
அகக்கண்களில் அன்னையை கன்னியாக, குமரியாகக் காண
தலைப்படுகிறான். உபமானங்களூக்கு அப்பாற்பட்ட அவளை
மனக்கண் முன் கொண்டுவர இயலவில்லையாம். அப்போது ஈசன்
அவன் முன் தோன்றி, பாலாவாக அன்னையைப் பார்க்க
வேண்டுமானால் உஷத்காலத்தில் த்ரிஸாகர சங்கமத்தில், பாரதத்தின்
தென் மூலையில் காணலாம் என்றாராம்.
அதே கன்யாகுமாரி கோவில் கொண்ட இடம்
லலிதா சஹஸ்ரநாமத்தில் உள்ள “தாரா காந்தி திரஸ்காரி
நாஸாபரண பாஸுரா” என்னும் நாமம் இந்த குமரியம்மனுக்கே
உரியதோ என்று தோன்றுகிறது. இந்த நாமத்தின் பொருள்,
நக்ஷத்திரத்தை விட அதிக ஒளிதரும் மூக்குத்தியை அணிந்தவள்
என்பது. இந்த மூக்குத்தியே ஒரு சமயத்தில் கலங்கரை விளக்காக
தடுமாறிய மாலுமிக்கு வழிகாட்டியது என்பர். இங்கே அம்பிகையை
பிரதிஷ்ட்டை செய்தவர் பரசுராமர் என்று கூறப்படுகிறது.
குழந்தைகள் இந்த அன்னையை வணங்கச் சொல்லிக் கொடுப்பதன்
மூலம் அவர்களது கல்வி செழிப்புறும் என்பர். அம்பிகைக்கு சிறப்பான
நாளான வெள்ளியில் அவளைப் போற்றி வணங்கிடுவோம்.
“இனிமை இறையருள் எல்லாம் அவனருள்
கனிந்த கவினாசி காணுவன் இறைவியே
பனித்த சடையான் பஞ்சமி சுப தாரகை
பொழியட்டும் சுபமங்களம் பொங்கட்டும்!”
இதில் காணப்படுபவை யாவும் வேத உபநிஷத் மற்றும்
பெரியோர்களால் கண்டுகொண்ட ஆழமான விஷயங்களை,
அருளாளர்களின் கூற்றுகளை சொல்லக்கேட்டும், பார்த்தும், படித்தும்,
உணர்ந்தும், அந்த உணர்விலிருந்து என் நினைவுக்கு வந்தவை.
மேலும் வலைத்தளம், வலைப்பூ, முகநூல் பதிவுகள் படித்து அறிந்த
விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும்
இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.
அனனவருக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.