Thursday, September 13, 2018

கல்மண்டபம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயம்






சென்னை இராயபுரம் கல்மண்டபம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயம் 


ஆலயத்தின் வாசலில் நுழைந்ததும் இடப்புறம் ஸ்ரீசொல்கேட்டார் பிள்ளையார் அமர்ந்துள்ளார். முதலில் இவரை தரிசிக்க வேண்டும். இவர் அமர்ந்திருக்கும் இடத்தில் ஸ்ரீதீர்த்த பாதேஸ்வரர் என்னும் மஹான் சமாதி கொண்டுள்ளார். நம்குறைகளை எளிதில் தீர்த்து வைத்து, நாம் கேட்டதைக் கொடுக்கும் சொல்கேட்டார் பிள்ளையாரை அம்மஹானின் தியானத்துடன் வணங்கியவுடன் துவஜஸ்தம்பம் அருகில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்





பின் ஸ்ரீமதுரை வீரனையும், ஸ்ரீபாவாடைராயனையும் வணங்கி, பிரதான வாயிலில் இருபுறமும் இருக்கும் துவார பாலகிகளைக் கண்டு உத்தரவு பெற்று மஹாமண்டபத்தில் நுழையவேண்டும்





அங்கே கர்பகிரஹத்தில் கதிரவன் உதிக்கும் வங்கக் கடலை நோக்கி மணிமுத்துச் சிரிப்புடன் புவனங் காக்கும் கலியுகக் காளி அருள்மிகு அங்காள பரமேஸ்வரி சிம்ம வாஹனத்தின் மீதமர்ந்து அருள்பாலிக்கிறாள். அவளை மெய்யன்போடு வணங்க வேண்டும். இந்த அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மனை பக்தியுடன் தரிசிக்கும் பக்தனுக்கு முக்தி நிச்சயம். இந்த அம்பாளின் ஏக சக்திக்குக் கட்டுப்பட்ட பலகோடி சித்தர்கள், தேவதைகள் தினம் வந்துபோகும் மிகச் சக்தி வாய்ந்த கர்பகிரஹம்.


அம்மனின் வலப்புற துவார பாலகிக்கு முதல் வலத்தூணில் ஆனந்தத் தாண்டவ சாட்சியாய் விளங்கும் ஆனந்த விநாயகரைத் தரிசிக்க வேண்டும். இத்தூணிலேயே மஹான் சுத்த பிரம்மர் சமாதி அடைந்துள்ளார்


இதையடுத்த சுற்றில், வலுவான வாழ்வையளிக்கும் ஸ்ரீவஜ்ரேஸ்வரி அம்பிகையை தரிசிக்க வேண்டும். இவ்விடத்திலேயே வஜ்ஜிர பாத சித்தர் என்னும் மஹானின் திருச்சமாதி உள்ளது


அடுத்து வேண்டிய வரத்தை இல்லையென்னாமல் கொடுக்கும் சக்தி உடைய நின்றருளும் அம்மன் ஸ்ரீதீர்க்கஞான அம்பிகை. இவ்வம்மன் இருக்கும் இடத்தில் தீர்க்க ஞானி என்னும் மஹானின் சமாதி உள்ளது.


தென்மேற்கில் உள்ள ஸ்ரீவியாக்ரபாத மஹா கணபதி பக்தர்களின் வாக்கு, சத்தியம் நிலைபெற வரந்தரும் ஐயனாக அமர்ந்துள்ளார். தன்னைத் தியானிப்பவர்களுக்கு வாக்சுத்தம் கிட்டச் செய்திடும் ஸ்ரீவியாக்ரபாத சித்தர் சமாதி இவ்விடமே உள்ளது.


ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியின் நேர்பின்னே ஸ்ரீலோக ரக்ஷக சித்தர் சமாதியான இடத்தில் ஸ்ரீலோக ரக்ஷக ஸர்வேஸ்வரி நின்றருள்கிறாள். பெரியபாளையத்தில் அருளும் ஸ்ரீபவானித் தாயின் சக்தியைப் பெற்ற இவள், வாடிய உள்ளத்திற்கு வதங்காத வளத்தைக் கொடுக்கும் இளகிய மனம் படைத்தவள். இவளுக்கெதிராக உலக சக்தியே திரண்ட கோலமாக, மஹாசக்தியாக ஸ்ரீமூலாம்பிகை அமர்ந்துள்ளாள்


கற்புக்கரசியாம் ஸ்ரீதிலோத்தமைத் தாய், மாங்கல்ய பாக்கியத்தைப் பரிபூரணமாக அளிக்கும் காந்த ஸ்வரூபிணியாக ஆதிகாந்த மூல அங்காள பரமேஸ்வரியான இவ்வம்பிகையிடத்தில் பக்திகொண்டு இவ்விடத்தில் பூரணத்துவம் எய்தினாள்.


சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் அற்புத முருக பக்தர்களாக வாழ்ந்த முருகையன், முருகாம்பிகை, முருக தும்பிகை ஆகிய இரு மனைவியரோடு தெய்வீகமாக வாழ்க்கை வாழ்ந்து; ஸ்ரீமுருகபெருமானுக்கு உகந்த இடமான இங்கு, வடமேற்குத் திசையில் திருமுருகனுடன் ஒன்றிய இடம் இதுவே. இங்கு முருகன் திருமணக் கோலத்துடன் வள்ளி, தெய்வானையோடு காட்சி தருகிறான். எனவே இங்குமுருகையா, முருகையாஎனப் போற்றி வணங்குதல் சிறந்தது


இதற்கடுத்து உள்ள ஸ்ரீபைரவி பிராம்ராம்பிகை, வேண்டுபவருக்கு மூளை சம்பந்தமான நோய்களை அகற்றி அருள்பவள்.


அடுத்து ஸ்ரீதுர்கையைதிருஅண்ணாமலைக்கு அரோஹராஎன முழங்கித் துதிக்க வேண்டும். ஆத்ம சுத்திக்கு ஜோதியாய் நிற்கும் இத்துர்கை உள்ள இடத்தில் ஸ்ரீஜோதிபுரீஸ்வர சித்தர் சமாதி அடைந்துள்ளார்.






இவ்வாலயத்தில் மேலும் பல்லாயிரக்கணக்கான இரகசியங்கள் உண்டு. இவற்றை அவள் அருளால்தான் உய்த்துணர முடியும்


.... ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய‌ ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் அருளுரையின் ஒரு பகுதி 

———————————————————————————————————





என் ஆத்மார்த்த குரு திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய‌ ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் ஆசிர்வாதத்தாலும் அனுகிரஹத்தாலும் 1976ம் வருஷம் ஓம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மா அருளால் அவளின் அருளை உணரும் ஒரு வாய்ப்பு கிட்டியது. மெய்சிலிர்க்க வைத்தது. ஒரு சிறு அதிர்வு மட்டுமே. ஆனால் ஆற்றாலோ மிக பெரியது

அன்று முதல் எக்காலத்தில், என்ன வேண்டுமோ அதை அறிந்து எனக்கு அருள் செய்துகொண்டு இருக்கிறாள். எப்போதும் துணை நிற்கிறாள். எனது வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளாள்



( all the pictures hereinabove are culled from GOOGLE IMAGES )

1 comment: