பித்ரு சாப நிவர்த்தி .. ஸ்ரீகயாசுர மகரிஷி
![]() |
| ( AI GENERATED) |
போகர் :- ஸ்ரீ ஆயுர்தேவியின் வலக் கரங்கள் நான்கில் முதல் கரப்பீடமாய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கயாஸுர மகரிஷியைப் பற்றி விளக்க வேண்டுகிறேன் குருதேவா!
அகத்தியர் :- ஸ்ரீ ஆதி பராசக்தி உறையும் ஸ்ரீ வித்யா லோகத்தில் அற்புதமான பித்ரு கோண சூட்சும பிந்து ஆரத்தில், தங்கத் தாமரை மேல் சந்திர கலையில் கடக ஆரத்தில் குண்டலி சகிதமாய் சங்கு சக்ரதாரியாக மூன்று கண்களுடன் ஒளிவிடுப் பிரகாசிப்பவள் ஸ்ரீமாதேவி ஆவாள்.
ஸ்ரீமாதேவியை உபாசனை செய்து உன்னத உத்தம நிலை அடைந்தவரே கயாஸுர மகரிஷியாவார். ஆயிரம் மகாலக்ஷ்மி தேவியர் ஒருமித்து அளிக்கின்ற வரங்களை ஸ்ரீமாதேவி தனிப் பெரும் தேவியாய் அருளும் பாங்குடையவள். பிரதமை திதியில் வழிபடுவது இவளுக்குப் பிரீதியானது. குறிப்பாக நவராத்திரிப் பிரதமைத் திதியில் இத்தேவியின் அருட்தன்மை பன்மடங்காகப் பெருகி வர்ஷிக்கும்.
போகர் :- ஞானதேவா! கயாஸுர மகரிஷி, ஸ்ரீமாதேவியைக் குறித்து தவமியற்றியது ஏன்?
அகத்தியர் :- கலியுகத்தில் மக்களுடைய பெரும்பான்மையான துன்பங்களுக்கு மூல காரணம் அவர்கள் தங்கள் பித்ருக்களுக்குரித்தான கடமைகளை நிறைவேற்றாததே ஆகும். தானம், தர்ப்பணம், சிராத்தம் போன்ற பித்ரு கடன்களை மனப் பூர்வமாகச் செய்பவர்களும், ஆத்மார்த்தமாகச் செய்து வைப்பவர்களும் அருகி விட்டனர். ஊதியத்திற்கேற்ப ஓதுவதே மந்திரம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இவற்றைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்க தரிசனமாக அறிந்த ஸ்ரீ கயாஸுர மகரிஷி, கலியுக மக்களைப் பித்ரு சாபங்களிலிருந்து மீட்கும் பொருட்டு ஸ்ரீமாதேவியை நோக்கி தவமிருந்தார்.
கோடானு கோடி யுகங்கள் தவமிருந்து ஸ்ரீ கயாஸுர மகரிஷியின் தன்னலமற்ற தவப்பெரு நிலையைக் கண்டு அதிசயித்தனர் தேவர்கள். அவர்கள் கயாஸுர மகரிஷியை அணுகி தங்கள் அற்புத தவத்தால் ஸ்ரீமாதேவி தங்களுக்கு அருளும் முன், எங்களால் இயன்ற தொண்டைத் தங்களுக்கு அர்ப்பணிக்கின்றொம் என்றனர். ஸ்ரீமாதேவியின் அருளால் அவர்களுடைய வினயத்தை அறிந்து கொண்ட மகரிஷி, நீங்கள் அனைவரும் என் அங்கத்தில் இடம் பெற்று வாழ்த்தியருள வேண்டும்! என்று வேண்டினார்.
கயா ஸ்தலபுராணம்
போகர் :- சற்குருவே! முப்பத்து முக்கோடி தேவர்கள் குடிபுகும் தேக அமைப்பை ஸ்ரீ கயாஸுர மகரிஷி கொண்டார் என்றால் எத்தகைய தவநிலையை அவர் மேற்கொண்டிருத்தல் வேண்டும்! கேட்பதற்கே வியப்பாய் உள்ளதே!
அகஸ்தியர் :- உண்மைதான் போகா! கயாஸுரர் ஸ்ரீ மாதேவியின் பரிபூரண அருளை பெற்றவர் அல்லவா! அமிர்தம் அருந்திய முப்பத்து முக்கோடி தேவர்களின் வாசத்தால் ஒருமித்த சஞ்சீவ ஸ்திர வாழ்வை ஸ்ரீமாதேவியின் கருணயால் பெற்ற ஸ்ரீ கயாஸுர மகரிஷி, விண்ணகத்து நெடிது வளர்ந்த கல்லால மரம் போல் தேவாதி தேவரின் சரீரங்களோடு பூமியில் புதையுண்டார். அதுவே இன்றைக்கும் கோடிகோடியான ஜீவன்களின் பித்ரு சாபங்கள் நிவர்த்திக்கும் கயா புனித பூமியாகும். அவர்தம் புனித தேகத்தில் எழுந்த புண்ணிய ஸ்தலமே கயா.
தலைமுறை தலைமுறையாக மனிதர்கள் வளர்த்து வந்த பித்ரு கடன்கள், முப்பத்து முக்கோடி தேவர்களின் திருவருளாலும், ஸ்ரீமாதேவியின் பரிபூரண அனுக்ரகத்தாலும், ஸ்ரீ கயாஸுர மகரிஷியின் அருந்தவத்தாலும் கயா பூமியில் இடும் பிண்ட, தர்ப்பணத்தால் நொடியில் தீர்கின்றன.
ஸ்ரீ விஷ்ணு பாதம்
புலிப்பாணி :- அத்துணை கோடி மக்களின் பாவச் சுமைகளைத் தாங்க வல்லவரன்றோ கயாஸுர மகரிஷி! குருவே!
அகஸ்தியர் :- ஆம்! ஸ்ரீ கயாஸுர மகரிஷி இன்றைக்கும் அருள் பாலிக்கும் கயா திருத்தலத்தையே, பிரம்மா தம் சிருஷ்டிக்கான பிரம்ம யாகத்தை நடத்தத் தேர்ந்தெடுத்தார். பித்ரு தேவர்களின் அதிபதியான ஸ்ரீ மகாவிஷ்ணு கயாஸுர மகரிஷியின் இருப்பிடமான கயா ஸ்தலத்தையே ஸ்ரீ விஷ்ணு உதயஸ்தானமாக ஏற்று தம் ஸ்ரீ விஷ்ணு பாதங்களைப் பதித்தார்.
கயாஸுர மகரிஷியின் திருமார்பில்தான் ஸ்ரீ விஷ்ணுவின் திருப்பாதங்கள் தரிசனம் அளிக்கின்றன. இவ்வாறாக கயா பூமியைப் பித்ரு தேவர்களின் தெய்வீக பூமியாக, ஸ்ரீ விஷ்ணு பாத ஸ்தலமாக மாறப் பெரும் தவம் புரிந்தவர் ஸ்ரீ கயாஸுர மகரிஷியே
பிண்ட தர்ப்பண பலன்.
போகர் :- கயா ஸ்தலத்தில் பிண்ட தர்ப்பணம் இடுவதால் யாது பயன் குருதேவா?
அகஸ்தியர் :- கலியுகத்தில் மனிதனின் உடல், உணவைச் சார்ந்து அன்னமய கோசமாக உள்ளது. பித்ருக்களோ தங்கள் உணவை ஜலமயமாய்ப் பெற வேண்டும் என்பது இறை நியதி. அதனால்தான் தர்ப்பணங்கள் நீரால் வார்க்கப்படுகின்றன.
தேவர்கள் அக்னி மூலமாகவும், கந்தர்வர்கள் பசுநெய் மூலமாகவும் உணவைப் பெற வேண்டும் என்பதும் இறை நியதியே! பித்ரு தேவர்களின் அதிபதியான ஸ்ரீ மகாவிஷ்ணுவே கயாவில் ஸ்ரீ பாத ஸ்வரூபத்தில் உறைவதால் அவரே பிண்ட தர்ப்பணங்களை ஏற்று அன்னமாகவும், நீராகவும், பசுநெய்யாகவும் பகுத்து அளித்து பித்ரு கடன்களை நொடியில் தீர்த்து அருள் புரிகின்றார். கங்க-மாதேவி இதற்குச் சாட்சியாக நிற்க, நீர்த்தாரை வர்ஷிக்கும் போது பித்ருகடன் நிவர்த்தி பூர்த்தியாகிறது.
போகர் :- உயர் ஆசானே! பித்ரு கடன்கள் தீருவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
அகஸ்தியர் :- ஸ்ரீ மாதேவியின் அருள் பெற்றாலே பித்ரு கடன்கள் தீரும். இதற்கு வித்திடுபவர் ஸ்ரீ கயாஸுர மகரிஷி. இவர் பல பரிகாரங்களை அருளியுள்ளார்.
எளிய பித்ரு பரிகார முறைகள்.
1001 முறை காயத்ரி மந்திரம் ஜபித்து கோதுமைப் பண்டங்கள நான்கு திக்குகளிலும் வைத்து நாய்களுக்கு இடுவதால் பில்லி, சூன்யத் துன்பங்கள் நீங்கும்.
இறந்தவர்களுக்கு விருப்பமான உணவுகள், ஆடை அணிகலன்கள் ஏனைய பொருட்களை காயத்ரி மந்திரத்தை ஜபித்து ஏழைகளுக்கு தானமாக அளித்தால் தடைப்பட்ட திருமணங்கள் நன்கு நடைபெறும்.
பொறாமை, குரோதங்களால் சிலர் பல குடும்பங்களைப் பிரித்து துன்புறுத்தியிருப்பர். இவர்கள் காயத்ரி மந்திரத்தை ஜபித்து பசு தானம் செய்தால் குடும்பங்களைப் பிரித்த பாவங்கள் தீரும். பெண்கள், பசுக்களுக்கு மஞ்சள் இட்டு பழம், கீரை போன்ற உணவையளித்து கோத்ரய மந்திரங்களை ஜபித்து 21 முறை பசுவை வலம் வர வேண்டும். ஆண்களாயின் பசுவிற்குக் குங்குமமிட்டு மேற்கண்டவாறு பெண்களைப் போல் வழிபடவேண்டும்.
குழந்தை பாக்கியம் வேண்டுவோர் நான்கு இதழ்களுடன் கூடிய ஆராக்கீரையின், ஒவ்வொரு இலைக்கும் 11 முறை காயத்ரி மந்திரம் ஜபித்து சிறிது வெல்லம் சேர்த்து கர்ப்பிணிப் பசுவிற்கு ஆகாரமாய் அளித்து வந்தால் குழந்தை பேறு கிட்டும்.
இந்த தான தர்மங்களை எந்நாளிலும் எவ்விடத்திலும் செய்யலாம்.
கங்கை, காவிரி போன்ற புண்ணிய நதிக்கரையில் செய்தால் விசேஷமான பலன்கள் கிட்டும்.
ஏனைய பரிகாரங்கள்
மயக்க நிலையில் வாதத்தில், coma நிலையில் பேச இயலாது இறந்தவர்களுக்காக கிழக்கு மேற்காக தர்ப்பைகளை வைத்து அதன் மேல் பிண்ட தர்ப்பணம் செய்தல் வேண்டும். ஊமைகளுக்கும் இவ்வாறே.
நிறைய கடன்களை விட்டுச் சென்று இறந்தோருக்கு வடகிழக்கில் தர்ப்பைகளைப் பரப்பிப் பிண்ட தர்ப்பணம் செய்தல் வேண்டும்..
ஆண் சந்ததி இல்லாதோர் தர்ப்பைகளை வடகிழக்கிலும், பெண் சந்ததி இல்லாதோர் வடமேற்கிலும் தர்ப்பைகளைப் பரப்பி தர்ப்பணம் செய்தல் வேண்டும்.
சந்ததியில்லாது இறந்தோர்க்கு தர்ப்பைகளை தென்மேற்கில் பரப்பி பிண்ட தர்ப்பணம் செய்தல் வேண்டும்
இது தவிர பெண்கள் தங்கள் மாமனார், மாமியார் பற்றிய பொய், புகார்களைத் தன் பெற்றோரிடம் தெரிய படுத்துவதால் பல துன்பங்கள் ஏற்படும். பெரியோருக்கு அடக்கமாக பணிவிடை செய்யாது, அகங்காரத்துடன் நடக்கும் பெண்களுக்கும் சில சாபங்கள் உண்டு. இவர்கள் தர்ப்பையில் மூன்று முடிச்சுகள் இட்டு, அதில் பிண்டம் வைத்து, கட்டிய வஸ்திரங்களுடன் நீரில் இறங்கி, பிண்டத்தை நீரில் இட்டு, கட்டிய வஸ்திரத்தையும் தானம் செய்தல் வேண்டும். இதனால் தகாத முறையில் தாம் வருத்திய மாமனார், மாமியார்களின் சாபங்களிலிருந்து நிவர்த்தி பெறலாம்.
பெண்கள் பிண்டம் போடுதல்.
போகர் :- பெண்கள் பிண்டம் இடலாமா குருதேவா?
அகஸ்தியர் :- இடலாம். ஒரு நாட்டுப்பெண் புகுந்த வீட்டு பெரியோர்களை அவமதித்தால் அப்பெரியவர்கள் அளிக்கும் சாபத்தினால் அப்பெண்ணிற்குப் பலதுயர்கள் உண்டாகும். இதற்காக அப்பெண்தான் மேற்கூறிய முறையில் பிண்டதர்ப்பணம் இட்டு பிராயச்சித்தம் செய்தல் வேண்டும்.
போகர் :- பித்ரு ஹோம குண்டங்கள் பற்றி ஸ்ரீ கயாஸுர மகரிஷியின் விளக்கம் யாது குருதேவா?
பித்ரு ஹோம குண்டங்கள்.
அகஸ்தியர் :- இதை விளக்கினால் பல காண்டங்களாக விரிவு பெறும். எனினும் சுருக்கித் தருகின்றேன். மக்களுக்கு அறிவிப்பாயாக!
ஹோமம் செய்வதால் நற்பலன்கள் உண்டாகும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பித்ருக்களுக்கும் ஹோமம் செய்வதுண்டு. இறந்தவர்களின் உயரத்திற்கேற்பத் தக்க இட்த்தில் ஹோம குண்டம் அமைத்தல் வேண்டும். ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்கள் செய்யும் ஹோமங்களும் உள்ளன. பித்ரு ஹோம குண்டங்கள் எத்திசையில் அமைக்கப்பட வேண்டும் என்பதையும் ஸ்ரீ கயாஸுர மகரிஷி வரையறுத்துள்ளார்.
நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சில செயல்கள் எத்தகைய தோஷங்களுக்கு நம்மை ஆளாக்குகின்றன என நாம் அறிய மாட்டோம். அத்தோஷங்களுக்கு உரிய நிவர்த்தியையும் கயாஸுர மகரிஷி அருளியுள்ளார்.
ஸ்ரீகயாசுர மகரிஷி அருளிய பித்ரு ஹோம விளக்கங்கள்
முதியோர் இல்லம் அல்லது அனாதை இல்லங்களில் விடப்பட்டு பெற்றோர் மரணமடைதல். அடைகின்ற தோஷம் சுருஹத்தி தோஷம், தோஷத்தின் விளைவு எதிர்பாராத விபத்துக்கள் நேரும்,
ஹோம குண்டம் அமைக்கும் திசை தென்கிழக்கு திசை, ஆஹூதியாகப் படைக்க வேண்டியது அவர்கள் விரும்பிய உணவை ஆஹூதியாகத் தானமளித்தல்.
சொத்துக்காக மட்டும் காப்பாற்றப்பட்டு பின்பு சொத்தை கவர்ந்தபின் அவர்களை ஏமாற்றுதல். அடைகின்ற தோஷம் கோரகத்துரு தோஷம், தோஷத்தின் விளைவு நோய்கள், தீராத வறுமை ஏற்படும், ஹோம குண்டம் அமைக்கும் திசை வடகிழக்கு திசை, ஆஹூதியாகப் படைக்க வேண்டியது மூதாதையர் சொத்தில் ஒரு பங்கை சிவன் கோயிலுக்கு அளித்தல் மூதாதையர் விரும்பிய இனிப்புப் பொருளை ஆஹூதியாக்குதல்.
கணவன் மனைவியின் பேச்சை கேட்டு பெற்றோர்களை இம்சித்தல் அவர்கள் ஆதரவின்றி மரணம் அடைதல். அடைகின்ற தோஷம் மாரிவடு தோஷம், தோஷத்தின் விளைவு குடும்பத்தில் குழ்ந்தைகளுக்கு மயக்கமேற்படுதல், ஹோம குண்டம் அமைக்கும் திசை தென்மேற்கு திசை, ஆஹூதியாகப் படைக்க
வேண்டியது அனாதை இல்லங்களில் இருக்கும் விதவைகள் வயதானவர்களுக்கு உதவி.
பெற்றோர்கள் குழந்தைகளை தாம் இருக்கும் போது அனாதை இல்லங்களில் சேர்த்தல். அடைகின்ற தோஷம் குமாரிகா தோஷம், தோஷத்தின் விளைவு கடைசி காலங்களில் நிராதரவு,
ஹோம குண்டம் அமைக்கும் திசை வடமேற்கு திசை, ஆஹூதியாகப் படைக்க வேண்டியது அனாதை குழந்தைகளுக்குச் சேவை.
குறிப்பு :
விபத்துக்களில் இறந்தோர்க்கு தென்கிழக்கு திசையில் ஹோம குண்டம் வைத்தல் வேண்டும்.
ஸ்ரீகயாசுர மகரிஷி அருளிய தர்ப்பண விதி முறைகள்
பேச இயலாது இறந்தோர்க்கு,
தர்ப்பை நுனியை வைக்க வேண்டிய திசைகள் கிழக்கு மேற்கு.
நிறைய கடன்களை பாக்கியாக வைத்து இறந்தோர்க்கு,
தர்ப்பை நுனியை வைக்க வேண்டிய திசைகள் வடகிழக்கு தென்மேற்கு.
ஆண் சந்ததி இல்லாதோர்க்கு,
தர்ப்பை நுனியை வைக்க வேண்டிய திசைகள் தென்கிழக்கு வடமேற்கு.
பெண் சந்ததி இல்லாதோர்க்கு,
தர்ப்பை நுனியை வைக்க வேண்டிய திசைகள் வடமேற்கு தென்கிழக்கு.
குழந்தை இல்லாதோர்க்கு,
தர்ப்பை நுனியை வைக்க வேண்டிய திசைகள் தென்மேற்கு வடகிழக்கு.
மாமனார் மாமியாரை பற்றித் தவறான புகார்களை தங்கள் பெற்றோரிடம் கூறும் பெண்கள் (இதற்குப் பெரிய சாபங்கள் உண்டு) தர்ப்பையில் மூன்று முடிச்சுகள் இட்டு அவற்றில் பிண்டம் வைத்து கட்டிய வஸ்திரத்துடன் நீரில் இறங்கி பிண்டத்தை நீரில் இட்டு மாற்றுடை பூண்டு கட்டிய வஸ்திரத்தை தானமாக அளித்தல்.
தர்ப்பண மந்திரங்கள் அறியாதோர் மேற்கண்ட திசைகளில் தர்ப்பைகளை வைத்து இறந்தவரின் பெயரைச் சொல்லி திறந்த வலது கையின் கட்டைவிரல், ஆள்காட்டி விரல்களிடையே எள் கலந்த நீரை தர்ப்பையின் நுனிப் பகுதியில் விழுமாறு ஊற்ற வேண்டும்.
ஸ்நானம் செய்த உடல் சுத்தத்துடன் இறைநாமம் ஓதியவாறே அன்னம் வடித்து ஒரு பெரிய சாத உருண்டையைச் செய்திட இதுவே பிண்டமாகும்.
பிண்டத்தின் (அன்ன உருண்டை) அன்னசாரத்தை நீர் மூலமாகவே தர்ப்பையில் ஆவாஹனமாகும் பித்ருக்கள் (மேலோர்) பெறுகின்றனர்.
போகர் :- ஸ்ரீ மாதேவியை எளிதாக வழிபடும் முறை யாது குருதேவா?
அகஸ்தியர் :- ஸ்ரீ ஆயுர்தேவி போன்று ஸ்ரீமாதேவியின் உருவத்தை எமது சித்தர் பாரம்பரியத்தைச் சார்ந்த சித்த புருஷர் தக்க சமயத்தில் உணர்த்துவார். அதுவரையில் ஸ்ரீமாதேவியை மனதால் தியானித்து பிரதமைத் திதியன்று ஏதேனும் ஒருகோயிலில் மாக்கோலமிட்டு மல்லிகைப் பூவை ஏழைகளுக்கு தானம் அளித்து வழிபட்டு வருதல் வேண்டும்.
நவராத்திரி பிரதமைத் திதியில் இரண்டு வயது நிறைந்த பெண் குழந்தையை அலங்கரித்து, ஆபரணம் இட்டு, ஸ்ரீ மாதேவியாக வரித்து வணங்க வேண்டும். அல்லது மேலே கூறியவாறு மாக்கோலம் இட்டு தானஞ் செய்தல் வேண்டும். இதுவே ஸ்ரீமாதேவியை எளிதாக வழிபடும் முறை.
இவ்வாறு அற்புதத் தவங்கள் புரிந்து தன்னலமற்ற மக்கள் சேவை செய்து ஸ்ரீ ஆயுர்தேவியின் வலது முதல் கரத்தில் இடம் பெற்றார் கயாஸுர மகரிஷி.
ஸ்ரீ ஆயுர் தேவி தரிசனம்
![]() |
| (AI GENERATED) |
போகர் :- சற்குருவே! ஸ்ரீ ஆயுர்தேவியை முதன்முதலில் பலகோடி யுகங்களுக்கு முன் உலகிற்கு அறிமுகப்படுத்தியது யார்?
அகஸ்தியர் :- தற்போது கலியுக மக்கள் மிகவும் எளிமையான வழியில் எம் பாரம்பரிய வழித்தோன்றல் மூலம் ஸ்ரீ ஆயுர்தேவி தரிசனம் பெற்று விட்டனர். ஆனால், பல கோடி யுகங்களுக்கு முன் திருஅண்ணாமலையில் குறிப்பிட்ட பக்ஷங்களுக்கு, யுகங்களுக்கு அருணாசல மலையைக் கிரிவலம் வந்தவர்களுக்கே ஆயுர்தேவி தரிசனம் கிட்டும் என்பது இறை நியதியாக இருந்தது. அதுவும் ஸ்ரீ ஆயுர்தேவி தரிசனத்திற்கு முன் துவித சிரஞ்சீவி என்றும், ஆத்யந்த பிரபு என்றும் அழைக்கப் பெற்ற ஸ்ரீ விநாயக ஆஞ்சநேய அர்த்தநாரீஸ்வர ரூபங்கொண்ட தெய்வத்தைத் தரிசனம் செய்தல் வேண்டும். இது திரேதா யுகம் நியதி.
திருஅண்ணாமலையில் கிரிவல பாதையில் ஸ்ரீ ஆயுர்தேவி தரிசனப் பாதை என்ற முகட்டுப் பாதை உள்ளது. பிருத்வி நந்தி அருகே யானைபடு குழி என்ற முக்கோணத் தீர்த்தப் பகுதியில் குருவருளால் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் குறிப்பிட்ட ஹோரையில் ஸ்ரீ ஆயுர்தேவி மூலமந்திரத்தை ஜபிப்பவர்களுக்கு ஸ்ரீ துவித சிரஞ்சீவி தரிசனம் கிட்டும்.
கிருத, திரேதா யுகங்களில் ஸ்ரீ துவித சிரஞீவி மகா பிரபுவின் அர்த்த நாரீஸ்வர ரூபதரிசனம் கிட்டியது. இவரே ஸ்ரீ ஆயுர்தேவியின் தரிசனத்திற்கு வழிகாட்டுவார்.
கலியுகத்தில் மகான்களுக்கும், குருவருள் நிரம்ப பெற்றவர்களுக்குமே, இத்தகைய அற்புத தரிசனம் கிட்டும். ஏனையோருக்கு திருஅண்ணாமலையே சிவரூபமாக காட்சியளிப்பதால், குறிப்பிட்ட பகுதியிலிருந்து மலையைத் தரிசனம் செய்திடில் அது ஸ்ரீ தேவியின் முகவடிவத்தில் காட்சியளிக்கும். ஆனால் இதற்கும் ஸ்ரீ சற்குரு அருள் வேண்டும்.
ஒன்பது கரங்களைத் தாங்கி பராசக்தியாம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியின் அவதாரமாகப் பொலியும் ஸ்ரீ ஆயுர்தேவி மக்கள் சேவையே மஹேஸன் சேவையெனத் தியாகம் புரிந்த அருட்பெருஞ் சித்தர்களையும், மஹரிஷிகளையும் தம் எண்கரங்களில் ஏந்தி அருள் பாலிக்கின்றாள்.
அவள்தம் ஒன்பதாவது கரம் அபயஹஸ்தமாகும்.
ஸ்ரீ ஆயுர்தேவியை வழிபட, ஸ்ரீ பராசக்தியோடு, சித்த புருஷர்களையும் நமஸ்கரிக்கும் பேறு கிட்டுகிறது. ஸ்ரீதேவி (சாக்த) உபாசனையில் உன்னதம் பெற்றவர்கள் சித்த புருஷர்களே! தம் அடியார்களை வணங்கினால் மகிழும் ஸ்ரீ ஆயுர்தேவி, என்றும் எங்கும் எப்போதும் சிவ சித்தத்தில் திளைக்கும் சித்தர்களின் மூலம் பக்தர்களுக்குப் பரிபூர்ணமாக அருள் புரிவதில் பேரின்பங்கொள்கிறாள்.
ஸ்ரீ ஆயுர்தேவியின் திருகரங்களின் விளக்கம்.
வலதுகரம் [மேலிருந்து கீழ்]:
1. கயாஸூர மஹரிஷி 2.ஆணி மாண்டவ்யர் 3. அத்ரி மஹரிஷி 4. குண்டலினி மஹரிஷி
இடது கரம் [மேலிருந்து கீழ்]:
1. அஹிர்புத்ன்ய மஹரிஷி 2. சாரமா முனிவர் 3. அஸ்தீக சித்தர் 4. கார்க்கினி தேவி, சம்வர்த மஹரிஷி
எட்டாவது கரத்தில் அமர்ந்துள்ள கார்க்கினி தேவி ஸ்ரீ ஆயுர்தேவியின் அருளால் அமுதக் கலசமாக மாறி அருள் புரிபவள். இக்கரத்திலேயே ஸ்ரீசம்வர்த மஹரிஷியும் கலசத்தினுள் அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.
எனவே ஸ்ரீ ஆயுர்தேவி வழிபாடு மனித குலத்தின் அனைத்து துன்பங்களுக்கும் நிவாரணமளிக்கும் ஒரு சம்பூர்ணமான வழிபாடாகும்.
“ஆயுர் தேவதாம் நித்யாம், ஆஸ்ரிதாபீஷ்ட ஸித்திதாம்"
(நிரந்தரமான ஆயுளைத் தரும், அடைக்கலம் புகுந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் தெய்வம்).
“ஆயுர்தேவி தனம்தேஹி வித்யாம்தேஹி மஹேஸ்வரி சீமஸ்தம் அகிலான் தேஹி தேவிமே பரமேஸ்வரி" (தேவியே எனக்கு நீண்ட ஆயுளைக் கொடு, செல்வத்தைக் கொடு, அறிவைக் கொடு, எல்லா நலன்களையும் கொடு).
கல்லால மரம்
போகர் :- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தவக்கோலம் பூண்டிருக்கும் கல்லாலமரம் பூலோகத்திலுள்ளதா சற்குருவே?
அகஸ்தியர் :- கோடிக் கணக்கான ஆன்மீக ரகசியங்கள் பொதிந்துள்ள திருஅண்ணாமலையில் மலை உச்சியில் கல்லால மரம் உள்ளது. இம்மரத்தின் அடியில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி மனித சரீரத்தில் இன்றும் காட்சி தருகிறார். இந்தியாவின் பல புண்ணிய நதி தீரங்களிலும், பொதிகை மலை, இமய மலை, கொல்லி மலை போன்ற சித்தர்கள் வாழும் மலைப் பகுதிகளிலும் கல்லாலமரம் விளங்குகின்றது.
‘ஊர்த்துவ மூலமரம் எனப்படும். இம்மரத்தின் வேர்ப்பகுதி வளைந்து மேல் நோக்கி வானத்தில் வேர்விட்டு இருக்கும். காண்பதற்கு அரிய காட்சி இது, வேர்ப்பகுதி மேல் நோக்கியும், இலைத் தழைகள் கீழ்நோக்கியும் அமைந்துள்ள அற்புத விருட்சங்கள் பல உண்டு. இவற்றின் தரிசனமே பல சித்திகளைத் தரவல்லது.
திருஅண்ணாமலையில் கல்லாலமரம் அமைந்துள்ள மலைப் பகுதிய்ல் காட்சிதரும் ஸ்ரீ ஆயுர்தேவி சிலாரூபத்தைச் சனகாதி முனிவர்கள் நால்வரும் இன்றைக்கும் தினமும் வழிபட்டுச் செல்கின்றனர். திருஅண்ணாமலையைத் தாண்டாது அதனைச் சுற்றிச் செல்லும் சூரியபகவானும் ஸ்ரீ ஆயுர்தேவியை தினமும் வணங்கி செல்கின்றார்.
இது தவிர இமய மலைப் பகுதியிலும் ஸ்ரீ மஹாஅவதூது பாபா, த்ரைலிங்க ஸ்வாமி போன்ற அற்புத மஹான்கள் தினமும் வழிபடுகின்ற பனி மலை குகையில் ஸ்ரீ தாராதேவி ஆலயத்தில் ஸ்ரீ ஆயுர்தேவிக்கு சன்னதி அமைந்துள்ளது. குருஅருள் பெற்றோர் இதனை இன்றும் தரிசிக்கலாம்.
ஸ்ரீ இரமண மஹரிஷி தரிசனம் செய்த கல்லால இலையைக் கொண்டுள்ள அபூர்வமான கல்லால மரம் அமைந்திருக்கும் திருஅண்ணாமலை உச்சிப் பகுதியில் ஸ்ரீ ஆயுர்தேவியின் சிலாரூப வடிவைக் காணலாம். இது இன்றைக்கும் பிரம்ம ரகசியமாகவே இலங்குகிறது.
ஸ்ரீ ஆயுர்தேவி கோயில்
போகர் :- குருதேவா! ஸ்ரீ ஆயுர்தேவிக்குக் கோயில்கள் எழுப்பலாகுமா?
அகஸ்தியர் :- ஸ்ரீ அம்பாளின் விருப்பம் அதுவாயின் எதுவும் நடக்கும். எனினும் எம் பரம்பரையோன், எம்முடைய கிரந்தகளிலிருந்து எடுத்தருளியுள்ள ஸ்ரீ ஆயுர்தேவி மூலமந்திரம் குறிப்பிட்ட எண்ணிக்கை வரை உச்சாடனம் [ஜபம், பாராயணம்] செய்யப்படவேண்டும். ஸ்ரீ ஆயுர்தேவிக்கான காயத்ரி மந்திரம் குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு தியானிக்கப்படவேண்டும். அதன்பிறகு யாம் அளித்துள்ள ஸ்ரீ ஆயுர்தேவி ஹோமங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கைய்யில் நிகழ்த்தப் பெறவேண்டும் என்று ஓர் ஆவாஹன அளவுகோல் உள்ளது.
எந்த தெய்வத்திற்கும் ஒரு கோயில் அமையும் முன் இத்தகைய ஆன்மீக குறியீட்டு இலக்கணங்கள் உண்டு. அவை முற்றுப்பெறும் போது ஸ்ரீ ஆயுர்தேவியே தானாகக் கோயில் கொண்டு அருள் பாலிப்பாள்!
எனினும் ஸ்ரீ ஆயுர் தேவிக்கு கோயில் எழுப்புவதற்கான மனிதப் பிரயத்தனங்கள், முயற்சிகள் மேற்கொள்வதில் தவறில்லை. ஸ்ரீ அம்பிகை விரும்பும் போது அது தானே கைகூடும்.
போகர் :- திரிமூர்த்திகள் தவிர ஸ்ரீ ஆயுர்தேவி தரிசனம் பெற்ற தெய்வ அவதாரங்கள் உண்டா சற்குருதேவா?
அகத்தியர் :- திரேதா யுகத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, ராவண சம்ஹாரத்திற்கு முன் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வரும் போது ஸ்ரீ ஆயுர்தேவி தரிசனம் பெற்றார்.
அப்போது, ஸ்ரீ ராமா! உன்னுடைய துவாபர யுக கிருஷ்ணாவதாரத்தில் என்னுடைய பரிபூரணமாக என் அருளை பெறுவாய் என்று கூறி ஸ்ரீ தேவி ஆசிர்வசித்தாள்.
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் தம் சற்குரு சந்தீபனியிடம் குருதட்சிணை அளிக்க சென்ற ஸ்ரீகிருஷ்ணனிடம் அவர் ஸ்ரீ கிருஷ்ணா! உன்னிடம் நான் குருதட்சிணை பெறும் நேரம் வந்து விட்ட்து. பல ஆண்டுகளுக்கு முன்னர் சமுத்திர ராஜன் என் புதல்வனை ஆட்கொண்டுவிட்டான். அவனை மீட்டு தருவதே நீ எனக்கு தரும் குருதட்சிணையாகும். என்று தெளிவாக கூறினார்.
ஸ்ரீ கிருஷ்ணனும் பல சமுத்திர லோகங்களைக் கடந்து தேடியும் சந்தீபனியின் புதல்வன் அகப்படவில்லை. ‘குரு தட்சிணையின்றித் திரும்புவதா? அதுவும் பூர்ணாவதாரத்தால் இயலாத ஒன்றா? என ஸ்ரீ கிருஷ்ணன் சற்று சிந்தித்தான்.
தம்மை பூர்ண அவதார அம்சங்களிலிருந்து விடுவித்து, மனித அவதாரமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாய் தன்னைப் பாவித்துக் கொண்டார். அப்போது ஸ்ரீ அருணாசல க்ஷேத்திரமும், ஸ்ரீ ஆயுர்தேவியின் மூலமந்திரத்தை ஜபித்த வண்ணமெ ஸ்ரீ கிருஷ்ணன் கடலுக்குள் புகுந்தான்.
மச்சாவதாரம் புரிந்தவனன்றோ! ஒரு மச்சத்தின் வயிற்றில் சந்தீபனியின் புதல்வன் இருப்பதைக் கண்டு அவனைக் கரை சேர்த்து, குரு தட்சிணையாகச் சற்குருவின் அபிலாக்ஷைகளுக்கேற்பத் தந்தருளினான்.
அப்போது சந்தீபனி, ஸ்ரீ கிருஷ்ணா ! ஸ்ரீ ஆயுர்தேவி மகிமையை உலகிற்கு எடுத்துரைத்து மக்களுக்குச் சேவை செய்வாயாக! என்று அருளினார்.
சற்குரு சந்தீபனியின் விருப்பப்படியே ஸ்ரீ கிருஷ்ணன் இன்றும் திருஅண்ணாமலை மலைக் காட்டிலுள்ள கல்லால மரத்தின் ஒவ்வொரு இலையிலும் ஆலிலைக் கிருஷ்ணனாகத் தவழ்ந்து ஸ்ரீ ஆயுர்தேவியின் மகாத்மியத்தை பலகோடி லோகங்களுக்கும், சனகாதி முனிவர்கள் மூலம் பரப்பி வருகிறார்.
இந்த ஆன்மீக ரகசியத்தை நாரதருக்கும் உணர்த்தியவர்கள் சித்த புருஷர்களே! இன்றும் கோகுலாஷ்டமி அன்று திருஅண்ணாமலையில் ஸ்ரீ ஆயுர்தேவி தரிசன முகட்டில் கிருஷ்ணனின் புல்லாங் குழல் ரீங்காரத்தைக் கேட்டு இன்புற்றவர்கள் ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள், ஸ்ரீ விடோபா ஸ்வாமிகள், ஸ்ரீ பூண்டி மகான், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் போன்றோர் மட்டுமன்றி பாரதியார், ஸ்ரீ நரசிம்ம பாரதி சுவாமிகள் ஆகியோருமாவர்.
ஸ்ரீ ரமண மகரிஷி எப்போதும் மலை உச்சியைப் பார்த்துக் கொண்டே இருந்ததின் ஆன்மீக ரகசியம் இதுவே. பிரபஞ்சத்தின் ஆன்மீக சிகரமாக விளங்கும் அருணாசல மலையில் கோடானுகோடி தெய்வ லீலைகள் நிகழ்கின்றன. இதை ரசித்து ஆத்மானுபவம் பெற்று பரமானந்தத்தில் திளைத்து மகிழ்ந்தவர்களே ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் முதலான மகான்கள். சாதாரண மனிதனும் ஆத்ம உணர்வுகளுடன் கிரிவலம் வருவானாயின் சற்குரு அருளால் இத்தகைய தெய்வ திருவிளையாடல்களையும் பரமாத்ம லீலைகளையும் துய்த்துணரலாம்.
பூவாளூர் கயாசுர மகரிஷி …
ஆயுர்தேவி தனது வலது முதல் கரத்தில் கயாசுர மகரிஷியைத் தாங்கியிருக்கிறாள். இந்தத் தேவியை உபாசனை செய்து உன்னத நிலையை அடைந்தவர் கயாசுர மகரிஷி.
பல்குனி ஆற்றின் அருகே கயாசுர மகரிஷி வான்நோக்கிப் படுத்திருக்க அவருடைய மார் மேனியில் அனைத்துத் தர்ப்பண பூஜைகள், வேள்விகள், யாகங்களும் முப்பத்து முக்கோடி தேவர்களால் நிறைவேற்றப்பட்டு அங்கு கயா என்ற புனித நகரம் தோன்றியது.!
தென்னிந்தியாவில் அதிலும் தமிழகத்தில் அதே போன்ற தலம் பூவாளூர்.
இங்கும் பங்குனி (பல்குனி) நதி ஓடுகிறது. நதியின் கரையில் கயாசுர மகரிஷி தனிக் கோயில் கொண்டு அனைத்துத் தர்ப்பண பூஜைகள், வேள்விகள், யாகங்களை ஏற்பவராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்
ஸ்ரீகயாசுர மகரிஷியின் தந்தையே ஸ்ரீதேவவிரஜன். ஸ்ரீதேவவிரஜன் இப்பூமியை விட்டு மறைந்தபோது அவருக்கு பித்ரு தர்ப்பணங்கள் அளித்து அவர் இறைவனுடன் கலந்து இவ்வுலகிற்கு உத்தம வாரிசான ஸ்ரீகயாசுர மகரிஷியை அளிக்க உதவிய தலம் திருத்தவத்துறை என்கிற லால்குடி.
கயா சென்று பித்ரு காரியம் செய்ய முடியாதவர்கள் பூவாளூர் சென்று பல்குனி நதிக்கரையில் செய்து கயாசுர மகரிஷியை வணங்கி புண்ணியம் பெறலாம்.
பலருக்கும் தெரியாத ஆன்மீக இரகசியம் இது.
வலைத்தளம்/வலைப்பூ/முகநூல் பதிவுகள் படித்து அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படங்கள் உதவி: வலைப்பூ பதிவுகள்..



