Saturday, March 4, 2017

ஆத்மபூர்வமாக அறிந்தவனுக்கு அடுத்தவனிடமிருந்து ஆதாரம் எதற்கு?

...

ஒருசில நேரத்தில் ஒருசிலர் கூறும் ஒருசில வாக்கியங்கள் அக்ஷர பிழையின்றி உயிர்வடிவம் பெற்றுவிடுகிறது.  எதைச் சொல்ல யாருக்கு யோக்கியதை இருக்கிறதோ, அவர் சொன்னால் அதற்கு பலன் கண்டிப்பாக உண்டு. அதுவும் நடக்க வேண்டிய நேரத்தில் நடந்துவிடுகிறது. நிறுத்த முடியவே முடியாது.

எனது வாழ்க்கையில் நடந்த ஒருசில உண்மை சம்பவங்களை  உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

அருள் வாக்கு மூலமமும், ஜாதகத்தில் நவகிரகங்களின் அமைப்பை வைத்தும், கையிலுள்ள ரேகைகளின் வடிவமைப்பை வைத்தும், முகபாவனை வைத்தும், கேள்விகேட்கின்ற நேரத்தை வைத்தும், சொல்லப்பட்ட சொற்கள் தத்ரூபமாக உயிராக்கம் பெற்றுவிட்டன.

1)

நான் SSLC படித்துக்கொண்டிருக்கும்பொழுது - 1968 என்று நினைக்கிறன் - ஒரு பெரியவர் வீட்டுக்கு சென்றுருந்தேன். சிகப்பு ஆடை அணிந்துயிருந்தார். வெந்தாடி. நல்ல உயரம். விபூதி இருந்தது, ஆனால் குங்குமம் இல்லை. பிராமணர் இல்லை.  "பிள்ளைவாள்" என்று நினைக்கிறன். என்னை கூட்டிச்சென்ற பள்ளித்தோழன் அவரிடம், " அய்யா, எனக்கு சொன்னமாதிரியே இவனும் எங்கே வேலை பார்ப்பான் என்று சொல்லுங்கள் " எனக்கேட்டான். அவர் இரண்டு ஊதுபத்தி ஏற்றிவைத்து, அதன் புகையை சிலநொடிகள் பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு கண்ணை மூடிக்கொண்டு மிகமெல்லிய குரலில், " உப்பளம் நிறைந்த பகுதியில் முட்கள் உள்ள இடத்தில் நெற்கதிர்கள் சம்பந்தமுடைய ஒரு பெரிய தொழிற்சாலை வரும். அதில் 11 வருடகாலம் இருப்பாய் " என்று கூறினார். 

அவருக்கு நான் கொடுத்தது, இரண்டு வாழைப்பழமும் 5 ரூபாயும் தான்

நான் SPIC சென்னையில் 1972 ம் வருஷம் சேர்ந்தேன். 1986ல் தொழிற்சாலை உள்ள தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டு, 11 வருஷங்களுக்குப்பின், 1997ல் மீண்டும் சென்னைக்கு மாற்றப்பட்டேன். 
தூத்துகுடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் உப்பளங்களுக்கு நடுவில் முள்ளக்காடு என்ற பகுதியில் விவசாயத்திற்கு பயன்படக்கூடிய உரத்தொழிற்சாலை தான் SPIC. 


1968ல் சொல்லப்பட்ட சொற்கள் 18 வருடங்கள் கழித்து, 1986ல் உயிராக்கம் பெற்றது.

2) 

1988ல் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று ஸ்ரீ முருகப்பெருமானை வழிபட்டு வெளிவர, ஒரு வயது முதிர்ந்த அய்யா என்னை அழைத்து சொன்னார், " இப்ப இருக்கிற பூமி போய்விடும். அதனால் அமைந்த சிறுமனையும் போய்விடும். அதன் பிறகு அமைவது நிலைத்துநிற்கும். மரங்களுக்கு நடுவில், எல்லா வசதிகளுடன் விசாலமான இல்லம் அமையும். " 
அவராகவே சொல்லிவிட்டு, சொல்லியதற்கு தக்ஷிணை கொடு என்று கேட்டு, 10 ரூபாய் வாங்கிக்கொண்டு போய்விட்டார். போகும்பொழுது, " இதெல்லாம் நடந்தால், என்னைத்தேடிவந்து 100 ரூபாய் கொடுத்துவிட்டு போ " என்று சொல்லிவிட்டார்.
நான் இதை ஒரு பொருட்டாகவே மதிக்கேவேயில்லை.  அப்பொழுதே மறந்துவிட்டேன்.

சில காரணங்களுக்காக, 1992ல் சென்னை வேளச்சேரியில் பூமியுடன் கூடிய மாடி வீட்டைவிற்று, பூனாவில் 600 sftல் Flat வாங்கினேன்.  நானும் எனது இரு புதல்வர்களும் பெங்களூருல் 'செட்டில்' ஆகிவிட்டதால், பூனா Flatட்டைவிற்று 2014ல் 1800 sftல் ஒரு Flat வாங்கிவிட்டோம்.  சகல வசதிகளுடன் நிறைய மரங்கள் உள்ள Gated Communityல் 10வது மாடியில் ஜாகை.
2015 Marchல் பெரியபையன், " நான் திருச்செந்தூர் போய்விட்டு வரலாம் என்று இருக்கிறேன், நீங்களும் அம்மாவும் கூட வருகிறீர்களா " என்று கேட்டான்.  ஆனால் நான் செல்லவில்லை. அன்று இரவு மனதில் ஒரு நெருடல். அந்த பெரியவர் சொன்ன வாக்கியங்கள் நினனைவுக்கு வந்தன.  அவர் ஒரு தீர்க்கதரிசிதான். 
2014ல் நடக்கும் செயலை 1988லே சொல்லிவிட்டார். அதுவும் மிகச்சாதாரணமாக.  அவருக்கு நான் ஜென்ம கடனாளியாக விட்டேனே. 29 வருடங்கள் ஓடிவிட்டன.  அப்பெரியவர் ஜீவித்திருப்பாரா. இருந்தால் எங்கே போய் தேடுவுது, அல்லது அவர் குடும்பத்தினரை எவ்வாறு கண்டுபிடிப்பது. ஒன்றும் புரியவில்லை.
செய்தவினையின் அறுவடை.அனுபவித்தே ஆகவேண்டும். வேறு வழியில்லை.

3)

1996 December மாத கடைசி என்று நினைக்கிறன்.  Spic Nagar, Site GM Office. நானும் மில்டனும் பேசிக்கொண்டிருந்தோம்.  காளிதாஸை பார்க்க, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 'குறி' சொல்லும் ஒருவர் கையில் "கோலுடனும்" உடம்பு முழுவதும் ஒருவித கம்பளத்தை போர்த்திக்கொண்டு வந்தார்.  காளிதாஸ் இல்லாததால், நானும் மில்டனும் எங்கள் கையை நீட்டி குறி சொல்லச்சொன்னோம்.  
அவர் கொண்டுவந்த கோலை என் வலது உள்ளங்கை ரேகையிலும், நெற்றியுலும் மாற்றிமாற்றி வைத்து சில நிமிஷங்கள் கழித்து கூறினார். அவருக்கு தமிழ் சரளமாக பேசமுடியவில்லை.  பாதி சைகை மூலமும் பாதி அரைகுறை தமிழிலும் சொன்னார். 
" இரண்டு வருடங்கள் கழித்து, குடும்பத்தை விட்டுப்பிரிந்து தனியாக வாழும் சூழ்நிலை உண்டாகும். கவலை வேண்டாம். அது நல்லதுக்குத்தான். ஆனால் சமுத்திரம் கடக்க நேரிடும்.  இருக்கும் இடம் நல்ல வசதியாக இருக்கும்.  தெரிந்தவர்கள்தான் உடனிருப்பார்கள்.  நான்கு வருடங்கள் நன்கு நடக்கும்.  அதற்குப்பின் ஒரு குழப்பமான சூழ்நிலை தெரிகிறது, சரியாக புரியவில்லை " என்று சொல்வதை நிறுத்திவிட்டார்.
அதேமாதிரி, மில்டன் கையிலும் நெற்றியுலும் மாற்றிமாற்றி வைத்து விட்டு சொன்னார்.  ஆனால் கோலை மாற்றிக்கொண்டிருக்கும்பொழுது, நடுவில் இருமுறை என்னைப்பார்த்து சிரித்தார். " அவர் சென்று இரண்டு வருடங்கள் கழித்து, நீங்களும் அதே இடத்திற்கு செல்வீர்கள்.  ஆனால் நீங்கள் இருவர் இருக்கும் இடத்திற்கு நடுவில் ஒரு பாலைவனம் தெரிகிறது. ஒன்றும் புரியவில்லை. உங்களக்கு ஒரு குறையும் தெரியவில்லை " என்று முடித்துவிட்டார்.
' நான் சொன்னதற்கு தக்ஷிணை கொடுக்கவேண்டும், எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறேன் ' என்று கேட்டு வாங்கிக்கொண்டார்.  என்னிடம் 200 ரூபாய்தான் இருந்தது. அதை கொடுத்தேன். 

அவர் சொன்னமாதிரி, இரண்டு வருடங்கள் கழித்து 1998 வருடம் ஜோர்டான் IJCக்கு deputationலே அனுப்பப்பட்டேன். குடும்பத்தை விட்டுப்பிரிந்து கடல்கடந்து சென்று அம்மான் நகரில் சகல வசதிகளுடன் சந்தோஷமாக வாழ்ந்தேன். மில்டனும் இரண்டு வருடங்கள் கழித்து ஜோர்டான் வந்து ஷிடியா site officeக்கு வந்தான்.  அம்மானுக்கும் ஷிடியாக்கும் நடுவில் ஒரு பாலைவனம் இருந்தது.  
4.1/2 வருடங்கள் கழித்து 2002 வருடம் ஒரு குழப்பமான சூழ்நிலையில் நான் மறுபடியும் SPIC-சென்னைக்கு வந்துவிட்டேன்.

குறியால் சொல்லப்பட்ட சொற்கள் தத்ரூபமாக உயிராக்கம் பெற்றுவிட்டன. 

... 

சொல்வதற்கு நிறைய உள்ளன.  ஆனால் எல்லாவற்றையும் பொதுப்படையாக பகிர்ந்துகொள்ள முடியாது.  இன்னும் இரண்டு அல்லது மூன்றை பகிர்ந்துகொள்கிறேன்.  

சொல்பவரைபொருத்து சொற்களும் உயிர் பெற்றுவிடுகின்றன என்பதை உணர்த்தவே இதை இங்கே பதிவிடுகிறேன்.

எனது தமிழில் தட்டுஎழுத்து பிழையோ இலக்கணப்பிழையோ இருந்தால் தயவுசெய்து மன்னித்து அருளவும்.

No comments:

Post a Comment